மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு
வணக்கம்.
தங்களது வெண்முரசு தொடரில் முதற்கனல் தொகுதியினை வாசிக்கும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தமிழில் நான் வாசித்த சிறார்களுக்காக எழுதப்படாத முதல் நூல் இதுவேயாகும். என் அன்னையின் ஆசிரியரான மதிப்பிற்குரிய பேராசிரியர் லோகமாதேவி அம்மா அவர்களால் இந்நூல் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அவர்களுக்கு இக்கடிதத்தின் மூலம் எனது நன்றியினை உரிதாக்குகின்றேன்.
இணைய வழியில் ஏனோ என்னால் ஒரு அத்தியாயத்தைக் கூட முழுமையாகப் படிக்க இயலவில்லை. அஞ்சல் வழியில் செம்பதிப்பு வந்தவுடன் பல மாதங்கள் காத்திருந்த ஆவலால் கைகள் சற்றே செயலிழக்க மெல்ல உரையைப்பிரித்தேன். அடுத்த நாள் நிகழவிருந்த தமிழ்த்தேர்வையும் பொருட்படுத்தாமல் அன்றே வாசிக்கத் தொடங்கினேன் பின் புத்தகத்தை மூடாமலானேன்.
நாவல் வடிவிலான மகாபாரதம் என்பது என்னை முதலில் வியப்பில் ஆழ்த்தியது. ஆனால் என் போன்ற இளம்தலைமுறை வாசகர்கள் மகாபாரத காவியத்தின் நுட்பங்களையும் அது வெளிப்படுத்தும் கருத்துக்களையும் தெரிந்துகொள்ள மட்டுமல்லாமல் அவற்றை ஆராய்ந்து தங்களுக்கென அதிலிருக்கும் பொருளைத் தாமே வடித்துக்கொள்ள வெண்முரசு உதவுகிறது என்று நம்புகிறேன் ஐயா. மேலும் அத்தகைய வடிவத்தின் முழுமையை நோக்கிய தேடலை துண்டுவதாக முதற்கனல் எனக்கு அமைந்திருந்தது.
மானசாதேவி சொன்ன “நாகம்“ என்ற சொல்லின் பொருள் என்னுள் ஒரு கேள்வியை எழுப்பியது. பருப்பொருள்களின் பொருளினை (பெயரின் பொருளும் அப்பொருள் வெளிப்படுத்தும் உணர்வு அல்லது அது விளக்க விழையும் பொருளும்) ஆராய்ந்து அறியும் வேட்கையை மொழியறியத் தொடங்கும் குழந்தைகளிடம் கண்டுள்ளேன். அது உண்மையில் மறைந்து விடுவதில்லை நம்முள் என்றும் புதைந்தே இருக்கிறது என்பதை நாகத்தின் பொருளைப் படித்த அக்கணம் என்னால் உணர முடிந்தது. ஆனால் மனிதர்களின் அகவை கூடிச்செல்கையில் இந்த வேட்கையை ஏன் அவர்கள் பேணுவதில்லை என்ற கேள்வியே என்னுள் எழுந்தது. காலவெள்ளத்தின் ஓட்டத்தில் இந்த வேட்கை பல சமயங்களில் பொருளற்று போகின்றது. உள்ளத்தின் ஆர்வத்தினைத் தூண்டும் ஒரு கண நொடியில் அவ்வேட்கை மீண்டும் உயிர்த்தெழுகிறது என்று புத்தகத்தின் முடிவில் புரிந்துகொண்டேன்.
பனிமனிதன் நாவலின் முலம் “நான்” என்ற உணர்வில் எழும் அகங்காரத்தினையும் உடையாள் நாவலின் முலம் “நான்” என்ற உணர்விலிருந்தே அறிவு தொடங்குகிறது என்பதையும் அறிய முடிந்தது.முதற்கனல் மூலம் அவ்வுணர்விலிருந்தே இப்பிரபஞ்சத்தில் பிறப்பு என்பது உருவானது என்று தெளிவடைய முடிந்தது. அவ்வுணர்வே வாழ்வின் இச்சையென உருவாகி மற்ற அனைத்து உணர்வுகளுக்கும் செயல்களுக்கும் அதன் விளைவுகளுக்கும் காரணமாக இருக்கிறது என்றும் உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆகையால் “நான்” என்ற உணர்வைக் குறித்த தேடலை நோக்கி மேலும் ஒரு அடி எடுத்து வைத்திருப்பதாக எண்ணுகிறேன்.
இச்சை, நாகத்தின் கண்களாக ஆதித்யர்களும் சந்திரர்களுமாக உருவெடுத்ததை வாசித்த போது இப்பிரபஞ்சத்தின் அசைவுகள் அனைத்தும் இச்சையினாலேயே நிகழ்த்தப்படுகின்றன என்பதை புரிந்து கொண்டேன்.ஆயினும் மனித இச்சை என்பது மனித மனம் ஞானத்தை அடைய ஒரு திரையென திகழ்கிறது. அதை விலக்கியே மெஞ்ஞானத்தை அடையமுடியும் என்பதற்கு சுகதேவர் சான்றாகத் திகழ்கிறார். அதே சமயம் அத்திரையினைச் சற்றே ஊடுருவிச்சென்று வியாசர் ஞானத்தை அடைந்திருக்கிறார் என்றே எனக்கு தோன்றியது. மறுபக்கம் வெறும் இச்சையினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு சந்தனு சான்றாகிறார். ஆனால் இன்று பல மனிதர்கள் சந்தனுவையும் விஞ்சியே இருக்கிறார்கள். அவர்கள் இச்சையினையே விழியாகவும் மனமாகவும் கொண்டு தங்களின் பிரக்ஞையை இருளிலில் ஆழ்த்துகிறார்கள்.வினைகளின் விளைவுகளை உணராமல் முடிவில் அவர்களின் இச்சைகளினாலேயே அழிக்கப்படுகிறார்கள்.
