ஜார்ச் சாண்ட்,தஸ்தயேவ்ஸ்கி- கடிதம்

ஜார்ஜ் சாண்ட், தஸ்தயேவ்ஸ்கி -விவாதம் பிரதீப் கென்னடி

அந்த விடியலின் பேரின்பம் – மேரி வோல்ஸ்டோன்கிராஃப்ட் -சைதன்யா

விண்ணினும் மண்ணினும் 2 – கடலாழத்து மொழி – சுசித்ரா

விலா எலும்புகளின் விடுதலைப் பிரகடனம் – சிமோன் தி பொவா – விக்னேஷ் ஹரிஹரன்

நிலவறை மனிதனின் அன்னை – சைதன்யா

பேரிலக்கியவாதிகள் மறைந்துபோகும் குகைவழி ஜெயமோகன்

ஜார்ஜ் சாண்ட், தஸ்தயேவ்ஸ்கி, விவாதம்- சக்திவேல்

அன்பு ஜெ,

சென்ற பொருநை இலக்கியத்திருவிழாவில் இப்படிச் சொல்லியிருந்தீர்கள் “நவீன இலக்கியத்திற்கு மரபிலக்கியம் மேல் ஓர் கவனம் இருந்தாக வேண்டும். எழுதவந்த காலகட்டத்தில் புதுமைப்பித்தன் தனிநபர்வாதத்தை, தனிவாழ்க்கையை எழுதினார். அதன்பின் சமூக உண்மைகளை எழுதினார்கள். இன்றைக்கு நாம் வந்திருப்பது வரலாற்றை எழுதுமிடத்தில். ஒரு மனிதனை ஒட்டுமொத்த வரலாற்று, பண்பாட்டு பின்புலத்தில் வைத்து பார்க்குமிடத்தில். பண்பாடு என்பது தன்னிச்சையானது அல்ல. முந்தைய தலைமுறையால் பின்னி முடைந்து உருவாக்கப்பட்டது. அதை அறிந்து கொள்ள வேண்டிய பொறுப்பு நவீன வாசகனுக்கு உள்ளது. தமிழில் ஒரு புது நாவல் வர வேண்டும் என்றால், தமிழ் மரபிலக்கியத்தின் மேல் நவீன இலக்கியவாதிகளின் பார்வை இன்னும் ஆழமானதாக விரிவானதாக வரலாற்றுப் பூர்வமானதாக விமர்சனப்பார்வையாக மாற வேண்டும். மரபும் நவீனமும் தழுவி முன்னகர வேண்டும்.”

நவீன இலக்கியத்தில் அப்படி ஒரு போக்கை நோக்கி முன்னகர்த்திச் சென்றவர் நீங்கள் தான். சு.ரா-விலிருந்து முரண்பட்டு எந்தப்பாதையை நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் என்பதை இப்போது தான் மிகச்சரியாக என்னால் உணர முடிகிறது.

உலக இலக்கியத்தில் பெண்கள் பற்றி நண்பர்கள் சைதன்யா, சுசித்ரா, விக்னேஷ் ஹரிஹரன், நந்தகுமார், எழுதி வருவதை நான் இங்கு தமிழ்ப் பெண் எழுத்தாளர்களில் பொருத்திப் பார்க்கிறேன்.

இருபதாம் நூற்றாண்டில் உலகபோர்களின் பேரழிவும் அதன் பின் எழுந்த இருத்தலியல் சார்ந்த எழுத்தின் கசப்பும் ஐரோப்பாவை நிறைத்தது. இந்த வரலாற்றின் புகைபடிந்த ஆடி வழியாக பார்க்கும் நவீன வாசகனுக்கு ஃப்லாபர்ட்டின், தஸ்தயெவ்ஸ்கியின் இருண்ட எழுத்து உண்மைக்கு அருகில் வருவதாக தெரிகிறது. ஜார்ஜ் சாண்ட் போன்றவர்கள் அரிதாகவே வாசிக்கப்படுகிறார்கள். ஆனாலும் இந்த நிலவறை மனிதர்களின் எழுத்தின் உச்சத்தில் வெளிப்படும் அன்னை உருவின் முன் மண்டியிடாமல் அவர்களால் கடக்க முடிவதில்லை. என்ற சைதன்யாவின் வரிகளையும்

