கோவில் கச்சேரிகளில் வாசித்துக்கொண்டிருக்கும்போது சாமிநாதன் பலமுறை தாளத்தைத் தவறாகப் போட்டுவிடுவான். ஒருமுறை தேவகாந்தாரி ராகத்தில் வைத்தியின் நாதஸ்வரம் கறுப்பு மெழுகுவத்தியாய் உருகிக்கொண்டிருந்தது. எதிரில் அமர்ந்திருந்த எல்லோரும் அதில் திளைத்துக்கொண்டிருந்தார்கள், தவில்காரர்கூடப் பேருக்குத் தட்டிக்கொண்டிருந்தாரே தவிர நாதஸ்வரத்துக்கு மேலே ஒலியெழுப்பவில்லை.