வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு

அன்புள்ள ஜெ

தங்களின் துணைவன் சிறுகதை இயக்குநர் வெற்றிமாறன் அவர்களால் படமாக்கப்பட உள்ளது என்ற தகவல் வெளிவந்த நாள் முதல் அக்கதை பலராலும் படிக்கப்பட்டு பகிர்ந்துகொள் ப்பட்டது. அப்போது எழுந்த விமர்சனத்திற்க்கு விடுதலை திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பதிலளித்திருந்தீர்கள். அதாவது புரட்சி பேசும் தீவிர நக்சலைட்டாக உள்ள ஒருவர் சாதி, மதத்திலிருந்து முற்றிலும் ஒதுங்கிய நாத்தீகராகத்தான் இருப்பார் என்று வந்த விமர்சனங்களுக்கு “நக்சலைட்டுகள் மக்களோடு மக்களாகத்தான் இருப்பார்கள், போலீசாருக்கு தங்களை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருக்க இவ்வாறுதான் இருந்தார்கள்” என பதில் அளித்திருந்தீர்கள்.

ஆரம்பத்தில் தாங்கள் நக்சலைட்டுகளை அவமானப்படுத்த வேண்டுமென்றே அவ்வாறு சித்தரித்ததாக அறிவுஜீவிகள் தரப்பாக தங்களை காட்டிக்கொள்பவர்கள் கொந்தளித்திருந்தார்கள். கொஞ்சம் வரலாற்றை அணுகிப் பார்த்தால் உண்மை புலப்படும்.

1960 களில் தென்னிந்தியாவில் புகழ் பெற்ற நக்சல் இயக்க நிகழ்வுகள் கேரளத்தில் நடைபெற்றவைதான். குன்னிக்கல் நாராயணன், மந்தாகினி, அவர்களின் மகள் அஜிதா, வர்க்கீஸ், பிலிப் எம் பிரசாத், ஸ்டீபன் என பெரும் நக்சல் இயக்க தலைவர்கள் கேரளத்தில் களமாடியவர்கள். இதில் அஜிதா, பிலிப் எம் பிரசாத், ஸ்டிபன் போன்றவர்கள் தங்களுடைய அனுபவங்களை புத்தகங்களாகவும் பேட்டிகள் வாயிலாகவும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்

ஒரு பேட்டியில் “தாங்கள் உறங்கச்செல்லும் முன்பு மண்டியிட்டு ஜெபம் செய்துவிட்டுதான் உறங்குவீர்களாமே?” என்ற கேள்விக்கு “ஆம். புல்பள்ளி காடுகளில் ஆயுதங்களுடன் தோழர்களுடனும் சுற்றித்திரிந்த போதும் கூட இரவில் மண்டியிட்டு ஜெபித்தால் தான் எனக்கு உறக்கம் வரும். நான் சிறுவனாக இருந்தபோது எனது தாயார் சகோதர்களையும் என்னையும் இருத்தி ஜெபம் செய்துவிட்டுதான் உறங்குவார். அந்த பழக்கம்தான் எப்போதும் தொடர்ந்தது. அது ஒரு ஆசுவாசத்தை அளித்து உறங்கச் செய்தது”என பதிலளித்திருக்கிறார் நக்சலைட்டாக இருந்த பிலிப் எம் பிரசாத்

அஜிதா மற்றொரு பேட்டியில் ” ஒரு நல்ல உருக்கமான கதைபடித்தால் அழுவேன். நல்ல இசைப்பாடல் கேட்டால் மகிழ்ச்சியடைவேன். நீங்கள் நினைப்பது போல் இல்லை. நான் நக்சல் இயக்கத்தில் பங்கு கொண்டேன் என்பதை தாண்டி உங்களைப்போல் தான் நானும் என்னுடன் இருந்த தோழர்களும் அப்படியே” என தெரிவித்திருக்கிறார். இந்த உண்மையை மலையாள சினிமாக்களில் இயல்பாக காட்டியும் இருக்கிறார்கள்

அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய கதாபுருஷன் திரைப்படத்தில் நச்சலைட்டாக வரும் நாகேந்திர பிரசாத் போலீசாரிடம் இருந்து தப்பிக்க காவியாடை அணிந்த துறவி போல சுற்றுவார். அஞ்சலி மேனனின் மஞ்சாடிக்குரு படத்திலோ போலீசாரிடம் இருந்து தப்பிக்க காவியாடை உடுத்திய முரளி கடைசியில் துறவியாகியே போவார் நக்சலிசத்தை துறந்து. அங்கெல்லாம் நக்சலைட்டுகளை எவ்வாறு இப்படி சாமியாராக சித்தரிக்கலாம் என்ற விவாதங்களெல்லாம் இல்லை. ஆனால் இங்கு வெறுப்பினால் ஒரு விவாதம் கிளப்பப்பட்டு அதற்கு தாங்கள் அளித்த பதிலையும் திரித்து ” அந்த காலத்தில் புரட்சியாளர்கள் எல்லாம் நெற்றியில் விபூதி வைத்து இருப்பார்கள்” என ஜெயமோகன் பேசியதாக தங்களின் பேச்சுக்கு தலைப்பிடுகிறது. என்ன சொல்வதென்று தெரியவில்லை

அன்புடன்

பார்த்திபன்

அன்புள்ள பார்த்திபன்,

அண்மையில் ஓர் இணைய இதழாசிரியருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் சொன்னார், தமிழின் தீவிர இலக்கியத்துக்கான இணைய இதழ்களின் வாசகர்கள் அதிகபட்சம் 200 பேர் என. ஒரு கதை, கட்டுரை பிரபலமடைந்தால் 450 தொடுகை (ஹிட்)கள் வருகின்றன. சாதாரணமாக ஐம்பது அறுபது. அவ்வளவுதான். இதை இணைய இதழ்களின் ஆசிரியர்கள் எழுதியுமிருக்கிறார்கள்.

அதாவது பழைய சிற்றிதழ்களின் காலகட்டத்தைவிட மோசம். அன்றெல்லாம் சிற்றிதழ்கள் சாதாரணமாக 600 பிரதிகள் அச்சிடப்படும். குறைந்தபட்சம் 200. பின்னர் இடைநிலை இதழ்களின் காலம் வந்தது. அதில் உச்சமான காலச்சுவடு ஒரு கட்டத்தில் 8000 பிரதிகள் வரை சென்றது. நான் நடத்திய சொல்புதிது இதழ் 2000  பிரதிகள் அச்சிட்டோம்.

இப்போது பேசப்படுவதை வைத்துப் பார்த்தால் இடைநிலை இதழ்களின் காலகட்டமே நவீன இலக்கியத்தின் இரண்டாவது பொற்காலம் என்று படுகிறது. அதாவது மணிக்கொடி, சுதேசமித்திரன், கலைமகள் இதழ்கள் 5000 பிரதிகள் விற்ற 1930 முதல் 1950 வரையிலான முதல் காலகட்டம் ஒரு பொற்காலம். புதுமைப்பித்தனின் காலம். அதன்பின் தொடர் சரிவு. இலக்கியம் சிற்றிதழ்களில் ஒடுங்கிக்கிடந்தது. 1990 ல் சுபமங்களா, இந்தியா டுடே காலம் முதல் 2005 வரை பதினைந்தாண்டுகள் இரண்டாவது பொற்காலம். இன்று சக்கரம் சுழன்று பழைய தேக்கநிலைக் காலகட்டத்திற்கே சென்றுவிட்டிருக்கிறது.