ஜரத்காரு முனிவரின் சாபம் முதலில் என்னை சற்றே வியப்பில் ஆழ்த்தியது. ஆஸ்திகன் ஆயுள் முழுமை பெற மாட்டான் என்ற சாபம் “சிரஞ்சீவியாக இரு” என்பதற்கு ஈடாகவே எனக்கு ஒலித்தது.சில கணங்கள் கடந்தே அது நிறைவினை வேண்டி தவம் செய்த மானசாதேவிக்கு வாழ்வில் நிறைவின்மையை அளிக்கும் சாபமென தெளிந்தேன். “உன் முதுமையை நான் பார்க்கவேண்டியதில்லை” என்று மானசாதேவி ஆஸ்திகனிடம் கூறுகையில் தான், ஆஸ்திகனுக்கு முதுமை இல்லாவிட்டாலும் அவன் இளமையாக இருக்க, அவன் அன்பு செலுத்திய சுற்றமும் நட்பும் முதிர்ந்து வருந்துவதைக் கண்டு தவிக்கும் நிலையை அவனுக்கு கொடுக்கும் அச்சாபத்தின் வீரியம் என்னவென்பதை முழுமையாக உணரமுடிந்தது. அப்போது வியாசர் முதுமையில் வாழ்ந்துகொண்டிருக்கையில் அவர் கண் முன்னே இளம் தலைமுறைகள் அறியாமை இருளில் மடிவதைக் காணும் அவரின் நிலை, ஆஸ்திகனின் நிலைக்கு நேர்மாறாக இருக்கிறது என்ற எண்ணம் எனக்கு வந்தது.
ஜனமேஜெயன் பகடை ஆட்டத்திற்கு அடிமைப்பட்டிருப்பதை வாசிக்கையில் இன்றைய இணைய விளையாட்டுகளில் மூழ்கியிருக்கும் இளைஞர்களுடன் அவனை ஒப்பிட்டு எண்ணிக்கொண்டேன். காலம்காலமாக பொறுப்பின்மையால் தேவையற்றவைக்கு அடிமைப்பட்டு அறியாமையின் இருளில் முழுவதுமாக மறைந்துவிட்டிருக்கின்றனர் பலர். இன்றும் அது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இவை அனைத்தும் தட்சனின்வடிவமே என்று அச்சமயம் கண்டுகொண்டேன்.
உத்தங்கர் கூறியதைப்போல “விதியின் ஆட்டத்தைப் பற்றிய முழுமையான அறியாமை கொண்டவர் அல்லாமல் பிறர் இந்த போலி ஆடுகளத்தின் முன் குனிந்து அமரமுடியாது” எனில் இன்று பலர் அவ்வாறே உள்ளனர்.
குருஷேத்திரப்போரின் முடிவை தர்மத்தின் வெற்றி என்றே எண்ணி வந்தேன். ஆனால் அவ்வெற்றிக்காக சிந்தப்பட்ட கண்ணீர்த்துளிகளையும் இரத்தத்துளிகளையும் உத்திரையின் வழி காணுகையில் என்னுள் இருந்த அப்பிம்பம் உடைந்து தெறித்தது. பரீட்சித்தை கொல்ல விதி பின்னிய வலையைத் தட்சன் நடத்திய சுவாரிசியமான நாடகம் என்றே உணர்கிறேன்.சமீகரின் மௌனத்தைக் கண்டவுடன் பரீட்சித்தினுள் எழுந்து ஆணவப்படம் விரித்து அவ்வினையை நடத்தினான் தட்சன். குருஷேத்திரக்களத்தில் பரீட்சித் நின்று இருக்கையில் எனக்குள்ளும் ஒரு கணம் ஒரு கசப்பான மௌனம் படர்வதைக் கவனித்தேன்.
பரீட்சித்தின் தவம் என்னை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.அதை மனிதமன உறுதியின் உச்ச கட்டம் என்று அறித்தேன். அகங்காரத்தை வென்றுவிட்டேன் என்னும் அகங்காரத்தைக் கண்டவுடன் இன்று பலரும் அத்தகைய அகங்காரத்தையே கொண்டுள்ளனர் என்பதில் தெளியலானேன்.
ஷிப்ரதேஜஸின் கதை என்னை நடுங்கச் செய்தது. ஷிப்ரதேஜ்ஸின் விழிகளைப் பறித்தமைக்காக சரமையின் சாபத்தினைப் பெற்ற ஜனமேஜெயன் போலவே இன்று மிகுதியானோர் உள்ளனர். .புறத்தின் கண்களால் அனைத்தையும் கண்டாலும் அகத்தின் விழிகள் இழந்தவராக திரிகின்றனர் பலர்.அவர்களின் பிரக்ஞை விழியற்றதனால் வண்ணகளற்று தவிக்கிறது.
வியாசரின் தவத்தில் அவர் அடைந்த முதல் எழுத்தான “மா” வின் தனித்துவத்தைப் பின்னரே கவனித்தேன் .உலகின் பெரும்பாலான மொழிகளில் தாயைக்குறிக்கும் எழுத்தாக அது இருக்கிறது என்றால் வியாசரின் முதல் எழுத்து அன்னையைக் குறிக்கிறது.தாய்மையே உலகின் மிக வலிமையான முழு முதற்சக்தி என்பதை இது உணர்த்துவதாக உள்ளது..மேலும் இப்போரானது தாய்மையால் உருவானது என்பதை இது காட்டுகிறது. சத்தியவதி என்னும் மச்சர் குல பெண்ணின் தாய்மை அது.
