அன்புள்ள ஜெ ,
கிடைத்தற்கரிய ஒரு பேரனுபவம் மழைப்பாடல் வாசிப்பு.வாசிப்பனுபவத்தை மொத்தமாக தொகுத்துக் கொள்ள முனைகையில் எண்ணற்ற நிலங்களும்,மனிதர்களும், குணங்களும்,சம்பவங்களும் காட்சிகளாக அகத்தில் விரிந்துகிடக்கின்றன. பலமும் பலவீனமும் ஒருங்கே கொண்ட இந்த மானுடப்பிறப்பின் மேன்மைகளை கீழ்மைகளை ஆடியில் ஒருசேர பார்த்தது போன்றதொரு உணர்வு மழைப்பாடல்.முதற்கனலைப் போலவே மழைப்பாடலிலும் பீஷ்மரின் தன்னறமான குணமே முதன்மையாய் மனதில் பதிந்தது. மனதிற்கு மிகவும் நெருக்கமாக உணர்ந்த ஒரு காட்சி உண்டு. திருதராஷ்டினன் தன் சிறுமையால் பீஷ்மரை துவந்த யுத்தத்திற்கு அழைத்து தோற்று,பின்பு பீஷ்மரை சந்திக்க வந்தபோது பீஷ்மர் திருதராஷ்ட்டினை அன்புடன் ஆரத்தழுவி தனுர்வேதத்தை கற்றுக்கொடுக்கும் முன் சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் மந்திரம் போலானது.
‘இந்த குருகுலத்தில் நியதிகளில் ஒன்று.ஒருமுறைக்கு மேல் எதுவுமே சொல்லப்படாதது என்பதுதான்.அது உனக்கும் விதி. நீ கற்றமுறையில் இங்கே கல்வி இருக்காது.அனைத்தும் செயலாக நிகழ வேண்டும்.’ என்ற பீஷ்மரின் சொற்களை உணர்ந்த போது இப்பிரபஞ்சம் படைக்கப்பட்ட போது உருவாக்கப்பட்ட நியதியே இதுவாகத்தான் இருக்குமோ ? ஒரவளவுக்கு பிற உயிர்கள் அதனை பின்பற்றவே செய்கின்றன. இந்த மனிதப் பிறவியொன்று தான் அதை மறந்து சௌகர்யங்களை தனக்கேற்றார் போல் மாற்றியமைத்துக் கொண்டு தன்போக்கில் வாழ நியதிகளை சமைத்துக் கொண்டனவோ என்று தோன்றியது.
முற்றிலுமாகக் கீழ்மைகளை மட்டுமே, பலவீனங்களை மட்டுமே கொண்ட ஒரு மானுடப் பிறப்பென்று இப்புவியில் எவருமே இருக்க முடியாது என்று மழைப்பாடலை வாசித்த போது நினைத்துக் கொண்டேன்.விழியற்றவனாக திருதராஷ்டினன் இருக்கிறான்.அதன் விளைவான ஒரு ஆற்றாமையும்,பாதுகாப்பின்மையும் கொண்டவனாக அவனை ஆக்குகிறது. ஆனால், திருதராஷ்டினனைப் போல் இசையை அனுபவித்து ரசித்து உணர்ந்தவர் வேறு எவர் இருக்க முடியும்? கேட்கிற இசையை விட உணர்கிற இசை கூடுதல் இசைமையுடையது. திருதராஷ்டினன் வெறும் இசை கேட்பவனல்ல.இசை உணர்பவன். பீஷ்மர் திருதராஷ்டானனிடம் இப்படி சொல்வார்.’காற்றை உணர்ந்தால் நீ அனைத்து பொருட்களையும் உணர முடியும்.கண்ணைவிட விரைவிலேயே நீ உடலால் அனைத்தையும் அறிய முடியும்’ என்று.புறஉலகச் சிதறலின்றி,புலன் தாண்டி மெய்வழியாய் பூரணத்துடன் உணர்ந்து வாழ்வதென்பது ஒருவகையில் எத்தனை முழுமையான வாழ்வாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டேன்.அந்தத் தொடுகையொன்றே அம்பிகையிடம்,விதுரனிடம்,காந்தாரியிடம் அவரவரின் திருதிராஷ்டிரனை அவர்களிடம் கொண்டு சேர்த்தது.தன் உடற்குறையால் உருவாகிய ஒருவிதமான பாதுகாப்பின்மையை அரியணையில் அமர்வதன் மூலம் நிறைவேற்றிக்கொள்ள அத்தனை தீர்க்கமாய் நீண்டகாலம் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த திருதராஷ்டினன் விழியில்லாததால் தான் அரியணையில் அமர முடியாது என்ற சூழ்நிலை வந்த கணத்தில் விதுரன் பாண்டுவை திருதராஷ்டினனிடம் ஆசி பெற்றுக்கொள்ள அழைத்தபோது ஒருநொடி கூட யோசிக்காமல் சிறிதுகாலம் நீயே அரியணை ஆழ்வாய் என்று தன் தம்பி பாண்டுவிற்கு ஆசியளித்து மனசார விட்டுக்கொடுக்கிறான்.