நான் எழுதவந்தது அந்த இரண்டாம் பொற்காலத்தின் தொடக்கத்தில். அதனுடன் வளர்ந்து வந்தேன், அதை உருவாக்கியவர்களில் ஒருவனாகவும் இருந்தேன். எனக்கெல்லாம் கிடைத்த வாய்ப்பு இன்று எழுதுபவர்களுக்கு அமையாதா என்னும் திகைப்பு உருவாகிறது. (ஆனால் தீவிர எழுத்தாளர்கள் தங்களுக்கான பாதையை தாங்களே வெட்டுபவர்கள் என்றும் படுகிறது)

கூடவே எனக்கு ஒரு வியப்பு. இன்று எழுத்தாளர்களை, இலக்கியத்தை வசைபாட வேண்டும் என்றால் சமூக வலைத்தளங்களில் சாதாரணமாக ஐம்பதாயிரம் பேர் கூடிவிடுகிறார்கள். ஐந்தாயிரம் பதிவுகள் வந்துவிடுகின்றன. கணக்குகளைப் பார்த்தால் இவர்களில் ஆயிரத்தில் ஒருவரே ஏதேனும் இலக்கிய இதழை வாசிக்கிறார். அதாவது உள்ளே சென்று எட்டிப்பார்த்து ஒரு தொடுகையையேனும் அதற்கு அளிக்கிறார். மிச்சபேரெல்லாம் யார்? எங்கிருந்து வருகிறார்கள்?

யார் யாரோ இலக்கியவாதியை வசைபாடுகிறார்கள். போலி வரலாற்றுப் பிலாக்காணம் வைக்கும் யுடியூபர்கள், ஓய்வுபெற்ற போலிப்புரட்சியாளர்கள், என்ஜிஓ ஆசாமிகள், வெவ்வேறு கட்சிகளின் ஊடக அணியினர்… சுருக்கமாகச் சொன்னால் ஓய்வுபெற்ற அத்தனை பேருமே சமூகவலைத்தளத்தில் அமர்ந்து இலக்கியவாதிகளை வசைபாடுகிறார்கள். ஐம்பதாயிரத்தில் ஆயிரம் பேர்கூட இலக்கிய இதழ்களை சும்மா உள்ளே என்ன இருக்கிறது என்றாவது நுழைந்து பார்ப்பதில்லை. வசைபாடுவதற்கான தகவல்களைத் திரட்டுவதற்காகக்கூட வாசிப்பதில்லை. அவர்களுக்கு எவரேனும் வெட்டி எடுத்துப்போடும் ஒற்றைவரியே போதும் அதற்கு.

இன்று இலக்கியவாதிகளின் பெயர்கள் அனைவருக்கும் தெரிகிறது. ஒற்றைவரி அபிப்பிராயங்களை தெரிந்துகொள்கிறார்கள். அவரவர் அரசியல், சாதிமதக் காழ்ப்புகள் சார்ந்து வசைபாட ஆரம்பிக்கிறார்கள்.

துணைவன் இசைவெளியீட்டுவிழாவில் நான் சொன்னதை பார்த்திருப்பீர்கள். இங்கே அரசியலோ வரலாறோ அறியாத சிலர் கோனார் என ஓர் இடதுசாரிக்குப் பெயர் இருக்குமா என்று எழுதினர். சென்றகால இடதுசாரியினர் பெரும்பாலும் மக்களுடன் இணைந்து மறைந்திருப்பார்கள், அவ்வாறு மறைந்திருக்கும் அவர்கள் சூட்டிக்கொண்ட பொதுவான பெயரோ அல்லது போலீஸ் போடும் அடையாளப் பெயரோதான் அவர்களுக்கு இருக்கும் என்று சொன்னேன். (அதாவது பெயர் சூட்டிக்கொண்டு புரட்சிபேசும் முகநூல் புரட்சியாளர்கள் அல்ல அவர்கள்)

அதை ஓர் ஊடகம் ’அந்தக்கால புரட்சியாளர்கள் விபூதி போட்டிருப்பார்கள்’ என தலைப்பிட்டு வெளியிட்டது. தலைப்பு இந்த வம்புக் கும்பலில் ஒரு பகுதியையேனும் சுண்டி இழுத்து அந்த ஏழுநிமிட வீடியோவை பார்க்கவைத்து ’ஹிட்’ தேற்றிக்கொள்ளும் நோக்கம் கொண்டது. ஏமாறுவார்களா வம்பாளர்கள்? அவர்கள் அந்த வீடியோவை பார்க்கவில்லை. தலைப்பை வைத்தே வசைபாடி தள்ளிவிட்டனர். நான் புரட்சியாளர்களை மதவெறியர்கள் என்று சொல்கிறேன் என்று சொல்லி ஐநூறுக்கும் மேற்பட்ட வசைகள்.

