நற்றுணை கலந்துரையாடல், கடிதம்

அன்புள்ள ஜெ

சென்ற வாரம் சனியன்று நற்றுணை அமைப்பின் சார்பில் தோழர் தியாகு எழுதிய சுவருக்குள் சித்திரங்கள் மற்றும் கம்பிக்குள் வெளிச்சங்கள் நூல்களை முன்வைத்து சிறை இலக்கியம் சார்ந்து ஒரு கூட்டம் நடந்தது. நம் தளத்திலும் அறிவிப்பு வந்திருந்தது. குழுமத்தில் ஒருமாதம் முன்பே அறிவிப்பு கொடுத்து விட்டார்கள். இவ்விரு நூல்களும் அச்சில் இல்லை என்பது பெருங்குறையாகவே இருக்கிறது. நான் காளியண்ணாவிடம் இருந்து சுவருக்குள் சித்திரங்கள் நூலை கடன் வாங்கி வாசித்தேன். கம்பிக்குள் வெளிச்சங்கள் நூலினை வாசிக்க வேண்டும். சுவருக்குள் சித்திரங்களை வாசித்த வரையில் அது மிக சிறந்த இலக்கிய பிரதிகளுள் ஒன்று. அபுனைவு வகைமை சார்ந்த இந்த நூலில் தியாகு தன் வாழ்க்கை தீவிரமான நேர்மையுடன் ஏராளமான நுண் தகவல்களை சேர்த்து சொல்லி செல்கிறார். எனவே ஒரே சமயம் அரசியல் – சமூகவியல் சார்ந்த கேள்விகளை எழுப்பி கொள்ளவும் புனைவெழுத்தாளர் கற்பனையில் கதைகளை விரித்து கொள்ளவும் இடம் தருகிறது. இத்தீவிரமே இவற்றிற்கு இலக்கிய தகுதியை வழங்குகிறது என்று நினைக்கிறேன்.

நூல்களை வாசித்த பின் கூடுகைக்கு செல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் சளி தொல்லைக்கு உட்பட்டு சென்ற வாரம் தான் சற்று தேறியிருந்தேன். படிப்படியாக குணமாகி வருகிறது. எனவே உடனடியாக ஏசி அறையில் நான்கு மணிநேரம் சென்று அமர்வது உடல் நலத்தை சீர்குலைக்கும் என்பதால் தவிர்த்து விட்டேன். அதற்கு மாறாக சுருதி டிவியில் நிகழ்வு வந்திருந்த அழைப்பாளர்களின் உரைகளை கேட்டேன். அவற்றை தொகுத்து கொள்ளவே இக்கடிதம்.

முதல் உரை கவிஞர் லிபி ஆரண்யா அவர்களுடையதாக அமைந்தது. பூனை போல மென்மையாக ஆரம்பித்தவர் புலி உறுமலாக அரசுக்கு கோரிக்கை விடுத்து தன் உரையை நிறைவு செய்தார். அவர் தான் இடதுசாரி இயக்கங்களில் பங்குபெற ஆரம்பித்த தொண்ணூறுகளின் பிற்பகுதியில் அதிகபட்சம் கல்யாண மண்டபம் என்பதாக நலிவுற்று விட்டிருந்த போராட்டங்களின் தீவிரத்தை சுட்டி காட்டி பேச ஆரம்பித்தார். தோழர் தியாகுவின் நூலில் நாம் பார்க்கும் காலக்கட்டம் முடிந்து போன ஒன்றாகவே தனக்கு படுவதாக சொல்கிறார். அதற்கு உதாரணமாக மணியன் பிள்ளை திருட்டை பற்றி சொன்னவற்றை எடுத்து காட்டி பேசினார். மணியன் பிள்ளை திருட்டு என்பதை ஒரு கலை என்கிறார். பிறர் அறியாது அவர்களின் பொருளை எடுத்து வருதலுக்கு பெயரே திருட்டு. அவ்வாறில்லாது கத்தியை காட்டி மிரட்டுவதெல்லாம் திருட்டில் சேர்த்தி இல்லை, அது கொள்ளை என்கிறார். இப்படி திருடுவதில் கூட ஓர் அடிப்படை நியாயம் இருந்த காலக்கட்டம் ஒன்றிருந்தது. தோழர் தியாகு அந்த காலக்கட்டத்தை சேர்ந்தவர். அரசியல் போராட்டங்கள் இலட்சியவாதத்தின் மேல் நின்று கனவு சமூகத்தின் உருவாக்கத்திற்காக நடத்தப்பட்ட காலம் அது. ஐம்பதாண்டுகளுக்கு பின்பு அந்நிலை முழுமையாக மாறிவிட்ட காலத்தில் அவற்றை நினைவுறுத்தும் இந்நூல் மிக முக்கியமானது என்றார்.

