புதுவாசகர் சந்திப்பு, கடிதம்

அன்புள்ள ஜெ

ஒரு ஒழுங்குடன் நல்ல முறையில் ஒரு பயிற்சி/ ஒரு வாசகர் சந்திப்பு – நடைமுறையில் கண்டது கனவா நனவா என கிள்ளிப்பார்த்துக்கொண்டேன். புதிய வாசகர் சந்திப்பு / பயிற்சி பெற்ற அனைவருக்கும் ஒரு வாழ்நாள் அனுபவமாக இருக்கும். தங்களின் சிந்தனையில் தெளிவு (Clarity of Thought) இதுவரை நான் சந்தித்த யாரிடமும் காணமுடியாத ஒன்றாக வியக்கவைக்கிறது.

ஏறத்தாழ 18 மணிநேர பயிற்சி. ஒரு மணித்துளிகூட மையக் கருத்தைவிட்டு விலகவே இல்லை. பயிற்சி கூடத்திற்கு வெளியேயும் பயிற்சி பெறுபவர் தொடுக்கும் வினாக்களுக்கு தெளிவான விளக்கமான பதில்கள்.புதிய வாசகர்களின் படைப்பு குறித்து சரியான மதிப்பீட்டுடன் சரியான அறிவுறுத்தல்கள். புதிதாக எழுதவிரும்புவோருக்கு இது எங்கும் கிடைக்காத ஒரு ஆக்கபூர்வமான பயிற்சி. சரியாக உள்வாங்கிக்கொண்டு இலக்கிய வேட்கை கொண்டோர் தொடர்முயற்சி செய்தால் சரியாக மிளிரமுடியும்.

பயிற்சி நடைபெற்ற புலம் சரியான தேர்வு. உணவும் தங்குமிட வசதிகளும் அருமை. வழிகாட்ட சரியான நபர் இருக்கும் நிகழ்வுகளில் சரியாகத்தான் எல்லாம் நடக்கும். மேலும் தங்களின் தோழமை ‘ வியத்தலும் இலமே’ என ஒதுக்கிவிட முடியவில்லை. பொருள் பொதிந்த சந்திப்பு.

அன்புடன்

பார்த்திபன்.ம.

முந்தைய கட்டுரைசுனில் கிருஷ்ணன் இணையச் சந்திப்பு இன்று
அடுத்த கட்டுரைபனிமனிதன் – கடிதம்