ஆசிரியருக்கு,
சென்ற ஆண்டு நாமக்கல்லில் விடுதலை என்றால் என்ன ? தலைப்பில் தாங்கள் ஆற்றிய உரையை நேற்றிரவு சுருதி டிவி பொதுபார்வைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். இரவு உறங்குவதற்கு முன் முதற்பாதி உரையை கேட்டேன். இன்று காலை எழுந்து இப்பொழுது இரண்டாம் பாதி உரையை கேட்டேன். என் காலைகள் ஒன்பது மணிக்கு விடிந்து பதினொரு மணிக்கு தொடங்குவதால் உங்கள் கணக்கிற்கு நண்பகல் என்று வைத்து கொள்ளலாம்.
முதல் அமர்வில் விடுதலையை குறித்து நாம் வைத்து கொள்ள மயக்கங்களை குறிப்பிட்டு பேசினீர்கள். அவற்றை இப்படி சுருக்கலாம். ஒன்று, விடுதலை என்பது வீட்டை – உலகியலை முற்றாக – துறந்து சென்று எங்கோ உள்ள ஒன்றை அடைவது. இரண்டு, விடுதலை அடைந்தவர் ஒரு காலம் இடத்திற்கு கட்டுபடாத ஒரு அதிமானுடர். இவ்விரு வகை மயக்கங்களையும் சுமந்தபடி நம் உலகியல் ஆசைகளுக்காக அவற்றை நாடி செல்லுதல். இது அல்ல விடுதலை.
மேற்கண்ட சுருக்கத்தை ஆழ மனதில் பதியவைக்க புதுமைப்பித்தனின் சித்தி கதையில் தொடங்கி தி.ஜா, பிச்சமூர்த்தியின் ஞானப்பால், நித்யா, நடராஜ குரு என விரிவான சுவரசியமான உரையை வழங்கினீர்கள். இரண்டாவது பகுதி தொடங்குவதற்கு முன் விடுதலை என்பது ஒவ்வொருவருக்கும் தனியாகவே அமைய முடியும் என்று சொல்லி நிறைவு செய்தீர்கள்.
இரண்டாவது பகுதியின் தொடக்கம் முறையான தத்துவ கல்வி இன்மையின் குழப்பங்களை சுட்டிக்காட்டி, முறையான தத்துவ கல்வி எவ்வாறு அமைந்திருக்கும் என்பதை கூறுவதுடன் தொடங்கியது.
முறையான தத்துவ கல்வி வரலாற்று பார்வையை தன்னகத்தே கொண்டிருக்கும். இன்று பேசப்படும் ஒரு கருத்துரு இதுவரையிலான மானுட வரலாற்றில் எவ்வண்ணம் பரிணாம வளர்ச்சி அடைந்து வந்துள்ளது என்பதை கருத்தில் கொண்டிருக்கும். அடுத்து contextual – அதாவது தன் பேசுதளம் சார்ந்த தெளிவை கொண்டிருக்கும். தன்னுடைய தரப்பு என்ன என்பது தொடங்கி அது பிற தரப்புகளுடன் கொண்டுள்ள உறவை முழுமையாக கணக்கெடுத்து கொண்டே பேசும். இந்த இடத்தில் கலை சொற்களை கையாள்வதின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தீர்கள். மேற்கண்ட இரு வழிகளின் வாயிலாக அறியும் போது தான் ஒரு கலைச்சொல் குறித்து முழுமையான பொருளை ஒருவன் அடைய முடியும். அதே போல் சரியான ஒரு தத்துவ மாணவன் தன் அனுபவ தளத்தில் இருந்து தொடர்படாத கலைச்சொல்லை ஒருபோதும் அவசியமின்றி கொட்டி இறைக்க மாட்டான்.
