இலக்கியவாதிகளும் பொதுக்களமும்

’தமிழ் இலக்கியத்துக்குள் நுழையும் ஒருவர் வெகுசீக்கிரம் எழுத்தாளர் சம்பந்தமான மிகை மதிப்பீட்டு பிம்பங்களுக்கும், உள்ளே பெரிய தாழ்வுணர்வுக்கும் படிப்படியாக ஆளாவதைப் பலரிடம் பார்த்திருக்கிறேன். இந்தச் சிக்கல் தமிழ் இலக்கியத்திலேயே இருக்கிறதா? தன்னை இந்தச் சமூகம் ஏந்த வேண்டும் என்று எதிர்பார்ப்பு தமிழ் எழுத்தாளர்களிடம் பெரும்பான்மையாக இருக்கிறது. பொதுமேடைகளுக்கான இடம் தங்களுக்கானதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தமிழ் எழுத்தாளர்களிடம் துலக்கமாக இருக்கிறது. ஆனால், இந்தச் சமூகத்தின் பெரும்பாலான பிரச்சினைகளோடு அவர்களுக்கு எந்த உறவும் இல்லை.

இந்திய அரசியல் வரலாற்றிலேயே தமிழ்நாட்டின் தனித்துவமான சில விஷயங்களை நாம் எடுத்துக்கொள்வோம். ரத்தம் தோய்ந்த மொழிப் போராட்டம். நம்முடைய இலக்கியங்களில் என்னவாக அது பதிவாகி இருக்கிறது? எத்தனை நவீன எழுத்தாளர்கள் இதுகுறித்துப் பேசியிருக்கிறார்கள்? மொழி அடிப்படையில் அவர்களுடைய முதன்மை உரிமை எல்லைக்கு உட்பட்டதல்லவா? நம்முடைய இலக்கிய முன்னோடிகள் பலர் முற்பட்ட சாதிகளைச் சார்ந்தவர்கள். பிராமண சமூகத்திலும், பிராமணரல்லாத சமூகத்திலும்! யு.ஆர்.அனந்தமூர்த்தி போன்ற ஓர் ஆளுமை இங்கே ஏன் தோன்றவில்லை? ஏன் ‘சம்ஸ்காரா’ போன்று சாதியைத் தீவிரமான சுயவிமர்சனத்துக்கு உள்ளாக்கும் ஒரு படைப்பு இங்கு தோன்றவில்லை? அனந்தமூர்த்திக்கு கன்னட அரசியல் தலைவர்கள் பலருடனும் நல்லுறவு இருந்திருக்கிறது. கன்னட தேசியர்களுடன் இணைந்து செயல்பட்டிருக்கிறார். தலித் – பழங்குடி அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டிருக்கிறார். சர்வதேச மேடைகளையும் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அஷிஸ் நந்தி போன்ற கோட்பாட்டாளர்களுடனும் அவருக்கு நெருக்கமான உறவு இருந்திருக்கிறது. உலகளாவிய விரிந்த பார்வையை அவருடைய உரையாடல்கள் நமக்குக் காட்டுகின்றன. இங்கே உள்ள உரையாடல்களில் குறைகளும் கசப்பும்தான் வெளிப்படுகின்றன. இதுதான் நம்முடைய எல்லையா?

எழுத்துச் செயல்பாடே போராட்டம்தான்: சாரு பேட்டி | அருஞ்சொல் (arunchol.com)

அன்புள்ள ஆசானுக்கு,

வணக்கம், மேற்கண்ட கேள்வியை சமஸ் சாரு நிவேதிதா பேட்டியில் கேட்டிருக்கிறார். ( சாரு இதற்கு, அவருக்கே உரித்தான பாணியில் சிறப்பான பதிலை கூறியிருக்கிறார் ) இதைப்  பற்றி நூற்றுக்கணக்கான பக்ககங்கள் நீங்கள் எழுதிவிட்டீர்கள், மீண்டும் மீண்டும் இவர்கள் ஏன் எழுத்தாளனுக்கு பாடம் நடத்த வருகிறார்கள், இவர்களின் அரசியல் நிலைப்பாடுகளை எழுத்தாளனும் எடுக்க வேண்டும் என ஏன் கட்டாயப்படுத்துகிறார்கள்,  எழுத்தாளனை ஆசிரியனாக வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டால் இவர்களுக்கு ஏன் எரிகிறது, தமிழ்ச்சூழலில் எழுத்தாளனை அறிந்து பின்தொடர்ந்து ஓர் தொடர் அறிவியக்கத்தில் இருப்பவர்களே அரிதினும் அரிது, அதை கூட இவர்களால் ஏன் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