இரண்டாவதாக இந்நூல்களின் வழி அறியும் தியாகுவின் மனம் முழுக்க முழுக்க தர்க்கத்தால் இயங்குவதை நாம் காண்கிறோம். தர்க்கத்தில் இரண்டு வகை மாதிரிகள் உண்டு. ஒன்று தன் தரப்பை நிலை நிறுத்தவும் எதிர் தரப்பை மறுத்து ஒழிக்கவும் தர்க்கத்தை பயன்படுத்துவது. இதை நிறுவன தர்க்கம் எனலாம். மற்றொன்று தர்க்கத்தை கருவியாக கொண்டு புதிய விஷயங்களை அறிவதற்கான தொடர்ச்சியான முயற்சியில் ஈடுபடுதல். தியாகுவின் தர்க்கம் இரண்டாவது வகைமையை சார்ந்ததாக உள்ளது. அவர் தொடர்ச்சியாக தான் சார்ந்துள்ள நிறுவன தர்க்கத்துக்கு அப்பால் புதியவற்றை அறிய முயன்றபடியே இருக்கிறார். அதற்கு தர்க்கத்தை கருவியாக்கி கொள்கிறார். இந்நிலையில் தியாகுவின் நூலினை தான் மூன்றாக பிரித்து கொள்வதாக கூறினார் லிபி ஆரண்யா.

ஒன்று தியாகுவிற்கும் லெனிற்கும் இடையிலான நட்பு. இரண்டு இந்நூலில் வரும் பலவகைப்பட்ட மனிதர்களின் மாறுபட்ட வாழ்க்கை சித்திரங்கள். மூன்று நூலின் இறுதி பகுதியான மிசா சட்டம் குறித்தது. லிபி ஆரண்யா குறிப்பிடும் நூல் சுவருக்குள் சித்திரங்கள் என்பதை வாசித்தவர்கள் அறியலாம். இவ்வாறு மூன்று பகுதிகளாக பிரித்து கொண்ட பின் முதலிரு பகுதிகளில் வரும் வெவ்வேறு சம்பவங்களை குறிப்பிட்டு காட்டி அங்கெல்லாம் தியாகு நிறுவன தர்க்கத்துக்கு அப்பால் மனிதர்களை அறியும் நேர்மையான தீவிரத்தை கொண்டுள்ளார் என்பதை தொட்டு காட்டி பேசினார். இச்செயல்முறையை இந்நூல்களை இலக்கிய தகுதிக்குரியவையாக ஆக்குகின்றன என்று மொழிந்தார். மிசா சட்டம் குறித்து விவரிக்கும் நூல் பகுதிகளை சொல்லி சிட்டி பாபுவின் சிறை குறிப்புகளின் அடிப்படையில் இஸ்மாயில் கமிஷன் முன்வைத்த சீர்திருத்தங்கள் இன்று வரை கிடப்பில் போடப்பட்டிருப்பதையும் மிசாவால் பாதிக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின் தன் ஆட்சி காலத்திலாவது அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டு கொண்டார். அதாவது இலக்கிய மேடையில் இலக்கிய உரையாற்ற தொடங்கிய கவிஞர் அதனை அரசியல் மேடையாக்கி தோழராக கோரிக்கை விடுத்து இருக்கையில் அமர்ந்தார். இது அரசின் காதுகளுக்கு சென்று சேரும் என்று நம்பிக்கை வைப்போம்.