இப்படியான முன்விளக்கத்துடன் விடுதலை – முக்தி அல்லது மோட்சம் – சொல் இந்து மதத்தில் எப்படி விளக்கப்படுகிறது என்று சொல்ல தொடங்கினீர்கள். அதற்கு முன் இந்து மதம் என ஒன்றில்லை என சொல்லும் போலி அறிவுஜீவிகளின் வாதத்தை சங்கரரின் ஷண்மத ஸங்கரகத்தை சொல்லி மறுத்துவிட்டு இந்து மதம் என்பது ஆறு மதங்கள், ஆறு தரிசனங்கள்\தத்துவங்கள், பிரஸ்தான த்ரயம்(மூன்று தத்துவங்கள்) ஆகியவற்றை கொண்டது. சாக்தம் (சக்தியை மைய வழிபாட்டு தெய்வமாக கொண்டது), சைவம் (சிவனை), வைணவம் (விஷ்ணுவை), காணபத்யம் (கணபதியை), கௌமாரம் (குமரனை\முருகனை), சௌரம் (சூரியனை) என்பன ஆறு மதங்கள் ஆகும். சாங்கியம், யோகம், வைசேஷிகம், நியாயம், பூர்வ மீமாம்சம், உத்தர மீமாம்சம் என்பன் ஆறு தரிசனங்கள் ஆகும். பிரஸ்தான த்ரயம் என்பவை உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும் கீதை.
இவற்றில் ஒருவன் விடுதலை போன்ற ஒரு கருத்துருவூ பற்றி பேச தொடங்கினான் என்றால் அவனிடம் நாம் கேட்க வேண்டிய கேள்விகள் மூன்று. அது எந்த மரபு சொல்லும் விடுதலை ? அவனுடைய ஆசிரியர் யார்? அதை விளக்க அவன் பயன்படுத்தும் தர்க்க அமைப்பு எந்நூலின் அடிப்படையில் அமைந்தது ? இம்மூன்று கேள்விகளும் எந்தவொரு தத்துவ விவாதத்திலும் அடிப்படை தேவைகள். ஒரு தத்துவ உரையிலும் இவையில்லாது செயல்படுகையில் வெவ்வேறு காலக்கட்டத்தின் பொருள் கோள்களை தன்னிச்சையாக மனம்போன இணைத்து முரண்பட்ட குழப்பமூட்டும் சித்திரத்தை அடையவே வழி வகுக்கும்.
இதன் பின்னணியில் ஆறு தரிசனங்கள் சொல்லும் நான்கு வகை விடுதலையை குறித்து சுருக்கமான விளக்கத்தை அளித்தீர்கள். சாங்கியம் பேத புத்தியை களைதலை விடுதலையாக முன்வைக்கிறது. அது முன்வைக்கும் பிரபஞ்ச தரிசனத்தை பார்த்தால் தான் இந்த பேத புத்தி களைதல் என்பது என்னவென்று பொருள்படும். ஆதியில் மூல பிரக்ருதி இருந்தது. அதனுள் சத்வ, ரஜோ, தமோ ஆகிய முக்குணங்களும் சமநிலையில் இருந்தன. ஏதோ ஒரு மாயக்கணத்தில் அந்த சமநிலை மாறுபட்டது. முக்குணங்களும் ஒன்றுடனொன்று இணைந்து மீண்டும் அச்சமநிலைக்கு வர முயல்கின்றன. அதன் விளைவாக இன்று நாம் காணும் இந்த பரு பிரபஞ்சம் மூல பிரக்ருதி பிரிந்து பிரிந்து உருவான பிரக்ருதிகளால் ஆனது. இது என்றோ ஒருநாள் மீண்டும் மூல பிரக்ருதியாக மாறும். இப்படி முக்குணங்கள் உள்ளன என்றால் அதை பார்ப்பவன் யார் ? அவனே புருஷன். புருஷனின் முன் பிரக்ருதி தன்னை நிகழ்த்தி கொள்கிறது. மூல பிரக்ருதி பரம புருஷனின் முன் இருக்கிறது. இப்படி விரிந்து பரவும் புருஷனை யோகத்தின் மூலம் பரம புருஷ நிலைக்கு செல்ல இயலும். அதாவது காவிரியை தலை காவிரிக்கு கொண்டு செல்வது போல. அந்நிலையில் பலவாக தெரியும் பிரக்ருதி தன் மூலத்தில் ஒன்றாக இருப்பதை உணர்வான். அதுவே சாங்கியம் சொல்லும் பேத புத்தி களைதல். ஒரு துளி தன்னை கடலில் ஒரு துளியாக, கடலாக உணரும் நிலை. எனவே பதஞ்சலியின் யோக சூத்திரம், யோக சித்த விருத்தி நிரோதஹ என தொடங்குகிறது.
