எழுத்தாளன், புனிதன், மனிதன் -கடிதங்கள்

எழுத்தாளன், புனிதன், மனிதன்

அன்புள்ள ஜெ,

மிக எளிதாக உங்களைப் போன்ற ஒருவர் ஒழுக்கத்தீர்ப்பை அளிப்பவராக காட்டிக்கொள்ள முடியும். கோணங்கி உள்ளிட்ட அனைவரையும் ‘அடித்துக் காலிசெய்ய’ முடியும். அந்த வாய்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் நீங்கள் எதைச் சொல்லவேண்டுமோ அதைச் சொல்கிறீர்கள். தர்மதேவதை அவதாரம் எடுக்கும் நேரமல்ல இது. எழுத்து- எழுத்தாளனின் தரப்பை முன்வைக்கும் நேரம்.

பாமரர்கள் என்று அடிக்கடிச் சொல்கிறீர்கள். அவர்கள் யாரென்று தெரிந்தது இப்போது. எல்லா ஊழல்களையும் ஒழுக்கக்கேடுகளையும் சகித்துக்கொண்டு அரசியல்தலைவர்களை கொண்டாடும் கும்பல்தான் இப்போது ஆவேசமாக கல்வீச வருகிறது. அவர்களால் குழம்பியிருக்கும் புதிய வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் தெளிவான ஒரு புரிதலை அளிக்கும் கட்டுரை.

இந்தச் சந்தர்ப்பத்தில் ஏன் கருத்துச் சொல்கிறீர்கள் என்று ஒரு நண்பர் கேட்டார். இந்தச் சந்தர்ப்பத்தில்தான் இது பேசப்படுகிறது. இப்போதுதான் இந்தத் தரப்பைச் சொல்ல முடியும். இப்போது சொன்னால்தான் போய்ச்சேரும். இப்போது நடக்கும் பொதுவிவாதங்களில் இலக்கியத்தரப்பின் குரலும் ஒலிக்கவேண்டும். உங்கள் குரல் வலுவாக ஒலித்தது மகிழ்ச்சியளிக்கிறது.

பிகு 1: விடுதலைக்கு வாழ்த்துக்கள். நானும் சினிமாவில்தான் இருக்கிறேன். உங்களை சீக்கிரமே சந்திப்பேன்.

பிகு 2: இன்னொரு சுவாரசியமான விவாதம். ஒரு நண்பர் “நிதானமாக சராசரியாக வாழ்ந்த இவர்களெல்லாம் எழுத்தாளர்கள் இல்லையா” என்று ஆவேசமாகக் கேட்டு ஒரு பட்டியலை அளித்தார். அவர்களில் நேர்பாதிப்பேர் மனச்சோர்வு, மனச்சிக்கலுக்கு நீண்டகால மருத்துவம் எடுத்துக்கொண்டவர்கள் என்று அவர்களே எழுதியிருக்கிறார்கள். சிரித்துக்கொண்டேன்.

ஷேக் முகம்மது எம்

அன்புள்ள ஜெ.

எழுத்தாளன், புனிதன், மனிதன் குறித்த தங்களின் கருத்துகள் யதார்த்தமானவை. புரிதல் இல்லா தருணங்கள் குழப்பத்துடன் கூடிய கூக்குரல்கள் நிறைந்தவை . அவைகளை சுமந்து கொண்டு ஒரு படைப்பாளியை உணர்ந்து கொள்ளமுடியாது. ஒரு சிறு கல்லெறி வழி ஒருவரின் படைப்பிலக்கிய பங்களிப்பை கலங்கடித்துவிடக்கூடாது. களங்கப்படுத்துவிடக்கூடாது. நீங்கள் சொல்வது போல

இலக்கியவாதி சட்டத்திற்கு, பொது ஒழுக்க நெறிக்கு, குடிமைப்பண்புகளுக்கு அப்பாற்பட்டவனா? இல்லை. சட்டமீறல் என்றால் சட்டம் தன் கடமையை செய்யட்டும். ஒழுக்கநெறி சமூகத்திற்கு தீங்கானது என்றால் அவனை ஒதுக்கி வைக்கட்டும். குடிமைப் பண்புக்கு எதிரானவன் அவன் என்றால் அவனை கண்டிக்கட்டும். ஆனால் இதெல்லாம் இலக்கியத்திற்கு நிபந்தனை என ஒருவன் சொல்வான் என்றால் அவனை ‘அப்பால் போடா’ என்று சொல்லாமல் எழுத்தாளன் ஒரு வரியும் எழுத முடியாது”

என்பது சரியான நிலைப்பாடு.

அதேசமயம் ஒருவருடைய இலக்கிய பங்களிப்பை புறந்தள்ளல் கூடாது. சக மனிதன் மீதான காழ்ப்புணர்வை கீழ்நிலையினும் கீழாய் வெளிப்படுத்தி அவரை புண்படுத்துவது ஒருவகையான‌ நோய்க்கூறு. கோணங்கி சார் ஆன்ம பலத்துடன் உறுதியாய் நின்று இதிலிருந்து மீண்டுவரவேண்டும்.

அன்புடன்

பார்த்திபன்.ம.

அன்பு ஜெ சார். நலம்தானே.

