அறிபுனைவின் இடர் – கடிதம்

விசும்பு மின்னூல் வாங்க

விசும்பு வாங்க

அன்புள்ள ஜெ

விசும்பு அறிவியல் சிறுகதைகளின் தொகுப்பை இப்போதுதான் வாசித்தேன். எனக்கு அறிவியல்கதைகள் மேல் பெரிய ஒரு சலிப்பு உருவாகியிருந்ததனால் என்ன பெரிதாக இருக்கப்போகிறது என்ற ஒரு விலக்கம் வந்துவிட்டது. ஆகவேதான் வாசிக்கவில்லை.

இன்றைக்கு உலகமெங்கும் அறிவியல்கதைகளிலே பெரிய ஒரு தேக்கநிலை உள்ளது. அறிவியல்கதைகளை இன்றைக்கு குழந்தையிலக்கியமாக உருமாறிவிட்டன. இன்றைய குழந்தைகளுக்கு இயற்கைமேல் ஆர்வம் கம்மி. அவர்கள்  அனைவருமே இன்றைக்கு காட்ஜெட் அடிக்டுகளாக உள்ளார்கள். அவர்களைக் கவர்வதெல்லாம் அறிவியல் ஃபேன்டஸி கதைகள்தான். ஆகவே ஆங்கிலத்திலே அதேமாதிரியான கதைகள் குவிந்துகிடக்கின்றன. எல்லா ஜானரிலும் எழுதிவிட்டார்கள். எல்லா ஜாஸ்தி கற்பனைகளையும் எழுதிவிட்டார்கள்.

என்றைக்கு சயன்ஸ்பிக்‌சன் இந்தமாதிரி குழந்தைக்கதையாக ஆகியதோ அப்போதே அதன் லிட்டரி வேல்யூ இல்லாமலாகிவிட்டது. ஏனென்றால் எந்த சீரியஸ் கதையை படித்தாலும் அதைவிட தீவிரமான கற்பனை உடைய ஒரு குழந்தைக்கதை ஞாபகம் வருகிறது. இதை எப்படி வகுத்துக்கொள்வது என்று இன்றைக்கு மேற்கே பலருக்கும் தெரியவில்லை.

இதை இரண்டுவகையிலே அவர்கள் சமாளிக்கிறார்கள். சீரியஸ் சயன்ஸ் பிக்சன் என்பது இன்றைக்கு ஒருவகையான புதிர் மாதிரி இருக்கிறது. அதிலே வாழ்க்கை இல்லை. கதைவாசிக்கும் குதூகலமும் இல்லை. குறுக்கெழுத்துப் புதிர் மாதிரியான கதைகளான உள்ளன. இன்னொரு வகை நேரடியாக புராணமாகவே எழுதிவிடுகிறார்கள். சயன்ஸ் குறைவு.

சயன்ஸ் இருக்கவேண்டும், ஆனால் கதையின் சுவாரசியமும் இருக்கவேண்டும். கூடவே அது வாழ்க்கையைப் பற்றிய சீரியஸான கேள்விகளைக் கேட்பதாகவும் இருக்கவேண்டும். அப்படிப்பட்ட எழுத்துக்கள் இன்றைக்கு குறைவாகவே வருகின்றன. விசும்பில் உள்ள பல கதைகள் அபாரமானவை. இந்தியாவுக்குரிய ஓர் அறிவியலை வைத்து எழுதப்பட்டவை. அதில் அறிவியலும் உண்டு. கூடவே ஆழமான வாழ்க்கைவிசாரமும் உண்டு. அறிவியலாக இருக்கும்போதே அதெல்லாம் குறியீடுகளாகவும் ஆகியிருக்கின்றன.

சிறப்பான கதைகள். பித்தம் அதிலே ஓர் அற்புதமான கதை. பலமுறை படித்து சிரித்துக்கொண்டும் சிந்தித்துக்கொண்டும் இருந்தேன். சயன்ஸ் ஆராய்ச்சியிலே ஒரு டிராப் இருக்கிறது. ஒரு புதைகுழி அது. அதை அற்புதமாகச் சொன்ன கதை அது.

ராகவ் ரங்கா

முந்தைய கட்டுரைமரபும் சந்தமும் -உரை
அடுத்த கட்டுரைஅனந்தாயி