பொன்னியின் செல்வன் விவாதங்கள், வாங்க
பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க வேண்டும் என்பது மணிரத்னத்தின் நெடுங்காலக் கனவு. 2009ல் நான் மணிரத்னத்தை முதன் முதலாகச் சந்தித்ததே பொன்னியின் செல்வன் திரைக்கதையை எழுதுவதற்காகத்தான். 2011 ஏப்ரலில் ஆந்திரத்தில் பிரம்மாவரம் அருகே ’எலமஞ்சிலி லங்கா’ என்னும் கோதாவரிக்கரை தீவில் ஒரு மாதம் தங்கி திரைக்கதையை உருவாக்கினேன். ஆனால் அப்போது இப்படத்தை எடுப்பதற்கான செலவுகள் மிகுதியாக இருந்தமையால் திட்டம் கைவிடப்பட்டது.
அன்று ஒரே படமாக எடுப்பதற்காக திட்டமிட்டிருந்தோம். திரைக்கதை அதற்காகவே எழுதப்பட்டது. ஆதித்த கரிகாலனாக விக்ரமும், ராஜராஜசோழனாக மகேஷ்பாபுவும், வந்தியத்தேவனாக விஜயும் நடிப்பதாக இருந்தது. அந்த திட்டம் கைவிடப்பட்டது வருத்தமளித்தாலும் வேறுவழியில்லை என்றும் தோன்றியது. அன்று உதவியாளராக உடன்வந்த நண்பர் தனா இன்று இயக்குநர்.
வரைகலை தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்தபின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் கனவை மணி ரத்னம் மீண்டும் அடைந்தார். இம்முறை இரண்டு படங்களாக. புதிய நடிகர்கள், புதிய தொழில்நிபுணர்கள். அதே தனா இதிலும் இணை இயக்குநராகப் பணிபுரிந்தார். அன்று சின்னப்பையனாக இருந்த என் மகன் அஜிதன் இப்படத்தில் உதவியாளராகப் பணிபுரிந்தான்.
பொன்னியின் செல்வன் வெளியாவதற்கு முன்னரே பலவகையான வம்புகளும் சர்ச்சைகளும் கிளம்பின. பொன்னியின் செல்வனுக்கு கிடைக்கும் விளம்பரத்தில் ஒரு பகுதியை வென்றெடுக்கும் வணிகநோக்கம்தான் பெரும்பாலான கருத்துக்களுக்குப் பின்னாலிருந்தது. கூடவே இங்குள்ள எல்லா அரசியல்தரப்புகளும் பேச ஆரம்பித்தன. பெரும்பாலான கருத்துக்கள் கடும் விமர்சனங்கள்.
படம் வெளிவரும் முன்னரே விளம்பரங்களில் ராஜராஜசோழன் நெற்றியில் விபூதி இல்லை என்பதில் தொடங்கி இந்துத்துவ தரப்பு கண்டனங்களை ஆரம்பித்தது. தமிழ் வரலாற்றை மணிரத்னம் திரிக்கிறார், திராவிட வரலாற்றை திரிக்கிறார் என வேறு அரசியல்குரல்கள். ராஜராஜ சோழன் ஆதிக்கசாதிகளை உருவாக்கியவன், ஏழைகளை சுரண்டிய கொடுங்கோலன் என வேறு சில தரப்புகள்.
திரைப்படத்தின் சார்பில் அதை எழுதியவன் என்னும் முறையில் நான் பேசவேண்டியிருந்தது. பொன்னியின் செல்வன் இசைவெளியீட்டுவிழாவில் என்னுடைய சுருக்கமான உரை எதிர்ப்புகளை பெரும்பாலும் அணையச்செய்தது. இது தமிழ்ப்பெருமன்னன் ஒருவரின் வரலாற்றைச் சொல்லும் கதை, இதை தமிழர் ஏற்று முன்னெடுக்கவேண்டும் என்னும் உணர்வு உருவானது. படம் மக்களால் மிகப்பெரிய அளவில் ஏற்கப்பட்டது.
