கோவையில் நண்பர் ஆனந்த்குமார் ஒரு புகைப்பட நிலையத்தை தொடங்கியிருக்கிறார். குழந்தைகளை புகைப்படம் எடுப்பது குறிப்பாக அவருடைய தனித்தன்மை. தன்னறம் அமைப்பின் தும்பி இதழில் ஆனந்த் குமார் எடுத்த பல நல்ல படங்கள் பிரசுரமாகியிருக்கின்றன.
திருவனந்தபுரத்தில் அதையே செய்துகொண்டிருந்தார். அதன்பின் கொரோனாவில் கொஞ்சகாலம் நாகர்கோயில் அருகே கொட்டாரத்தில் இருந்தார். மனைவி கோவையில் பணிநிமித்தம் சென்றமையால் அங்கே சென்றிருக்கிறார். அங்கே புதிய ஸ்டுடியோ தொடங்க எண்ணி ஓராண்டாகச் சொல்லிக் கொண்டிருந்தார். இப்போது ஆரம்பித்துவிட்டார்.
குழந்தைகளைப் புகைப்படம் எடுப்பது பற்றிய தெளிவு நம்மிடமில்லை. குழந்தைகள் மிகமிக வேகமாக வளர்ந்துவிடுபவை. ஆகவே புகைப்படங்களை எடுக்காவிடில் அப்பருவம் கண்ணிலிருந்து மறைந்துவிடும். 1997-1998 ல் வசந்தகுமார், யூமா வாசுகி எங்கள் வீட்டில் வந்து தங்கிய நாட்களில் சைதன்யா, அஜிதனை எடுத்தபடங்கள் எங்களுடைய முக்கியமான நினைவுச்செல்வங்கள்.
இன்று செல்பேசி வந்துவிட்டமையால் சரளமாக எடுத்து தள்ளுகிறார்கள். வீடியோ எடுக்கிறார்கள். உடனுக்குடன் வலையேற்றமும் செய்கிறார்கள். அவை முக்கியமானவை. ஏனென்றால் அரிய தருணங்கள் அவற்றில்தான் பதிவாகும்.
ஆனால் நிபுணர்கள் எடுக்கும் புகைப்படங்களும் முக்கியமானவை. அவை நல்ல ஒளியில், நல்ல சட்டகங்களில், சரியான தருணங்களில் எடுக்கப்படுபவை. அவற்றை நாம் நம் எளிய செல்போன் காமிராவால் எடுக்கமுடியாது. பெரும்பாலும் குழந்தைப்புகைப்படங்களை ஸூம் போட்டு குழந்தைக்கே தெரியாமல்தான் எடுப்பார்கள். அப்போதுதான் குழந்தை இயல்பாக இருக்கும். செல்போனில் ஸூம் மிகமிக குறைவு.
குழந்தையை அலங்கரித்து, திருஷ்டிப்பொட்டு போட்டு எடுக்கலாம். அது நம் மரபு. பிழையில்லை. ஆனால் பெரும்பாலும் குழந்தைகள் அவற்றில் மிக பிழையான முகபாவனையுடன் இருக்கும். அது அக்குழந்தையின் இயல்பாக இருக்காது. பெரும்பாலான புகைப்படங்களில் குழந்தைகள் திகைத்துப்போய் காமிராவை பார்த்துக் கொண்டிருக்கும். பல குழந்தைகள் அழுகையை நிறுத்திய முகபாவனையுடன் இருக்கும்.
குழந்தையை அவர்கள் வாழும் இயல்பான சூழலில் விளையாடவிட்டு எடுக்கப்படும் படங்களே சிறப்பானவை. அக்குழந்தையின் தன்னியல்பு புகைப்படங்களில் வெளியாகவேண்டும். குறும்புக்குழந்தைகள் உண்டு. பொறுமையானவை உண்டு. அவ்வியல்பு அற்புதமாக புகைப்படங்களில் வெளிவரும். வசந்தகுமார் எடுத்த ஒரு படத்தி அஜி எதையோ குறும்பும் ஆர்வமுமாக பார்க்கிறன். சைதன்யா அஜியை ‘அய்யோ எங்க அஜி எவ்ளோ பெரிய ஆளு!’ என்கிற பெருமிதத்துடன் பார்க்கிறாள். அதுதான் அவர்களின் இளமையின் தருணம். ஒரு புகைப்படத்தில் ஜட்டி மட்டும்போட்டு தலையில் கைவைத்து அமர்ந்திருக்கும் சைதன்யாவின் முகத்தில் அப்படி ஒரு குறும்பு. எழுந்த கணமே திகைப்பூட்டும் எதையோ கேட்கப்போகிறாள் என்பதுபோல.