இன்று என் பெயரோ, சில எழுத்தாளர்களின் பெயர்களோ பரவலாகத் தெரிகிறது. அதை எண்ணி சிலர் பெருமிதம் கொள்கிறார்கள். அது ஒரு பெரும் மாயை. இந்த சமூக ஊடகம் இலக்கியத்தின் எதிரிகளுக்கு இலக்கியத்திலுள்ள பெயர்களை கொண்டுசென்று சேர்த்துள்ளது. இலக்கியத்திற்கு ஆள் கொண்டுவந்து சேர்க்கவுமில்லை. இலக்கியம் பழைய சிற்றிதழ் யுகத்திற்கே போய்விட்டிருக்கிறது.

இன்று கோடையின் சிற்றோடைபோல மெலிந்து தளர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது இலக்கியம். மறுபக்கம் கிடைக்கும் தருணத்தை எல்லாம் பயன்படுத்தி இலக்கியத்தை அழிக்க வெறிகொண்ட பெருங்கூட்டம் திரண்டுள்ளது. இலக்கியம் தமிழில் நூறாண்டுகளாக முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்றுள்ளதுபோல இத்தனை பெரிய எதிரிக்கூட்டம் என்றும் இருந்ததில்லை. இது மிகப்புதிய ஒரு நிகழ்வு. மிக அச்சமூட்டுவது.

இந்தக் கூட்டம் முதலில் ‘இலக்கியம் வாசிக்கலாம், ஆனா இன்ஃபுளூயன்ஸ் ஆகிவிடக்கூடாது’ என ஆரம்பிக்கிறது. (ஆனால் இளைஞர்கள் இவர்கள் சொல்லும் கட்சியரசியலால் இன்ஃப்ளூயன்ஸ் ஆகலாம் என்கிறார்கள். அசட்டு சமூகவியல் கருத்துக்களால் இன்ஃப்ளூயன்ஸ் ஆகலாம். சினிமா, வணிகம் என எல்லாவகை பிரச்சாரங்களாலும் இன்ஃப்ளூயன்ஸ் ஆகலாம். இலக்கியம் மட்டும் இன்ஃப்ளூயன்ஸ் செலுத்திவிடவே கூடாது. சும்மா வாசித்துவிட்டு அப்படியே போய்விடவேண்டும். வேண்டுமென்றால் நான்கு மீம்ஸ் போடலாம் என்கிறார்கள்.)

அடுத்து இக்கும்பல் ‘எந்த எழுத்தாளரையும் பெரியாளா மதிக்கக்கூடாது’ என நீட்டுகிறது. ’எனக்கு எவர்மேலும் மரியாதை இல்லை’ என்கிறது. (ஆனால் அரசியல் தலைவர்களுக்கு கொடிபிடித்து நரம்பு புடைக்க கூச்சலிடலாம். அவர்களை திருவுருவாக்கி வழிபடலாம். அவர்களின் எல்லா செயல்களையும் மாய்ந்து மாய்ந்து நியாயப்படுத்தலாம். அவர்களை வைத்து இரவுபகலாகச் சண்டை போடலாம்)

அதாவது சிந்தனை சார்ந்த, கலை சார்ந்த செல்வாக்குகளுக்கு மட்டும் ஆளாகி விடலாகாது. மற்ற அத்தனை செல்வாக்குகளும் இயல்பாகவே வந்தமையலாம். நான் இளைஞர்களிடம் சொல்வதெல்லாம் உங்களிடம் ‘இன்ஃப்ளூயன்ஸ் ஆகாதே’ என்பவர்களிடம் ‘நீ இங்குள்ள அத்தனை கழிசடை செல்வாக்குகளுக்கும் ஆளானவன் அல்லவா? உனக்கு என்ன தகுதி பேசுவதற்கு?” என்று திருப்பி கேளுங்கள் என்றுதான். ‘சிறந்தவற்றின் செல்வாக்குகளை எல்லாம் கவனமாக தடுத்து நீ அடைந்ததுதான் என்ன? உன் சாதனை என்ன? என்னையும் உன்னைபோல ஒரு வெட்டிவம்பன் ஆகச் சொல்கிறாயா?’ என்று கேளுங்கள் என்றுதான்.

