மருத்துவர் ஜீவா பசுமை விருதுகள்

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

மருத்துவர் வெ.ஜீவானந்தம் அவர்கள் தனது வாழ்க்கை முழுதும் சமூகம், சூழலியல், பொதுவுடைமைச்சித்தாந்தம், காந்தியம், மருத்துவம், படைப்பாக்கம் மற்றும் பொதுச்சேவைகள் சார்ந்த எண்ணற்ற அறப்பணிகளில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தி, அந்தந்தத் துறைகளில் பல்வேறு சாத்தியங்களை உண்டாக்கிக் காட்டியவர். அவர் உருவாக்கிய ‘கூட்டுறவு மருத்துவமனைகள்’ முன்னெடுப்பு இந்திய அளவில் முன்னுதாரணமானவை. நம் சமகாலத்தில் தோன்றிய முக்கியமானதொரு செயல்விசை மருத்துவர் ஜீவா. செயலூக்கியாக நிறைய இளையவர்களை அறம் நோக்கி வழிப்படுத்திய அவருடைய பெருவாழ்வு என்றுமே நம் வணக்கத்திற்குரியது.

மருத்துவர் ஜீவா அவர்கள் விட்டுச்சென்ற கனவுத்திட்டங்களை உரியவாறு செயல்படுத்துவதற்கு ஏதுவாக, நண்பர்களின் ஒருங்கிணைப்பில் ‘மருத்துவர் ஜீவா அறக்கட்டளை’ நிறுவப்பட்டது. இவ்வமைப்பின் செயல்நீட்சிகளில் ஒன்றாக, சமகாலத்தில் சமூகக் களமாற்றதிற்கும் சிந்தனைத் தெளிவிற்கும் காரணமாக அமையும் முன்னோடி ஆளுமை மனிதர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ‘பசுமை விருதுகள்’ அளித்து கெளரவிக்கப்படுகிறது. அதன்படி, கடந்தமுறை பத்திரிகையாளர் சமஸ், இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, இளம் சூழலியலாளர் விஷ்ணுப்ரியா ஆகியோருக்கு பசுமை விருதுகள் வழங்கப்பட்டன.

2023ம் ஆண்டிற்கான பசுமை விருதுகள், நாட்டாரியல் ஆய்வாளர் அ.கா.பெருமாள் மற்றும் திருநங்கைகள் செயற்பாட்டாளர் சுதா ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது. இலக்கிய ஆய்வாளரகத் தனது வாழ்வைத் துவங்கிய அ.கா.பெருமாள் அவர்கள், இன்று தமிழ்ச்சூழலின் நாட்டார்வழக்காற்றியல், கல்வெட்டு, தொல்லியல், சிற்பவியல் துறைகளில் மிகச்சிறந்த அறிஞராக கருதப்படுகிறார். நாட்டாரியலை கருத்தில் கொண்டு வரலாற்றாய்வை மேற்கொள்வது இவரது ஆய்வியல் வழிமுறையாக உள்ளது. எண்ணற்ற நாட்டார் நிகழ்த்துக்கலைகளையும், தொன்மங்களையும் ஆவணப்படுத்தியுள்ளார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், கேரளப் பல்கலைக்கழகம், புதுதில்லி பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல முக்கியக் கல்வி அமைப்புகளில் இவரது ஆய்வுநூல்கள் பாடத்திட்டமாக உள்ளன.

திருநங்கைகள் நலனுக்காகவும் உரிமைக்காகவும் ‘தோழி’ எனும் அமைப்பை 1990களில் நண்பர்களுடன் இணைந்து தோற்றுவித்து, கடந்த முப்பது ஆண்டுகளாகச் செயலாற்றி வருபவர் திருநங்கை சுதா அவர்கள். இவர் இந்தியா முழுக்கப் பயணித்து திருநங்கைகளின் வாழ்வுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். திருநங்கையர்களின் கல்வி, வேலை வாய்ப்பு, சமூக மதிப்பளிப்பு, வாழ்வியல் சவால்கள் உள்ளிட்ட நிறைய களங்களில் பலவித தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து பணிசெய்கிறார். திருநங்கையர்களை ஒருங்கிணைத்து கலைநிகழ்வுகள் நிகழ்த்தி அவர்களின் கலையுள்ளத்தை புறவுலகுக்கு வெளிக்காட்டும் பெருஞ்செயலையும் ஒருங்கிணைக்கிறார். இன்றியமையாத சமூகச் செயல்பாடாக திருநங்கைகளின் கனவுகளை பொதுவெளியில் சாத்தியமாக்கும் தீராத அகத்துணிவுடன் களமியங்குகிறார் சுதா.

இவ்விரு ஆளுமைகளுக்கும் மருத்துவர் ஜீவா பசுமை விருதுகள் அளித்து அவர்களை வணங்கிப் பாராட்டும் நல்லசைவென இவ்வாய்ப்பு அமைகிறது. விருதளிப்பு நிகழ்வு வருகிற 5ம் தேதி (05.03.23) ஞாயிறு காலை 10 மணிக்கு, ஈரோடு வேளாண் கல்லூரி கூட்டரங்கில் நிகழவுள்ளது. எழுத்தாளர்கள் சா.தமிழ்செல்வன், பவா செல்லதுரை மற்றும் அக்னி தங்கவேலு, அன்புராஜ், பாலு ஆகியோரின் பூரண முன்னிருப்பில் இந்நினைவேந்தல் நிகழ்கிறது.

மேலும் இந்நிகழ்வில், காந்தியக் கட்டிடக்கலைஞர் லாரி பேக்கரின் மனைவி எழுதி, மருத்துவர் ஜீவா தமிழில் மொழிபெயர்த்த ‘பறவைக்குக் கூடுண்டு : அனைவருக்கும் வீடு’ நூலானது ‘புத்தக தானம்’ முன்னெடுப்பு மூலம் விலையில்லா பிரதிகளாக ஆயிரம் வாசகர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

ஆகவே, தோழமைகள் அனைவரையும் இந்நிகழ்வில் பங்கேற்க அன்புகூர்ந்து அழைக்கிறோம். களச்செயல்பாட்டு மனிதர்களைக் கண்டடைந்து மனங்குளிரப் பாராட்டும் மருத்துவர் ஜீவா அவர்களின் மாறாப்பண்பின் நீட்சியாக இந்நிகழ்வும் அருட்தன்மை கொள்க! எளிய மக்களின் வாழ்வுமீள்கைக்கான எத்தனையோ செயலசைவுகளின் முதற்துவக்கமாக அமைந்திட்ட பெருமனிதர் மருத்துவர் ஜீவா அவர்களின் அரூப இருப்பை வணங்கி, அவரது நினைவை மனதிலேந்துகிறோம்.

நன்றியுடன்,

மருத்துவர் ஜீவா அறக்கட்டளை

ஈரோடு

முந்தைய கட்டுரைஎழுத்தாளன், புனிதன், மனிதன்
அடுத்த கட்டுரைபயணம்,பெண்கள் -கடிதம்