அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
சில நாட்கள் முன்பாக, மருத்துவர் ஜீவானந்தம் அவர்களின் இரண்டாமாண்டு நினைவேந்தல் நிகழ்வுக்கான திட்டமிடல் மற்றும் அதுசார்ந்த செயற்பணிகளுக்காக அவரது தங்கை ஜெயபாரதி அம்மாவைச் சந்திக்கச் சென்றிருந்தேன். மருத்துவர் ஜீவா பசுமை விருதுகள் பெறும் ஆய்வறிஞர் அ.கா.பெருமாள் மற்றும் செயற்பாட்டாளர் திருநங்கை சுதா ஆகியோர்களின் நேர்காணலை காணொளிகளாகப் பதிவுசெய்யும் பணிகளைத் திட்டமிட்டுவந்தோம். ஜெயபாரதி அம்மாவைத் தொடர்ந்து தினமும் சந்தித்து உரையாடி வந்த சூழ்நிலையில், அவரும் தனது கல்விப்பணி சார்ந்தும் வாழ்வியல் சார்ந்தும் நிறைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அவ்வாறு அவர் பேசுகையில் பகிர்ந்த ஒரு அனுபவத்தை உங்களுக்கு எழுதவே இக்கடிதம்.
அவருடைய பள்ளியில் பயிலும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு அண்மையில் ஒரு மலைகிராமத்திற்கு சென்று அங்கு தங்கியிருக்கிறார்கள். வனச்சூழலை பிள்ளைகள் அகமுணரும் வகையில், குழந்தைகளுக்கான ‘கானுலா’ என்ற அடிப்படையில் அப்பயணத்தை அவர்கள் திட்டமிட்டுச் சென்றுள்ளனர். அவ்வாறு சென்றுகொண்டிருந்த ஓரிரவில் சாலையின் நடுவில் சில யானைகள் கூட்டமாக நின்றிருப்பதால் அவர்கள் தங்கள் வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.
இரவில் தனித்த வனத்தில் யானைகள் சூழ்ந்த பகுதியில் குழந்தைகளோடு நின்றுவிட்டதால் அவர்கள் அனைவருக்குள்ளும் ஒருவித அச்சம் சூழ்ந்திருக்கிறது. அப்பொழுது, ஒரு சிறுமி எல்லோரையும் அழைத்து ஒரு திசையைக் காண்பிக்கிறாள். அத்திசைநோக்கி சிறிது வெளிச்சத்தைத் திருப்பினால், அங்கு ஒரு மரத்திற்குக் கீழே முதுயானை ஒன்று தனது நீண்ட தந்தங்களால் அம்மரத்தை முட்டியசைத்து உலுக்கியபடி நின்றிருக்கிறது. அம்மரத்திலிருந்து சிறுசிறு பழங்களாக தரையில் உதிர்ந்து விழுவதை அவர்கள் கண்டுள்ளனர்.
இன்னும் சற்று உற்றுப் பார்க்கையில்தான் தெரிகிறது, அது இழந்தைமரம் என்று. கோடைக்காலத் துவக்கம் என்பது கொத்துகொத்தாக மரம் கனிகாய்த்திருக்கிறது. முதுயானையின் உலுக்கலில் தரையில் கொட்டும் இழந்தைப் பழங்களை நாற்பதைம்பது மான்கள் சூழ்ந்துநின்று மேய்ந்த காட்சியையும் அவர்கள் கண்டுள்ளனர். சிறிதுநேரம் மான்கள் மேய்ந்தபிறகு அந்த யானை மீண்டும் மரத்தை உலக்குகிறது; மீண்டும் இழந்தைப் பழங்கள் தரைகொட்டுகின்றன; மீண்டும் மான்கள் அவற்றை உண்கின்றன…
குழந்தைக்குரிய வியப்புக் கண்களோடு ஜெயபாரதி அம்மா இந்தக் காட்சியை விவரித்தபோது மனதுக்குள் அத்தனைப் பரவசம் நிறைந்தெழுந்தது. கோடையின் தகிப்பிலும்கூட பழங்கள் நிறைந்த இழந்தை மரமும், அதை உலுக்கித் தரையுதிர்க்கும் யானையும், கூட்டமாக நின்று மேய்ந்து பசியாறும் மான்கூட்டமும் எத்தனைத் தன்னியல்பாக வனத்திற்குள் நிகழ்கிறது! வயதுபேதமின்றி அதைக் கண்ட அனைவருக்கும் அக்காட்சி ஒருவித நிறைவுணர்வையும் உளமலர்ச்சியையும் தோற்றுவித்ததை அம்மாவின் வார்த்தைகளில் உணரமுடிந்தது.
