இனிய ஜெயம்
சில வாரங்கள் முன்புதான் உங்களுக்கு எழுதிய கடிதத்தில் கடலூரில் புத்தக சந்தை இதுவரை நிகழாதது குறித்தும், அப்படி நிகழாமைக்கான கலாச்சார காரணங்கள் குறித்தும் எழுதி இருந்தேன்.
நம்பிக்கை தரும் தொடக்கமாக சுதந்திரத்துக்கு பிறகான வரலாற்றில், தமிழ்நாட்டில், கடலூர் மாவட்டத்தில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வாக பப்பாசியும் தமிழக அரசும் இணைந்து இன்று ‘முதல்’ புத்தக சந்தையை துவங்கி இருக்கிறார்கள்.
ஆற்காடு மாவட்டமாக இருந்து, அதில் தென்னார்க்காடு மாவட்டமாக அறியப் பெற்றதே இன்றைய கடலூர் மாவட்டம். தென்னார்க்காடு மாவட்டதில் தோன்றி பணி செய்த சைவ வைணவ பக்தி இயக்கத்தின் தலை மகன்கள் பலர். வெள்ளையர் உருவாக்கிய பஞ்சத்தில் பெரிதும் பஞ்சத்தில் அடிபட்டு, எம் மக்கள் பராரிகளாக பஞ்சம் பிழைக்க சென்ற வரலாறும் கொண்ட மாவட்டம். இதன் பயனாக பசிப்பிணி தீர்க்கும் வள்ளல் பெருமானின் தர்ம ஞான சபை தோன்றிய மாவட்டம். ஞானியார் சுவாமிகள் கல்வி உள்ளிட்ட பல்வேறு பண்பாட்டு பணிகளை நிகழ்த்திய மாவட்டம். திராவிடக் கலாச்சாரம் உருவாக்கிய பெருமிதம் என்று சொல்லத்தக்க சுந்தர சண்முகனார் வாழ்ந்து பணி செய்த மாவட்டம். புதுமைப்பித்தன் பிறந்த ஊர். ஜெயகாந்தன் பிறந்து பால்யத்தை கழித்த ஊர். கண்மணி குண சேகரனும் ராஜேந்திர சோழனும் விளைந்த மாவட்டம். இங்கே இப்போதுதான் முதன் முறையாக ஒரு புத்தகத் திருவிழா நடக்கிறது என்பது வரலாற்றுத் தருணம் தானே.
முதல் துவக்கம், குறைகள் இருக்கலாம், போதாமைகள் இருக்கலாம், பிழைகள் இருக்கலாம் மெல்ல மெல்ல ஒவ்வொரு வருடமும் அனைவரும் கூடிப் பேசி அதைக் களைந்து முன்னேற வேண்டும். கடலூர் மாவட்டம் போல கல்விச் சூழல் மிக பின் தங்கிய மாவட்டங்களில் அடுத்த ஐந்து வருடங்களுக்கு வணிகம் என்பதை பின்னுக்கு நிறுத்தி ஒரு பண்பாட்டு அசைவை நிகழ்த்தப் போகிறோம் எனும் போதத்துடன் பப்பாசி பணி செய்ய வேண்டும். எல்லா விதத்திலும் இன்றைய அரசு அதற்கு துணை நிற்கும் என்ற நம்பிக்கை இதுவரையிலான அதன் செயல்பாடுகள் வழியே என்னைப்போன்ற ஒரு எளிய வாசகனுக்கு இருக்கிறது.
இம்முறை நான் கண்ட போதாமைகள் மூன்று. ஒன்று பிற ஊர்களில் நடக்கும் புத்தக சந்தை முடிய இன்னும் 3 நாட்கள் இருக்கையில் இங்கே புத்தக சந்தை துவங்கியது. பெரும்பாலான பதிப்பகங்கள் தொழில் சிக்கல் காரணமாக குறைவான ஊழியர்களை கொண்டு இயங்குவது. எனவே அத்தகு பதிப்பகங்கள் ஒரு திருவிழா முழுதாக முடிந்த பிறகே அடுத்த திருவிழாவுக்கு வர இயலும். இரண்டு. மூன்று புறமும் வாசல் கொண்ட, மைய சாலையை நோக்கி திறந்த பெரிய மைதானத்தில், வாசல் இல்லாத குறுகலான நான்காவது திசையில் சந்தையின் தலை வாயிலை அமைத்தது. மாவட்டத்தின் எல்லா பேரூராட்சியிலும் குறைந்தது 5 நாட்கள் முன்னர் வரும் விருந்தினர் பட்டியலுடன் விளம்பர பதாகைகள் அல்லது சுவர் செய்திகள் அமைக்க பட்டிருக்க வேண்டும். அது செய்யப்பட வில்லை. மேலும் இது பள்ளிகளில் இறுதி தேர்வு துவங்கி விட்ட வாரம். இத்தகு போதாமைகள் அடுத்த முறை களையப்பட வேண்டும்.
