இசைத்தமிழ் ஆவணம்

மு.இளங்கோவன் தமிழ் விக்கி

பெரும் மதிப்பிற்கும் பேரன்பிற்கும் உரிய ஜெ அவர்களுக்கு,

பணிவார்ந்த வணக்கம்.

தங்களின் ஊக்கமொழிகளால் உரம்பெற்று உருவான நூலாம் இசைத்தமிழ்க் கலைஞர்கள் – நோக்கீட்டு நூல் அச்சுக்கூடத்திலிருந்து இப்பொழுது என் கையினுக்குக் கிடைத்தது. முதல் வேலையாகத் தங்களுக்குப் பொதியாக்கி அனுப்புவதில் மகிழ்கின்றேன். இசைத்தமிழ்த் துறை சார்ந்தவர்களின் சற்றொப்ப 5764 பேர்களின் பட்டியலைக் கடந்த ஓராண்டாகத் திரட்டி நூலாக்கினேன். முக்கியமான இசையாளுமைகளின் பெயர்கள் விடுபாடுகள் இருக்கும் என்று தெரிந்தும் முதல் முயற்சியாக இதனை வெளியிடுகின்றேன். விடுபட்டவர்களின் பெயர்களைத் தெரிந்தோர் தெரிவித்தால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் இணைப்பேன்.

இந்த நூலின் வழியாகக் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக உலக அளவில் இசைத்தமிழுக்குத் தொண்டாற்றியவர்களின் பட்டியலைத் திரட்டித் தமிழ்ச் சமூகத்துக்குக் காட்ட முயன்றேன். சென்னை மியூசிக் அகாதெமி, கலாசேத்திரா, தமிழ்நாடு இயலிசை நாடக மன்றம், அண்ணாமலை மன்றம், தந்தை பெரியார் தமிழிசை மன்றம், பொங்கு தமிழ் அறக்கட்டளை, கலைக்காவிரி(திருச்சி), அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை, இலங்கை விபுலாநந்தர் அழகியல் கற்கை நிறுவகம் சார்ந்து செய்திகளைத் திரட்டினேன். பல்வேறு நூல்கள், இணையதளங்களைப் பயன்கொண்டுள்ளேன்.

அன்புகூர்ந்து நேரம் ஒதுக்கி, இந்த நூலைக் கண்ணுற்று, என் முயற்சியைத் தங்கள் வாசகர்களுக்கும், தமிழ் இலக்கியத்துறையினர்க்கும் அறிமுகம் செய்து என்னை ஊக்கப்படுத்துமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.

தங்கள் அன்பிற்குரிய

முனைவர் மு. இளங்கோவன்,

37, 38 கிருட்டினாநகர் முதன்மைச் சாலை,

சூரியகாந்தி நகர், முத்தியால்பேட்டை,

புதுச்சேரி – 605 003

9442029053

[email protected]

அன்புள்ள இளங்கோவன்

நலம்தானே?

நூல் கண்டேன். மிகமிக முக்கியமான ஒரு தொகுப்பு. தமிழிசை வரலாற்று ஆவணப்படுத்துதலில் இந்நூலுக்கு முதன்மையான இடம் உண்டு. ஒவ்வொரு பெயராக எடுத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். தெரிந்த சில பெயர்கள், தெரியாத ஏராளமான பெயர்கள். அரியபணி. ஓர் அகராதி அளவுக்கே முதன்மையானது.

ஜெ

முந்தைய கட்டுரைம.ந.ராமசாமியும் மாதரார் கற்பும்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஒரு தெலுங்கு கவிதை