எழுத்தாளனை ஆசிரியனாக ஏற்றுக்கொள்வதை  மிகை மதிப்பீடாக விமர்சிக்கும் இவர்கள்தான் “தெற்கிலிருந்து கிளம்பிய சூரியன்”  “காஞ்சியில் வெடித்த புரட்சி கனல்”  என்று மாதம் ஒரு நூலும் கட்டுரையும் எழுதி குவிக்கிறார்கள்.

இதை வேறு எவரோ கேட்டிருந்தால்  உங்களுக்கு அனுப்பி இருக்க மாட்டேன், சமஸ் உள்வட்டத்தில் இருப்பவர் ( அப்படித்தான் நான் நம்புகிறேன்) சாருவும், நீங்களும்  இவ்வளவு பேசியும், எழுதியும் அவர் புரிந்து கொள்ளவில்லை என்பது வியப்பாக இருக்கிறது.

அன்புடன்,

சம்பந்தர்

பேய்க்கரும்பன்கோட்டை ( அருண்மொழி அக்காவின் ஊரான ஆலத்தூருக்கு பக்கத்து ஊர்தான்.  வேலையின்  பொருட்டு  சிங்கப்பூரில் வசிக்கிறேன்)

எழுத்தாளர் பூமணி
எழுத்தாளர் பூமணி

அன்புள்ள சம்பந்தர்,

சமஸ் கேட்பது பேட்டியில் ஒரு கேள்வி. பொதுவாக பேட்டிகளில் வாசகச்சூழல் ஓர் எழுத்தாளனிடம் கேட்கவிரும்பும் கேள்விகளையே கேட்பது வழக்கம். அதுவே பேட்டியை வாசகர்களுக்கு அணுக்கமாக்கும். எல்லா நல்ல பேட்டியாளர்களும் செய்வது அதையே. சமஸும் அதையே செய்கிறார். அது அவருடைய கேள்வி என எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை. சீண்டி பதில் வாங்கும் உரிமை பேட்டியாளருக்கு உண்டு.

இக்கேள்வி இங்கே பொதுச்சூழலில் இருந்து அடிக்கடி எழும் ஒன்றே. இந்தக் கேள்விக்கான பதிலை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். இந்திய சுதந்திரப்போராட்டம் , சர்வோதய இயக்கம் முதல் நெருக்கடிநிலை வரை எந்த தமிழ்நாட்டுச்ச் சமூகநிகழ்வுக்கானாலும் தமிழில் இருக்கும் முக்கியமான பதிவுகள் அனைத்துமே இலக்கியத்தில் நிகழ்ந்தவை மட்டுமே. நெருக்கடிநிலைக்கு அசோகமித்திரன், பொன்னீலன் முதலியவர்களின் பதிவுகளை விட்டால் இன்று  வேறு விரிவான பதிவுகளே இல்லை என்பதே உண்மை. இந்தி எதிர்ப்புப் பின்னணியில் பூமணியின் வரப்புகள் நாவல் அமைந்துள்ளது. தமிழகத்தின் சாதிக்கலவரங்களின் பின்னணியில் அமைந்தது அவருடைய அஞ்ஞாடி நாவல். அவற்றை படிக்காமல், கேள்விகூட படாமல்தான் இங்கே பாமரர் இந்தக் கேள்வியை எந்த மேடையிலும் எழுத்தாளர்களிடம் கேட்கிறார்கள்.