ஜனமேஜெயனின் வேள்வி முடிவுபெற வேண்டும் என்ற எண்ணமே முதலில் என்னுள் இருந்தது. ஏனெனில் ஜனமேஜெயனைப் போலவே நானும் குருஷேத்திரங்களற்ற பூமியினைப் பெற விரும்பினேன்.வியாசரின் கூற்றைக் கூட என் மனம் முழுமையாக ஏற்க மறுத்தது.ஆனால் புத்தகத்தின் பக்கங்களின் போக்கில் தட்சனின் அவசியம் குறித்து புரிந்து கொண்டேன்.இவ்வுலகில் இருள் என்பது இல்லாவிட்டால் ஒளி என்பது போற்றப்படாது.இச்சையினாலேயே இப்பிரபஞ்சம் அசைகிறது எனில் அசைவற்ற பிரபஞ்சத்தில் வாழ்வின் இச்சையற்ற உயிர்கள் வாழ்வதென்பது அர்த்தமற்றது. அத்தகைய உலகில் மெய்ஞானத்தையும் எவரும் அடையமுடியாது ஏனெனில் மெய்ஞானத்தை அடைய வேண்டும் என்ற எண்ணமே ஓர் இச்சை தான் என்று தெளிவுற்றேன்.
சந்தனுவின் அஸ்தினபுரியின் அறிமுகமே திகைப்பூட்டும் வகையில் இருந்தது.வியக்கதக்க ஒரு செங்கோல் அரசாக அது மின்னியது. ஹஸ்தியின் கதையில் அவனுடைய பலத்தையும் அவனுடைய சிறு வயது நண்பர்களையும் கண்டு நான் சற்றே அச்சம் கொண்டேன்.யானைகளின் எழிலை நான் ரசித்ததுண்டு. முக்கியமாக அவற்றின் சின்னஞ்சிறு கண்களைக் கண்டு நான் பூரிப்பேன். அவை ஏனோ ஒரு சிறு குழந்தையின் கண்கள் போல எனக்கு தோன்றும். அச்சம்,ஆர்வம்,மென்மை என அனைத்தும் கலந்திருக்கும் அவற்றில் உள்ள தூய்மையை நான் எப்பொழுதும் ஆச்சரியப்பதுண்டு. ஆயினும் அவற்றின் பெரு உருவம் கண்டு நான் கொள்ளும் அச்சமே ஹஸ்தியின் மேல் நான் கொண்ட அச்சமாய் இருந்தது.
புத்தகத்தை வாசித்துக்கொண்டிருக்கும் பல தருணங்களில் நான் காஞ்சனத்தைக் குறித்து சிந்தித்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம் வருந்ததக்க நிலை அதற்கு என்ற எண்ணமே என்னுள் எழும். பல தலைமுறைகளாக அஸ்தினபுரியில் நிகழும் அனைத்தையும் ஆடி ஆடி அறிவித்தும் நிகழும் அனைத்தையும் முதலில் அறிந்தும் தன் கருத்துக்களை வெளிப்படுத்த முடியாத நிலை.காஞ்சனத்தால் பேச முடிந்தால் அது என்ன பேசியிருக்கும் என்ற எண்ணம் என்னுள் எழுந்ததுண்டு.ஆனால் அனைத்தும் அறிபவர்கள் என்றுமே பேசுவதற்கு விதிக்கப்படவில்லை என்ற நிதர்சனம் அக்கணம் என்னுள் மலர்ந்தது.
அஜபாகனின் தோற்றம் கண்டு திகைத்தேன்.அவனது கணிப்புகள் கண்டு வியந்தேன்.இக்கதையில் உள்ள அனைத்து கணிப்புகளும் அப்படியே.நடக்கப்போவது அனைத்தையும் கண்ணால் கண்டவரென கணிக்கும் நிமித்தகர்களையும் நாகசூதர்களையும் விண்ணிலிருந்து வழி தவறி வந்த யட்சர்களெனெவே காண்கிறேன்.
அருந்ததிக்கு நிகரான எரி விண்மீன் என்ற சொற்றொடரை வாசித்தப்பொழுது ஒரு திடுக்கிடும் உணர்வு என்னுள் நிறைந்தது.அம்பையின் குணங்களை கண்டவுடனேயே இவளே அந்த எரிவிண்மீன் என்றும் என்ன நடக்கப்போகிறது,யாருக்கு நடக்கப்போகிறது என்று அறியாவிட்டாலும் கூட விதி வலையில் இவள் ஒரு முக்கியமான முடிச்சு என்றும் என்னால் யூகிக்க முடிந்தது.
ஒற்றைப் பெண்ணால் ஒரு மாபெரும் வலிமை மிக்க அரசும் அரச வம்சமும் முற்றிலுமாக அழியப்போகிறது என்பது முதலில் என்னால் நம்ப முடியாத ஒன்றாகவே இருந்தது.ஆனால் நடந்த வினைகளையும், அநீதிகளையும் , அதனால் நிகழ்ந்தனவற்றையும் காணுகையில் அது சூரியன் கிழக்கில் உதிப்பது போன்ற இயல்பென ஆகிவிட்டது.
பலபத்ரர் கொண்டு சேர்த்த ஓலையும் எனது ஆர்வத்தைத் தூண்டியது.உண்மையில் உரையின்றி அதன் பொருளை என்னால் அறிந்து கொண்டிருக்க முடியாது.அக்காலத்தில் குறிப்பு வைத்து எழுதப்படும் ஓலைகளைக் குறித்து கேள்விப்பட்டுள்ளேன்.ஆனால் அத்தகைய ஓலைகள் எந்த அளவிற்கு இரகசியமாக எழுதப்பட்டிருக்கும் என்பதை நான் அறிந்திருக்கவில்லை.குறிப்புகளை அறிந்தவரால் மட்டுமே அதன் பொருளை அறியமுடியும் அன்றைய காலத்தில் வாழ்தவர் பலராலும் கூட “கொற்றவைக்கு பலியிடப்படும்” என்பதன் மூலம் போர் நடக்கவிருக்கிறது என்று மட்டுமே அறியமுடியும் என்று நினைக்கிறேன்.