திரு கோணங்கி அவர்கள் பற்றிய மூன்று கட்டுரைகளும் படித்தேன். ‘திரு’ வும் ‘அவர்க’ ளும் போட்டதே மனிதனாய்ப் பிறந்த எவரும் ஒரு குறைந்த பட்ச மரியாதைக்கு உரியவர்களே என்பதால். அதுவும் நீங்கள் சொல்வது போல் எழுத்தாளர்கள் நுண்ணுணர்வு மிகக் கொண்டு பல சமயம் தத்தளிப்புகளிலும் கொந்தளிப்புகளிலும் சிக்கிக் கொள்கையில் அவர்களை நடுத்தெருவில் வைத்து கல்லாலடிப்பது மானுடத்தன்மையில்லை.

எல்லோரும் உத்தமராய்ப் பிறப்பதோ வளர்வதோ இல்லை. அது வாய்க்கப்பெற்றவர்கள் நல்லூழ் வசப்பட்டவர்கள். உங்களைப் போலே.

சட்டத்தின் பார்வையிலும் சமூகத்தின் பார்வையிலும் தடம்பிறழ்பவர்களை ஒன்றுமே செய்யக்கூடாதென்று சொல்லவில்லை. விமர்சனம், கண்டனம், தண்டனை எல்லாம் சரியே.

ஆனால் ஒரு வன்மத்தோடு அவர்களைப் பொதுவெளியில் நார்நாராய்க் கிழிப்பது சரியில்லை. உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிக்கத்தானே வேண்டுமென்பார்கள். சரிதான். ஆனால் இது போன்ற நிகழ்வுகளில் தவறிழைத்தவர்களோடு சேர்ந்து அவர்கள் குடும்பமும் தீராத தலைகுனிவுக்கு உள்ளாவது கொடுமை. அதுவும் எந்த சம்பந்தமில்லாமலும் அதே சமயம் தன் சுயவிளம்பரத்திற்காகவும் சிலர் பொதுவெளியில்  ருத்ரதாண்டவமாடுவது……

குறிப்பாக அரசியல் பண்ணுபவர்கள் இதில் கோஷ்டிகானம் பாடுவது. சின்மயி வைரமுத்துவில் ஆரம்பித்து தொடர்ந்து இந்த  தோரணம் கட்டித் தொங்கவிடும் மீ டூக்கள்

வைரமுத்து, பாடகர் கார்த்திக், பாரதிராஜா, வெற்றிமாறன் போன்ற பல திறமை வாய்ந்த கலைஞர்கள் இப்படி வன்மவாதிகளின் வார்த்தைவன்முறைகளுக்கு ஆளானார்கள். ஒழுக்கத்தின் உச்சத்தில் வாழும் பலகோடி சராசரி மனிதர்களுக்கு வாய்க்கப்பெறாத கலைத்திறன் பெற்ற இவர்போன்றவர்களின் வாழ்நாள் சாதனைகள் ஒரே நொடியில் மண்ணில் போட்டு மிதிக்கப்பட்டு விடுகின்றன.

ஓர்பாலோ எதிர்பாலோ, இருதரப்பும் இசைந்து இணையாததெல்லாம் வன்புணர்வே, வன்முறையே ஆகும். அது விலைமகளே ஆனாலும் வேண்டாமென்றால் விட்டு விடுவதே சரி. ஆனால் அந்தப் பிரச்சினை அதோடு, அவர்களோடு முடிந்து விடுவது நல்லது. பொதுவெளியில் எதற்கு இத்தனை ஆர்பாட்டங்கள்?

உங்களில் உத்தமர்கள் மட்டுமே கல்லைக் கையிலெடுங்கள் என்று சொல்ல நான் ஏசுபிரானில்லைதான். ஆனாலும் விளிம்புநிலை, வழிதவறிய (வக்கிரமே என்று சொன்னாலும்) மக்களை ஒரு குறைந்தபட்ச அனுதாபத்தோடும் புரிதலோடும் அணுகுவதை எங்கள் தலைமுறை ஜெயகாந்தனிடம் கற்றது. அந்தவகையில் நீங்கள் சொல்வது போல ஜேகேவின் எழுத்துக்களை வாசித்தது ஒரு குருகுலவாசம் போலவே ஆனது.

எழுத்தாளன் யார், அவனை எந்தத் தராசில் வைத்து நிறுத்தவேண்டும், அவன் எதனால் கட்டமைக்கப்பட்டவன் (நுண்ணுணர்வு) என்பதெல்லாம் இத்தனை விரிவாக விளக்க உங்களால் மட்டுமே முடியும். ஜேகேவானால் போடா மசுரேன்னு இரண்டு சொற்களால் தலை தெறிக்க ஓட விட்டு விட்டு அடுத்த இழுப்புக்கு பற்ற வைத்துக் கொண்டிருப்பார்.

புரிந்து கொள்ளல் என்ற உன்னத பண்பை சொல்லிக் காட்டியிருக்கிறீர்கள். அவ்வளவுதான் சார் சமாச்சாரம்.

நன்றி. வாழ்த்துக்கள்.

அன்புடன்

ரகுநாதன்.

முந்தைய கட்டுரைஇந்திய நுண்கலைகளின் தரிசனம்- கடிதம்
அடுத்த கட்டுரைகண முத்தையா