(இல்லை அத்தனை எழுத்தாளர்களும் சமூகநிகழ்வுகள் அனைத்தைப் பற்றியும் எழுதியாகவேண்டும் என்று சொல்கிறார்களா என எண்ணும்போது பதற்றம் வருகிறது. தமிழில் எதுவும் நிகழும்)

இலக்கியம் புறவய வரலாற்றைப் பதிவுசெய்வது அல்ல. அதன் இலக்கும் அழகியலும் அது அல்ல. அது மனிதவாழ்க்கை வழியாக வரலாற்றைப் பார்க்கிறது. நாங்கள் சினிமாவுக்காக காலகட்டங்களை ஆராயும்போது இலக்கியப் பதிவுகள் அன்றி வேறு பதிவுகளே இல்லை என்ற திகைப்பூட்டும் உண்மையை கண்டடைவதுண்டு. இந்தியன் சினிமாவுக்காக நேதாஜி பற்றி ஆய்வுசெய்தபோது சுஜாதா தமிழில் ஏதேனும் எழுதப்பட்டுள்ளதா என என்னிடம் கேட்டார். நான் நாவல்களையே சுட்டிக்காட்டினேன். இன்று இந்தியன் 2 க்கும் நானும் நாவல்களையே கருத்தில்கொள்கிறேன்.

இந்திய சுதந்திரப்போராட்டப் பின்னணியில் எழுதப்பட்ட நாவல்களில் மண்ணில் தெரியுது வானம் (ந.சிதம்பர சுப்ரமணியன்) சுதந்திரதாகம் (சி.சு.செல்லப்பா) ஆகியவை முக்கியமானவை. நெஞ்சின் அலைகள் (அகிலன்) மணிக்கொடி (ஜோதிர்லதா கிரிஜா) போன்ற ஐம்பது நாவல்களைச் சொல்ல முடியும். நேதாஜியின் போர் பற்றிய புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால் (ப.சிங்காரம் ) இமையத்தியாகம் (அ.ரெங்கசாமி) ஆகியவற்றையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். இவற்றில் வெளிப்படுவது மிகமிக விரிவான சித்திரம். இந்திய சுதந்திரப்போர் தமிழகத்தின் சமூக வாழ்க்கையில், உளவியலில் என்ன மாறுதலை உருவாக்கியது என அறிய இந்நாவல்கள் அன்றி வேறு வழியே இல்லை என்பதே யதார்த்தம்.

அதேபோல நெருக்கடிநிலை. அதன் சமூக விளைவுகளை மிக விரிவாகச் சித்தரிக்கிறது பொன்னீலனின் புதிய தரிசனங்கள். அது உருவாக்கிய ஆழ்ந்த தத்துவச்சிக்கலைப் பேசுகிறது அசோகமித்திரனின் இன்று. நக்சலைட்டுகள் ஒடுக்கப்பட்டதன் சித்திரங்கள் பி.ஏ.கிருஷ்ணனின் புலிநகக்கொன்றை போன்ற நாவல்களில் உள்ளன. தமிழகத்தில் அணைக்கட்டுகளின் விளைவாக உருவான இடப்பெயற்சிகளை பேசும் நாவல்கள் த.நா.குமாரசாமியின் ஒட்டுச்செடி , விட்டல்ராவின் போக்கிடம், வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம். தமிழகத்தின் தொழில்வளர்ச்சியின் சூழியல் அழிவை சுப்ரபாரதி மணியன் (சாயத்திரை) எம்.கோபாலகிருஷ்ணன் (மணற்கடிகை) போன்றவர்கள் எழுதியிருக்கிறார்கள். தமிழகத்தின் குடியேற்றங்கள் பற்றிய வரலாறே கூட கோபல்லகிராமம் (கி.ராஜநாராயணன்) முதல் அம்மன் நெசவு (எம்.கோபாலகிருஷ்ணன்) வரையிலான படைப்பாளிகளால் மட்டுமே பதிவுசெய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் உருவாகி வந்த தமிழ்த்தேசிய இயக்க அலை பற்றிக்கூட ஞாநி எழுதிய தவிப்பு நாவல்தான் ஒரே பதிவு.

ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் சமூக வரலாற்றுப் பதிவென நமக்கு கிடைப்பது இலக்கியம் மட்டுமே. நினைவுப்பதிவுகளும் சரி , கல்வித்துறை சார்ந்த ஆவணப்பதிவுகளும் சரி மிகமிகமிகக் குறைவு. உண்மையில் பிற சூழல்களில் அவையெல்லாம் பிறரால் செய்யப்படுகின்றன.அவையே இலக்கியப்படைப்புக்கான கச்சாப்பொருட்கள்.அவற்றிலிருந்தே இலக்கியப்படைப்பு உருவாகிறது. நேர் மாறாக இங்கே அதையும் எழுத்தாளனே செய்யவேண்டியிருக்கிறது. தமிழ்ச்சமூகத்தில் நிகழ்ந்த மாறுதல்களான  விதவை மறுமணம், பெண்கல்வி தொடங்கி இன்றைய குடும்பச் சிக்கல்கள் வரை இலக்கியப்பதிவுகளை மட்டுமே இன்றைய வாசகர்கள் தமிழக சமூகவரலாற்றுக்கான ஆதாரமாகக் கொள்ளமுடியும்.

ஏனென்றால், இங்கே அரசியலாளர்கள், இதழாளர்கள் எவரும் நம்பகமான நினைவுப்பதிவுகளையோ, ஆதாரபூர்வமான வரலாற்றுப் பதிவுகளையோ எழுதுவதில்லை. அரசியலாளர்களின் நினைவுப்பதிவுகளில் தி.செ.சௌ.ராஜன், கோவை அய்யாமுத்து, க.சந்தானம் போன்றவர்களின் பதிவுகளே புறவயமானவை, நேர்மையானவை. மற்றவை அரசியல்பிரகடனங்களும் அரசியல் விவாதங்களும் தன்விளக்கங்களுமாகவே நின்றுவிட்டவை. இதழாளர்கள் பற்றி சொல்லவே வேண்டாம். அவர்கள் துதிபாடல்களையே பெரும்பாலும் எழுதியிருக்கிறார்கள். தமிழகத்தின் எந்த காலகட்டம் பற்றியும் இதழாளர்கள் எழுதிய நல்ல நூல் என ஏதும் இல்லை – ஒன்றே ஒன்று கூட. நேர்மையான நினைவுகளோ, ஆய்வுகளோ. எழுதப்பட்டவை எல்லாமே எளிமையான போற்றிப்பாடடி பெண்ணே கும்மிகள்தான். அப்படி எழுதலாகாது என்னும் சுரணை கொண்டவர்களே மிக அரிதானவர்கள். (ஆனால் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மிகச்சிறப்பான நூல்களை இதழாளர்கள் எழுதியுள்ளனர்) ஆனால் அவர்கள்தான் இங்கே எல்லாவற்றுக்கும் கருத்து சொல்கிறார்கள். கருத்துருவம் உருவாக்குகிறார்கள்.

ஆனால் ஒன்றுண்டு, ஒட்டுமொத்தமாகவே இலக்கியம் அரசியல் -சமூகநிகழ்வுகள் சிலவற்றை பொருட்படுத்தாமல் விட்டுவிடலாம்.  அரசியலாளர்களுக்கோ வரலாற்றாளர்களுக்கோ இதழாளர்களுக்கோ முக்கியமென தோன்றிய ஒன்று இலக்கியவாதிகளுக்கு முக்கியமாக தோன்றாமலிருக்கலாம். அல்லது குறைந்த முக்கியத்துவம் மட்டுமே அவர்களால் அளிக்கப்படலாம். மற்ற அனைவருக்குமே முக்கியமற்றவை என தோன்றும் சிலவற்றுக்கு இலக்கியவாதிகள் மிகுந்த முக்கியத்துவம் அளித்து பல கோணங்களில் எழுதியிருக்கலாம். உதாரணமாக, தமிழக எழுத்தாளர்கள் திரும்பத் திரும்ப விவசாயத்தின் அழிவை எழுதியிருக்கிறார்கள். அரசியலாளர்களுக்கு அது ஒரு பேசுபொருளே அல்ல. மாறாக அதை அவர்கள் வளர்ச்சி என நினைக்கிறார்கள். இலக்கியம் ஏன் ஒன்றை பொருட்படுத்தவில்லை, இன்னொன்றை பொருட்படுத்துகிறது என்பதை ஆராயவேண்டும். அதற்குத்தான் கல்வித்துறை ஆய்வுகள் தேவை. இலக்கியம் என்ன எழுதவேண்டும், எதை எழுதவேண்டும் என எவரும் ஆணையிட முடியாது.