ஆனந்த் குமாரின் ‘கிடூஸ் ஸ்டுடியோ’ வடவள்ளியில் (இடம் ஆனந்தாஸ் அருகே, வடவள்ளி, கோவை. தொலைபேசி 7829297409) இருக்கிறது வடவள்ளியே இப்போது விஷ்ணுபுரம் ஆட்களால் நிறைந்துவிட்டது. விஷ்ணுபுரம் அலுவலகம், சீனிவாசன் சுதா தம்பதியினரின் இல்லம், ஜி.எஸ்.எஸ்.வி.நவீன் கிருபா தம்பதியினரின் இல்லம் எல்லாமே வடவள்ளியைச் சுற்றித்தான். நடந்து வரும் தொலைவில் எம்.கோபாலகிருஷ்ணனின் வீடு.
நானும் அருண்மொழியும் காலையில் கோவை எக்ஸ்பிரஸில் வந்திறங்கினோம். நவீன் வீட்டுக்குச் சென்று அங்கே குளித்து உடைமாற்றிவிட்டு நேரடியாக ஸ்டுடியோவுக்குச் சென்றோம். விளக்கேற்றி விழாவை எல்லாருமாக தொடங்கி வைத்தோம். விஷ்ணுபுரம் நண்பர்கள் வந்திருந்தார்கள்.
அங்கிருந்து நான் சீனிவாசன் வீட்டுக்குச் சென்றுவிட்டேன். அருண்மொழியும் சைதன்யாவும் அஜிதனும் நவீனும் கிருபாவும் சத் தர்சன் சென்றனர். மறுநாள் மார்ச் 6 அன்று அருண்மொழிக்கு பிறந்தநாள். அதை அவர்கள் தடையின்றி கொண்டாட நான் கொஞ்சம் விலகியிருக்கலாமென தோன்றியது. அங்கே கேக் எல்லாம் வெட்டி லூட்டி அடித்திருக்கிறார்கள். இரவில் காட்டுக்குள் சென்று வந்ததாகவேறு அருண்மொழி சொன்னாள்.
மாலையில் நான் விஷ்ணுபுரம் அலுவலகத்தில் வாசகர்களைச் சந்தித்தேன். முப்பதுபேர் வந்திருந்தார்கள். பல கோணங்களில் கேள்விகள். தொல்லியல் முதல் இந்திய தத்துவம், ஆன்மிகம் வரை. கேள்விகளுக்கு எப்போதுமே ஒருவகை முழுமையான கட்டமைப்புடன் பதில்சொல்வது என் வழக்கம். நடுவே கொஞ்சம் கிண்டல் சிரிப்பு.
இரவு பத்துமணி வரை சந்திப்பு நீண்டது. அதன்பின் சீனிவாசன் வீட்டுக்குச் சென்றேன். சீனிவாசன் 1920களில் அச்சிடப்பட்ட நூல்கள் வைத்திருந்தார். வைணவ மணிப்பிரவாள உரை. இன்று தமிழகத்தில் எத்தனைபேர் அவற்றை வாசிக்கமுடியுமென தெரியவில்லை. பெரும்பகுதி சம்ஸ்கிருதச் சொற்கள். கூடவே சொற்களைச் சேர்த்து எழுதும் பாணி.
பலருக்குத் தெரியாத ஒன்றுண்டு. சொற்களை பிரித்து எழுதும் பாணி என்பது இந்தியமொழிகளில் இருந்ததில்லை. சொற்களை ஒன்றாகச்சேர்த்து எழுதுவதே வழக்கம். ஒரு சொல்லிணைவு என்பது ஒரு மூச்சுக்குள் சொல்லப்படுவது. அதை ஒரு பாதம் என்று மலையாள இலக்கணம் சொல்கிறது. அதுதான் அலகே ஒழிய ஒவ்வொரு சொல்லும் ஓர் அலகு அல்ல.
இது ஒரு சைவநூலின் ஒரு பாதம். ’இதென்னையோவெனினஃதுரைப்பாமிதுதருணம்’ (இது என்னையோ எனின் அஃது உரைப்பாம் இது தருணம்) ஏறத்தாழ இதுவே மலையாளத்தில் ‘வல்லதடிநினிகளாலாகட்டே சிலாதலபுஷ்பாதிவல்லரிகளாலாவட்டே ஆ அஹோரநிபிந்தவனாந்தரம்…’ (வல்ல தடினிகளால் ஆகட்டே, சிலா தல புஷ்பாதி வல்லரிகளால் ஆகட்டே, ஆ அஹோர நிபிந்த வனாந்தரம்) என்ற வகை சொல்லாட்சிகள். சம்ஸ்கிருதத்தில் ‘சிம்ஹவியாஹ்ரஸல்யாதிமிருககணநிக்ஷேபிதம்’ போன்ற சொல்லாட்சிகள். (சிம்ஹ வியாஹ்ர மிருக ஸல்ய ஆதி மிருக கண நிக்ஷேபிதம்)
சொல்பிரித்து எழுதுவது அச்சு வந்தபின்னர், ஆங்கிலத்தில் இருந்து செய்திகளை இந்திய மொழிகளுக்கு மொழியாக்கம் செய்ய வேண்டிய தேவை எழுந்தபின்னர், ஆங்கிலத்தை முன்மாதிரியாகக் கொண்டு உருவானது. ஆங்கிலத்தில் இருந்து செய்தி, அரசுநிர்வாகம், சட்டம் போன்ற அன்றாடத்தேவைக்காக அம்மொழியாக்கங்கள் நிகழ்ந்தமையால் ஐம்பதாண்டுகளில் அந்த மாற்றம் உருவாகியது. அந்த மொழியாக்கம் நிகழாத சம்ஸ்கிருதத்தில் இப்போதும் அதே சொற்கூட்டு பாதம்தான் உள்ளது.