பலபத்ரர் தெய்வங்களின் கண்களில் என்றும் அழியாமல் இருக்கும் துயரம்குறித்து கூறுகையில் என் மனம் ஆமோதித்தது. மனிதர்களாகிய நாம் எப்பொழுதும் தெய்வங்களை நினைத்துக்கொண்டே இருந்தாலும் துயருரும் பொழுதில் தான் அவர்களிடம் மன்றாடுகிறோம்,அவர்களின் இன்றியமையாமையை உணர்கிறோம்.ஆனால் தெய்வங்களின் துயரத்திற்கு காரணம் இதுவல்ல என்பதை அக்கணமே புரிந்து கொண்டேன்.பெரும்துயரும் பேரின்பமும் ஒன்றினுள் ஒன்று கலந்தவை என்பதை உணராமல் வாழ்நாள் எல்லாம் தவிக்கும் நமது அறியாமையைக் கண்டே தெய்வங்கள் தவிக்கின்றன என்று அடுத்த வரியை வாசித்த பின் தெளிந்து கொண்டேன்.
சிறுவயது பீஷ்மரின் தனிமையின் ஒரு துளியை நானும் உணர்ந்திருக்கிறேன்.என் பெற்றோரைத் தவிர்த்து பிற அனைவரிடமும் அத்தகைய தனிமையை நான் உணர்வதுண்டு.எனக்கும் என்னை சுற்றி இருப்போருக்கும் இடையிலான ஒரு திரை போல அது என்னை எப்பொழும் சூழ்ந்தே இருக்கும்.சில நேரங்களில் அத்திரையினுள் நான் பாதுகாப்பை உணர்வதும் உண்டு.
அகத்தின் கண்கள் திறந்திருந்தால் பல நேரங்களில் பொய்யைக் காட்டும் புறக்கண்கள் அவசியமில்லை என்பதை தீர்கசியாமர் மூலம் தெரிந்து கொண்டேன். மேலும் வரலாற்றையும் நிகழ்வனவற்றையும் ஒரு சேர அறிபவர்களால் மட்டுமே அடைய முடியும் ஞானத்தை அவர் கொண்டுள்ளார் என்பதை வியப்புடன் உணர்ந்து பூரித்தேன்.
நான் கதைகளை வாசிக்கும் போதும் வயலின் கருவியை இசைக்கும் போதும் ஓவியங்களைத் தீட்டும் போதும் என்னுள் வெவ்வேறு விதமான உணர்வுகள் ஏற்படுவதையும், அவை வெவ்வேறு விதமாக வெளிப்படுவதையும் கவனித்துள்ளேன்.அவை ஏன் என்று பராசரரின் நாரதர் உடனான சந்திப்பில் இருந்து என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.கதைகளில், நிதர்சனத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டவளாக உணர்கிறேன்.ஓவியத்தில், அந்நிதர்சனத்தில் முற்றிலும் ஒன்றியவளாய் தெரிந்த நான் இசையில், அவ்விரண்டிற்குமான நடுக்கோட்டில் நிற்பவளாக உணர்கிறேன்.
சித்ரகர்ணி விளக்கிய உண்மை நான் அறிந்தும் அறியாதது என்று தோன்றியது.நம்மை சுற்றியுள்ள எல்லாவற்றிற்கும் இடையிலும் ஒரு தொடர்பு இருக்கிறது என்றும் அத்தொடர்பு நம்மையும் சேர்த்தே இணைத்துக்கொள்கிறது என்றும் நான் நம்பியிருந்தேன்.ஆனால் அத்தொடர்பு பல பிறவிகள் தாண்டியும் தொடர்கிறது என்பதை சித்ரகர்ணி புரியவைத்தது.
பீஷ்மரின் தனிமை வியாசரால் நீங்கியதை விதி ஏற்படுத்தும் விசித்திர தொடர்புகளுள் ஒன்றாகவே கருதினேன்.தன் அகத் தனிமை போக்கும் தமையனை ஒரு ஷத்திரியன் ஒரு ரிஷியில் காண்பானென்று கூறுவதே விசித்திரம் என மனதில் பட்டது.
“வானை எட்டமுடியாத எளிய மனிதர்கள் கோபுரங்களை உருவாக்கிக்கொள்கின்றனர்” என்ற வியாசரின் கூற்று முதலில் எனக்கு புரியவில்லை மீண்டும் மீண்டும் வாசித்தும் கூட முழுபொருள் விளங்கவில்லை. புத்தகத்தை முழுவதும் படித்துவிட்டு மீண்டும் அந்த வரிகளை வாசிக்கையில் சட்டென விளங்கியதும் “ஆம்” என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். கோபுரமென உயர்ந்து நிற்கும் மாமனிதர்கள் எப்பொழுதும் தங்களைத்தாமே முழுமையாக செதுக்கியவர்கள் அல்ல, அவர்கள் சுற்றத்தாலும் சூழ்நிலையாலும் செதுக்கப்பட்டு தன்நிலை மாறாமல் இருந்தவர்களேயாவர் என்பதை புரியலானேன்.
“உயிரற்றவைக்கு மட்டுமே கச்சிதம் கைகூடுகிறது” என்று பீஷ்மர் கூறியது என்னை சிந்திக்க வைத்தது. அப்படியானால் இன்றைய மனிதசெயல்களில் பெரும்பாலானவை உயிரற்றவையே என கண்டு திகைத்தேன்.ஆனால் இயற்கையோடு ஒன்றும், இசையும் எழுத்தும் கற்பனையும் மற்ற சில செயல்களும் அவ்வாறில்லை என்று அறிந்தேன்.மேலும் இதன் மூலம் இயற்கையே கச்சிதமற்றது என்னும் கருத்தை ஆழமாக புரிந்து கொள்ளமுடிந்தது.
வியாசரின் கேள்விக்குப் பதிலளித்த பீஷ்மரின் சொற்களைக் கண்டவுடன், போரில் கொல்லப்படுபவனின் குழந்தைகளைக் குறித்து எண்ணும் ஒரு வீரன் ஷத்திரியனாக இருக்க இயலாது என்ற எண்ணமே என்னுள் உதித்தது. அவர் “ஷத்திரியனை விட மனிதன் என்ற இடம் பெரிதென்றும்”எண்ணுவதாக கூறுகையில் அவர் மீது இருந்த மதிப்பு சற்றே கூடியது.ஆனால் தவறொன்றில் தர்மம் பிறழுகிறதா என்று சிந்திக்கும் ஷத்திரியர்கள்,தங்களின் தர்மத்தினால் ஏற்படும் தவறுகளை ஒருபோதும் எண்ணுவதில்லையா? என்று எண்ணிக்கொண்டேன்.