கிறிஸ்துவுடன் அருகிருக்கையில், மொழி வழி பால்சக்கரியா, நிகாஸ் கசன்ட்சாக்கிஸ், தஸ்தாயெவ்ஸ்கி, டால்ஸ்டாய் சென்றடைந்த பாதையில் மேரிகொரெல்லியும் அமர்ந்திருப்பதை அணுக்கமாக உணர்கிறேன். என்ற நந்தகுமாரின் வரிகளையும் ஓட்டிப் பார்க்கிறேன். (என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும் – மேரி கொரெல்லி)

தனி மனிதனைப் பற்றி எழுதும் போது கசப்புகள், கீழ்மைகள், பிறழ்வுகள் என மனித மனத்தின் அப்பட்டங்களை எழுதுகிறேன் என ஒரு பக்கம் தீவிரமாக எழுதிய எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அதற்கு அப்படியே நேர் எதிர் தளத்தில் நேர்நிலைச் சிந்தனை கொண்ட படைப்புகளும் எழுதப்பட்டன. பெரும்பாலும் அவற்றை எழுதியவர்கள் விடுதலைக்கு முந்தைய  காலகட்டத்தைச் சேர்ந்த பெண்களாக இருக்கிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு மையச் சிந்தனை/சரடு இலக்கியத்தில் தீவிர பேசுபொருளாக உள்ளது. அதுவல்லாமல் எழுதுபவர்களை விமர்சகர்கள் மையப்படுத்துவதில்லை. ஆனால் நேர்நிலையோ எதிர்நிலையோ அது கலைப் படைப்பாக அமையும் போது வாசகன் காலம் கடந்து கூட அதைக் கண்டு கொள்கிறான் என்றே தோன்றியது,

சமீபத்தில் சுப்ரமண்ய ராஜு கதைகளை வாசித்தேன். அவரின் பேசு பொருளின் ஒரு முடிச்சை சரோஜா ராமமூர்த்தி யோடு ஒப்பிட முடிந்தது என்றால் அது “ஊழ்” என்பது தான். சுப்ரமண்ய ராஜுவின் கதைகள் படித்த இரண்டு நாட்கள் மிகவும் எதிர்மறைச் சிந்தனையோடு இருந்தேன். ”இந்த உலகம் மோசமாக உள்ளது. பார்த்து சூதானமாக இரு” என ஒரு அண்ணன் எழுதி வைத்திருப்பது போல இருந்தது. குறிப்பாக பெண்களுக்கு. ஏனெனில் அவர் ஆணின் அத்தனை கீழ்மையான சிந்தனைகளையும் இனி சொல்ல ஏதுமில்லை என்பது போல எழுதி வைத்திருக்கிறார். மேலும் விரிவாக சுப்ரமண்ய ராஜுவின் படைப்புலகம் குறித்து எழுதவிருப்பதால் இந்தப்புள்ளியில் நிறுத்திக் கொள்கிறேன். ஆனால் சரோஜாவின் கதைகளை வாசித்து முடித்தபின் வரும் ஊழ் ஒட்டுமொத்தமாக நேர்மறைச் சிந்தனையோடு இருந்தது. “இது இப்படித்தான்.” என்று கூறி நவீனமும் மரபும் கலந்த தீர்வை முன் வைத்திருந்தார்.

ராஜுவிற்கு தனிப்பாதையில் தான் பயணிப்பதான எண்ணம் இருந்தது தெரிகிறது. “மந்தையிலிருந்து பிரிந்த மாடு” என்ற படிமம் அவரின் எழுத்துக்களின் வழி அவரைப் பற்றி எடுத்த சித்திரமாக இங்கு கொள்ளலாம். ஒட்டு மொத்த நவீன இலக்கியத்தில் எழுதியவர்களுக்கும் இந்த தனிப்போக்கின் மேல் காதல் இருந்ததாகத் தெரிகிறது. அப்படியல்லாதவர்களை இவர்கள் தீவிர இலக்கியப் போக்கிலிருந்து விலக்கி வைத்துவிட்டார்களோ என்று தோன்றுகிறது.