சொற்களை பிரித்து எழுதுவது 1850களில் தொடங்கி 1900 த்தில் ஏறத்தாழ பரவலாக ஆகிவிட்டபின்னரும்கூட ‘அறிவுச்சூழலில்’ பழைய சொற்கூட்டு முறையையே பிடிவாதமாக கடைப்பிடித்தனர். தமிழில் சைவர்கள் கொடுந்தமிழிலும் வைணவர்கள் மணிப்பிரவாளத்திலும் அப்படி எழுதினர். சீனிவாசனிடம் இருக்கும் ஒரு வைணவ இதழ் 1940ல் வெளிவந்தது. இதே மொழியமைப்பில்தான் இருக்கிறது.
இன்றைக்கும்கூட நமக்கு சொற்களைப் பிரிப்பது சார்ந்த குழப்பம் உள்ளது. 1850 தொடங்கிய அந்த சொல்பிரிப்பு முறை இன்றைக்கும் வளர்ந்து நிறைவடையவில்லை. அதற்கான பொது இலக்கணமுறை உருவாகவில்லை. சொல்லிப் பார்த்துக்கொள்வது மட்டுமே ஒரே வழி. ஆனால் நாம் சொல்லும் முறை மாறிக்கொண்டிருக்கிறது. பிரித்து எழுதினாலும் சேர்த்தே வாசிப்போம். சேர்த்தெழுதினால் பிரித்தும் வாசிப்போம் (இவ்விரு சொற்றொடர்களையும் எப்படி வாசித்தீர்கள்?) தமிழ் உரைடநடையை எடுத்துப் பார்த்தால் காலந்தோறும் சொற்கள் மேலும் மேலும் அதிகமாகப் பிரிக்கப்பட்டுக் கொண்டே இருப்பதைக் காணலாம். முப்பதாண்டுகளுக்கு முன்பு கூட முந்தையச் சொற்றொடரை ’காலந்தோறுஞ்சொற்கள் மேன்மேலுமதிகமாகப் பிரிக்கப்பட்டுக்கொண்டேயிருப்பதைக் காணலாம்’ என்று எழுதியிருப்பார்கள்.
(ஆனால் இன்றைய ’இணைய இலக்கணர்’கள் பலர் இந்த சொற்பிரிப்புக்கான இலக்கணங்கள் எல்லாம் ஏதோ தொல்காப்பியம் முதலே இருப்பதாக நம்பிக்கொண்டிருப்பதை காண்கிறேன். வேடிக்கைதான்)
கேரளத்தில் பொது உரைநடை சொற்கூட்டு பாதங்களுடன் 1950 வரை எழுதப்பட்டது. அதன்பின் மரபுக்கவிதையில் இன்றைக்கும் அது தொடர்கிறது. ஆச்சரியமென்னவென்றால் தீவிரமான கோட்பாட்டு விவாதக் கட்டுரைகளிலும் அந்த மொழிநடை வழக்கமாக உள்ளது. அதைவிட ஆச்சரியம், சொல்பிரித்த உரைநடையில் கவிதைகளெழுதிய பி.ராமன் போன்றவர்கள் அண்மையில் இந்த கூட்டுச்சொல் நடையில் கவிதைகள் எழுதுகிறார்கள். காரணம், இந்த நடையே செறிவாகச் சொல்ல உதவுவதாகச் சொல்கிறார்கள்.
மலையாளத்தின் கூட்டுச்சொல் பழக்கமும், சம்ஸ்கிருத சொல்லறிமுகமும் இருந்தமையால் பழைய மணிப்பிரவாள நடையை வாசிக்க முடிந்தது. கொஞ்சம் வேடிக்கையாகவே இருந்தது. சீனிவாசனுடன் இரவு ஒரு மணிவரை மணிப்பிரவாள வாசிப்பில் ஈடுபட்டிருந்தேன்.
மறுநாள் காலை விஷ்ணுபுரம் பதிப்பகம் சென்றேன். அருண்மொழியும் பிறரும் மதியம் திரும்பி வந்தனர். சீனிவாசன்- சுதா வீட்டில் அருண்மொழியின் பிறந்தநாள் விருந்து. ஆனந்த்குமார் இங்கும் ஒரு கேக் வாங்கிவந்து வெட்டவைத்தார். மாலை நாகர்கோயில்.