என்றும் பஷீர்

வைக்கம் முகமது பஷீர் தமிழ் விக்கி

ஏப்ரல் மாதம் பொன்னியின் செல்வன் 2 வெளிவருகிறது. மார்ச் 29 இசைவெளியீட்டுடன் அதற்கான விளம்பரங்கள் தொடங்குகின்றன. ஒரு எதிர்பார்ப்பு, பதற்றம். இனிய உணர்வுதான் அது.

ஆனால் அதற்கு இணையாகவே நான் எதிர்பார்க்கும் படம் நீலவெளிச்சம். ஆஷிக் அபு இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இந்தப் படம் வைக்கம் முகமது பஷீர் எழுதிய நீலவெளிச்சம் என்னும் கதையின் திரைவடிவம்.

நீலவெளிச்சம் படம் ஏற்கனவே ஏ.வின்செண்ட் இயக்கத்தில் மலையாளத்தில் 1964 ல்  ‘பார்கவி நிலையம்’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது. மலையாளத்தின் கிளாஸிக் படங்களில் ஒன்று அது.

பஷீரின் கதைகள் பின்னரும் படமாகியுள்ளன. இதற்கு பஷீரே திரைக்கதை எழுதினார். அந்தப்பணத்தில்தான் அவர் கோழிக்கோடு அருகே போப்பூரில் நிலம் வாங்கி வீடுகட்டி குடியேறினார். பஷீரின் ஆளுமையும் அவருடைய பித்தும்  தனிமையும் மிகச்சிறப்பாகப் பதிவான படங்களில் ஒன்று இது.

வைக்கம் முகம்மது பஷீர்- பழைய படம்

முப்பதாண்டுகளுக்குப் பின்பு மீண்டும் இப்படத்தை சென்ற ஜூலையில் பார்த்தேன். இன்னும் கனவுத்தன்மை கொண்டிருந்தது. ஒரு கட்டுரையும் எழுதினேன். தனிமையின் முடிவில்லாத கரையில்…

நீலவெளிச்சம் ஒரு ‘பஷீரியன்’ உளவியல் கொண்ட படைப்பு. மேலோட்டமான பார்வைக்கு எளிமையான, உற்சாகமான பேய்க்கதை. ஆனால் அதன் மறுவாசிப்புகள் உள்ளே உள்ளே வாசல்களை திறப்பவை. பஷீர் நீண்ட பயணத்திற்குப் பின் ஊர்திரும்பி ஏதேனும் எழுத முடியுமா என்று பார்க்க ஒரு வீட்டை வாடகைக்குப் பிடிக்கிறார். ஆனால் எழுத முடியவில்லை. ஒரு காலகட்டம் முடிந்துவிட்டிருக்கிறது. அகம் அல்ல, ஆன்மாவே களைத்துப்போயிருக்கிறது.

பஷீர் போராடிய இந்திய தேசியவாத இலட்சியங்கள் நாடு சுதந்திரமடைந்தபின் வெளிறிவிட்டன. அவரால் பாகிஸ்தான் பிரிவினையை ஏற்கமுடியவில்லை. காந்தி கொலையுண்டதுமே முழுமையாக அரசியலை துறந்துவிட்டார். அதுவரை எழுதிய கொள்கைசார்ந்த எழுத்துக்கள் அனைத்தையும் கொளுத்தி அழித்துவிட்டார். எஞ்சுவது ஒன்றுமில்லை. சில நினைவுகளை தவிர. அவற்றில் பல துயரமானவை, சில இனியவை.

அலுப்பு, சலிப்பு, சோர்வு. எழுத்தாளர்கள் அவ்வப்போது அடையும் மகத்தான வெறுமை. இன்று உளவியலாளர்கள் chronic depression என்று சொல்லி மாத்திரை எழுதிவிடுவார்கள். உளச்சோர்வு தனிமையால் பெருகும், தனிமையை பெருக்கிக் கொள்ளும். அந்த மகத்தான தனிமையில் அவருள் தோன்றிய ஒரு பிம்பம் பார்கவி. அவருடைய கற்பனையில் இருந்து.

பார்கவி அவருடன் விளையாடுகிறாள். அவரைச் சீண்டுகிறாள். மீண்டும் இளமை, மீண்டும் சிரிப்பு. ஆனால் எங்கோ அவளை கழற்றிவிட்டாகவேண்டும். அவள் இருக்குமிடம் ஒரு அகவெளி. பைத்தியமாக ஆகாமல் அங்கே செல்ல முடியாது. மீளும் துடிப்பில் பஷீரின் கற்பனை அவளுக்கொரு கதையை உருவாக்குகிறது. பார்கவி நிலையத்தின் அந்தக் கிணறு அவருடைய ஆழுளமேதான். அவள் அங்கிருந்து வருகிறாள். அவள் சொன்னகதைகளும், அவர் எழுதிய நினைவுகளும் அவளுடன் மீண்டும் அதற்குள் சென்று மறைகின்றன.எஞ்சுவது இனிய ஒரு வலி. எரிச்சலும் சுகமுமாக ஒரு குருதிக்கீறல். அதுதான் நீலவெளிச்சம்.

