Stories of The True பற்றி Hindustan Times-ல் விமர்சனம் எழுதிய சௌதாமணி ஜெய்ன் அக்கதைகள் கொடுக்கும் உணர்வுகளினால் இடையிடையே ஆசுவாசப்படுத்திக்கொண்டுதான் கதைகளை வாசிக்க முடிந்தது என்று சொல்லியிருந்தார். ப்ரியம்வதாவிற்கு இந்த மொழியாக்கத்திற்காக ,அ. முத்துலிங்கம் விருது கொடுக்கப்பட்ட விழாவில் பேசிய கீதா ராமசாமி அவர்கள், ஒரு பதிப்பாளராக பத்து புத்தகங்களை படிக்கும் அவர் Stories of The True கதைகளை ஒரே வீச்சில் அனைத்தையும் வாசிக்கமுடியவில்லை, கதைகள் கொடுத்த பாதிப்பால் ஒவ்வொரு கதை வாசிப்பின் நடுவிலும் இரண்டு நாட்கள் எடுத்துக்கொண்டதாக குறிப்பிட்டார்.
புதியதாக வாசித்த அவர்களுக்கு அப்படியிருந்ததென்றால், பலமுறை தமிழில் வாசித்த எனக்கும் அதே அனுபவம்தான். Stories of The True , ஆங்கிலத்தில் வாசிக்கும்பொழுது பாட்டில் நிறைய இருக்கும் தேனை நாளொன்றுக்கு ஒரு ஸ்பூன் எடுத்துக்கொள்வது போல, ஒரு நாளைக்கு ஒரு கதையென அனுபவித்து வாசித்தேன்.. ப்ரியம்வதா அவர்களின் தேர்ந்த மொழிபெயர்ப்பால் ஒவ்வொரு கதையையும் ஒரு புதுவாசகனைப்போல அக நெகிழ்வுடன் வாசித்தேன்.பாத்திரங்களின் உரையாடலின் தன்மை, தீவிரம், சரியான வார்த்தைகளின் தேர்ச்சி, விவரணைகளின் சீர்மை என ஒவ்வொன்றையும் நேர்த்தியாக மூலத்திலிருந்து மொழியாக்க நூலிற்கு கொண்டு வந்திருக்கிறார்.மொழியாக்கம் செய்யப்பட்ட நூலை வாசிக்கிறேன் என்ற நெருடலே இல்லாமல் வாசித்தேன்.
புது வாசகன், பொது வாசகன், இலக்கிய வாசகன் என யாராயிருப்பினும் அறம் வரிசையில் ஒவ்வொரு கதையின் ஆரம்ப காட்சிகளும் நிகழ்வுகளும் உரையாடல்களும் வாசகனை அப்படியே உள்ளிழுத்துக்கொள்ளும். அறம் (Aram – The song of Righteousness) கதையில், கதைசொல்லி தனது காலணிகளைக் கழற்றிவிட, சாமிநாதன் நாயிடம் இருந்து அவைகளைக் காப்பாற்ற கையில் எடுத்துக்கொள்வது. சோற்றுக்கணக்கில் (The Meal Tally) அந்த சாப்பாட்டுக்கடை என எச்சில் ஊறவைக்கும் அறிமுகம். அம்மா மரணப்படுக்கையில் என எடுத்தவுடன் துயரத்துள் தள்ளும் நூறு நாற்காலிகள் . (A Hundred Armchairs). கதையின் தொடக்கம். ‘நீலம் நீலம்னா சொல்றே’ என பாலசுப்ரமணியன் உரையாடலில் தொடங்கும் மயில் கழுத்து (Peacock Blue). அசந்து உறங்குபவனை எழுப்பும் தொலைபேசி ஒலிக்கு கதைசொல்லி அடையும் எரிச்சிலை வாசகனுக்கு கடத்தும் யானை டாக்டர் (Elephant Doctor). ப்ரியம்வதாவின் மொழியாக்கத்தில் இவையாவும் சிறிதும் பிசிறில்லாமல் , அப்படியே வந்திருந்தன
