விழியில் விழுந்த கவிதை

 

நான்குநாட்களுக்கு முன் ஆபீஸுக்குப் போய்க்கொண்டிருந்தபோது வழியில் ஒரு கூட்டம். ஏதோ சிறு விபத்து என்று முதலில் நினைத்தேன். ஆனால் ஜனங்கள் மகிழ்ச்சியாக இருப்பதுபோலப் பட்டது. அப்படியானால் ஏதாவது கர்ப்பிணிப்பெண் தாய்வீடு வந்திருக்கலாம். அமெரிக்க மென்பொருள்மைந்தன் வீடு திரும்பியிருக்கலாம். சுவிசேஷ ஆராதனைக்கூட்டத்தை எவராவது வீட்டிலேயே ஒழுங்கு செய்திருக்கலாம்.

அருகே நெருங்கியபோது சொன்னார்கள், படப்பிடிப்பு என்று. ”என்ன படம் ?” என்றேன். ஏதோ மலையாளப்படப்பிடிப்பு போல தெரிகிறது என்றார் ஒருவர். அங்குமிங்கும் வயர்கள் ஓடின. ஒரு படப்பிடிப்பு வேன் நின்று அதிர்ந்துகொண்டிருந்தது. வெயிலில் சில பிரதிபலிப்பான்கள் கண்ட கண்ட இடங்களில் ஒளியைத் திருப்பி அனுப்பியபடி கைவிடப்பட்டுப் பலவகைகளில் சரிந்து கிடந்தன. ஒரு ஆள் பெஞ்சில் அமர்ந்து பீடி பிடித்துக் கொண்டிருந்தார்.

சினிமாப்படப்பிடிப்பு என்றால் இன்னும் சத்தமும் கூட்டமும் இருக்குமே என்று எண்ணிக்கொண்டேன். இங்கே ஒரே ஒரு வேன் மட்டும்தான். இரண்டே விளக்குகள். தொலைக்காட்சித் தொடராக இருக்கும் என்று நினைத்தேன். அருகே ஒருவரிடம் கேட்டேன், அவர் மலையாளி என்பது தெரிந்தது. பீடியைப்பார்த்தால் சகாவாக இருக்கவும் வாய்ப்புண்டு என்று பட்டது. படப்பிடிப்புத் தொழிலாளி. அவரிடம் ”என்ன படம்?” என்றேன் ”வழியில் விழுந்த கவிதா” என்றார். அதிர்ச்சியுடன் ”என்ன படம் ?”என்றேன் ”தமிழு படம் சார்…”

இன்னொருவர் ‘இடைப்பட்டு’ விளக்கினார். ”…இல்ல சார், இது தமிழு சினிமயாக்கும். மிழியில் விழுந்ந கவிதா எந்நாக்கும் பேரு. இவனுக்கு தமிழு தெரியாமல் தப்பாய் சொல்லுந்நான்”. சரிதான், விழியில் விழுந்த கவிதை என்ற தமிழ்ப்படம். ஒருகணம் நின்று பார்த்தேன். ஒரு இளம்பெண் பவுடர் போட்டுக் கண் தீட்டி செவ்வாய்ச் சிரிப்புடன் நின்றுகொண்டிருக்க ஒரு இளைஞனை பைக்கில் அமரச்செய்து அவனுக்கு ஒரு கால்சட்டை இளைஞர் ஏதோ சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தார்.

நேரமானதனால் ஆபீஸ் போய்விட்டேன். மாலை திரும்பும்போது பார்வதிபுரம் அக்ரஹாரம் வழியாக வந்தால் அங்கே மீண்டும் விழியில் விழுந்த கவிதை. பெண்கள் நைட்டியின் மேல் ஒரு துண்டை எடுத்து முந்தானையாகப் போட்டுக்கொண்டு வேடிக்கை பார்த்தார்கள். கையில் நோட்டுப் புத்தகத்துடன் கதாநாயகி நடந்துகொண்டிருந்தாள். மாலையில் வாழைப்பழம் வாங்க அதே வழியில் சென்றேன். அக்ரஹாரத்தின் நடுவே உள்ள பெரிய வீட்டில் — இப்போது அது ஒரு கல்யாண மண்டபம் – ஏராளமான நடமாட்டம். அந்த வேன் நின்றுகொண்டிருந்தது.

”என்ன அங்கே?” என்று கேட்டேன். இரவுப்படப்பிடிப்பா? இல்லை, இங்கேதான் படப்பிடிப்புக் குழு தங்கியிருந்து படம் எடுக்கிறது என்றார்கள். ” அவனுக ஒரு டீம் சார்…இங்கிணயே கூட்டமாட்டு தாமசிச்சு, சமைச்சு சாப்பிட்டு, படம் எடுக்கிறானுக” நான் சந்தேகத்துடன் ”…மொத்தப் படமும் சாரதா நகரிலேதானா?” என்றேன். ”பின்னே? இது என்னா சார் ஊரு? நம்ம பயகளுக்குக் கண்ணு தெரியல்ல…எங்கிணயோ உள்ளவன் அறிஞ்சு வந்து சினுமா எடுக்குதான்” என்றார் தங்கப்பன் நாடார்.