பஷீரின் மகத்தான ஆளுமை மிகச்சிறப்பாக வெளிப்பட்ட படம் பார்கவி நிலையம். முதல் வடிவில் மது பஷீராக நடித்திருந்தார். பஷீரின் தனிமை, சோர்வு, அந்த இருளில் இருந்து எழும் ஒளியாக ஒரு பெண்குரல். குறிப்பாக ‘ஏகாந்ததயுடெ மகாதீரம்’ என்னும் பாடல். ஒரு பஷீரியன் பாடல் அது.  அறிவின் புண்களும் பரவசத்தின் சிறகுகளுமாக பஷீர் வந்தடைந்த தனிமையின் முடிவில்லாத மறுகரை.

மறுஆக்கத்தில் பஷீர் இன்னும் துலங்குகிறார். புகைப்படத்தில் பஷீரிடம் வெளிப்படும் உடல்மொழியையும் அப்படியே பதிவுசெய்திருக்கிறார்கள்.

எம்.எஸ்.பாபுராஜ்

பார்கவி நிலையம் படத்திற்கு எம்.எஸ்.பாபுராஜ் இசையமைத்த பாடல்கள் மலையாளத்தின் செல்வங்களாகக் கருதப்படுகின்றன. பாபுராஜ் இன்னொரு பஷீர். ஏறத்தாழ சமவயது கொண்டவர். முகமது சபீர் என்ற பெயர் கொண்ட பாபுராஜ் வங்காள கஸல் பாடகரான ஜான் முகமது கான் என்பவருக்கு பிறந்தவர். ஒரு கச்சேரிக்கு கோழிக்கோடு வந்த பாபுராஜின் தந்தை அவர் அன்னையுடன் சில ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு கைவிட்டுவிட்டுச் சென்றார். அன்னை பைத்தியமாகி மறைய பாபுராஜ் தன் தம்பியுடன் கோழிக்கோடு தெருக்களில் பாடி பிச்சையெடுத்து வாழ்ந்தார்.

பின்னர் மும்பை ரயில்களில் பாடும் நாடோடியானார். இலங்கைக்குச் சென்று பாடினார். கோழிக்கோடுக்கு திரும்பி கஸல் பாடகராக புகழ்பெற்று திரையிசையில் குறுகிய காலத்தில் ஓர் அலையை கிளப்பினார். பஷீரின் நண்பராக இருந்தார். பெருங்குடிகாரராகி, செல்வத்தை இழந்து சென்னை அரசு மருத்துவமனையில் அனாதையாக இறந்தார். பஷீரின் ஆளுமையை உணார்ந்து போடப்பட்ட இசை இப்படத்திலுள்ளது.

அதே பாடல்களுடன் அந்தப்படம் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது. பாடல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.  புதியபாடல்கள் நல்ல ஒலிப்பதிவுடன் வண்ணமயமாக உள்ளன. சிறப்பாகவும் உள்ளன.

ஆனால் அறுபதாண்டுகளுக்கு முந்தைய கறுப்புவெள்ளை படத்திலேயே அற்புதமான ஓவியச்சட்டகங்கள் உள்ளன. குறிப்பாக ஏகாந்ததையுடே அபார தீரம் பாடலில் வின்செண்ட் அளித்த காட்சிகள் கருமைவெள்ளை காரணமாக மேலும் கனவுத்தன்மையுடன் உள்ளன.

தாமதமென்ன வருவதற்கு?

பாடியவர் ஷஹபாஸ் அமன்

தாமஸமெந்தே வருவான் பிராணசகி என்றே முன்னில்
தாமஸமெந்தே அணையான் பிரேமமயி என்றே கண்ணில்

ஹேமந்த யாமினி தன் பொன் விளக்கு பொலியாறாய்
மாகந்த சாககளில் ராக்கிளிகள் மயங்ஙாறாய்
தாமஸமெந்தே வருவான்…

தளிர்மரம் இளகி நின்றே தங்கவள கிலுங்ஙியல்லோ
பூஞ்சோலப் கடவில் நின்றே பாதசரம் கிலுங்ங்கியல்லோ
பாலொளி சந்த்ரிகயில் நின் மந்தஹாசம் கண்டுவல்லோ
பாதிராக் காற்றில் நின்றே பட்டுறுமால் இளகியல்லோ
தாமஸமெந்தே வருவான்…

(தமிழில்)

தாமதமென்ன வருவதற்கு உயிர்தோழி என் முன்னால்
தாமதமென்ன அணைவதற்கு காதல்கொண்டவளே என் கண்ணில்?
முன்பனிக்கால இரவின் பொன்விளக்கு அணையப்போகிறது
செஞ்சந்தன மரத்தில் இரவுக்கிளிகள் கூடணைகின்றன
தாமதமென்ன வருவதற்கு?

