ஜெயமோகன் அவர்களுக்கு
அன்பு வணக்கம். தினமும் உங்களுடன் நான் பயணிப்பதுபோன்றே எழுகதிர் நிலம் எனக்கு இருக்கிறது. நான் ஒரு ஆணாக இருந்தால் உங்களோடு எத்தனை இடம் சென்றாலும் பயணத்தை தொடர்ந்து இருப்பேன். ஓ கே சிலநேரம் பொறாமை, பெருமையும் அடைகிறேன். வாழ்த்துகள்.
பாலாபிஷேகம் செய்யவோ…ஜெயச்சந்திரன் அவர்கள் பாடலை Air chennai Tamil Radio அடிக்கடி ஒலிபரப்பு செய்ய கேட்டு இருக்கிறேன். இனிய பாடல்.நன்றி!
தொடர்ந்து வரட்டும் உங்கள் பயணங்கள் .
அன்பு ராணி
***
அன்புள்ள அன்புராணி
மெய்யாகவே பெண்களுக்கு பயணங்களில் பல எல்லைகள் உள்ளன. குறைந்தபட்சம் இந்தியாவில். இந்தியா பெண்களின் சுதந்திரமான பயணத்துக்கு உகந்த நாடு அல்ல. ஆப்ரிக்க நாடுகள் அளவுக்கு இல்லை என்றாலும் பொதுவாக இந்திய மக்களில் கணிசமான சாரார் குற்றத்தன்மை ஓங்கியவர்கள். ஒரு வாய்ப்பு வந்தால் குற்றம் செய்யத் தயங்காதவர்களே எங்குமுள்ளனர்.
இன்று, பெரும்பாலான இந்திய ஊர்கள் போதையடிமைகள், குற்றவாளிகள், உதிரிகளின் ஆக்ரமிப்பிலேயே உள்ளன. இந்தியாவில் எந்நகரமும் இரவு 11 மணிக்குமேல் அவர்களிடம் சென்றுவிடுகிறது. இந்தியக் காவல்துறை ஒருவகையில் குற்றவாளிகளுடன் இசைந்து செல்ல முயல்வது. ஏனென்றால் குற்றச்செயல்பாடுகளுடன் சாதி, அரசியல், வணிகம், ஆகியவை இணைந்துள்ளன. பணம் குற்றங்களில் ஊடுருவியிருக்கிறது.
இந்திய நீதிமுறை பொதுவாக குற்றவாளிகளுக்கு ஆதரவானது. நாளிதழ்களிலேயே பார்க்கலாம், பல கொடுங்குற்றங்களில் கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகள் மிக எளிதாக ஜாமீனில் வெளிவந்து மீண்டும் குற்றங்களில் ஈடுபட்டு, மீண்டும் கைதாவார்கள். காவல்துறைக்குச் சமானமாகவே ஊழல்மிக்கது இந்திய நீதித்துறை.
இதனால் முதன்மையாகப் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள். அவர்களின் பயண உரிமை, தனித்துவாழும் உரிமை இதனால் பறிக்கப்படுகிறது. ஆனால் இந்த நிலையைச் சுட்டிக்காட்டினால் நம்மூர் முற்போக்காளர்கள் குற்றவாளிகளின் ‘ஜனநாயக’ உரிமைக்காகவே குரல்கொடுப்பார்கள். அது அரசியல்சரி என்றும், அதைச் சொல்பவர் லிபரல் என்றும் இங்கே நம்பப்படுகிறது.
ஒப்புநோக்க ஐரோப்பா பெண்களுக்குப் பாதுகாப்பான நாடு. காரணம் சட்டத்தின் ஆட்சி. ஆனால் அண்மையில் பிரான்ஸ், இத்தாலி போன்றவை அவ்வாறல்லாமல் ஆகிவிட்டன எனப்படுகிறது. நானறிந்தவரை இன்று பெண்கள் பயணம் செய்ய பாதுகாப்பான நாடு என்பது அமெரிக்காதான்.
இந்தியாவில் பயணம் செய்ய விரும்பும் பெண்கள் தங்களுக்கான சிறு கூட்டுக்களை உருவாக்கிக் கொள்ளவேண்டும். முறையான ஏற்பாடுகள், தொடர்புகளை உருவாக்கிக்கொண்டு திட்டமிட்டு பயணம் செய்யவேண்டும். அப்படி நம் அமைப்பின் பெண்கள் பல பயணங்களைச் செய்திருக்கிறார்கள்.
எங்கள் பயணங்கள் கொஞ்சம் சாகசத்தன்மை கொண்டவை. நடுச்சாலையில் தெரியாத ஊரில் நள்ளிரவில் நின்றிருக்கும் சாத்தியம் கொண்டவை. பெண்களை சேர்த்துக்கொள்ளவே முடியாது.
ஜெ