புனைவுக்களியாட்டு கதைகள் வாங்க
அவ்வப்போது, புனைவுக்களியாட்டு சிறுகதைகளுள் மனம்போன போக்கில் ஏதேனும் ஒன்றை படிப்பது வழக்கம். சென்றவாரம் அப்படித்தான் ஸ்க்ரோல் செய்துகொண்டிருந்தபோது ‘ஆகாயம்’ தலைப்பில் கை தன்னிச்சையாக நிற்கவே, இணைப்பை சொடுக்கி படித்தேன். மனசுக்குள் நீலன் பிள்ளையின் பேச்சுதான். மனசை வெகுவாக கவர்ந்துவிட்டார் மனிதர். தம்மைவிட படிநிலையில் உயர்ந்தவர்களிடம் பணிந்தபடியே தமது வாக்கு வன்மையால்/ சாதுர்யத்தால் அவர்களை மூலையில் நிறுத்துவதாகட்டும், சற்றே படிநிலையில் குறைந்தவரை தந்நிமிர்வால் பணியவைப்பதாகட்டும் …. சொல்வலனும் மதியூகியுமான அமைச்சன்.
இவர்களைப்போல எத்தனை பெயர் தெரியாதவர்கள், அழிவின் விளிம்பில் இருந்த கலைஞர்களை காத்தார்களோ… இப்படிப்பட்டவர்கள் இல்லா கெடுவிதியால் எத்தனை கலைஞர்கள் புரக்கப்படாது அழிந்தார்களோ …
கலைஞனின் மனது பெயர் தெரிந்த, தெரியாத எத்தனையோ பறவைகள் வந்தமர்ந்து நீங்கும் அரசமரம் என்பது அற்புதமான திறப்பு. கலைஞனும் சாமான்யன் போல தத்தளிப்பும் கொந்தளிப்பும் அவஸ்தைகளும் அலைக்கழிப்புகளும் கொண்டவனே. பிறகு எது அவனை சாமான்யனிடமிருந்து விலக்கி தனித்து நிறுத்துகிறது? மனதில் வந்தமரும் ஒவ்வொரு பறவையையும் கவனித்து முடிந்த அளவு அணுவணுவாக கல்லிலோ, திரைச்சீலையிலோ எழுத்திலோ, வாத்தியத்திலோ வடித்து வைப்பது, குமாரன் ஆசாரி போல. வந்தமர்வது இதுவரை யாரும் பார்க்காத பறவையாகவே இருந்தால்தான் என்ன?
பேச இயலாத கலைஞன் என்பவன் ஒடுக்கப்பட்ட கலைஞனுக்கான பிரதிநிதி அல்லவா ? தமிழில், புறக்கணிப்புக்கு உள்ளாகி குரலற்றிருந்த சிறுபத்திரிகை இயக்கத்திற்கான குறியீடாக இதைப் பார்த்தால் பெருமூச்சு வருகிறது. நல்லூழாக இடைநிலை பத்திரிகை என்ற நீலன்பிள்ளை அமைந்தது. இல்லாமல் நாம் இழந்த கலைஞர்கள் எவரெவரோ …
அந்த அரசமரத்தைப் பார்த்த சாத்தப்பன் ஆசாரி இயல்பாக ஆகாசம் என்கிறார். அவர் அப்படி ஆகாசம் என்று கண்டுகொண்டது எதை? வாயும் செவியுமற்ற அந்த கலைஞனை காத்துக்கொண்ட நீலன் பிள்ளையின் மனதையா? அல்லது கலைஞர்களின் கலைமனதின் ஒட்டுமொத்த தொகுப்பையேதானா?
அன்புடன்
பொன்.முத்துக்குமார்