தளிர்மரம் அசைந்து உன் தங்கவளையல் குலுங்குகிறது
பூஞ்சோலைப் படிக்கட்டில் உன் கொலுசு ஒலிக்கிறது
பாலொளி சந்திரனில் உன் புன்னகை தெரிகிறது
நள்ளிரவுக் காற்றில் உன் பட்டுமேலாடை நெளிகிறது
தாமதமென்ன வருவதற்கு?
முதல் வடிவம். யேசுதாஸ்

*

தனிமையின் முடிவில்லாத கரை

புதிய வடிவம். பாடியவர் ஷஹபாஸ் அமன்

ஏகாந்ததையுடே மகாதீரம்
ஏகாந்ததையுடே அபார தீரம்

பின்னில்தாண்டிய வழி அதிதூரம்
முன்னில் அக்ஞாத மரண குடீரம்
இந்நு நீ வந்நெத்திய ஓரிடமோ
ஏகாந்ததையுடே அபார தீரம்

பலதும் தேடி பலதும் நேடி
நிழலுகள் மூடிய வழிகளில் ஓடி
ஒடுவில் வந்நெத்திய ஓரிடமோ
ஏகாந்ததையுடே அபார தீரம்

ஆதிமபீகர வனவீதிகளில்
நிலாவில் மயங்ஙிய மருபூமிகளில்
நூற்றாண்டுகளுடே கோபுரமணிகள்
வீணு தகர்ந்நொரு தெருவீதிகளில்
அறிவி முறிவுகள் கரளிலேந்தி
அனுபூதிகள்தன் சிறகில் நீந்தி
மோகாந்தத தீர்ந்நு எத்திய ஓரிடமோ
ஏகாந்ததையுடே அபார தீரம்

தமிழில்

தனிமையின் மகத்தான கரை
தனிமையின் முடிவில்லாத கரை

பின்னால் கடந்த வழி மிகத்தொலைவு
முன்னால் அறியமுடியாத மரணக்குடில்
இன்று நீ வந்து சேர்ந்த ஓர் இடமோ
தனிமையின் முடிவிலாக் கரை

பலவும் தேடி பலவும் அடைந்து
நிழல்கள் மூடிய வழிகளில் ஓடி
இறுதியில் வந்து சேர்ந்த இடமோ
தனிமையின் முடிவிலா கரை,

ஆதிபயங்கர வனப்பாதைகளில்
நிலவில் மயங்கும் பாலைநிலங்களில்
நூற்றாண்டுகளின் கோபுரமணிகள்
வீழ்ந்து உடைந்ந்த தெருவீதிகளில்
அறிவின் புண்களை நெஞ்சில் ஏந்தி
பரவசங்களின் சிறகுகள் கொண்டு நீந்தி
மோகக்குருட்டுத்தன்மை நீங்கி
நீ வந்து சேர்ந்த ஓர் இடமோ
தனிமையின் முடிவில்லா கரை

பழைய வடிவம் பாடியவர் கமுகற புருஷோத்தமன்

காதல் மதுக்கிண்ணம்

புதிய வடிவம் கே.எஸ்.சித்ரா

அனுராக மதுசஷகம் அறியாதே மோந்தி வந்த
மதுமாச சலஃபமல்லோ
ஞானொரு மதுமாச சலஃபமல்லோ

அழகின்றே மணிதீப ஜ்வாலயே ஹ்ருதயத்தில்
அறியாதே நிறச்சல்லோ
ஞானொரு மலர்மாச சலஃபமல்லோ

அக்னிதன் பஞ்சரத்தில் பிராணன் பிடஞ்ஞாலும்
ஆடுவான் வந்நவள் ஞான்
நெஞ்சிலே ஸ்வப்னங்கள் வாடிக் கொழிஞ்ஞாலும்
புஞ்சிரி கொள்ளும் ஞான்

சிறகு கரிஞ்ஞாலும் சிதயில் எரிஞ்ஞாலும்
பிரியில்லென் தீபத்தே ஞான்
விட்டு பிரியில்லென் தீபத்தே ஞான்

(தமிழில்)

காதல் மதுக்கிண்ணம் அறியாமல் குடித்துவிட்ட
வசந்தகால வண்ணத்துப்பூச்சி நான்.

அழகின் மணிதீபத்தின் சுவாலையை உள்ளத்தில்
அறியாமல் நிறைத்தவள் நான்.
நான் ஒரு மலர்மாத வண்ணத்துப்பூச்சி.

நெருப்புக் கூண்டுக்குள் உயிர் துடித்தாலும்
ஆடுவதற்காக வந்தவள் நான்.
நெஞ்சின் கனவுகள் வாடி உதிர்ந்தாலும்
புன்னகை செய்பவள் நான்
சிறகு கருகினாலும் சிதையில் எரிந்தாலும்
பிரியமாட்டேன் என் தீபத்தை நான்.
விட்டு பிரியமாட்டேன் என் தீபத்தை நான்.
பழைய வடிவம். எஸ்.ஜானகி

தனிமையின் முடிவில்லாத கரையில்…

பஷீரின் மதிலுகள்

முந்தைய கட்டுரைகுடந்தை சுந்தரேசனார்
அடுத்த கட்டுரைகவிதைகள் – இந்தி கவிதைச் சிறப்பிதழ்