முஞ்சிறை, பார்த்திபசேகரபுரம்

பெப்ரவரி இருபதாம் தேதி நாஞ்சில்நாடன் நாகர்கோயில் வந்திருந்தார். எம்.வேதசகாயகுமாரின் மகள் சுனந்தாவின் திருமண நிச்சயம். நானும் அருண்மொழியுடன் திருமண மண்டபத்துக்குச் சென்றோம். எளிமையான விழா. பொதுவாக கிறித்தவ சடங்குகளில் நல்ல தமிழில் செய்யும் ஜெபங்கள் அத்தருணத்தை நிறைவுற்றவையாக ஆக்குகின்றன. விழா முடிந்ததும் நாஞ்சில்நாடன் ”சாயங்காலம் வாறேன்…”என்றார். அ.கா.பெருமாளும் கூடவே வருவதாகச் சொன்னார்.

கிளம்பும்போது சட்டென்று ஓர் எண்ணம். எங்காவது வெளியே போனால் என்ன? நாஞ்சில்நாடனிடம் ”சார் எங்காவது போலாமே…கொஞ்சம் முன்னாடியே வாங்க…”என்றேன் ”எங்க போலாம்?” என்றார் பெருமாள். நான் சட்டென்று ”முஞ்சிறைக்கு போலாமே” என்றேன்.  அவர் ”வாறேன்.. வேர சோலி ஒண்ணும் இல்ல…வீரணமங்கலம் போயி அம்மையைப் பாக்கணும்” என்றார்

நான் என் வழக்கமான டாக்ஸிக்காரருக்கு ·போன் செய்து ஐந்துமணிக்கு வரும்படிச் சொன்னேன். நாலரை மணிக்கெல்லாம் பெருமாள் வந்துவிடார். பேசிக்கொண்டிருந்தபோது ஐந்தேகால் மணிக்கு நாஞ்சில்நாடன் வந்தார். ஒரு கறுப்புடீ குடித்துவிட்டு கிளம்பினோம்.

முஞ்சிறைக்குப்போக நாகர்கோயிலில் இருந்து மார்த்தாண்டம் சென்று புதுக்கடைப்பாதையில் திரும்ப வேண்டும். முஞ்சிறை கொஞ்சம் பெரிய ஊர்தான். மன்னர் காலத்திலேயே பெரிய ஊர் அது. கோயில் இப்போது சாலையில் இருந்து சற்றுத் தள்ளி இருக்கிறது. மிக அமைதியான சூழல். கோயிலுக்குச் செல்லும் பாதையும் பழைமையான கட்டிடங்களுடன் இருக்கும். அங்கேதான் என் அப்பா சார் பதிவகத்தில் வேலை பார்த்தார். நாங்கள் கொஞ்சநாள் அங்கே தங்கியிருந்தோம்.

 

அ.கா.பெருமாள்

அதே பழைய சார்பதிவாளர் அலுவலக் கட்டிடம் அப்படியே இருந்தது. அப்பா என்னை ஒரு சில முறை அலுவலகத்துக்குக் கூட்டிவந்திருக்கிறார். நான் அங்கே வந்தபோது எனக்கு இரண்டு அல்லது மூன்று வயது இருக்கலாம். ஆனால் அந்தக் கட்டிடமும் ஆலயப்படிகளும் எனக்கு இப்போதும் நினைவில் இருக்கின்றன. ஆகவே முஞ்சிறை என்றால் ஒரு ஈர்ப்பு.

முஞ்சிறை மகாதேவர் ஆலயம் குமரிமாவட்டத்தில் உள்ள 12 பெரும் சிவாலயங்களில் ஒன்று. மகாசிவராத்திரியை ஒட்டி இந்த 12 ஆலயங்களையும் ஒரே நாளில் ஓடியே சென்று தரிசனம் செய்யும் சடங்கு கடந்த 200 ஆண்டுகளாக குமரிமாவட்டத்தில் நடந்து வருகிறது.அதற்கு சிவாலய ஓட்டம் என்று பெயர். சென்றவருடம் இருபதாயிரம் பேர் ஓடியதாக தகவல். வண்டிகளிலும் சைக்கிள்களிலும் செல்பவர்கள் தனி.

