முதற்கனல், மாணவியின் கடிதம்
ஜெ,
ஆச்சரியப்படவைக்கும் அறிவான பகுப்பும் முறையான தொகுப்பும் கொண்ட இப்பள்ளி மாணவியின் கட்டுரை மிகவும் பாராட்டுக்குறியது.
நன்றி!
முத்துக்கிருஷ்ணன். வே.
***
அன்புள்ள ஜெ
முதற்கனல் மாணவியின் கடிதம் ஆச்சரியமளித்தது. ஏற்கனவே கடிதமெழுதிய மாணவிதான். ஆனால் இந்தக் கடிதம் திகைப்பூட்டியது.
முதற்கனல் நாவலை நீங்கள் எழுத ஆரம்பித்தபோது எழுந்த எதிர்ப்புகள் ஞாபகம் வருகின்றன. இதை யார் படிப்பார்க? இந்த நடை பழைமையாக இருக்கிறது …இப்படியெல்லாம் நிறைய எழுதினார்கள். அவர்களெல்லாம் இப்போது எங்கே என்றே தெரியவில்லை. நாவல்கள் இன்றைக்குதான் முழுமையாக வாசிக்கவேபடுகின்றன.
இளம் வாசகர்கள் பலர் வெண்முரசு வாசிக்கிறார்கள் என்பதை கண்டிருக்கிறேன். ஆனால் ஒன்பதாம் வகுப்பு மாணவி வாசித்துவிட்டு இப்படி ஒரு அழகான கடிதமும் எழுதியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
வெண்முரசு எல்லாரும் வாசிக்கமுடியுமா என்றால் முடியாது. ஒன்பதாம் வகுப்புப் பிள்ளைகள் ஒரு லட்சம் பேர் எடுத்துக்கொண்டால் அதில் ஒரு ஐம்பதுபேர்தான் படிக்க முடியும். ஆனால் அவர்கள்தான் கிரீம். அவர்கள்தான் அடுத்த தலைமுறைக்கு போகிறவர்கள்.
இதை நான் என் வகுப்புகளிலே சொல்வேன். ஒரு தலைமுறையில் வாழ்பவர்களில் லட்சத்தில் நாலைந்துபேர்தான் அடுத்த தலைமுறையை ஏதோ ஒருவகையில் உருவாக்குபவர்கள். அவர்களை தவிர மற்றவர்கள் அந்த தலைமுறையிலேயே அழிந்துவிடுவார்கள். மறக்கப்பட்டுவிடுவார்கள்.
அது இயல்பானதுதான். ஒரு தேங்காயிலே ஒரு சிறுபகுதிதான் முளைத்து அடுத்த தென்னை வருகிறது. மிச்சபகுதி அந்த முளைக்கும்பகுதிக்கு உணவாகிறது. அதைப்போலத்தான் மனிதர்களும். அதைத்தான் Plumule என்கிறோம்
சமூகத்திலும் அதைப்போல Plumule உண்டு. அந்த சிறிய பகுதிதான் தீவிரமாக வாசிக்கும். அந்த மாணவியின் கடிதம் அவர் அப்படிப்பட்டவர் என்று காட்டியது. வாழ்த்துக்கள்.
தே. அன்பரசு
உடையாள், கடிதம் மகிழ் நிலா