ஜெயமோகன்,
அனந்தபத்மநாபசாமியின் நகைகளைப்பற்றி மன்னர்களுக்குத் தெரியாது என்று நீங்கள் எழுதியிருந்தீர்கள். தெரியும் என்று மன்னர் மார்தாண்டவர்மா அவரது பேட்டியில் சொல்லியிருக்கிறாரே? மன்னருக்கு சொம்பு அடிக்க நினைக்கிறீர்கள். அதற்கு உங்கள் சாதிதான் காரணம் என்று சொல்கிறேன். வெள்ளைக்காரர்கள் கோயில் செல்வங்களைக் கொள்ளையடித்தார்கள் என்று எழுதியிருக்கிறீர்கள். அது பொய். அந்தச்செல்வத்தை மக்கள்நன்மைக்காகப் பயன்படுத்தியாகவேண்டும். தனியார் சுரண்ட அனுமதிக்கக்கூடாது. அந்தச் செல்வம் மக்கள் சொத்து. பிராமணர்கள் தின்பதற்கு உள்ளது அல்ல.
ஜெயசிங் டேனியல்
அன்புள்ள ஜெயசிங்,
நன்றி. இப்படி ஒரு முட்டாள் எப்போதேனும் சொல்லக்கூடும் என்று நினைத்து நான் சரியானதைச் சொல்லத் தயங்கக்கூடாதென்பதே நான் எனக்கென விதித்துக்கொண்ட கொள்கை.
பத்மநாபசாமிகோயிலில் நகைகளும் செல்வமும் உள்ளது என்பது பரவலாகத் தெரிந்த விஷயம். நானே சிறுவயதில் கேள்விப்பட்டிருக்கிறேன். திருவட்டாறு கோயில் நகைக்கொள்ளையின்போதுகூட அதைப்பற்றி நான் எழுதியிருக்கிறேன். இத்தனை பிரம்மாண்டமான நிதி அது என்பது மன்னர்கள் உட்பட எவருக்கும் தெரியாது. அதை அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். பல அறைகள் 160 வருடங்களுக்குப் பின் திறக்கப்படுகின்றன. ஒரு அறை முதல்முறையாகத் திறக்கப்படப்போகிறது.
இந்நகைகள் இருப்பது தெரிந்திருந்தால் வரிவசூலுக்காகவே திருவனந்தபுரத்தில் முகாமிட்டுத் திருவிதாங்கூரை ஓட்டாண்டியாக்கிய ஆங்கிலகும்பினி அரசு விட்டு வைத்திருக்காது என்பதே நான் சொன்னது. வரிவசூல் எந்த அளவுக்கு மிதமிஞ்சி இருந்தது என்பதை ஆவணங்கள் மிகமிக விரிவாகவே காட்டுகின்றன. கர்னல் மெக்காலே திருவிதாங்கூர் ஆலயங்களை அரசுடைமையாக ஆக்கி அவற்றின் வைப்புநிதியை முழுக்கக் கவர்ந்துகொண்டதும் ஆவணப்படுத்தப்பட்ட அதிகாரபூர்வ வரலாறுதான்.
நண்பரே, ரெயில்வே கைடையாவது சாதியுணர்வில்லாமல் வாசிப்பீர்களா?
*
நேற்று ஒரு கேரள ஆலயப்பாதுகாப்புக்குழு பெரியவரைச் சந்தித்தேன். பத்மநாபசாமியின் சொத்து இரு வகை. நகைகள் உள்ளே உள்ள சொத்து என்றால் வெளியே உள்ள சொத்து,நிலங்கள். பழங்காலத்தில் கோயிலுக்குப் பலர் நிலங்களையும் கட்டிடங்களையும் தானமாக எழுதி வைத்தார்கள். வாரிசில்லா சொத்தை பத்மநாபனுக்கு அளிக்கும் வழக்கமிருந்தது. மன்னரும் ஏராளமான நிலங்களை அளித்தார். ஆகவே திருவனந்தபுரத்தில் இன்றும் பத்மநாபசாமிக்குச் சொந்தமான பலநூறு ஏக்கர் நிலம் உள்ளது. அதுவும் நகரின் நடுவில். திருவிதாங்கூர் முழுக்கப் பல்லாயிரம் ஏக்கர் வயல்கள், தோட்டங்கள் உள்ளன. எல்லாத் தென்கேரள நகர்களிலும் பல்லாயிரம் கட்டிடங்கள் உள்ளன.