இக்கேள்விக்கான பதில் அடுத்த பக்கத்திலேயே காத்திருந்தது. பசுவினைக் கொல்வது சிங்கத்தின் தர்மம் என்று வியாசர் கூறியதும் ஒன்றை ஒன்று சார்ந்து வாழும் இயற்கையின் முறையே இங்கு தர்மம் எனப்படுகிறது என்று விளங்கியது.
சிபியின் கதையின் பாதியையே அறிந்திருந்திருந்தேன். தனது தொடை சதையைப் புறாவிற்குப் பதிலாக கொடுத்தான் என.தன் முன் சிரம் தாழ்த்தி அடைக்கலம் கோரிய சிபியை உணவென ஏற்க மறுத்த ஷத்திரியனான சித்ரகன் என்னும் பருந்தைக் குறித்து முதற்கனல் வழியே தெரிந்து கொண்டேன்.ஷத்திரியரின் இயல்பு கண்டு வியந்தேன்.
ஸதியின் கதையின் இவ்வடிவத்தை நான் கேட்டதில்லை.ஸதி ஒரு நாகமென பிறந்தவள் என்பதை நான் அறிந்திருக்கவில்லை.சிவபெருமானின் மனைவியான ஸதி வேள்விக்கு அழையாவிருந்தாளியாக சென்று தந்தை செய்த அவமதிப்பை தாளாமல் அக்னியில் எரிந்து சாம்பலானாள் என்றே தெரிந்திருந்தேன்.ஆனால் அவள் தந்தையால் அவமதிக்கப்பட்டு கணவனாலும் கைவிடப்பட்டு பின்பு மீண்டும் கணவனை அடையும் பொருட்டே வேள்வி நெருப்பில் தன்னை அழித்துக்கொண்டாள் என்று சூதர்களால் சொல்லப்பட்டது என்று வாமதேவர் கூறியதைப் புத்தகத்தின் முடிவில் நினைவு கூர்ந்தேன்.அவ்வொரு கருத்தே அம்பையின் வாழ்வின் சுருக்கம் எனத் தோன்றியது.
தனது தந்தையால் நிராகரிக்கபட்டு பின் கணவனென ஏற்றவனிடம் எள்ளிநகையாடப்பட்டு கொற்றவை என கோபம் கொண்டு பிடாரியென கோலம் கொண்டு பித்தியென திரிந்து இறுதியில் உயிருடன் சிதைநெருப்பேறிய அம்பை இறந்தும் பீஷ்மரைப் பின் தொடர்ந்தாள் என்பதை சிகண்டியின் கனவின் மூலம் அறிய முடிந்தது.
“அதிகாரம் எப்போதுமே நாடகங்கள் அடையாளங்கள் வழியாகத்தான் நிகழ்ந்து கொண்டிருக்கிக்கிறது” என்ற புராவதியின் கூற்று என்றைக்குமான பல்வேறு வகையான அதிகாரங்களுக்கு பொருந்தக்கூடியதாக அமைந்திருந்தது. பல்வேறு வகையான நாடகங்களின் வழியாகத்தான் அவை தங்களின் பலத்தை பிரதிபலித்து நிறுவி அவ்வதிகாரத்தை நிலைக்கொள்ளச் செய்கின்றன.இக்கருத்தை முக்கியமாக ஹிட்லருடன் ஒப்பிட்டு பார்த்துக்கொண்டேன்.
அம்பையின் வீரம் என்னை மெய்சிலிர்க்கச் செய்தது. ஒரே கணத்தில் திகைக்காமல் தன்னை நெருங்கியவனை வெட்டி வீழ்த்தும் துணிவு கொள்வதே வீரம் என்பேன் நான். இன்றைய தற்காப்பு கலைகள் அனைத்தும் அத்தகைய வீரத்தையே அளிக்கின்றன.வீரத்தில் பீஷ்மருக்கு நிகரானவள் அம்பை மட்டுமே என்ற எண்ணம் பீஷ்மர் வியப்பதை கண்டு என்னுள் உண்டானது.
“வெள்ளிநிற மலர்போலச் சுழன்ற வாளைப்பார்த்து” என்ற உவமை எனக்கு ஏனோ மிகவும் பிடித்திருந்தது.வெற்றுப் பெருமைக்காக பீஷ்மரை பின்தொடர்ந்து சென்ற சால்வனை கண்டு இப்படியும் ஒரு அரசன் என சொல்லிக் கொண்டேன்.உண்மையில் சால்வனைப் போன்றோரே இன்றைய உலகில் நிறைந்துள்ளனர்.
சந்தனுவுடைய தனிமை, தனிமையின் மற்றொரு முகம்.பீஷ்மரின் தனிமையை விட அது முற்றிலும் மாறுபட்டது.எவரும் தன்னை தங்களுக்கு சமமானவராக அவரை எண்ணாத்தால் ஏற்படும் தனிமை பீஷ்மருடையது.அவரால் அத்தனிமையில் சில கணங்கள் பாதுகாப்பை உணரமுடியும்.ஆனால் சந்தனுவோ பாதுகாப்பின்மையையே தனிமையாகக் கொண்டவர்.தனக்கென தன்னுடன் விளையாட பேசி மகிழ ஒரு நல்ல தோழனையே அவர் பெற விரும்பினார். அதனாலேயே தனக்கென ஒரு தமையன் என்பதில் ஆனந்தம் கொண்டு அவரை நேசிக்கிறார்.ஆனால் அவரை நேசிக்க பால்ஹிகன் வந்தவுடன் அத்தகைய நேசத்தினை முதல்முறை கண்டவுடன் அதுவே தான் விரும்புவது என புரிந்துகொண்டு அதற்காக ஏங்குகிறார்.