சிவாலய ஓடும் ஆலயங்கள் கீழ்க்கணடவை

திருமலை[ முஞ்சிறை]
திக்குறிச்சி
திற்பரப்பு
திருநந்திக்கரை
பொன்மனை
பந்நிப்பாகம்
கல்குளம்[பத்மநாபபுரம்]
மேலாங்கோடு[குமாரகோயில்]
திருவிடைக்கோடு[வில்லுகுறி]
திருவிதாங்கோடு
திருப்பன்றிக்கோடு
திருநட்டாலம்

 

இச்சடங்கில் பல மர்மமான விஷயங்கள் உண்டு. சிவ வழிபாடாக இருந்தாலும்  ஓடுபவர்கள் ”கோவிந்தா கோபாலா” என்று கூவிக்கொண்டுதான் ஓட வேண்டும். அவர்கள் சிவப்பு ஆடை கட்டி, கையில் ஒரு விசிறி வைத்திருக்க வேண்டும். அவர்கள் கோயில்களில் கும்பிடுவதற்குப் பதிலாக இறைவனை நோக்கி விசிறியால் வீச வேண்டும். ஏன், எப்படி இச்சடங்கு ஆரம்பமானதென்று தெரியவில்லை. ஏதோ புராதனமான ஜைனச் சடங்கின் மறுவடிவம் இது என்பவர்கள் உண்டு. அ.கா.பெருமாள் பன்னிரு சிவாலயங்கள் பற்றி தமிழினிக்காக ஒரு நூல் எழுதிக்கொண்டிருக்கிறார்.

22.பெப்ருவரி மாலையில் சிவாலய ஓட்டம் ஆரம்பிக்கிறது. காலைமுதலே தெருவெங்கும் பக்தர்கள் சைக்கிள்களிலும் கால்நடையாகவும் செல்கிறார்கள். ஆரம்ப உற்சாகத்தில் ஓட ஆரம்பித்து நாக்கு தொங்கி சாலையோரமாக அமர்ந்திருப்பவர்கள்  பலர். பொதுவாக நாற்பது வயதுக்குமேல் உள்ளவர்கள் ஓடமுடியாது. ஆனால் எழுபது வயதிலும் ஓடி முடிக்கும் சூரர்கள் பலநூறுபேர் உண்டு.

சிவாலய ஓட்டம் முஞ்சிறையில் ஆரம்பிக்கும். திருநட்டாலத்தில் முடியும். முஞ்சிறை பெரிய கோயில் ஒரு சிறு குன்றின்மீது உள்ளது. படி ஏறி கோயிலுக்குச் செல்ல வேண்டும். குமரிமாவட்டத்தில் சிவனும் விஷ்ணுவும் ஒரே கோயிலுக்குள் இருப்பது இங்கே மட்டுமே. திருநட்டாலத்தில் சங்கரநாராயணர் கோயில் என்று பெயர் இருந்தாலும் ஒரு பெரிய தெப்பக்குளத்தின் இருபக்கமாக இரண்டு கோயில்களாகவே சிவனும் விஷ்ணுவும் உள்ளனர். சிவாலய பக்தர்கள் கடைசியில் விஷ்ணு கோயிலில்தான் ஓட்டத்தை முடிக்க வேண்டும். என் கணிப்பில் சைவ வைணவ ஒற்றுமையை நாடெங்கும் உருவாக்கிய நாயக்கர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட சடங்காக இது இருக்கலாம்.

 

 முன்சிறை திருமலை சூலபாணி ஆலயம்

முஞ்சிறை கோயிலுக்குள் நானும் நாஞ்சில்நாடனும் அ.கா.பெருமாளும் நுழைந்தபோது ஆறுமணி. அது சோழர்காலத்துக் கோயில் என்றார் அ.கா.பெருமாள். பிற்காலப் பாண்டியர்கள் காலத்தில் அருகே உள்ள விஷ்ணுகோயிலும் மண்டபங்களும் கட்டப்பட்டன. சுற்றுமதிலும் பிராகாரமும் நாயக்கர் காலத்தில். பிராகாரத்தூணில் நாயக்கர் ஒருவரின் சிற்பம் உள்ளது. நாயக்கர்களுக்கு உரிய சாய்ந்த கொண்டை, ஆரங்கள், வடித்த காது. அது திருமலைநாயக்கர் என்று ஊரில் சொல்கிறார்கள். ஆனால் திருமலை நாயக்கர் அல்ல. அந்த பெரிய தொப்பை இல்லை. அனேகமாக அவரது தம்பியரான ரங்கப்பன், செவந்தியப்பன் ஆகிய இருவரில்  ஒருவராக இருக்கலாம்.