ஆனால் வணிகவிமர்சகர்கள், அரசியல் கூச்சலாளர்கள் பேசிக்கொண்டே இருந்தனர். அவற்றுக்கு நான் என் இணையதளத்தில் எழுதிய பதில்களின் தொகுப்பே இந்நூல். பெரும்பாலும் கேள்விபதில் வடிவில் அமைந்துள்ளது. ஐயங்கள், மறுப்புகளுக்கான விளக்கமாக இவை உள்ளன.
எந்த ஒரு விவாதத்தையும் அடிப்படைகளைப் பேசுவதற்கான வாய்ப்பாக எடுத்துக் கொள்வது என் வழக்கம். அவ்வாறே இந்த தருணத்தையும் பயன்படுத்தினேன். இந்நூலில் சினிமாவுக்கும் இலக்கியத்திற்குமான உறவு, ஒரு நாவல் திரைவடிவமாகும்போது உருவாகும் மாற்றங்கள், சோழர்காலப் பண்பாடு, சோழர் வரலாற்றை அணுகவேண்டிய முறை, வரலாற்றாய்வின் வழிமுறைகள் என பலவற்றை பேசியிருக்கிறேன். அடிப்படையில் சினிமா பற்றிய ஒரு நூல் இது. ஆனால் சினிமா வழியாக வரலாற்றையும் பண்பாட்டையும் அறிய உதவுவது.
இந்நூலை என் நண்பர் சிவா அனந்த் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன். பொன்னியின் செல்வன் போன்ற ஒரு மாபெரும் படம் அவரின்றி உருவாகியிருக்காது. மணிரத்னத்தின் முதன்மை உதவியாளர், திரைப்படத்தின் செயல்முறை தயாரிப்பாளர் அவர். சாதாரணமாகவே நூறுகைகள், ஆயிரம் கண்களுடன் பணியாற்றவேண்டிய தொழில் அது. சிவா அனந்த் கமல்ஹாசனின் மருதநாயகம் முதல் செயல்முறை தயாரிப்பாளராகப் பணியாற்றியவர்
பொன்னியின் செல்வன் தொடங்கியபோது கொரோனா தாக்குதல் தொடங்கியது. தொடர்ச்சியாக படப்பிடிப்பு இடங்களின் அனுமதி ரத்தாகியது. நோய்க்கட்டுப்பாடுகள் பெருகிக்கொண்டே சென்றன. என்னென்ன சிக்கல்கள் என்று சொல்லி முடிக்கவே முடியாது. ஆனால் இந்தியாவிலேயே மிகப்பெரிய சினிமாவான பொன்னியின் செல்வனின் படப்பிடிப்பு திட்டமிட்டபடியே நடந்து முடிந்தது. கொரோனாக் கால படப்பிடிப்புக்கான தனி வழிமுறைகளே பொன்னியின் செல்வன் படத்தினரால்தான் உருவாக்கப்பட்டன. சிவா அனந்த் அதில் மாபெரும் நிர்வாகியாகத் தன்னை வெளிப்படுத்தினார்.
சினிமாக்கள் அவற்றில் நடித்தவர்களால் பின்னர் அடையாளம் பெறுகின்றன. இயக்குநர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் நற்பெயர் பெறுகிறார்கள். சிவா அனந்த் போன்றவர்களின் பங்களிப்பை என்னைப்போன்ற எழுத்தாளர்கள் வரலாற்றில் பதிவுசெய்தால்தான் உண்டு. செயல்வீரரான அவரைப் பற்றி என்றாவது நான் நாவலே எழுதிவிடக்கூடும்.
ஜெயமோகன்
14 மார்ச் 2023
(பொன்னியின் செல்வன் விவாதங்கள் நூலின் முன்னுரை)