வைசேஷிகம் சொல்லும் விடுதலை என்பது ஒன்றை வகுத்து கொள்ள முடியாமையில் இருந்து விடுபடுதலை குறிக்கிறது. துயரம் என்பதே ஒன்றின் காரணத்தை அறிய முடியாமையில் இருந்து தொடங்குவது. ஒன்றை அறிந்து வகுத்த அக்கணம் அத்துயரத்தை கடந்து விடுகிறோம் என்கிறது. வைசேஷிகம் சொல்லும் பிரபஞ்ச தரிசனம், ஒவ்வொன்றிற்கும் ஒரு தன்மாத்திரை குணம் கொள்ளாது. அக்குணத்தை உருவாக்குவது அப்பொருளின் மீச்சிறு அலகு. அதை அணு என குறிக்கிறது. எனவே வைசேஷிகம் அணுக்கொள்கை என்றழைக்கப்படுகிறது. தீயை உருவாக்குவது தீ தன்மை என்றவாறு மிக விரிவான தத்துவ கட்டமைப்பை கொண்டது. ஒவ்வொன்றின் குணத்தையும் அறிந்து வகுப்பதன் ஊடாக அதன் மூலமாக வரும் துயரத்தை கடக்கிறோம். அதுவே வைசேஷிகம் சொல்லும் விடுதலை. know it, define it, cause it – that’s all.
பூர்வ மீமாம்சம் வேள்வியை மையமாக கொண்டது. வரலாற்று நோக்கில் பூர்வ மீமாம்சத்தில் வேள்விக்கு கட்டுப்படாத எந்த தெய்வமும் கிடையாது. இந்திரன், யமன், வருணன், குபேரன், சூரியன் என தேவர்கள் அனைவரும் இயல்பில் அசுரர்களே. வேள்வி செய்து அவியளித்து அவர்களை தேவர்கள் ஆக்கி வைத்துள்ளோம். இங்கு ஆற்றப்படும் செயல்களின் உச்ச பயனை அவர்களுக்கு அவியளித்து அதற்கு மாற்றாக அங்கே மறுமையில் அப்பயனை சேமித்து வைத்தல். இங்கே இப்படி சொல்லும் போது பூர்வ மீமாம்சம் ஒரு மாற்று குறைந்தது போல உங்களுக்கு தோன்றும். ஆனால் பூர்வ மீமாம்சம் தன்னளவில் மிகப்பெரும் அறிவு துறை. அந்த சந்தஸ் சாத்திரம் பெரும் பங்களிப்பாகும் என்று குறிப்பிட்டீர்கள். அதே போல கேரள கடவலூரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அதிராத்ர வேள்வியை குறிப்பிட்டு 64 கலைகளின் உச்சமும் நிகழ்ந்த பின்னரே நிகழ்த்தப்படும். உலகியலில் முழுமை நிகழ்ந்து பின்னர் அதனை அவியளித்தல். பூர்வ மீமாம்சம் சொல்லும் விடுதலையை இவ்வண்ணம் அறிமுகம் செய்தீர்கள்.
உத்தர மீமாம்சம் அல்லது வேதாந்தம். கடந்த 2300 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் உறுதியாக நிற்கும் தத்துவ தரப்புகளில் ஒன்று. வேதாந்தத்தின் தொடக்கம் ரிக் வேத இறுதி காண்டத்தில் அமைந்துள்ள சிருஷ்டி கீதமே தொடக்கமாகும். மாக்ஸ் முல்லர், ஜாக்கோபி போன்ற முக்கியமான இந்தியவியல் அறிஞர்கள் கடந்த ஈராயிரம் ஆண்டுகளில் இந்தியாவில் தோன்றிய முதன்மையான கவிதையாக கருதுகிறார்கள். விஷ்ணுபுரத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட அப்பாடலின் இறுதி வரிகளை நினைவு கூர்ந்து சொன்னீர்கள். அதன் பின் வேதாந்தம் இங்கனைத்திற்கும் மூலமாய் உள்ளதை ‘அது’ ‘தத்’ என்கிறது. பெயர் வசதிக்காக பிரம்மம் என அழைக்கிறது. அதை உணர இவையனைத்தையும் விலக்கி விலக்கி சென்று தொடுதல் என்று சொல்லி ஒன்றொன்றாய் தொட்டெண்ணி ஒடுங்கிடும் பொருள் நின்றிடும் பரம் என்ற நாரயண குருவின் வரிகளை குறிப்பிட்டீர்கள். வேதாந்தம் சொல்லும் விடுதலை என்பது இதுவே.