இது தனது முதல் மொழியாக்கம் அல்ல என நினைக்குமளவு ப்ரியம்வதா உரையாடலில் இருக்கும் உணர்வுகளை தரம் குறையாமல் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு கடத்தியுள்ளார். மயில் கழுத்து வாசிக்க வாசிக்க பாலசுப்ரமணியன் யார், ராமன் யார் என அந்த உரையாடலின் வழி தெரிந்துவிடும். பாலசுப்ரமண்யன் ஒரு மாதிரி மென்மை என்றால், ராமன் அதைவிட மிகு மென்மை. ஆங்கில The Peacock Blue-விலும் இருவரின் மென்மையையும் அருகிலென உணர்ந்தேன். யானை டாக்டரில் கதைசொல்லி முதல் சந்திப்பில் யானை டாக்டரை மரியாதை நிமித்தமுடன் விசாரிக்கவில்லை என்ற சுயவருத்தத்தில் தன்னைத்தானே ‘சே.’ என்று நாக்கை கடிக்க, உடன் பயணிக்கும் மாரிமுத்து ‘என்ன சார்’ என்பார். அப்புறம் கதைசொல்லியின் மொட்டை ச் சமாளிப்பும் அக உணர்வுகளை வெளிப்படுத்தும் உரையாடலும் தடம் புரளாமல் வந்ததுபோலவே, தத்துவ விசாரங்கள் கலந்த உரையாடலும் மிகச்சரியாக மூலநூலின் சாரம் மாறாமல் அப்படியே வந்துள்ளன
யானை டாக்டரில் கதை சொல்லிக்கு புழுவை எப்படிப் பார்க்கவேண்டும் எனச் சொல்லிக்கொடுப்பது, One World கேரி டேவிஸ் தனிமையில் எப்படி இருப்பதென கதைசொல்லிக்கு பயிற்றுவிப்பது என சில உதாரணங்கள். யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தியின் உருவமும், கோட்டி (Nutcase) பூமேடை ராமையாவின் உருவமும் தமிழில் வாசிக்கும்பொழுது என் அகத்தில் விழுந்த அழியா சித்திரங்கள். மொழியாக்கத்தை வாசித்தபிறகு அந்தச் சித்திரங்கள் மேலும் அழுத்தமாக.
Stories of The True-லிருந்து, கதை சொல்லியின் பார்வையில் Elephant Doctor – An oval face with no moustache. Thick tufts of grey hair shutting a forhead that extended into a bald pate. A becoming nose. The eyes of an enthusiastic young boy. Hair sticking out of the ears. Deep lines on either side of his small mouth adding a real intensity in his looks. But his smile, adorned by perfect teeth, affectionate.
மூல மொழியில் உள்ள பண்பாட்டு , உறவு, உணவு, வழிபாட்டு சொற்களை எப்படி மொழிபெயர்ப்பது; அல்லது அப்படியே விட்டுவிடுவதா என மொழிபெயர்ப்பாளர்கள் சந்திக்கும் சிக்கல் ஒன்று உண்டு. மூலமொழியின் சொல்லை அப்படியே உபயோகித்தால் இடாலிக்ஸில் போடவேண்டும். பக்கங்களின் கீழே அல்லது புத்தகத்தின் கடைசியில் குறிப்புகள் போடவேண்டும். இது எதுவும் இல்லாமல் ப்ரியம்வதா கதையின் நிகழ்தல் மாறாத வண்ணம் பாத்திரத்தின் உணர்வுகளை பண்பாட்டை அப்படியே எடுத்துச் செல்கிறார். அறம் கதையில் சாமி நாதன் எழுத்தாளரை அண்ணா என்று அழைப்பது, Brother என்று மொழியாக்கம் செய்திருந்தால், உலகமயமாக்கப்பட்ட இன்றைய சூழலில் வாசிக்கும் வாசகன், கொஞ்சம் குழம்பிவிடுவான். வயதில் மூத்தவர்களை தமிழ் மக்கள் அண்ணா எனக் கூப்பிடுவது அவன் அறிந்த விஷயமாகவே இருக்கும். இல்லையெனினும், அவனுக்குத் தேடிப் புரிந்துகொள்ள தொழில் நுட்பத்தின் வளர்ச்சி இருக்கவே இருக்கிறது.