இதுவரை இப்படி ஒரு சந்தை இங்கே கடலூரில் நிகழாததால் இங்கே மட்டும் காண முடிந்த சில அனாகரீகங்கள் எழ வாய்ப்பு உண்டு. குறிப்பாக மாலையில் பொழுது போகாத பல பெருசுகள் உள்ளே புகுந்து புத்தக வணிகர்களை பிடித்து சேர் போட்டு அமர்ந்து கொண்டு எங்கூருல என ஆரம்பித்து பிலாக்கணம் வைக்க சிறந்த இடமாக பத்து நாட்களுக்கு இதை பார்ப்பார்கள். சிலர் ஒவ்வொரு புத்தகமாக எடுத்து பார்த்து அய்யோ இவ்ளோ விலையா என்று எட்டூருக்கு கேட்கும்படி கூவி அதிர்ச்சி ஆவார்கள். கடையில் கூட்டமே இல்லாவிட்டாலும் வணிகர்கள் இத்தகு ஆசாமிகளை தயக்கமின்றி தவிர்த்து விடலாம்.
மற்றபடிக்கு இந்த இனிய துவக்கம் வரும் ஆண்டுகளில் மெல்ல மெல்ல வளர்ந்து செழிக்கும் என்றே நம்புகிறேன். மகிழ்ச்சியுடன் சில புத்தகங்கள் வாங்கினேன். அவற்றில் மெய்யப்பன் பதிப்பகம் வெளியிட்ட சோ.ந. கந்தசாமி அவர்கள் எழுதிய மணிமேகலையில் தத்துவச் சிந்தனைகள் எனும் நூல் முக்கியமானது. பில் பிரைசன் எழுதிய கிட்டத்தட்ட அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு எனும் ஆங்கில நூலின் தமிழாக்கம் முன்பே இங்கே உண்டு. மிக மிக விசித்திரமான மொழியாக்கம். அதில் ஒரு தமிழ் பத்தியை எடுத்து கூகிளில் இட்டு ஆங்கிலத்துக்கு மாற்றினால், சாட்ஷாத் அந்த ஆங்கில மூல நூலில் உள்ள அதே பத்தி அப்படியே வந்து விடும் அப்படி ஒரு மொழியாக்கம். ஆகவே இதுவரை அந்த நூலை நான் எவருக்கும் பரிந்துரை செய்ததில்லை. அந்த நூல் இப்போது மஞ்சுள் பதிப்பகம் வழியே, psv குமாரசாமி அவர்களின் மிக அழகிய மொழியாக்கத்தில் வெளியாகி இருக்கிறது. வாங்கினேன். அறிவியல் வரலாறு சார்ந்த பாப்புலர் நூல்களில் இதற்கு இணையான வாசிப்பு சுவாரஸ்யம் கொண்ட நூல் அரிதாகவே தமிழில் உண்டு. எட்டாம் வகுப்பு கடந்தோர் துவங்கி எந்த வயதினரும் வாசிக்கலாம். அவசியம் வாசித்திருக்க வேண்டிய நூல்.
வெளியேற முயலுகையில் துவக்க விழா மேடையில் இருந்து ஒரு டஜன் செய்தி சானல் மைக்குகள் என் முன்னால் நீண்டன. இந்த புத்தக சந்தை எந்த அளவு முக்கியம் என்பது குறித்தும், பிழைப்புக் கல்விக்கு வெளியே உள்ள பண்பாட்டுக் கல்வி ஒருவரின் ஆளுமையை உருவாக்கிக் கொள்ள எந்த அளவு முக்கியம் என்பது குறித்தும் இரண்டு நிமிடங்கள் பேசினேன். அநேகமாக 20 வினாடிகள் அது ஒளிபரப்பாகும் என நினைக்கிறேன்.
வெளியேறி நடக்கையில் நண்பர் வானத்தை சுட்டிக் காட்டினார். வழக்கத்தை விட பெரிய சைஸ் நட்சத்திரங்கள் இரண்டு அருகருகே நின்றிருந்தன. அது வெள்ளியும் வியாழனும் என்று நண்பர் சொன்னார். மிக அபூர்வமான வானியல் நிகழ்வாம். இந்த நாளுக்கு இந்த அளவு அபூர்வங்கள் போதும்.
கடலூர் சீனு