தமிழ்விக்கியில் பாலாமணி பற்றிய பதிவு எழுதும்போது அவரைப் பிடித்திருந்தது. ஆனால் டி.கே.ஷண்முகம் பதிவிடும் போது அவருடைய டம்பாச்சாரி விலாசம் நாடகத்தால் தான் சங்கரதாஸ் ஸ்வாமிகள் இறந்தபின்னான நாடகக் குழுவை மீட்க முடிந்தது எனத் தெரிந்தபோது அவளின் வாழ்க்கையை கற்பனையாக ஓட்டிப் பார்த்தேன். அவள்  நாடக உலகின் “குயின்” என்று தோன்றியது. தாட்டிகமான அவளின் சித்திரம் தந்த புனைவை மேலும் புனைந்தெழுதிப்பார்க்கவே விழைகிறேன்.

ஆனால் பாலாமணி பற்றி தி.ஜா ஒரு கதை எழுதியிருப்பதாகத் தெரிந்தபோது ஆவலுடன் சென்று படித்தேன். “ஆடை” என தலைப்பு தெரிந்ததுமே அது தாராஷஷாங்கம் பற்றிய உட்குறிப்புடன் கூடிய கதையாகத்தான் இருக்கும் என நினைத்தேன். நிர்வாணமாக அவள் அதில் நடித்தாள் என்ற விளம்பரத்துடன் தந்திரக்காட்சிகள் மூலம் அரங்காற்றுகை செய்யப்பட்ட நாடகம் அது. தி.ஜா பாலாமணி பற்றிய ஆடை சிறுகதையில் “தேவடியாள் அவளுக்கு என்ன; தடிச்சி” என்றே சித்தரிக்கிறார். அது தவறில்லை. ஆனால் அதற்கு முற்றிலும் எதிர்க்குரலான ஒரு நேர்மறைக் குரல் அங்கு இல்லாததால் அது சமன்செய்யப்படாமல் முழுக்க எதிர்சிந்தனையாகவே பதிவாகிய தோற்றத்தை அளித்தது. அது அப்படி அமைந்திருக்க வேண்டும் என்றும் நான் சொல்லவில்லை.

மிகப்பெரிய மாளிகையில் வாழ்ந்த (இந்திராபார்த்தசாரதி அம்மாளிகையைப் பற்றி கட்டுரை எழுதியுள்ளார்) பாலாமணி தன் இறுதிக்காலத்தில் சொத்துக்களை இழந்து மதுரை வீதிகளில் மெலிந்து பணத்திற்காக கஷ்டப்பட்டு இறந்தார்தான். ஆனால் அதையும் தாண்டி வரலாற்றில் அவள் தவிர்க்க முடியாத ஆளுமை. ஆடை சிறுகதை வழியாக பாலாமணி மேல் ஓர் எதிர்மறைச் சிந்தனையே வந்திருக்கக் கூடும் அக்காலத்தில். உண்மையில் அது மீறல் கதையாக இருந்தாலும் அதன் உள்ளார்ந்து ’ஆடையில்லாமல் நடித்தாள் தற்போது ஆடை விலக்கப்பட்ட நிலையில் இறந்து கிடக்கிறாள்’ என நிலையாமையைச் சொல்வதாக அமைந்த கதையாகவே தி.ஜா வின் சிறுகதை அமைந்தது. தி.ஜா -வின் மேல் எந்தப் புள்ளியில் நீங்கள்  விலக்கம் அடைந்தீர்கள் என நான் உணர்ந்து கொண்ட தருணமது. (அக்கதையை வாசித்தபோது அது தெரியவில்லை. சமீபத்தில் அயன் ராண்ட் கட்டுரை வாசித்தபோது ஏதோ ஒரு பொறி தட்டி அதை உணர்ந்தேன்.)