அடுத்து பேசிய கவின்மலர் அவர்கள் இவ்விரு நூல்களின் ஆவணப்படுத்தும் முக்கியத்துவத்தை மையப்படுத்தி தன் உரையை அமைத்து கொண்டார். சுதந்திரத்திற்கு முந்தைய பெண்களின் அரசியல் போராட்டங்கள் குறித்து அவர்களது குழு நாடகம் ஒன்று இயக்க திட்டமிட்ட போது காங்கிரஸ் மற்றும் திராவிட இயக்கங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதை ஒப்பிட்டால் ஏறக்குறைய இடதுசாரிகளில் தரப்பில் ஆவணப்படுத்தலே இல்லை என்னும் என்ற தனியனுபவத்தை கூறி அத்தகைய நிலைகளில் இது போன்றதொரு நூலின் முக்கியத்துவத்தை சுட்டி காட்டினார். கட்சியில் இருந்து சொல்லும் போது ஏ.ஜி.கஸ்தூரிரெங்கன் போன்ற கம்யூனிஸ்ட்டு தலைவர்கள் அடியோடு மறக்கப்பட்டிருப்பதையும் அக்கட்சியில் இருந்தும் சுவருக்குள் சித்திரங்கள் வழியாகவே தான் ஏ.ஜி.கே பற்றி அறிந்து கொண்டதை கூறினார். அதே போல் தன் தந்தை தீவிர திமுக கட்சி தொண்டராக இருந்தும் தஞ்சை பகுதியில் கீழ் வெண்மணிக்கு அருகிலேயே அவர்களது ஊர் பரங்கிப்பட்டி இருந்தாலும் கீழ் வெண்மணி படுகொலை செவி செய்தியாக மட்டுமே அவரை அடைந்திருந்ததை குறிப்பிட்டு கட்சிகளின் செயல்பாட்டு குறையையும் மக்களிடம் தகவல்களை கொண்டு சேர்க்காமை பற்றியும் குறிப்பிட்டார். இத்தகைய சமூக சூழ்நிலைகளில் தியாகுவின் நூல்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தாக தான் கருதுவதாக சொன்னார். அடுத்து முன்பு கீழ தஞ்சை பகுதியில் நிலவிய ஒருவகையான நல்லிணக்கம் மறைந்து இன்று மேலும் மேலும் சாதி பெருமிதங்களால் ஏற்படும்ம் சம்மூக இறுக்கத்தையும் தொட்டு காட்டினார். மேலும் இந்நூல் இத்தகைய ஆவணப்படுத்தலை வறட்சியான தகவல்களாக அல்லாது உரையாடல் வடிவத்தில் மிகுந்த மனித நேயத்துடன் கையாள்வதால் இலக்கிய தகுதியையும் பெறுகிறது என்றார்.

இருவரின் உரையையும் அடுத்து சாம்ராஜ் அவர்களின் உரையை கேட்டேன். தமிழில் எழுதப்பட்ட சிறை இலக்கியங்கள் குறித்து பொதுவான ஒரு கோட்டு சித்திரத்தை அளித்து, அதில் இடம்பெறும் தியாகுவின் நூல்களின் தனித்துவம் என்ன என்பதை வரையறுத்து விட்டு பேசுவதாக சாம்ராஜின் உரை தொடங்கியது. பொதுவாக சுதந்திரத்திற்கு முன்னர் கிடைக்கும் சிறை குறிப்புகள் தலைவர்கள் சிறையில் சந்தித்த பிற முக்கியமான தலைவர்களை குறித்தும் சுவாரசியாமான சம்பவங்கள் அடங்கியதாகவும் உள்ளன. தியாகுவின் நூலே சிறைக்குள் நடக்கும் போராட்டத்தையும் அரசியல் வழியில் அவர்கள் நடத்திய போராட்டத்தையும் பதிவு செய்கிறது. அதுவே இதன் தனித்துவம் என்றார்.

அதன் பின் தியாகுவின் மூலதனம் மொழிப்பெயர்ப்பின் கடின தன்மையை அவர்கள் எத்தகைய நெருக்கடியில் அதை செய்தனர் என்றும் கேரளத்தில் கட்சி செலவில் அதற்கு செய்து கொடுக்கப்பட்ட ஏற்பாடுகளையும் விவரித்து விளக்கினார். இதன் தியாகு அவர்களின் தீவிர தன்மையை மறைபிரதியாக தொட்டு காட்டினார். இத்தகைய முகம் வேர்க்கும் தீவிர தன்மைக்கு பின் தோழர் தியாகு அவர்களின் கூர்ந்த அவதானிப்பு திறனையும் பகடியையும் வெளிப்படுத்தும் அவருடனான சாமின் தனி வாழ்க்கை அனுபவங்களையும் நூல் பகுதிகளையும் எடுத்து காட்டி தனக்கேயுரிய நகைச்சுவை உணர்வுடன் விவரித்தார். சிரிப்பில் தாராசு தட்டு தடுமாறியதால் சுவருக்குள் சித்திரங்களில் வெளிப்படும் வெவ்வேறு மானுட தருணங்களை எடுத்து காட்டி அதன் இலக்கிய தன்மையை காட்டினார்.

அடுத்து தோழர் தியாகுவின் நூல்கள் மேற்சொன்ன காரணங்களால் தன் வாழ்க்கை வழிகாட்டியாக முப்பதாண்டு காலம் உடன் இருக்கின்றன என்பதை நெகிழ்வுடன் உரைத்தார். இறுதியாக சுவருக்குள் சித்திரங்கள் நூலின் இறுதி பகுதியில் பாலு என்கிற பாலகிருஷ்ணனின் தூக்கு மேடை பகுதிகளை வாசித்து அந்நூல் எப்படியொரு மிக சிறந்த இலக்கிய பதிவாக திகழ்கிறது என்று சொல்லி தோழருக்கு தன் வணக்கத்தை தெரிவித்து இருக்கையில் அமர்ந்தார்.