ஒரு கட்டத்தில் இரு உறவுகளுமே தன்னை விட்டுச்செல்ல,அவரது நோயானது பல்கியிருக்க வேண்டும்.ஆனால் எதை நாம் அறிந்து உணர்ந்ததில்லையோ, அதன் இல்லாமையால் ஏங்கமுடியாது என்பதுபோல அவர் கண்டு ஏங்குவதற்கு ஏதுமில்லை ஆதலால் அவர் ஏங்கவில்லை போலும் என்று நினைத்துக்கொண்டேன்.ஆனால் பால்ஹிகனோ தன் தமயனையே உலகமெனக் கொண்டவன்.ஆதலால் அவரின் பிரிவைத் தாளாமல் தனக்குள் எழுந்த நெருப்பு அவன் கண்களை மறைத்துவிடவே ஏதுமறியா சந்தனுவின் மேல் அவச்சொல் இட்டுவிட்டான்.எனினும் சந்தனுவின் அகநெருப்பாக எழுந்த பொறாமையும் கூட அவரின் (தேவாபியின்) துரதிஷ்டத்திற்கு வித்திட்டிருக்கலாம் என்று தோன்றியது.
சந்தனு தனிமையிலிருந்து தனக்கு கிடைக்கப்பெறாத விடுதலை பீஷ்மரால் அவருக்கு கிடைத்தால் அவருள் அழியாதிருந்த உசகன் பீஷ்மரில் தன் அன்னையை கண்டான் என நினைக்கிறேன்.இக்காரணத்தினாலேயே தீர்கசியாமர் “தலைமுறைக்கு ஒருமுறையே ஒவ்வொரு காலடியையும் மண்மகள் கைவிரித்துத் தாங்கும் குழவியர் மண்ணில் பிறக்கின்றனர்“ என்று கூறுகிறார் போலும்.
அம்பை காசிநாட்டுக்கு மீண்டும் வந்து நிற்கையில் “இளவரசி” என்று கூவிவந்த ஃபால்குணர் உண்மையான பாசத்துடனும் பற்றுடனும் திகழ்ந்தாலும் அரசின் ஆணைக்கு கட்டுப்படும் கைப்பாவையாகவும் இருப்பதனால் எதை தன்னால் கனவிலும் கூட செய்ய முடியாதோ அதை செய்யத் துணிகிறார். அம்பையை தன் மகவுகளில் ஒன்றாகவே கருதியிருந்தார் போலும்.மீண்டும் பேசுகையில் அவர் அவளை “அஸ்தினபுரியின் அரசி” என்று கூறுகையில் அவரின் குரல் என் செவிகளில் எதிரொலித்தாற்போல் தோன்றியது.உண்மையில் அம்பையின் சொற்கள் ,அவற்றின் பின்னால் இருந்த ஏக்கம், குழந்தை மனம் ஆகியவற்றை தாண்டி எவ்வாறு ஃபால்குணர் அதை செய்தார் என்பது எனக்கு ஒரு புதிராகவே உள்ளது.
அம்பை “ஃபால்குணரே, இதெல்லாம் என்னை சோதிப்பதற்குத் தானே?” என்று கேட்கையில் என் கண்களிலும் நீர் நிறைந்து விட்டது.ஷத்திரியனை வாளால் வீழ்த்தவில்லை எனினும் அதை விடக் கூரான சொற்களால் வென்று வந்தவளை ஏன் ஏற்க மறுக்கிறது இந்த ஷத்திரிய அறமும் கோழை அரசுகளும் என்று சினம் கொண்டேன். அவளின் ஏக்கத்தினை ஒரு மகளென என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.இறுதியாக தன் தாயை இறைஞ்சுகிறாள். அவள் அன்னையை அறிந்திருக்கிறாள் என்று எண்ணினேன்.அவ்வாறே புராவதி சினந்தெழுந்து அம்பை அல்லால் பிறிதொன்றை எண்ணாமல் வனம்புகுகிறாள்.மஹிஷாசூரமர்த்தினியாய் அவள் தன் அம்பையையே காணுகிறாள் என்று தோன்றியது. அன்னை மகற்கிடை தொடர்பு என்றும் மாறாமலிருப்பது, அவ்வாறே நெருப்பென திகழ்ந்தவளை எண்ணி இறுதியில் நெருப்புடனேயே இணைந்துவிட்டாள் புராவதி.இதையே நாகசூதன் கூறியதாக கருதுகிறேன்.
அம்பிகை அனைத்தையும் கண்டு வியக்கும் அந்நொடியில் தன் தன்மானத்தையும் அதனோடு பிணைந்திருந்த ஆவேசத்தையும் மீட்டெடுத்து வாராபடை அவற்றை வீழ்த்த வேண்டும் என்று சொல்லிக் கொள்வது அவளின் உள்ளம் ஒரு குழந்தையாகவும் ஷத்தியப் பெண்ணாகவும் மாறி மாறி அலைவதைக் காட்டுவதாக அமைந்திருந்தது.அம்பாலிகையை கிள்ளுவதும் அவள் சற்றே நகர்ந்து அமருவதும் அப்படியே.அம்பாலிகையின் உரையாடல் பகுதிகளை வாசித்த போது வாய்விட்டு சிரித்துக்கொண்டேன் நான்.
விசித்ரவீரியன், எனக்கு வாழ்வை கற்றுக்கொடுப்பதாகக் கொள்கிறேன்.ஒரு கணத்தில் நூறு நினைவுகளும் நூறு எண்ணங்களும் சேர்ந்துவிடுகின்றன. வாழ்வு மிகச்சிறியது என்றெண்ணி ஓடாமல் ஒவ்வொரு கணத்திலும் நின்று வாழத் தெளிவுற்றேன்.
“வாழாது இருந்து கொண்டிருந்தவர்களுக்கு மட்டும் தான் மரணம் என்பது இழப்பு” என்ற வரி இப்பிரபஞ்சத்தின் மாபெரும் இரகசியம் ஒன்றை மெல்ல என் காதருகே உரைப்பதாக அமைந்திருந்தது.தசகர்ணனில் எழுந்த வாக்தேவி சொன்னதைப் போல அவனே அந்நாட்டின் அழியா மணிமுத்து.