ஒவ்வொருவரும் தனக்கான இஸங்களை உருவாக்கிக் கொண்டு பயணித்திருக்கிறார்களோ என்றே தோன்றுகிறது. மேலும் வாசிப்பின் வழியே இந்த சந்தேகத்திற்கான விடையை நானே ஒரு நாள் அடைவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இன்னும் தேடல் தான் உள்ளது.

இலக்கியத்தில் நான் முதலில் நுழைந்தது உங்கள் எழுத்துக்களில் தான். அது ஒரு ஒளி பொருந்திய பாதை. லட்சியவாதத்தை நோக்கி முடுக்குவது. ஒட்டுமொத்தமாக இன்று நான் உங்களில் வாசித்தவைகளைக் கணக்கில் கொண்டு மதிப்பிட்டால் நீங்கள் நேர்மறைத் தீவிரத்தையே என்னில் விதைத்திருக்கிறீர்கள். ஆம்! மனிதர்கள் மேல் அன்பு செய்யவே தோன்றுகிறது. ஏனெனில் நீங்கள் நன்மை, தீமை என்ற இரு தரப்புக்கும் ஒரு துளி மிச்சமில்லாமல் ”நியாயப்படுத்துதல்” செய்து விடுகிறீர்கள். துரோகம், போலி, ஏமாற்றம் என எதை மனிதனில் கண்டாலும் அவனை அணைத்துக் கொள்ளுமளவு அன்பு நிறைந்துள்ளது இன்று என்னிடம். இன்னொரு வகையில் அது நல்லதல்ல.

ஏனெனில் இலக்கிய உலகிற்குள் அதே மன நிலையில் ஒரு குழந்தை போல உள்நுழைந்தால் முதல் அடி எதார்த்தவாதிகளிடமிருந்து கிடைக்கிறது. அவர்கள் நேர்நிலைச் சிந்தனையோடு இருப்பவர்களை பைத்தியம் போல பார்க்கிறார்கள். அன்பு என்றால் சந்தேகப்படுகிறார்கள். காந்தியவாதத்தை சோம்பேரித்தனம் என்கிறார்கள். அன்றாடத்தை பூதாகரமாக்கி சமன்குலைவுக்கு ஆளாக்குகிறார்கள். பொதுவெளியை விட மிகக் குரூரமான மனிதர்களை இலக்கியத்தில் தான் பார்க்க முடிகிறது. ஏன் என்று யோசித்திருக்கிறேன். பொதுவெளி எதார்த்தவாதியைவிட இலக்கிய எதார்த்தவாதி அறிவானவன். அதனால் அந்தக் குரூரம் திகைக்க வைக்கிறது.

உங்கள் எழுத்துக்களிலிருந்து சற்றே பின் சென்று பார்த்தால் எதிர்மறைச் சிந்தனைகளும் சுயமோக எழுத்துக்களும் தான் இவர்களை வளர்த்து வைத்திருக்கிறது. ’எதுவும் இங்கு தப்பில்லை. எந்த உணர்வுகளுக்கும் மதிப்பில்லை. எல்லா மனிதனும் இவர்களுக்கு சல்லிப் பயல்கள். காதல், அன்பு, பாசம் எல்லாமே இவர்களுக்கு க்ளிஷேக்கள். தனி மனித ஒழுக்கம் சாத்தியமே இல்லை’ என்பது போலவே இங்கு பிறழ்வுறவுகள், பாலியல் அத்துமீறல் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன.

அதைப் பற்றி பேசாதவர்களை அக்காலத்தில் “மாமி எழுத்து” என ஒதுக்கி வைத்துவிட்டார்களோ என்று தோன்றுகிறது. அங்கிருந்து எந்தப்பெண் காமத்தின் அப்பட்டங்களை, தான் வாழ்ந்த வாழ்க்கை, சமூகத்திலுள்ள கீழ்மைகளைப் பேசினாலோ அவளே முன் நிறுத்தப்பட்டாளோ என்று தோன்றுகிறது.