முடிவாக இசையின் உரையை கேட்டேன். பொதுவாக தனிமனித அழகியலில் தொடங்கி விரியும் கவிதைகளை கொண்ட கவிஞர்கள் மேடையில் ஊமையாகி விடுகிறார்கள். அவர்களில் ஒரு அணங்கு கூடி விடுகிறது என்பது என் எண்ணம். நல்ல காலம் இசை அத்தகைய இம்சை அரசன் புலிகேசியாக உருமாறவில்லை. முன்னடியாக கட்டுரை வரைந்து  கொண்டு வந்திருந்தார். கட்டுரையை இத்தனை சுவாரசியத்துடன் வாசிக்கவியலும் என்பது இசையின் உரையே சான்று.

தன் உரையை தோழரை அவரது நூல்களுக்கான திரைப்பட ஒப்பந்தம் போட சாம்ராஜுடன் சென்ற போது நடந்த ஒரு சம்பவத்தில் இருந்து தொடங்கினார். அதன் அச்சம்பவத்தை தம்பி விஷாலிடம் சொல்லி வியந்த போது, தம்பி சொன்ன அவர் தோழர் அவருக்கு அந்நியர் என்று எவருமில்லை என்ற சொல் மனதில் தைத்த கணத்தை சொல்லி ஆரம்பித்தார். அதன் பின் மார்க்ஸிய பின்னணி அல்லாது இந்நூலில் பயின்று வரும் மனித நேயமே தான் அணுக கூடியதாக இருக்கிறது என்று சொல்லி பேச தொடங்கினார். பொதுவாக பிறரது உரைகளில் வெளிப்பட்ட நெகிழ்வான தருணங்களை இசையும் தன் உரையில் தொட்டு காட்டினார். மேலதிகமாக மார்க்ஸியத்தின் அடிப்படையில் உள்ள வன்முறையை உண்டாக்கும் அந்த உத்வேகத்தை ஏன் கவித்துவம் என்று விளிக்கலாகாது என வினவி கவிக்குரிய வகையில் முடித்தார்.

அடுத்து தியாகு அவர்களுடனான உரையாடல் காண கிடைக்கிறது. இந்நூல் பதிப்பில் இல்லையாதலால் வாசித்த நண்பர்களே செறிவான கேள்விகளை கேட்டு சிறப்பாக நடத்தினர். அவற்றை சுருக்கி எழுத அவசியமில்லை என்றே நினைக்கிறேன். ஏனெனில் தியாகு அவர்களே கச்சிதமான பதில்களை அளித்தார். இறுதியாக ஏற்புரையில் தன் மகிழ்வையும் நன்றியையும் தெரிவித்து கொண்டு இந்நூல் கவனிக்கப்படுவது குறித்த இரண்டு அவதானிப்புகளை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் தொடங்கிய வரி அழகியல் தரப்பில் நின்றிருக்கும் வாசகர்களுக்கு மிக முக்கியமானது. உண்மை தான் அழகு. அது இந்நூலை ஒளிர செய்கிறது என்றார். பின்னர் நாமறியத மதில்களுக்கு பின்னால் உள்ள வாழ்க்கையை காட்டுவதால் சுவாரசியமாக இருக்கிறது. ஆனால் போராட்டங்களில் ஈடுபடுகையில் நாமும் எப்போது வேண்டுமானலும் சிறைக்கு செல்ல நேரிடலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்நூலினை வாசிப்பதன் மூலம் சிறைக்கு குறித்த அச்சம் நீங்கியது என்றால் அதுவே இதன் வெற்றி என்பேன் என தன் ஏற்புரை வழங்கி முடித்தார்.

இவ்விரு நூல்களில் சுவருக்குள் சித்திரங்கள் வாசித்துள்ளேன். கம்பிக்குள் வெளிச்சங்கள் நூலை வாசிக்க வேண்டும். இவையிரண்டும் பலவகையிலும் முக்கிய நூல்கள். வாசித்து விவாதிக்கப்பட வேண்டியவை. அவ்வகையில் அதற்கொரு தொடக்கம் அமைத்து கொடுத்த நற்றுணை அமைப்புக்கு நன்றி.

அன்புடன்

சக்திவேல்

முந்தைய கட்டுரைகோவையில்…
அடுத்த கட்டுரைஎழுகதிர்நிலம்- கடிதங்கள்