இவை நான்கும் நான்கு வெவ்வேறு வகையான விடுதலைகளை முன்வைப்பவை. அவரவர் இயல்புக்குரியதை அவரவரே தற்கண்டடைதல் வேண்டும். உங்கள் இயல்பு தொட்டுதொட்டு விரிவதாக இருந்தால் யோகம் உங்களுக்கு ஒருங்கிணைவை வழங்கும். ஒன்றை வகுத்து அறியா முடியாமையின் தத்தளிப்பு தான் உங்கள் பிரச்சினை என்றால் வைசேஷிகம் விடுதலையை வழங்கும். செயல்களின் ஊடாக ஆற்றப்படும் யோகம் எனில் பூர்வ மீமாம்சத்தை சேரலாம். உங்களுடைய பிரச்சினை மிகையான தன்னிலை\ அகங்காரம் தான் எனில் வேதாந்தம். ஆனால் இவற்றில் எது உங்களுக்குரியது என்பதை நீங்களே தான் முடிவு செய்ய வேண்டும். ஒருவர் அகங்காரம் இல்லாமல் உசாவி கொண்டால் அவரால் தன் விடுதலைக்கான பாதையை எளிதாக தேர்ந்தெடுத்து கொள்ள முடியும். இறுதியாக, விடுதலை என்பது எய்தப்படுவதல்ல, திகழ்வது. எது ஒவ்வொரு காலடியிலும் உங்களை நிறைவாக உணர செய்கிறதோ அதுவே உங்கள் விடுதலைக்கான பாதை என்று சொல்லி முடித்தீர்கள்.
இந்த பாதையில் உங்களுக்கு வழிகாட்ட ஒரு குரு அமைவாரெனில் அது நல்லூழ் என்றும், நவீன ஓவியத்தை பார்ப்பதன் ஊடாக நம் பார்வையில் ஏற்படும் மாற்றத்தை போன்றது மெய்யியல் பாதையின் பயணம் என விளக்கி முடித்தீர்கள். இவையெல்லாம் என் நினைவில் நின்றவற்றின் சாரம். இது அல்லாது நீங்கள் கூறிய உவமைகள், நிகழ்ச்சிகளும் மனதில் உள்ளன. அவற்றை என்னால் கச்சிதமாக இணைக்க முடியவில்லை. ஓரிடத்தில் வேதாந்தினை விளக்க சூரியனை தலைதூக்கி பார்க்கும் உவமை கூறினீர்கள். அது போன்று நிறைய.
இந்த உரையை கேட்டு முடித்த பின் நேற்றைய என் கடிதத்தில் குறிப்பிட மறந்து போன ஒரு விஷயம் நினைவிற்கு வந்தது. தத்துவ நூல்களை கற்க எத்தனித்தேன் என்று சொன்னேன் அல்லவா ? அவை என்ன நூல்கள் என்று சொல்லவில்லையே! அவை ஹிரியண்ணா எழுதி 1966 ஆல் மொழிபெயர்க்கப்பட்ட இந்திய தத்துவ அறிமுக நூல்கள். பொருளடக்கத்தை பார்க்கையில் நீங்கள் சொல்வது போல வரலாற்று ரீதியான பார்வை ஒன்றை உருவாக்கி கொள்ள இயலும் என்று தோன்றியது. ஆனால் அதற்குள் தற்கல்வியும் தத்துவமும் கட்டுரை தொடரை வாசித்து என் ஐயம் பெருகியதால் தொடங்காமல் நிறுத்தி வைத்துள்ளேன். நீங்கள் தொடர்ச்சியாக சுட்டிகாட்டும் பிழை என்பது வரலாற்று நோக்கில்லாமல் கைக்கு கிடைத்தவாறு முறையற்று ஆன்மீக தத்துவ நூல்களை வாசிக்கும் செயலை. அதற்கு மாற்றாக தத்துவ வகுப்பிற்கு வருவதற்கு முற்பட்ட காலத்தில் இம்மாதிரி கல்விதுறை சார்ந்து கிடைக்கும் வரலாற்று நோக்கில் அமைந்த முறையான தத்துவ நூல்களை கற்கலாம் தானே ? என்பது என் கேள்விகளில் ஒன்று.
அன்புடன்
சக்திவேல்