வெள்ளிநிலம் நாவலில் மக்களின் பயங்களிலிருந்தே உருவானவை தெய்வங்களும் மதங்களும் என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.அக்கருத்தைப் பிரதிபலிக்கும் ஒன்றாக “மக்களின் நம்பிக்கைகள் எப்போதுமே அச்சங்களில் இருந்து உருவானவை” என்ற சத்தியவதியின் கூற்றைக் காண்கிறேன்.
சிவை, கிருபை இருவரின் வாழ்கை என்றும் அழியாமலிருக்கும் பாகுபாடுகளைக் காட்டுகிறது.அவர்களின் பேச்சு நகைப்பூட்டலாக இருந்தது.அம்பிகையும் அம்பாலிகையும் கலந்ததைப் போல சிவையைக் கண்டேன்.அறிவிருந்தும் நல்லுள்ளமிருந்தும் பிறப்பாலும் சூழ்நிலையாலும் இத்தகைய வாழ்வை அவள் வாழ்வது என்னை பெருமூச்சு விடசெய்தது.
நிருதன் அம்பைக்கு ஒரு படகோட்டி மட்டுமே என இருந்தும் அம்பையை தன் தங்கையென கொண்ட பாசம்,அவள் பித்தியான போதும் பல வருடங்கள் கழிந்த பின்னும் அங்கேயே இருக்கச்செய்தது என்பதை எண்ணி வியந்தேன்.
சிகண்டியின் கதை பதைப்பூட்டுவதாக இருந்தது.எது கிடைத்தாலும் தன் அன்னையிடம் கொண்டு செல்லும் ஒரு குழந்தையென அன்னை மீது அவள் கொண்ட அன்பே, அன்னை அம்பையாக மாறியதும் சிகண்டினி கூறிய சொற்களாகவும் கூறாத சொற்களாகவும் அமைந்திருந்தது.அப்பொழுது அவளை உண்மையில் ஈன்றெடுத்த அன்னை யாராக இருக்கும் என எண்ணினேன்.
அன்னை “மகன்” எனத் தன்னைக் கண்டதும் தாயிற்கென உயிர்தரிக்க புது ஜென்மம் கொண்ட மகனாய் மாறிவிட்டான் சிகண்டி.என்றும் அம்பை கண்ணீருடன் சிதையேறிய அக்காட்சியையும் அவளின் சொற்களையும் கனவுகளில் தொலைத்து விடக்கூடாது என்பதாலேயே அவன் பிறகெப்பொழுதும் கண் மூடவில்லை எனத் தோன்றியது.இதுவே அவன் அம்பை மீது கொண்ட தூய அன்பையும் தீரா பற்றையும் வெளிப்படுத்துவதாக இருந்தது.புறத்தால் அழுவதனால் அவளின் நினைவுகள் கண்ணீரில் கரைந்து விடுமோ என்று எண்ணியே அவன் அழவில்லை என நினைக்கிறேன்.
மனதினை வைரமென செதுக்கி ஸ்தூனகர்ணன் முன் செல்லும் முன்னரே தனது வாழ்வின் அர்த்தத்தினை உணர்ந்து விட்டதனால்,அகத்தாலும் உயிராலும் ஆண் என ஆகிவிட்டிருந்ததனாலேயே அவன் தனது நோக்கத்தில் சிறிதும் பிறழாமல் ஸ்தூனகர்ணனை எதிர் கொண்டான் என்று எண்ணுகிறேன்.அவன் வைரத்தை உண்ட அக்கணம் அவன் வாழ்வு முற்றிலும் தன் அன்னைக்கு என உறுதி செய்து விட்டதைக் காட்டுவதாக அமைந்திருந்தது.ஆதலால் அவனும் அம்பையும் வேறில்லை என்பது மெய்யாகிறது.
இவ்வுலகில் இருப்பு என்பதே ஆன்மா .அது வசிக்கும் உடலானது நிலையற்றதாக இருப்பினும் , அதில் அது வசிக்கும் வரை அது உயிர் எனப்படுகிறது எனில் உயிர் என்பது நமது இச்சைகளாலும் நினைவுகளாலும் உணர்வுகளாலும் இணைந்து செதுக்கப்படுவதே என்று எண்ணுகிறேன்.அவ்வகையே அம்பையின் இச்சையை தனதாக்கி,அவளின் நினைவுகளில் வாழ்ந்து, அவளின் குரோத உணர்வே உருவென திகழும் சிகண்டி அம்பையின் ஆன்மாவை முழுதும் பெற்றவனாகிறான்.மேலும் சிவனின் வரத்தால் பீஷ்மரை கொல்லக் கூடியவனுமாகிறான்.அவன் முழுமையாக “சிகண்டி” என மாறிவிட்ட போதிலும் அவனை விட்டு நீங்காத பெண்மை அம்பையே என நான் கருதுகிறேன்.
இன்று ஈன்றெடுத்த அன்னையையே முதியோர் இல்லங்களில் சேர்க்கும் சுயநலமே உருவானவர்கள் சிகண்டியைக் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில்,தன்னை ஈன்றவள் முகமறியாமல், தான் அவளிடம் பெற்ற தாய்ப்பாலால் உருவான பந்தத்தினால் மட்டுமே அவளை தன் அன்னை என உணர்ந்து அந்நன்றி உணர்வால்
“என் ஏழு பிறப்பும் என் அன்னைக்குரியவை” என்று தன் வாழ்க்கையை அவளின் பாதத்தில் இட்டு அவள் உயிரை தனதெனக் கொண்ட ஒரு மகனை கண்டு அவர்கள் தங்களை நோக்கி கூசிக்கொள்ள வேண்டும்.
அக்னிவேசர் துரோணருக்கு அளித்த அறிவுரையானது கற்றலின் மூலப்பாடம் என்று கருதுகிறேன் .கற்றல் என்பது கற்றலின் ஆனந்ததிற்காகவே என்று அவர் விளக்குகையில் அதை போலவே வாழ்வில் எதையும் எதிர்பார்த்து ஒரு செயலை செய்வது அர்த்தமற்றது என்று புரிந்து கொண்டேன்.