பாண்டுவிற்கும் ஒரு உடற்குறை இருந்தது .உடல் வெம்மை கொண்டு ஒருவிதமான நரம்புத் தளர்ச்சி நோயால் வாழ்வு முழுதும் அவதிப்படுகிறான்.பாவைகளை வைத்து விளையாடும் சிறுபிள்ளையின் சித்தரத்திலேயே பாண்டு அனைவராலும் பார்க்கப்படுகிறான்.ஆனால் அதே குணம் தான் குந்தியின் சுயம்வர நிகழ்ச்சியில் பாண்டுவிற்கு பலமாகவே அமைந்தது.கம்சன் போன்றோர் உடல் வலிமை கொண்ட போட்டிகளில் பங்கெடுத்து வெற்றிகொள்ள , பாண்டு புலியையும் பூனையையும் கூண்டில் அடைக்கும் அறிவுக்கூர்மை சார்ந்த சவாலான போட்டியில் தான் பாவைகளுடன் விளையாடும் அதே யுக்தியை பயன்படுத்தியே குந்தியை சுயம்வரத்தில் வென்று மணம் முடிக்கிறான்.
சகுனியைப் பற்றி சத்யவதி சியாமையுடன் ஆலோசிக்கும் போது சொன்ன சொற்களை வாசித்தபோது எத்தனை உண்மை என்று தோன்றியது .”ஒருவனைப் பற்றி எந்த இறுதி முடிவையும் எடுப்பதற்கு முன் அவனை நேரில் பார்த்தாக வேண்டும்.அவனிடம் சில முறையாவது பேசியாக வேண்டும்.எத்தனை நுணுகியறிந்திருந்தாலும் நேரில் பார்க்கையில் நம் அனைத்துக் கணிப்புகளும் பிழைபட்டு விடுகின்றன.பிறர் சொல்லும்போது நம் சிந்தைதான் அவற்றைக் கேட்கிறது.நம் தர்க்கம் தான் அவற்றை புரிந்து கொள்கிறது.அம்மனிதன் நம்மருகே நிற்கையில் நம்முடைய ஆன்மா அவனை உணர்கிறது.உள்ளுணர்வின் மூன்றாம் விழியால் அவனை நாம் பார்க்க முடிகிறது.” ஆம்! இப்படித்தானே இருக்க முடியும் ? சகுனியை சினந்து வெறுக்கும் இடமென்று மழைப்பாடலில் ஏதுமில்லை. காந்தார பாலை நிலத்தில் நடுநிசியில் ஓர் ஓநாயின் பசியையும் அதன் போக்கையும் ஆராய்ந்து அதனை பின்தொடர்ந்த சகுனியின் கூர்ந்த அவதானிப்புகள் வியக்கச் செய்தது.அந்த மதியூகம் தானே சகுனியின் ஆளுமை.திருதராஷ்டிரன் முடிசூடி தன் தமக்கையான காந்தாரி அரியணையில் அமர்வதைக் காண்பதற்காகவே காந்தாரத்தை விட்டு வந்த சகுனி ஒரு நிலையில் திருதராஷ்டிரன் மூடிசூடப் போவதில்லை என்பதை அறிந்ததும் எழுந்த ஆற்றாமையை முற்றிலுமாக அடக்கிக்கொண்டு பீஷ்மரின் அன்பிற்கும் வார்த்தைக்கும் கட்டுப்பட்டு ஒரு கைக்குழந்தைபோல் அவரிடம் சரண்புகுந்த அந்த சகுனியை நினைக்கையில் வியப்பே எழுந்தது.சகுனியையும் தன் தூய அன்பில் கட்டிப்போட்ட பீஷ்மரின் உயரத்தை நினைத்துக் கொண்டேன்.