குன்றின் மீது பெரிய வளாகத்துக்குள் சிவன் விஷ்ணு கோயில்களும்  இரு குளங்களும் உள்ளன. சிவன் லிங்க வடிவில் பொன்முலாமிட்ட வெள்ளிக்காப்பு சார்த்தப்பட்டு எழுந்தருளியிருக்கிறார். உள்ளே ரிஷப மண்டபம் இருக்கிறது. குமரிமாவட்ட ஆலயங்களைப் போல இங்கேயும் நந்திக்கும் தினசரி பூஜை உண்டு. அருகே விஷ்ணு நின்ற திருக்கோலத்தில் சிறிய சிலையாக இருக்கிறார். பழமையும் தனிமையும் நிறைந்த சூழல். நாங்கள் சென்றபோது சிவராத்திரிக்கான அலங்கார ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.
முஞ்சிறைத்தேவர் சுயம்புலிங்கம் என்று சொல்லப்படுகிறது. பதினொன்றாம் நூற்றாண்டில் கங்கைகொண்ட ராஜேந்திர சோழன் இன்றுள்ள கோயிலைக் கட்டினான். அதற்கு முன்னர் இது சின்னஞ்சிறு பாறைக்கோயிலாக நெடுங்காலமாக இருந்துகொண்டிருந்தது. தேவருக்கு சூலபாணி என்றும் பெயருண்டு.

இக்கோயிலின் அருகே வடுகச்சிக்கோட்டை என்றும் உதயச்சிக்கோட்டை என்றும் பெயருள்ள ஒரு கோட்டையின் இடிபாடுகள் இருந்தன. அவற்றை நாகம் அய்யா, வேலுப்பிள்ளை போன்ற திருவிதாங்கூர் வரலாற்றாசிரியர்கள் பதிவுசெய்திருக்கிறார்கள். பிற்பாடு கட்டிடம் கட்ட அந்தக்கற்கள் பலரால் திருடப்பட்டன. 2001ல் நானும் அ.கா.பெருமாளும் அந்த இடத்துக்குச் சென்றபோது கோட்டை முற்றிலும் மறைந்துவிட்டது.

வடுகச்சிக்கோட்டையில் திருமலைநாயக்கரின் அம்மா வந்து தங்கி இந்த கோயிலை ஒருவருடம் விரதமிருந்து திருமலைநாயக்கரைப் பெற்றாள் என்று ஐதீகம் உள்ளது. திருமலை என்ற பேரே இதன்பொருட்டுத்தான் போடப்பட்டது என்று சொல்லப்படுகிறது. 
 

இரண்டு தீபாராதனைகளையும் கண்டு வணங்கிவிட்டு திரும்பி காரில் ஏறி குறுக்குச்சாலை வழியாக பார்த்திபசேகரபுரம் சென்றோம். பார்த்திப சேகரபுரமும், திருநந்திக்கரையும், சிதறால்மலையும்தான் குமரிமாவட்டத்திலேயே தொன்மையான ஆலயங்கள். அவை மத்திய தொல்பொருள்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. பார்த்திபசேகரபுரத்தில் சங்ககாலத்து ஆய் மன்னன் கோக்கருந்தடகங்கண்ணின் செப்பேடு கிடைத்துள்ளது. அது பத்மநாபபுரம் அருங்காட்சியகத்தில் உள்ளது. குமரி மாவட்டத்தில் ஆய் மன்னர்களின் கல்வெட்டுகள் சிலைகள் என கிடைத்துள்ள பெரும்பாலான சான்றுகள் பார்த்திபசேகரபுரம் வட்டாரத்தில் கிடைத்தவையே.

பார்த்திபசேகரபுரம் தொன்மையான வேதபாடசலையாக இருந்திருக்கிறது. கோக்கருந்தடகங்கண் செப்பேட்டில் அங்கே கல்வி பயிலும் வேத மாணவர்களுக்குரிய நெறிகள் சொல்லப்பட்டுள்ளன. அவர்கள் ஆயுதம் வைத்துக்கொள்ளக்கூடாது என்பது முக்கியமான விதி. அவர்கள் கல்வி கற்காத மற்ற நேரத்திலும் வேறு விஷயங்களைப்பற்றி பேசக்கூடாது என்பது இன்னொரு விதி. அதற்கான தண்டனைகளும் சொல்லப்பட்டுள்ளன.