உரையாடலின்போது ராஜன் சோமசுந்தரமும் இதையே குறிப்பிட்டுச் சொன்னார். ‘யானை டாக்டரில் பார்த்தீர்களா, Sir என்பதற்கு பதிலாக ‘Saar’ என்று பிராந்திய மக்கள் அழைப்பதுபோல உரையாடலை அமைத்திருக்கிறார்’ என்றார். எந்த இடத்தில் ஆங்கிலம் என்பதிலும் கவனமாக உள்ளார். வணங்கான் கதைசொல்லி மகன் என்பதால், ‘Father’ என்றே குறிப்பிடுகிறார். இந்தக் கதையில் அப்பா, அப்பா என்று திரும்பத் திரும்ப வந்திருந்தால் , வெகு உறுத்தலாக இருந்திருக்கும். கல்லில் இடித்துக்கொள்ளும்பொழுதும், எறும்பு கடிக்கும்பொழுதும், வலியில் முனுகும்பொழுதும் அந்தந்த பிராந்தியத்திற்கான சொற்றடர்களை அப்படியே உபயோகித்துள்ளார். ‘மத்துறு தயிர் (The Churning Curd) பேராசிரியரை குமாரு என்று மண்ணின் மணத்துடன் அழைக்க வைத்து கதையின் உயிர் துடிப்பை வேற்றுமொழியானுக்கு எடுத்துச் செல்வதில் ப்ரியம்வதா வெற்றி பெறுகிறார். கம்பராமாயணச் செய்யுளை அழகாக மொழியாக்கம் செய்து, பேராசிரியரின் மனவலியை , ராஜம் அண்ணாச்சியின் மனவலியை வாசகனை உணரவைக்கிறார்.
இந்த மொழியாக்க நூலை அமெரிக்க நூலகங்களுக்கு , குறிப்பாக நடுநிலைப் பள்ளிகள் , ஆரம்பப் பள்ளிகள் நூலகங்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கச் சென்றால் கேட்கப்படும் கேள்வி குழந்தைகளுக்குப் பொருத்தமானதா என்பது. இல்லை என்பதே எனது பதில். செக்ஸ் விஷயமோ அடிதடியோ இல்லை. அப்புறம் என்ன? அறம், யானை டாக்டர் கதைகளைத் தவிர மற்ற கதைகளை, புரிந்துகொள்ள சமுதாய , பண்பாட்டுப் பின்னனி தேவை என்பதே சிக்கல். ஆனால், நடு நிலைப் பள்ளியில் இருக்கும் குழந்தைகள் உள்ள தமிழ்ப் பெற்றோர்கள் அவர்களுடன் சேர்ந்து வாசிக்கலாம். விளக்கங்கள் அளிக்கலாம். கோமல் சாமிநாதனையும், எம்.வி. வெங்கட்ராமனையும் , டாக்டர் கிருஷ்ணமூர்த்தியையும், பேராசிரியர் யேசுதாசனையும் அறிமுகம் செய்ய இணைந்து வாசிப்பதைவிட வேறு இலகுவான வழியில்லை. மேல் நிலைப்பள்ளி மாணவர்களும் அவர்களுக்கு மேல் உள்ளவர்களும் படிப்பதில் எந்த தடையும் இல்லை.
அந்த நூலகங்கள் கேட்டால் சரியான விளக்கங்கள் கொடுக்கலாம். நமது பரிந்துரையையும் தாண்டி நூலகர் வாசித்துவிட்டுத்தான் சொல்லுவார் என்பதை டாலஸ் மூர்த்தியின் முயற்சியின் வழியாகத் தெரிந்துகொண்டோம். ஏற்கனவே இது irving Library-யில் இருக்கிறது என்பதை அடுத்து முயற்சிப்பவர்கள் ஒரு உதாரணமாக சொல்லலாம். Stories of The True வரவிருக்கும் மொழியாக்கங்களுக்கு ஒரு சிறந்த உதாரணம். ப்ரியம்வதா, இனிமேல் வர/வளர இருக்கும் மொழியாக்க வல்லுனர்களுக்கு A Goto Person. –
ஆஸ்டின் சௌந்தர்