காந்தாரியை அறிந்து, அவளது மாறும் நிலைப்பாட்டை உணர்கையில் எனக்கு கி ராவின் கன்னிமை சிறுகதை நினைவிற்கு வந்தது.’நம்மை பிறர் சினம் கொள்ள செய்யமுடியுமென்பதே ஓர் இழிவல்லவா?’ என்று இத்தனை பக்குவமானவளாக இருக்கும் காந்தாரி மணம்முடிந்த பின் அரியணை ஆசை, தன் மைந்தனுக்கான ஆட்சி என்று போட்டி பொறாமைகளில் கலங்கடிக்கப்படுகிறாள்.அந்த கன்னிமை பருவத்தில் இருக்கும் ஒரு தூய குணம் பின்பு மறைந்துதான் போகின்றதோ என்று காந்தாரியை உணர்கையில் எண்ணத் தோன்றியது.”கொள்கைகைகளை விட, கனவுகளை விட கையில் இருக்கும் குழந்தை என்னும் மெய் பெரிதென்று இவர்கள் நினைக்கிறார்கள்” என்று பீஷ்மர் சொன்ன வார்த்தைகள் சத்யவதியிலிருந்து அம்பிகை, அம்பாலிகை, காந்தாரி, குந்தி உட்பட யாவருக்கும் பொருந்தும் தானே.அந்த பிள்ளை பாசமென்ற பெரும் திரை ஒன்று மட்டுமே அத்தனை ஆண்டுகளாய் அம்பிகையையும் அம்பாலிகையையும் விலக்கி வைத்திருந்தது.பாண்டுவின் இறப்பைக் கேட்ட அந்த நொடி அத்திரை அறுபட்டு பழைய அம்பிகையையும் அம்பாலிகையையும் அவர்களுக்கு திருப்பிக் கொடுத்தது.இந்த மனித மனம் தான் எத்தனை விசித்திரமானது.அன்பு, வெறுப்பு எதிலும் நிலைப்பட ஒன்றில் அதனால் இருக்கமுடிவதில்லை. அம்பிகை,அம்பாலிகை இருவரும் வனம்புக எத்தனிக்கையில் அவர்களோடு சத்யவதியும் வனம் செல்ல எடுத்த முடிவு மனதை கலக்கவைத்தது.கண்கலங்காமல் அந்த கடைசி அத்தியாயத்தை வாசிக்க முடியவில்லை.அதுவரை அவள் எத்தனை பொறுப்புகளை,பாரங்களை சுமந்திருப்பாள்.அவள் எடுத்து வைத்து ஒவ்வொரு சிறு அடியிலும் தான் எத்தனை போராட்டங்கள்.அதுநாள் வரை ஆன்மபலத்தோடு எதிர்கொண்டிருந்தவள் சட்டென்று அத்தனையிலிருந்தும் அறுபட்டு ஒரு பெரும் விடுதலையுணர்வைக் கோரும் முடிவை ஒரு நொடியில் எடுக்க முடிந்துவிடுகிறது.அதற்கு முன் தன் மகன்கள் சித்ராங்கனின், விசித்திரவீரியனின் மரணத்தை அருகில் இருந்து பார்த்து, கடந்து வந்தவளுக்கு பாண்டுவின் மரணச்செய்தி அவளை அப்படியொரு முடிவை எடுக்க செய்ய முடிந்திருக்குமா என்று தோன்றவில்லை. அவள் அத்தனை நாள் இறைஞ்சிக் காத்திருந்த துறவிற்கு ஒரு துயர் வழிகாட்டியிருக்கக்கூடும். மானுடத்துயர் அதன் உச்ச குரூரத்துடன் வந்து நிற்கையில் ,அது அந்த அகவிடுதலையைக் கோரும் துணிவை கொடுக்கும் போலும்.