ஊர்வையும் சிகண்டியும் கண்ட கனவு எனக்கு முதலில் புரியவில்லை. என் அன்னையுடன் அதைக்குறித்து கலந்துரையாடிய பின்னரே “உன்னுடன் இருந்தால் நான் தப்பிவிடுவேன் என்று எனக்கும் தெரியும்” என்று பீஷ்மர் கூறியதன் அர்த்தம் புரிந்தது.
பால்ஹிகன் உடனான சிகண்டியின் உரையாடல் என்னை சிந்திக்க வைத்தது. ஆடி பிம்பத்திற்கும் நிழலுக்கும் என்ன வேறுபாடு என்று நெடுநேரம் எனக்குள் கேட்டுக்கொண்டிருந்தேன்.பிறகு அதை நான் இவ்வாறு புரிந்து கொண்டேன்.ஆடி பிம்பமானது நம்மில் இருக்கும் ஒளியையும் இருளையும் ஒருசேர பெற்றது .ஆதலால் அது நமக்கு இணையென ஆகிறது.ஆனால் நிழலானது நம்மில் பாதியான இருளையே அதன் முழுமையாகக் கொண்டது.ஆதலால் நம் இருளை நமக்கெதிராக உபயோகிக்கும் வல்லமை பெற்றது.
நாகசூதன், பீஷ்மர் இனி திருதிராஷ்ட்ரனையும் பாண்டுவையும் சுமப்பார் என்று உரைத்தது பீஷ்மர் என்றும் தனக்காக வாழ விதிக்கப்பட்டவர் அல்ல என்பதை மீண்டும் கூறுவதாக அமைந்திருந்தது.
“அவரும் நானும் ஒன்றே என உணர்ந்தேன்” என்று சிகண்டி சொன்னதும் பீஷ்மருடனான புறப்போர் என்பது பொருளற்றதாகிறது.அகத்தால் தன்ன்னை தானே வெல்பவனே புறத்தாலும் தன்னை வெல்ல முடியும்.அவ்வகையில் சிகண்டி வென்று விட்டான் என்றே எண்ணுகிறேன்.ஏனெனில் தானும் தன் பகைவனும் ஒன்றே என்று அறியும் எவ்வீரனும் வல்லமை மிக்கவன் ஆகிறான்.அவ்வாறு அறிந்தவுடன் பால்ஹிகனைப் போல பின்னடையாமல் முன் செல்ல துணிந்து விட்டதே அவனின் வெற்றி.மேலும் இந்நிகழ்வின் மூலம் அகப்போரின் இன்றியமையாமை குறித்து தெளிந்து கொண்டேன்.இந்த அகப்போர் களப்போருக்கு மட்டுமல்ல என்றும் வாழ்கைப்போரில் ஒவ்வொரு நொடியும் இதனை நாம் வெவ்வேறு விதங்களில் எதிர்க்கொள்கிறோம் .
சிகண்டியின் வார்த்தையால் பீஷ்மர் தன்னுள் கனத்த , சூழ்நிலையால் அவர் இழைத்த பெரும் பாவத்தினை வியாசரின் சொல்லுக்கிணங்க தனது ஊனாலும் குருதியாலும் ஈடுகட்ட எண்ணியே தனது காலனுக்கு தானே கற்பிக்க ஏற்றுக்கொள்வது மட்டுமல்லாமல் தன்னை கொல்ல தனது வரத்தால் சிகண்டிக்கு தனது ஆசியின் மூலம் அனுமதி அளித்தார் என்றே என் சித்தம் சிந்தித்தது.
அஸ்தினபுரியில் விழுந்த முதல் கண்ணீர் சுனையின் கண்ணீர் என்றால் அதன் கனல் இரு வித்ததில் வெளிப்படக் கண்டேன்.ஒன்று விசித்திரவீரியன் கூறியதைப் போல அவ்வம்சத்தில் தழைத்த நோய். மற்றொன்று சத்யவதி.
குருஷேத்திரத்தை பின்னிய விதியின் வலையில் முதல் முக்கிய முடிச்சாக சத்தியவதியைக் காண்கிறேன்.பிறகு அறிந்தும் அறியாமலும் அம்முடிச்சானது மீதி வலையைத் தானே பின்னியது.ஆனால் ஒவ்வொரு கணத்திலும் அவளை ஒரு இராஜதந்திரியாகவே கண்டேன்.
வில்லாளத் தெரிந்தவர் பீஷ்மரென்றால்
சொல்லாளத் தெரிந்தவள் சத்யவதி எனக் கருதுகிறேன்.
மொத்ததில் முதற்கனல் நான் அறியாத பாரதவர்ஷத்திற்கு என்னை அழைத்துச் சென்றது. முதற்கனலில் நிருதனும் சிகண்டியுமே எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரங்களாவர்.புத்தகத்தில் ஆங்காங்கே கொடுக்கப்பட்டுள்ள ஓவியப்பக்கங்களும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.கதையினையும் கதாபாத்திரங்களையும் காட்சிப்படுத்தவும் கதாபாத்திரங்களின் உணர்வுகளை எளிதில் புரிந்து கொள்ளவும் அவை மிகவும் உதவிகரமாக இருந்தன.
“நான் யார்?” என்று என்னுள் இருந்த கேள்வி முதற்கனலை வாசித்த பின்பு “இப்பிரபஞ்சத்தில், இப்பிரபஞ்சத்திற்கு நான் யார்?” என்று மாறியிருப்பதை கவனித்தேன். இத்தேடலின் முழுமையையும் இனி நான் வாசிக்க இருக்கும் வெண்முரசு தொடர்கள் எனக்கு அளிக்கும் என்று நம்புகிறேன் ஐயா. நன்றி.
இப்படிக்கு,
மீ.அ.மகிழ்நிலா
ஒன்பதாம் வகுப்பு “ஆ“ பிரிவு
ஸ்ரீவிக்னேஷ் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி
கூத்தூர்
திருச்சி