எழுகதிர்நிலம், கடிதங்கள்

அன்புள்ள ஆசிரியருக்கு ,

வணக்கம்.

தங்களின் பயணக்கட்டுரையான எழுகதிர் நிலம் வாசித்து வருகிறேன்.

அதில் நான் எடுத்துக்கொள்ள, வியக்க, அறிந்து கொள்ள பல புதையல்கள் இருந்தாலும், தங்களின் பயணக்கட்டுரைகளில் நான் பெரிதும் வியப்படைந்தது தங்களின் ஆற்றழுக்கத்துடன் கூடிய ஞாபக சக்தி.

இன்று எனக்கானதென மின்னல் வெட்டிய வரிகள்

“நம் எண்ணங்களின் ஒழுங்கு என்பது புறவுலகின் ஒழுங்கேதான். பழகிய புறவுலகம் பழகிய தடத்தை சிந்தனைக்கும் அளிக்கிறது. நதிநீருக்கு கரைகள் அளிக்கும் பாதை போல. எப்போதெல்லாம் நாம் சற்றுச் சலித்தவர்களாக, எதையும் குறிப்பிட்டு சிந்திக்காதவர்களாக, அசமஞ்சத்தனமாக இருக்கிறோமோ அப்போதுதான் நம் அகம் விடுதலை கொண்டிருக்கிறது.”

நேரில் சென்றதொத்த அனுபவத்தையும் பல நூல்களை வாசித்ததொரு நிறைவையும் அளிக்கிறது.

ஆசிரியருக்கு நன்றிகள்,

விக்னேஸ்.

அன்புள்ள ஜெ

அருணாசலப்பிரதேசக் கட்டுரைகளை வாசித்தேன். அவற்றிலுள்ள நுணுக்கமான செய்திகள்தான் என்னை கவர்கின்றன. அரசியல் கட்டுரைகளிலோ ஆய்வுக்கட்டுரைகளிலோ இந்த நுணுக்கம் இருப்பதில்லை. அவை ஏதோ ஒன்றுக்காக வாதிடுகின்றன. ஆகவே அவற்றின் அழகு குறைந்துவிடுகிறது. அவற்றில் இருந்து நாம் அடையும் சிந்தனைகளும் நிகழாமலாகிவிடுகின்றன. இக்கட்டுரைகளில் வரும் செய்திகள் நோக்கம் ஏதும் இல்லாதவை. ஆகவே இயல்பான ஒரு வாசிப்பை அளிக்கின்றன. நாமே நேரில் சென்று பார்த்ததுபோல உணரச்செய்கின்றன.

அருணாச்சலில் உங்கள் நண்பர் கிருஷ்ணன் பற்றிய நையாண்டிகள் சிறப்பு. மேலும் இருந்திருக்கலாம்

ஆ.ராஜேஷ்

***

அன்புள்ள ராஜேஷ்

அருணாச்சலில் கடைசிநாட்களில் கிருஷ்ணன் ஓர் ஓட்டலில் இருந்த தொன்மையான ரொட்டியை பார்த்தே நோயுற்றார். குளிர் வேறு. ஒரு மூட்டையாக அவர் கிடந்த காட்சியை நான் வேண்டுமென்றே எழுதவில்லை. கடைசிநாள் ஆனதனால்

ஜெ

முந்தைய கட்டுரைROPE-SNAKE
அடுத்த கட்டுரைசாந்தி