அந்நிலங்கள் கோயிலின் பல்வேறு ஊழியர்களுக்கு வாடகைக்கு அளிக்கப்பட்டன. கோயிலுக்குப் பொருட்களை அளித்தவர்களின் உபயோகத்துக்கும் வாடகைக்கு அளிக்கப்பட்டன. அவர்கள் எவரும் அந்நிலங்களை சுதந்திரத்துக்குப்பின்னர் திருப்பி அளிக்கவில்லை. அந்நிலங்களும் கட்டிடங்களும் முழுக்கத் தனியார் ஆக்ரமிப்பில் உள்ளன. திருவனந்தபுரம் நகருக்குள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன என்பது ஆவணக்கணக்கு. அவற்றில் பல இன்று பெரும் கடைகளாகக் கட்டப்பட்டு லட்சக்கணக்கில் தினமும் வியாபாரம் நடக்கிறது. கோயிலுக்கு எதுவும் கிடைப்பதில்லை. சாலைபஜாரில் செண்ட் ஒன்றுக்கு ஐந்துகோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தில் அமைந்த கட்டிடத்துக்கு எண்பது வருடங்களாக வருடம் நாற்பது ரூபாய் வாடகை கட்டி வருகிறார்கள்!
பத்மநாபசாமியின் நகைகளை விற்பதோ ஏலம்போடுவதோ அசாத்தியமென அனைவருக்கும் தெரியும். அதற்கு இந்தியத் தொல்பொருள் துறை அனுமதிக்காது. ஆனால் அவரது நிலங்களை விற்பதோ ஏலம்போடுவதோ முழுக்கமுழுக்க சட்டபூர்வமானதே. ஆகவே இந்நிலங்களை விற்றால் என்ன? எப்படியும் ஐம்பதாயிரம்கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் விற்கப்படலாம். அப்பணத்தில் இரண்டு சதவீதத்தைக் கோயிலுக்கு வைத்துக்கொண்டு மிச்சத்தைத் திருவனந்தபுரத்தை மேம்படுத்த செலவிடலாம். சாலைகள் அமைக்கலாம். குடிசைகளை அகற்றலாம். மக்கள்நலம் என்று பேசுபவர்கள் இதைச் செய்யலாமே? -என்றார்
செய்யமுடியாது. அந்நிலங்களை வைத்திருப்பவர்கள் எவரும் ஏழைகள் அல்ல. பெரும்பாலும் பெருவணிகர்கள். அரசியல் பின்னணி கொண்டவர்கள். இடதுசாரிகள் வலதுசாரிகள். முக்கால்வாசி நிலங்கள் மாற்று மதத்தவர்களின் கைவசம் உள்ளன, அவர்களே அதிகமும் வணிகர்களாக இருந்தார்கள். மிகக்கணிசமான நிலங்கள் தமிழ் வணிகர்களின் கைகளில் உள்ளன. பத்மநாபசாமியின் சொத்தை ’மக்களுக்கு’ ப் பயன்படுத்தவேண்டுமெனச் சொல்பவர்கள் இந்தச்சொத்தை ஏழை மக்களுக்கு முதலில் பயன்படுத்திக் காட்டலாமே. பத்மநாபசாமியின் சொத்து கொள்ளைச்செல்வம் என்பவர்கள் இந்தக்கொள்ளையை உடனடியாகத் தடுத்து மக்கள்நலனைப் பாதுகாக்கலாமே?
சாத்தியமே இல்லை என நாம் அனைவருக்கும் தெரியும். இப்போது தமிழகத்தில் கோயில்வைப்புநிதி மக்கள் நலனுக்கு எனக் கூச்சலிடும் கூட்டம் ஒன்று உள்ளது. தமிழகத்தில் ஐம்பதாண்டுகளாகத் தனியாரால் கைவசப்படுத்தப்பட்டுள்ள கோயில்சொத்துக்களை அரசே கைப்பற்றிப் பொது ஏலம் போட்டு அந்தச் செல்வத்தை மக்கள்நலப்பணிகளில் செலவிட வேண்டும் என இவர்கள் சொல்லிப் போராடிக் காட்டலாமே? அது ஒரு நல்ல முன்னுதாரணமாக அமையுமே? சரி,விவசாய நிலங்களை விடுவோம். நகர்ப்புறக் கட்டிடங்களை மட்டுமாவது அப்படிச்செய்யலாமே?