மழைப்பாடலின் பாதி அத்தியாயத்திற்கு மேல் குந்தியே என்னை முற்றிலுமாக ஆட்கொண்டாள்.பாண்டு இறந்த சமயம் அவள் எண்ணஓட்டத்தில் எழுந்த சிந்தனை, ” அவள் கால்கள் சற்று பதறுமென்றால் ,உள்ளம் சற்று சோர்வுறுமென்றால், அவள் மைந்தர்கள் மண்ணும் மதிப்பும் இல்லாத சேவகர்களின் வாழ்க்கைக்கு சென்றுசேருவார்கள்”. இளவயதில் கணவனை இழந்து பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கும் அத்தனை பெண்களிலும் இதே வைராக்கியமும் தீர்க்கமும் தானே இருந்திருக்கும். அவர்கள் அத்தனை பேரும் குந்தியானவர்கள் தானே.
எண்ணற்ற சிந்தனைத்தளங்களும் ,வாசிப்பின்போது தானே மனதில் பிடித்து தங்கிவிடும் உவமைகளும் மழைப்பாடலின் வழிநெடுக நிறைந்திருந்தன.’அவன் சொற்களெல்லாம் முளைக்கும் ஒரு வயல் நீ ‘ என்று சத்யவதி விதுரனிடன் சொன்ன உவமையை முகமலர்ந்து ரசித்தேன்.சார்வாகன் உதிர்த்த சொற்கள் ஒவ்வொன்றிற்குள்ளும் உறைந்திருந்திருந்த உண்மையை அறிய முயன்றேன் .”உண்மை என்பது என்ன? எப்போதும் அது இருந்து கொண்டிருப்பது.அது பொய்யால் மறைக்கப்பட்டிருக்கிறது.அந்தப் பொய்யை உருவாக்குவது எது?எது இந்த நகரை, இந்த அரசை, இந்த வாழ்க்கையை இந்த தெய்வங்களை உருவாக்கியதோ அது அதான். மானுடன் தன்னந்தனியானவன்.ஒவ்வொரு நாளும் பேரியற்கை முன் தன்னந்தனியாக நிற்க கடமைப்பட்டவன்.அந்தத் தனிமையை அவன் அஞ்சத் தொடங்கிய போது தான் இவையனைத்தும் உருவாயின” இப்படி சார்வாகனின் வரிகள் வழியாய், பிரபஞ்சத்திற்கும் இந்த இருப்பிற்குமான தொடர்பை, தேடல்களையெல்லாம் ஆழ்ந்து சிந்திக்கும் தருணங்கள் வெண்முரசின் வாசிப்பின்போது நிகழ்வதை உணர்கிறேன்.
கீழ்மைகளும் குறைகளும் மட்டுமே முழுமையாய் நிறைந்தவொன்றென்று இப்புடவியில் எவ்வுயிரும் இல்லையென்பதைப் போலவே ,ஒவ்வொரு பிறப்பிற்குமே அதன் இருப்பிற்கான ஒரு அர்த்தமும், இப்பிரபஞ்சவியக்கம் என்னும் தொடர்ச்சங்கிலியில் அதுவும் ஒரு கண்ணியாக என்றுமே இணைந்திருக்கும் என்ற சிந்தனையே மழைப்பாடலை வாசித்து முடித்த கணம் மனதில் நின்றது. சிவை நினைவிற்கு வருகிறாள்.அவள் நிகழ்த்தவேண்டியவற்றை நிகழ்த்தியபின்னர் தானே அவளும் விடைபெற்றாள்.அவள் வாழ்வும் அர்த்தப்பட்டதுதானே . “பிறப்பும் இறப்பும் கூடியும் பின்னும் வலையால் ஆனது இப்புடவி என்பதால் ஒவ்வொரு பிறப்பும் இங்கு நிகழ்த்தும் அனைத்துடனும் இணைந்துள்ளது” என்ற மழைப்பாடலின் வரிகளை நினைத்துக் கொள்கிறேன்.வண்ணக்கடலை தொடங்விருக்கிறேன்.
பணிவன்புடன்,
இந்துமதி.