தொன்மையான சம்ஸ்கிருத இலக்கியத்தில் இரு நாடக ஆசிரியர்கள் மேதைகள் என்று சொல்லப்பட்டிருந்தனர். ஒருவர் மகாகவி காளிதாசன். இன்னொருவர் மகாகவி ·பாசன். காளிதாசனின்  ரகுவம்சம், குமாரசம்பவம் போன்ற காவியங்களும் சாகுந்தலம் நாடகமும் கிடைத்தன. அவை விரைவிலேயே உலகப்புகழ்பெற்றன. ஆனால் நெடுங்காலம் தேடியும்கூட ·பாஸனின் எந்த நாடகமும் கிடைக்கவில்லை.

அந்த நம்பிக்கை முற்றாக அழிந்த காலகட்டத்தில் 1918 ல் திருவனந்தபுரம் அரசாங்க வித்வானாகிய கணபதி சாஸ்திரி பார்த்திபசேகரபுரம் அருகே ஒரு வீட்டின் மச்சில் ·பாஸனின் ‘ஸ்வப்ன வாஸவதத்தம்’ என்ற அற்புதமான நாடகத்தின் ஏட்டுப்பிரதியைக் கண்டெடுத்தார். பல சோதனைகளுக்குப் பின்னர் அது அறிஞர்களால் அங்கீகரிக்கப்பட்டது. பிற நாடகங்களும் கிடைத்தன என்றாலும் அவை முழுமையாக இல்லை. கணபதி சாஸ்திரி மகாமகாபோத்யாய என்னும் பட்டம் பெற்றார்.

அக்காலத்தில் பார்த்திப சேகரபுரம் ஒரு முக்கியமான கல்வி மையமாக விளங்கியது என்பதுடன் அது குறைந்தபட்சம் பதினேழாம் நூற்றாண்டு வரை அவ்வாறே நீடித்தது என்பதற்கான சான்று இது. சிதறால் அதைப்போல தொன்மையான சமணப் பாட்சாலையாக விளங்கியது. அதற்கு நாஞ்சில்நாட்டை ஆண்ட குறத்தியறையார் என்ற ராணி நிபந்தமாக நிலங்களைக் கொடுத்த செய்தியை அங்கே உள்ள பிராம்மி மொழிக் கல்வெட்டு சொல்கிறது. வரலாறு தொடங்கும் காலம் முதலே குமரி கல்வி செழித்த மண்ணாகவே இருந்துள்ளது.

மிக விரிவான ஒரு சுற்றுவளைப்புக்குள் உள்ளது பார்த்திப சேகரபுரம் ஆலயம். பக்தர்கள் வருவது மிகவும் குறைவு. சுற்றும் தென்னந்தோப்புகள் இருண்டு கிடந்தன. சிறிய கிராமம். உள்ளே மையமாக நின்ற திருக்கோலத்தில் பெருமாள் கோயில் கொண்ட மைய ஆலயம். பக்கவாட்டில் சிறிய கண்ணன் ஆலயம். இன்னொரு தேவி கோயில். அவையெல்லாமே பெரிய ஆலயத்தில் இடியாமல் எஞ்சிய மையக்கருவறைகள் மட்டுமே. விஷ்ணு கோயிலைச் சுற்றி இருந்த பிராகாரத்தின் அஸ்திவாரம் மட்டுமே உள்ளது. இருளும் வெளிச்சமும் கலந்து நெஞ்சை நிறைக்கும் அமைதியுடன் கிடந்தது கோயில் வளாகம்

கோயிலில் போற்றி மட்டுமே இருந்தார். எங்களுக்கு பிரசாதம் தந்தார். ”இவருக்கு மாதச்சம்பளம் அறுநூறு ரூபாய். ஏதோ ஒரு கடமைக்குக் கட்டுப்பட்டு இதைச் செய்கிறார்…”என்றார் பெருமாள். ”குமரிமாவட்டத்துக் கோயில்கள் அறநிலையத்துறைக்குக் கீழே வருவதில்லை. இவை தாவஸ்வம் போர்டு என்ற தனி அமைப்புக்குக் கீழே வருபவை. அறநிலையத்துறை பூசாரிக்கு இரண்டாயிரம் ரூபாய் ஊதியம் வரும்…”

நாஞ்சில்நாடன் ”ஆச்சரியம்தான்… இந்தக்காலத்தில் இந்த ஊதியத்துக்கு வேலைக்கு ஆள் வருவது..தினமும் அதிகாலையில் வரவேண்டும். மாலையிலும் வரவேண்டும்..எங்கும் போக முடியாது…”என்றார். ”இது சம்பளத்துக்குச் செய்யும் வேலை இல்லை. அவருக்கு நம்பிக்கை இருக்கிறது அதனால் செய்கிறார்” என்றார் அ.கா.பெருமாள்.