கோயில் சொத்தை பிராமணர்கள் அனுபவிக்கிறார்கள் என்ற அவதூறு திட்டமிட்டே சொல்லப்படுகிறது. கேரளத்திலும் தமிழகத்திலும் கோயில்நிலங்கள் 99 சதவீதம் பிராமணரல்லாத சாதியினரால்தான் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அந்தச்சொத்தின் மதிப்பு எப்படியும் பலலட்சம் கோடி ரூபாய். அதைப்பற்றிய பேச்சே இங்கே எழுவதில்லை. சொல்லப்போனால் பிராமணர்களிடம் இருந்த சொத்துக்கள் மட்டுமே சிறிதேனும் பாதுகாக்கப்பட்டு இப்போதும் கோயிலுக்கென எஞ்சியிருக்கின்றன. பிறசாதியை நம்பி ஒப்படைக்கப்பட்ட சொத்துக்கள் எவையும் ஆலயத்துக்கென மிஞ்சவில்லை.
சென்றவருடம் நெல்லை சந்திப்பில் கோயிலுக்குச் சொந்தமான கடைகளுக்கு வருட வாடகை நூறு ரூபாயில் இருந்து இருநூறு ரூபாயாக ஆக்கப்பட்டது. அந்தக் கடைகள் பலவும் மாதம் இரண்டு லட்சரூபாய் வரை மறுவாடகைக்கு விடப்பட்டவை. அந்த உயர்வை நடைமுறைப்படுத்த முயன்ற ஆணையர் வெளிப்படையாக மிரட்டப்பட்டார். கோயிலின் அவலநிலையை அவர் துண்டுப் பிரசுரமாக வெளியிட்டார். கடை வாடகையாளர் சங்கம் அமைக்கப்பட்டு வாடகை உயர்வுக்கு எதிராக நீதிமன்றத் தடை பெறப்பட்டது.’எப்டீங்க அப்டி ஒரேயடியா வாடகைய டபுள் ஆக்கறது?’ என்று அதன் தலைவரின் ஜூனியர்விகடன் பேட்டியை நானே வாசித்தேன். அரசியல் மூலம் ஆணையாளர் மாற்றப்பட்டார். இதைச்செய்தவர்கள் பிராமணர்கள் இல்லை.
ஆக இப்போதுள்ள ’மக்கள்நலன்’ பேச்சுக்கு ஒரே அர்த்தம்தான் – கோயில்நிலங்களைத் தின்று சப்புக்கொட்டியவர்கள் நகைகளையும் பங்கு கேட்கிறார்கள். தாங்கள் நிலங்களைக் கொள்ளையடித்தபோது நகைகளைப் பத்திரமாக இதுவரை வைத்திருக்கும் பிராமணர்களை கொள்ளையர்கள் என்கிறார்கள்!
திருவிதாங்கூரில் கோயிலுக்குத் தொடர்பானவர்களில் ஒரே ஒருவர்தான் ஒரு துண்டு கோயில் நிலத்தைக்கூட தனக்கென வைத்துக்கொள்ளாதவர். தன் சொந்தநிலங்களைக்கூடப் பொதுசேவை அமைப்புகளுக்காகக் கொடுத்தவர், திருவிதாங்கூர் மகாராஜா பாலராமவர்மா. அவர்களின் குடும்பத்தினரின் சிறிய வியாபார நிறுவனங்கள் பலவும் வாடகைக் கட்டிடங்களில் செயல்படுகின்றன
ஜெ
பழைய கட்டுரைகள்
பத்மநாபனின் நிதியும் பொற்காலமும்
சுட்டிகள்
ராஜராஜசோழன் காலகட்டம் பொற்காலமா?
பண்டைய இந்தியாவில் பஞ்சங்கள் இருந்ததா?
அள்ளிப்பதுக்கும் பண்பாடு கடிதங்கள்