முகில்கள்… கடிதம்

அந்தமுகில் இந்த முகில் மின்னூல் வாங்க

அந்த முகில் இந்த முகில் வாங்க

அன்புள்ள ஜெ

அந்த முகில் இந்த முகில் நாவலை வாசித்தேன். அதைப்பற்றி பலரும் சொன்னபிறகுதான் வாசிக்க முடிந்தது. குறிப்பாக ஏ.ஆர்.முருகதாஸ் சொன்னபின்னர்தான் சினிமாவிலுள்ள நாங்களெல்லாம் வாசிக்க நினைத்தோம். அதை இணையதளத்திலேயே பார்த்திருந்தாலும் வாசிக்கவேண்டுமென்ற எண்ணம் அப்போது வரவில்லை.

அந்நாவலை வாசித்தபின் யூடியூபுக்குப் போய் ஆ மப்பு ஈ மப்பு பாட்டை கேட்டேன். பழைய பாட்டு. ஏதோ நூற்றாண்டுக்கு பின்னாலிருந்து கேட்பதுபோல ஒலித்தது.ஆனால் ஒரு கனவுபோல என்னை தொடர்ந்துகொண்டே இருந்தது. அந்தக்குரலுக்கே ஒரு பெரிய நாஸ்டால்ஜியா இருந்தது.

சினிமாவை பின்புலமாகக்கொண்ட நாவல். ஆனால் சினிமாவின் உத்திகளை எல்லாம் எப்படி சரியாக இலக்கியப்படிமமாக ஆக்கலாம் என்பதற்கு ஒரு பாடம்போலவே இருந்தது. ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளுக்கு சரிகை உடை உறுத்தி புண்ணாகும். அது இப்போதும் உண்டு. அந்த புண்ணுடன் வெயிலில் நிற்கவேண்டும். ஆனால் காட்சியில் தகதகவென இருக்கும். அதைப்போல எவ்வளவு உவமைகள் நிறைந்துள்ளன.

இறுதிக்காட்சியில் அந்த திரைப்பட உரையாடல் மனதை பித்துப்பிடிக்கவைத்தது. என்னடா வாழ்க்கை என்றுதான் ஆரம்பத்திலே தோன்றியது. பிற்பாடு இதுதானே அற்புதமான வாழ்க்கை என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது.

நாகராஜ் மாணிக்கம்

இரு முகில்களின் கதை -கடிதம்

முந்தைய கட்டுரைமழையின் பாடல் – இந்துமதி
அடுத்த கட்டுரைதருமம் மறுபடி வெல்லும்!:MSV.முத்து