  நான் சொன்னேன். ”இந்த அரசு நினைத்தால் அவர்களுக்கு சம்பளத்தை கூட்டித்தர முடியாதா என்ன?” என்றேன்.

”அரசிடம் பணம் இல்லை என்கிறார்கள்” என்றார் பெருமாள். ”…கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பேராலயங்கள் இங்கே உள்ளன. அந்த பணத்தை அரசாங்கம் அதன் அன்றாடச்செலவுகளுக்கு எடுத்துக் கொள்கிறது. அரசுக்கு மனமிருந்தால் நன்கொடை கேட்டால்கூட கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுக்க தமிழர்கள் முன்வருவார்கள். கோயில்கள் தோறும் அன்னதானம் செய்யும் திட்டங்களையே எடுத்துக்கொள்ளுங்கள்.. இன்றுவரை .எங்குமே நிதி இல்லாமல் அந்தத் திட்டம் முடங்கவில்லை. நமக்கு மனமில்லை. ….”

ஆலயத்தை சுற்றிவந்தோம். அரசமரத்தின் சிலுசிலுப்பான காற்றில் அங்கே அமர்ந்திருந்து கொஞ்சநேரம் பேசிக்கோண்டிருந்தோம். பார்த்திவசேகரபுரத்தில் ஒரு காலத்தில் மாபெரும் அன்னசாலைகள் இருந்தன. ”அந்த மதியச் சாப்பாடு திட்டம் தேவையா என்று சிலர் என்னிடம் கேட்பதுண்டு” என்றேன். ”நான் அந்தவகையான சாப்பாட்டை மட்டுமே நம்பி கொஞ்சநாள் வாழ்ந்தவன் என்பதனால் அதை மிக இன்றியமையாதது என்றுதன் சொல்வேன். ஜைனர்களின் அன்னதான திட்டம் இல்லாவிட்டால் நான் பட்டினியில் இறந்திருப்பேன்.” என்றேன்

நித்யா சொல்வார், ஒரு சமூகம் ஏதோ ஒருவகையில் அதன் புறனடையாளர்களையும் பேண வேண்டும் என்று. நான் வேலை செய்யமாட்டேன் ஆனால் எனக்கு சோறு மட்டும் வேண்டும் என்று சொல்லக்கூடியவனையும் பேணி சோறுமட்டும்தானே சாப்பிடு என்று சொல்லக்கூடிய சமூகமே ஆரோக்கியமான சமூகம். சமூகத்துக்கு வெளியே நிற்பவர்களால் மட்டுமே சமூகத்துக்கு புதியதாக ஏதாவது அளிக்கமுடியும். நித்யாவும் நடராஜகுருவும் பல வருடங்கள் பிச்சை எடுத்து அலைந்திருக்கிறார்கள். இன்று அப்படி அலையும் துறவிகளில் பிச்சைக்காரரக்ளில் எத்தனைபேர் மகாகுருக்கள் என யாரறிவார்? அவர்களுக்கும் சேர்த்து உலையில் அரிசி போட்டனர் நம் முன்னோர்.

எட்டு மணிக்கு அங்கிருந்து கிளம்பி புதுக்கடைக்குவந்து மார்த்தாண்டம் வழியாக நாகர்கோயிலுக்குத் திரும்பினோம். ”என்னமோ தெரியல்லை, இபப்ல்லாம் பழைய ஊர்களுக்குப் போறப்ப ஒரு நிறைவு. எல்லாம் நெடுங்காலமா இங்கே இருந்திட்டிருக்கு, நாமெல்லாம் ஒண்ணுமே இல்லை. வந்தோம் போறோம்னு நெனைக்கிறப்ப ஒரு திருப்தி”என்றார் நாஞ்சில்நாடன்.
 சிவாலய யாத்திரை குறித்த இணையதளம் http://www.sivalayayathra.org/sivalayms.html

http://enagercoil.com/2009/02/11/%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-22%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a/

http://www.shaivam.org/siddhanta/sptmunychirai.htm

சிற்பப் படுகொலைகள்…

திருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு

குமரி உலா

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20310109&format=html

http://www.thinnai.com/?module=displaystory&story_id=203091813&format=html

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20309046&format=html

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20310167&format=html

முந்தைய கட்டுரைஏ.ஆர்.ரஹ்மான்,ரஸூல் பூக்குட்டி
அடுத்த கட்டுரைஇணையத்தில் தமிழில் எழுத…