உங்களிலிருந்து சற்றே பின்னோக்கி ஒவ்வொரு எழுத்து காலகட்டத்தையும் பார்த்தால் என்னால் எதிர்மனநிலையையே சென்று அடைய முடிகிறது. சுயமோகம் கொண்ட எழுத்துக்கள். தன்வயமாக சுருக்கப்பட்ட பார்வையைக் கொண்ட எழுத்துக்கள். நான் கட்டாயம் முழுமையாக அக்காலகட்டங்களை பற்றிய என் பார்வை சார்ந்த கட்டுரைகளை பின்னாளில் எழுதுவேன். இப்போதைக்கு என் வாசிப்பில் என் கருத்து இதுவாகத்தான் உள்ளது.

மரபிலிருந்து நவீனத்திற்கு சிந்தனையைக் கடத்த முற்பட்டவர்கள், காந்தியவாதிகள், காஞ்சி பரமாச்சாரியாரின் பக்தைகள், ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர்களாகவே பெரும்பான்மையான பெண் எழுத்தாளர்களை விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தில் பார்க்க முடிகிறது. அவர்கள் நிராகரிக்கப்பட்டிருக்கலாம். தீவிர/மைய எழுத்தல்ல என்று சொல்லி அவர்களை எளிதாகக் கடந்திருக்கலாம். அதன் பின் வந்த பெண்கள் மைய ஓட்டத்தின் பேசுபொருள்களுக்கு ஏற்ப தங்களை தகவமைப்பு செய்து கொண்டவர்களா அல்லது ஏதேனும் கொள்கை சார்ந்து கோட்பாடு சார்ந்து முன்வைக்கப்பட்ட எழுத்துக்களை எழுதினார்களா அல்லது உலக அளவில் இருந்த பேசுபொருட்களை மரபின் எந்த வேரும் இன்றி பற்றிக் கொண்டு முன் நகர்ந்தார்களா எனத் தெரிய வேண்டும். நீலியின் பயணத்தின் வழி அதை மேலும் நண்பர்களுடன் இணைந்து கண்டறிவோம்.

இதனுடன் தத்துவம் சார்ந்த புரிதல் எவ்வளவு முக்கியம் என்பது மண்டையில் இடித்துக் கொண்டே இருக்கிறது. அந்தப் புரிதல் தரும் பார்வை இன்னும் விசாலமானதாக இருக்கும். நீங்கள் எத்தனை தொலைவிலிருந்து இந்தச் சிந்தனைகளை பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என சில உரைகள், கட்டுரைகள் சரியாக ஆழமாகப் புரியவரும்போது தெரிகிறது. இங்கிருந்து பயண தூரம் அதிகமுள்ளது என உணர்கிறேன். இப்பாதையில் உங்கள் சமீபத்திய உரைகள்  (பொருநை இலக்கிய விழா உரை, லஷ்மி சரவணக்குமார் விழா உரை, விடுதலை என்பது என்ன, கல்தூணும் கனிமரமும்)மேலும் ஆழமாக உள் சென்று கொண்டே இருக்கிறது. சமீபத்தில் உங்களின் அயன் ராண்ட் கட்டுரைகள் வாசித்தபோது மானசீகமாக உங்கள் கால்களில் விழுந்து வணங்கிக் கொண்டேன். தங்கப்புத்தகம் சிறுகதை மேலும் திறந்து கொண்டது. நான் உணர்ந்தேன் ஜெ. இந்த ஒட்டுமொத்த இலக்கியப் பரப்பை நீங்கள் பார்க்கும் நோக்கை அங்கிருந்து கண்டேன். இன்னும் என் பார்வை தெளிவாக வேண்டும் அப்போது தான் விரிவாக அதை எழுத முடியும் என்று தோன்றுகிறது. இந்த சிந்தனைகளின் வழி பிரதீப் கென்னடியின் இந்த வாதத்திற்கு விடை சொல்ல முற்படுகிறேன்.

