புது வாசகர் சந்திப்பு,கடிதம்

அன்புள்ள ஜெ அவர்களுக்கு,

கடந்த மூன்று நாட்கள் குறித்த கடிதம். வாழ்க்கை தவறான பாதையில் சென்று கொண்டிருந்ததை உணர்ந்த கணத்தில்தான் உங்களை அடைந்தேன். அதிகம் வாசிக்க தொடங்கினேன். உங்களிடம் இருந்து நிறைய கற்று கொண்டது மட்டுமல்லாமல் கற்றவற்றை வைத்து என் வாழ்க்கையையும் சீராக்கி கொண்டேன். உங்கள் நிழலில் இருப்பதையும் விரும்பினேன். அப்படியாகத்தான் இளம் வாசகர்கள் சந்திப்பில் கலந்து கொண்டேன்.

அங்கு வந்த பிறகு உங்களை நுணுக்கமாக கவனிக்க தொடங்கினேன். நீங்கள் வகுப்பறையில் ஆசிரியராகவும், இரவு கூடுகையில் நண்பராகவும்,உணவு உண்ணும் வேளையில் குடும்பத்து உறுப்பினர் போன்றும் ஒவ்வொரு சூழலிலும் ஒவ்வொரு தனி நபராக காட்சியளித்தீர்கள், எனக்கு சரியாக கூற தெரியவில்லை. ஆனால் நிறைய கற்றுக் கொண்டேன் நான் சரி என நினைத்து கொண்டிந்ததையெல்லாம் தவறென உணர்ந்தேன், தவறென நினைத்து கொண்டிருந்ததையெல்லாம் சரி எனவும் உணர்ந்தேன்.

மேலும் அந்த பாறை விளிம்பில் அடிக்கடி உங்களை சந்திக்க நேர்ந்தது, பேசி விடுவோம் இல்லை இல்லை வேண்டாம் இல்லை பேசுவோம் எனும் பெரிய மன போராட்டங்களில் சிக்கி கொண்டு மிகவும் குறைவாவே பேசினேன். உங்கள் அனுமதியுடனும் அனுமதி இல்லாமலும் உங்களை புகைப்படம் எடுத்தேன் இருந்தபோதும் இல்லை இது போதவில்லை என்ற எண்ணம் துடித்து கொண்டே இருந்தது.

படைப்பு குறித்தும் இலக்கியங்கள் குறித்தும் நீங்கள் உரையாற்றியது எனக்கு பல்வேறு திறப்புகளை கொடுத்துள்ளது. கடைசியாக அவ்வளவுதான் மூன்று நாட்கள் முடிந்து விட்டது அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் எனும் தருணத்தில் என்னால் நகர முடியவில்லை, அங்கேயே தேங்கினேன், மீண்டும் அந்த பாறை விளிம்பில் உங்களை காண முடிந்தது, இந்த முறை கண்டிப்பாக உங்களிடம் பேசி உங்களை கட்டி அணைத்தே ஆக வேண்டுமென அமர்ந்திருந்த உங்களை எழச் செய்தேன் மன்னித்து விடுங்கள், ஒரு வழியாக அந்த நிகழ்வும் நிகழ்ந்தது உங்களை கட்டி அணைத்தேன்.

இந்த உணர்வுகளையெல்லாம் என்வென்று கூற இயலவில்லை ஆனால் இப்போது நான் மிகவும் தெளிந்தும்,நிதானமாகவும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறேன் என்பது மட்டும் நிதர்சனம், உங்களிடம்  இன்னமும் நிறைய கற்க விரும்புகிறேன். நீங்கள் கைகாட்டிய பாதையில் வெகு தூரம் செல்ல என்னை தயார் செய்து கொள்கிறேன்.

இப்போது வீட்டில் இருக்கிறேன் ஆனாலும் என் மனம் அந்த பாறை விளிம்பிலும் மர நிழல்களிலும் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறது.

இவையனைத்திற்கும் நன்றி நன்றி

அன்புடன்

சக்தி

முந்தைய கட்டுரைகுற்றத்தின் ஊற்றுமுகங்கள், கடிதம்
அடுத்த கட்டுரைகு.ப.சேது அம்மாள்