இலக்கியவாதிகளில் சிலர் நேரடியாகச் சமூகச் செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள், சிலர் தங்களுக்குள் ஆழ்ந்து செல்பவர்கள். தொ.மு.சி.ரகுநாதன், ஜெயகாந்தன், ஜி.நாகராஜன், கி.ராஜநாராயணன் போன்றவர்கள் அரசியல் -சமூகக் களங்களில் செயல்பட்டவர். சுந்தர ராமசாமி, ஆ.மாதவன் போன்றவர்கள் தங்கள் கலைக்குள் நின்றவர்கள். இங்கே பொதுக்களத்தில் பெரும்பணியாற்றிய வை.மு.கோதைநாயகி அம்மாள், து.ராமமூர்த்தி, சரோஜா ராமமூர்த்தி , குமுதினி கா.சி.வேங்கடரமணி எம. எஸ். கல்யணசுந்தரம் போன்ற பல படைப்பாளிகள் உள்ளனர். அவர்களை இக்கேள்வி கேட்பவர்கள் அறியவே மாட்டார்கள். ஜெயகாந்தன் யு.ஆர்.அனந்த மூர்த்தியை விட நீண்ட அரசியல் அனுபவமும் விரிவான தொடர்புகளும் கொண்டவர் என்பதையும் அறிய மாட்டார்கள்

கன்னடத்திலும் சிவராம காரந்த், யு.ஆர்.அனந்தமூர்த்தி போன்றவர்கள் பொதுக்களத்தில் நின்றவர்கள். எஸ்.எல்.பைரப்பா, எச்.எஸ்.சிவப்பிரகாஷ் போன்றவர்கள் எழுத்துக்குள் நின்றவர்கள். மலையாளத்தில் தகழி பொதுக்களத்தில் நின்ற எழுத்தாளர். பஷீர் அப்படி அல்ல. ஆனால் அங்கெல்லாம் பொதுக்களத்தில் போராடிய படைப்பாளிகளையாவது பரவலாக தெரிந்து வைத்திருப்பார்கள். இங்கே பொதுப்பணியில் வாழ்க்கையே அர்ப்பணித்த எழுத்தாளர்களைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் இருப்பதோடு ஏன் தமிழ் எழுத்தாளர்கள் பொதுப்பணிகளில் ஈடுபடுவதே இல்லை என கேள்வியும் கேட்பார்கள். இதுதான் உண்மையாகச் சொன்னால் தமிழிலக்கியச் சூழலில் உள்ள சிக்கல்.

தமிழகத்தில் எழுத்தாளர்கள் கோருவது தங்களுக்குச் சம்பந்தப்படாத தளங்களில் தங்களுக்கு ஓர் இடம் வேண்டும் என்றல்ல. மாறாக, தாங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து எழுதும் இலக்கியத்தில் இலக்கியவாதியாக ஓர் இடம் வேண்டும் என்று மட்டுமே. அங்கும் அரசதிகாரிகளும் அரசியல்வாதிகளுமே வந்து அமர்வதைக் கண்டு மட்டுமே அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அரசியல்சமூகக் களங்களில் வாழ்க்கையை அர்ப்பணித்த எழுத்தாளர்களுக்குக் கூட எளிய அங்கீகாரங்கள், குறைந்தபட்சம் பெயர் சொல்லப்படுதல்கூட இல்லாத சூழலையே அவர்கள் குறைசொல்கிறார்கள். அதையும் சொல்லாதே என்றுதான் இங்கே பொதுச்சூழல் அவர்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிறது.

ஜெ

முந்தைய கட்டுரைஅனந்தாயி
அடுத்த கட்டுரைஅறம் ஒரு பதிவு