ஆனால் தஸ்தயெவ்ஸ்கி முக்கியமான கலைஞனாக இருப்பதற்கு  அவருடைய கதைகளில் வெளிப்படும் தரிசனம் மட்டும்தான் காரணமா ? ஒரு மகத்தான  கலைப்படைப்பு தரிசனத்தின் துணைக்கொண்டு மட்டும் அமைவதுதானா ? மகத்தான கலையில் ஒரு மையச்  சரடுதான் அதன்  தரிசனம். ஆனால் வெறும்  சரடு கலையாவதில்லை. அவை எவ்வாறு எல்லாம்  பின்னப்பட்டிருக்கின்றது என்பதை  கொண்டே அவை அப்படி உருவாக்கின்றன.இந்த கருத்தை முன்வைத்திருந்தார்.

என்னால் இப்போதைக்கு ஒன்று சொல்ல முடியும். ஆம் மாய்ப்பொன் தருணம் எல்லா உண்மையான கலைஞனுக்கும் ஏதோவொரு புள்ளியில் நிகழ்ந்திருக்கும் தான். அதை ஓர் நல்ல வாசகனாக எந்தப் புள்ளி என்று கூட உணர முடியும். தனித்தனி படைப்புகளின் சாரம் என்பதைத் தாண்டி ஒட்டுமொத்த படைப்புகள் வழியாக ஒரு கலைஞனில் வெளிப்படும் சாரம் ஒன்று உள்ளது. அதைத்தாண்டி படைப்பாளனின் படைப்புகள் மற்றும் அதற்கு இணையாக அவனின் வாழ்க்கை, புறச்சூழல் வழியாக தொட்டெடுக்கும் சாரம் ஒன்றுள்ளது. பின்னும் அவற்றுடன் அக்காலகட்டம் பிற எழுத்தாளர்கள், அவர்களின் பாதிப்புகள் அவை வழியே தொட்டு எடுக்கும் சாரம் ஒன்றுள்ளது. அதையும் கடந்து ஒரு காலகட்டத்திற்கும் இன்னொரு காலகட்டத்திற்கும் இடையே ஊடாடும் ஒன்றின் வழியேயான சாரம் ஒன்றுள்ளது. இறுதியாக ஒட்டுமொத்த அவனின் மரபில் அவனை நிறுத்தி தெற்றெடுக்கும் சாரம் ஒன்றுள்ளது. ஊடும்பாவுமாக ஒரு எழுத்தாளனின் எழுத்தில் பின்னியிருப்பது அவனின் படைப்புகள் மட்டுமல்ல. இம்மாபெரும் பெருக்கின் ஒரு துளி தான் எந்த எழுத்தாளனும் என்பதை உணர்கிறேன்.

இந்த ஒட்டுமொத்த சித்திரத்தின் வழியே நீங்கள் ஏன் டால்ஸ்டாயை தஸ்தாவெஸ்கியை விட ஒரு படி மேலே வைக்கிறீர்கள் என்பது புரிகிறது. சைதன்யா ஏன் நிலவறை மனிதர்கள் மண்டியிடும் சித்திரத்தை அளித்தார் என்றும், நந்தகுமார் டால்ஸ்டாய் சென்றடைந்த பாதையில் மேரிகொரெல்லியும் அமர்ந்திருப்பதை அணுக்கமாக ஏன் உணர்கிறார் என்பதையும் காண்கிறேன்.

மிக மெல்லிய சரடுகளை மூளை பின்னிக் கொண்டே செல்கிறது ஜெ. நான் எனக்கு நிறைவாக இந்த வாதத்திற்கு பதிலளிக்கவில்லை. ஆனால் இதுவரை அடைந்த என் சிந்தனையை இது தொகுத்துக்கொள்ள உதவியுள்ளது. நண்பர்களுடனான இந்தப் பயணம் மகிழ்வளிக்கிறது. “பேரிலக்கியவாதிகள் மறைந்துபோகும் குகைவழி கட்டுரைக்காக நன்றி ஜெ. எங்கள் எல்லோருக்குமே அக்கட்டுரை அடுத்த அடிக்கான (மின்மினி)விளக்கு.

ரம்யா.

முந்தைய கட்டுரைதத்துவ வகுப்புகள், கடிதங்கள்
அடுத்த கட்டுரைராய.சொ