அடுத்த கட்டம்தான் எதிரிகளின் மெய்யான மனநிலை வெளிப்படும் இடம். அக்கும்பல் ‘இந்த இலக்கியவாதிகளே மோசம்’ என்று ஆரம்பிக்கிறது.(இவர்கள் உட்பட மற்றவர்கள் அனைவரும் அறச்செல்வர்கள்) இலக்கியவாதிகள் சுயநலக்காரர்கள், மோசடிக்காரர்கள், ஒழுக்கமில்லாதவர்கள், முன்பின் பேசுபவர்கள், வியாபாரபுத்தி கொண்டவர்கள் ….இன்ன பிற. இப்படிச் சொல்பவர்களில் நானறிந்தவர்கள் பெரும்பாலும் அத்தனைபேரும் நினைத்தாலே நெஞ்சம்கூசச்செய்யும் பரம அயோக்கியர்கள்.  (அந்தக்காலத்தில் இந்த கூத்தாடிகளே இப்படித்தான் என்று கீழ்த்தரக் கும்பல் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்குமே, அதே மனநிலைதான்)

இக்கும்பல் இலக்கியத்தால் என்ன பயன் என அடுத்தாகச் சொல்ல ஆரம்பிக்கிறது. ‘பத்து பைசாவுக்கு பிரயோசனம் இல்லை’ என்ற பிலாக்காணம் அப்படியே விரிய,   ‘நான்லாம் வாசிக்கிறதே இல்ல, நல்லவேளை’ என்கிறது.

பத்தாண்டுகளுக்கு முன் இணையம் வழியாக இலக்கியத்திற்குள் கொஞ்சம்பேர் வந்தனர். அவர்களை இந்த வம்பர்கும்பல் வெற்றிகரமாக தடுத்துவிட்டனர், தங்களின் சில்லறை அரசியல் வம்புகளுக்குள் மூழ்கடித்து மறைத்துவிட்டனர் என்பதையே இன்றைய இணைய இதழ்களின் நிலைமை காட்டுகிறது.

என் இணையதளத்திற்கு வாசகர்கள் வரவில்லையா என்று கேட்கலாம். ஆம், வருகிறார்கள். இதுதான் மிக அதிகமானவர்கள் இத்தளத்தை வாசிக்கும் காலகட்டம். ஆனால் நான் மிகநீண்ட சென்றகாலம் வழியாக இங்கே வந்து சேர்ந்திருக்கிறேன். ஏற்கனவே அறியப்பட்டிருக்கிறேன். சினிமா உட்பட புகழின் ஒளியில் இருக்கிறேன். அடுத்த தலைமுறை ஏறிவர வழி இருக்கிறதா என்றுதான் கேட்கிறேன். இதழ்கள் இந்த அளவுக்குத்தான் வாசிக்கப்படுகின்றன என்றால் மிகமிகப் பிழையாக ஏதோ நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

இது இலக்கியத்தின் மீதான வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு. அவை வெறும் பூச்சிகள்தான். ஆனால் பெரும் எண்ணிக்கையில் உள்ளன.

வம்பர்களை ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் சில்லறை ஆதரவுக்காக அந்த வம்பர்சூழலில் இணைந்து அதை வளர்க்கும் செயலைச் செய்யும் எழுத்தாளர்கள் யோசிக்கவேண்டும்.

ஜெ

முந்தைய கட்டுரைகா.நமச்சிவாய முதலியார்
அடுத்த கட்டுரைஇணையமும் இலக்கியமும்