இந்த அனுபவத்தைக் கேட்ட அக்கணமே எனக்குள் யானை டாக்டர் கதை நிகழத் தொடங்கியது. யானையைப்பற்றி எச்சிறு செய்தி கேட்டறிந்தாலோ பார்வையுற்றாலோ உடனே மனது, நீங்களெழுதிய யானை டாக்டரை உருவகித்து அக்கதையின் தொடர்ச்சியாக அவைகளை சேகரித்துக் கோர்க்கிறது.
அவ்வகையில் யானை டாக்டர் கதை இன்று என் உள்ளத்தில் ஓராயிரம் கிளைக்கதைகளின் பச்சைக்கரு போல உயிரசைந்து நிற்கிறது. இனக்குழுக்களின் குலப்பாடல்களிலிருந்து திரண்டெழிந்த செவ்விலக்கியக் காப்பியத்திற்கோ, புராதனத் தன்மையை போற்றி வணங்கும் பண்பாட்டின் கனிந்த வடிவமான தொன்மத்திற்கோ இத்தகையதொரு உயிர்சரடு உள்ளிருக்கும் என்பதாக நான் மீளமீள யோசித்துக்கொண்டே இருக்கிறேன்.
உங்களது குழந்தைப் பருவத்தில் காட்டுச்சேம்பின் இலைகளை எடுத்து காதில் கட்டிக்கொண்டு யானை போல உறுமி விளையாடுவீர்கள் என எழுதியிருப்பீர்கள். ‘ஆனைச்செவி’ என்றே ஒரு காட்டிச்செடி அழைக்கப்படுவதையும் அதில் குறிப்பிட்டிருப்பீர்கள். புலியை வைத்து ஒரு வனத்தை மதிப்பிடுவது ஒருவகை கண்ணோட்டமென்றால் யானையை வைத்து கானகத்தை அறியமுயல்வது மனிதருக்கு இன்னும் அணுக்கமான அகத்திறவுதான் போலும்.
நிலத்தின் பேருயிர் பற்றிய ஒரு இலக்கியப் படைப்பு, அவ்வுயிர் பற்றிய அத்தனைத் தகவல்களையும் கதைகளையும் நம்பிக்கைகளையும் அனுபவங்களையும் தனது நீட்சியாகத் தோன்றவைக்கும் என்றால் அப்படைப்பின் உயிராழம் எத்தனையாயிரம் வேர்கள் நிரம்பிய ஆரண்யம்! ஓர் ஆசிரியத் தொன்மம் போல யானை டாக்டர் கே அவர்களைப் பற்றிய நினைவினையும், யானைகள் பற்றிய சூழியல் விழிப்புணர்வையும் தமிழில் இக்கதை வழியாக நிகழ்த்திட்ட உங்கள் அகத்தை மீண்டும் இக்கணம் பணிகிறேன்.
ஜெயபாரதி அம்மாவுடன் பயணித்த ஒரு பள்ளி மாணவி எடுத்த ஒளிப்படத்தை இக்கடித்ததுடன் இணைத்திருக்கிறேன்.
நன்றியுடன்,
சிவராஜ்