அன்புள்ள ஜெ
புனைவுக் களியாட்டு கதைத் தொகுதிகளை சென்ற புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். அவற்றில் மலை பூத்தபோது தொகுப்பை இப்போது வாசித்தேன். ஒவ்வொரு கதையிலுமுள்ள அந்த மாயத்தன்மை பித்துப்பிடிக்கச் செய்வதாக இருந்தது. சிறுகதை என்பதை யதார்த்தவாதத்துடனேயே இணைத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். வாழ்க்கையில் ஒரு சந்தர்ப்பம் கதையாக ஆவதைத்தான் நாம் நல்ல கதை என்கிறோம். இந்தக்கதைகளில் வாழ்க்கைக்கு அப்பாலுள்ள சந்தர்ப்பங்கள்தான் இருக்கின்றன. எல்லா கதைகளுமே ஒரு parable என்று சொல்லத்தக்கவையாக இருக்கின்றன.
இதில் சில கதைகளை என் பிள்ளைகளுக்கு டைனிங் டைமிலே சொன்னேன். சொல்லும்போது அப்படியே ஆயிரம் ஆண்டு பழைய கதைகளைப்போல ஆகிவிடுகின்றன. வாசிக்கும்போது தெரியாத நுட்பங்களெல்லாம் படிக்கும்போது தெரிய ஆரம்பிக்கின்றன.
என்.ஆர்.மாதவன்
***
அன்புள்ள ஜெ
ஊருக்கெல்லாம் பால் கொடுக்கும் பசுவை எப்படி ஊராரே அஞ்சி கொலைசெய்கிறார்கள் என்ற இடத்தை கதையில் வாசித்தபோது அந்த விரிவு எனக்கு திகைப்பூட்டியது. அந்த கதையில் பசு ராணி பார்வதிபாய் தம்புராட்டி அரசியுடன் சம்பந்தப்பட்டது. அவர் திருவிதாங்கூருக்கு அரும்பணி ஆற்றியவர். ஆனால் கடைசிக்காலத்தில் கைவிடப்பட்டு பெங்களூரில் அனாதையாக இறந்தார் என்று மானு பிள்ளையின் புத்தகத்திலே வாசித்தேன். அந்தக்கதையே அவரைப் பற்றியதுதான் என்று அப்போது தெரிந்தது.
அர்விந்த்