”பொள்ளாச்சி இப்டித்தான் ஃபேமஸ் ஆச்சுன்னு பேப்பரிலே சொல்லுகான். இப்பம் அங்கிண அஜித்தும் விஜய்யும் நடந்துபோனாலும் ஆரும் மைண்டு செய்ய மாட்டினுமாம்” என்றான் வாழையிலைக்கட்டுடன் கூட நின்ற நேசமணி. சாரதா நகரில் அஜித் நடதுபோக நான் அவரிடம் பதிமூன்று பி போய்விட்டதா என்று கேட்டுவிட்டு அவசரமாகக் கடந்து செல்வதைக் கற்பனை செய்தேன். அதுவே நயனதாரா என்றால் முடியுமா? ‘நான் கடவுளு’க்குப் பின் அந்த அம்மா என்னை செருப்பாலடித்தாலும் அடிக்கும். பாலாவுக்குப் போகவேண்டியது…

இன்று மாலை நானும் நாஞ்சில்நாடனும் அ.கா.பெருமாளும் டாக்ஸியில் வந்தபோது என் வீட்டுமுன்னாலேயே படப்பிடிப்பு. விளக்குகள் பளீரென்று எரிய கதாநாயகியும் கதாநாயகனும் தெருவில் ஆட்டோவில் வந்து இறங்குகிறார்கள். ஒருவர் ஓடிவந்து ”சார் க்ஷமிக்கணம்… ஒரு ஷூட்டிங்காக்கும் ”என்றார் ”என்ன சினிமா?” என்றார் நாஞ்சில்நாடன்.  அவர் விஸ்கிமணக்க ”விளியில் விளுந்ந கவிதே” என்றார். தமிழை வந்து அடைவதற்காகக் கடுமையாக உழைத்திருக்கிறார். நாங்கள் காத்திருந்தோம். இயக்குநர் அவசரமாக ஏதோ சொல்ல படப்பிடிப்பு ஆரம்பமாகியது.

”எவ்ளவு ஆளு வேலை செய்கானுக” என்றார் நாஞ்சில்நாடன். ”இது மாதிரி அம்பதுமடங்குபேர் பாலா யூனிட்டில் வேலை செய்வாங்க சார்… சும்மா ஆயிரம்பேர்… எங்கபாத்தாலும் எந்நேரமும் சாப்பிட்டுட்டே இருப்பாங்க. பாலா மட்டும்தான் யூனிட்டிலே சாப்பிடாம இருப்பார்” படுத்துக் கிடப்பார்கள். சீட்டு தாயம் விளையாடுவார்கள் ராணி,தேவி, குமுதம் படிப்பார்கள். பலவகையான கிரேன்கள் டிராலிகள் அம்போவென்று கிடக்கும்.

நானும் இதற்குள் நான் ஒரு சினிமா ஆத்மாவாக மாறிவிட்டிருந்தேன். என்னால் எங்கும் படுத்துத் தூங்க முடியும். எங்கும் சாப்பிட முடியும். காசியில் முதலில் மண்வெட்டியால் மலங்களைப் புதைத்த பின் நாற்காலி போட்டு சாப்பாடு பரிமாறுவார்கள். நாற்காலிகளை எடுத்துவிட்டு ஒரு பிளாஸ்டிக் துண்டை அதன் மீது விரித்தால் படுத்துத் தூங்க முடியும். ஆரியாவும் ‘எலி’ செந்திலும் அருகருகே ஓய்வெடுக்கும் ஜனநாயக வெளி.

”ரொம்ப சிம்பிளா எடுக்கிறாங்க”என்றேன். நாஞ்சில், ”நம்ம சண்முகம் ஒருநாள் மதுரையில பத்துத்தூண் சந்துலே அவரோட கடைக்குப் போறப்ப வாசலிலே ஷூட்டிங். ஒரு அஞ்சுபேரு நின்னு என்னமோ எடுக்கிறாங்க. அவர் கடைவாசலிலே ஒரு குள்ளமான குண்டுப்பொண்ணு உக்காந்து மேக்கப் போடுது… ஏய், எந்திரிம்மான்னு சொல்லி உள்ளே போனாராம். ஷூட்டிங் பாக்கலியான்னு கடைப்பொண்ணுகிட்டே கேட்டாராம். என்ன சார் இதெல்லாம் ஒரு படமா… நாலுபேர் நின்னு எடுக்கிறாங்க. உப்புமாக்கம்பெனின்னு அந்தப் பொண்ணே சொல்லிட்டுதாம்” என்று சொன்னார்.

”அப்றம்?”என்றேன் ”அந்தப்படம் பயங்கரமா ஓடியிருக்கு. கடைப்பொண்ணு அந்தப்படத்தை நாலுதடவை பாத்தாளாம். வாசலிலே உக்காந்திருந்தபடத்தோட ஹீரோயின் பெரிய ஸ்டார் ஆயிட்டா…என்ன படம் தெரியும்ல?” என்றார் நாஞ்சில். ”காதல் தானே?” என்றேன் ”ஆமா…பாலாஜி சக்திவேல் அப்டித்தான் படம் எடுத்தார்”

”இதுவும் ‘காதல்’ மாதிரி  பெரிசா வரட்டும்….” என்றேன். விளக்குகள் அணைந்தன. இன்னொரு விஸ்கிவாசனை பாய்ந்து வந்தது. ”ஸாரி ஸார், ஒரு சினிமா ஷூட்டிங்காக்கும். முடிஞ்சுட்டுது…நீங்க போங்கோ” என்றது. கேட்காமல் எப்படி முன்னால் செல்வேன்? ”என்ன படம்?” அவர் வாசனைக்கு சற்றே வாய் பொத்தி பணிவாக ”விஷியில் விஷுந்த கவிதாய்” என்றார் . ஆங்கிலத்தில் தலைப்பை வாசித்திருப்பார் போல.

முந்தைய கட்டுரைவேளாண்மை- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஏன் நாம் அறிவதில்லை?