பெருங்கை – கடிதம்

பெருங்கை 

தன் மகளை கட்டிக்கொடுக்க நினைக்கும் லௌகீக தகப்பனான ஆசான், தன் சீடனும் யானைப்பாகனுமான கதைசொல்லிக்கு தன் மகள்மேல் இருக்கும் ஈர்ப்பை உணர்ந்தே இருக்கிறார். மறைமுகமாக அதற்கு தடைபோடும் முகமாகவே அவளைக் கட்டுபவனுக்கு ‘சர்க்காரு சம்பளம் இருக்கணும்’ என்கிறார். அதற்கு நியாயமான காரணத்தையும் சொல்லிவிடுகிறார் : ‘ஆன சோலி செய்யுதவனுக்கு அடுத்தநாள் வாழ்க்கை அந்தநாள் கணக்கு’. முத்தாய்ப்பாக, கதைசொல்லியை கலங்கவைக்கும் முத்தப்பனுக்கே கட்டிவைக்க விரும்புவதையும் சொல்லி அந்த விஷயத்துக்கு முற்றுப்புள்ளியும் வைத்துவிடுகிறார் – அல்லது அப்படி நினைத்துக்கொள்கிறார்.

கேசவனுக்கும் கதை சொல்லிக்குமான உறவை எப்படியெல்லாம் அழகழகாக சொல்கிறீர்கள். அவனோடு குறும்புடன் விளையாடும் களிதோழனாக, அவன் சொல்லும் எதையும் செய்யும் சேவகனாக, இரக்கமில்லாத உலகத்தின் வெம்மையிலிருந்து அவனை காப்பவனாக, கடைசீயில் அவன் காதலுக்கு தூதுவனாக …. ஒருவரை ஒருவர் அந்தரங்கமாக அறிந்திருக்கும் தோழர்கள்.

கேசவன், தரையிலிருந்து கசங்காமல் எடுக்கும் மல்லிகைப்பு ஒரு அழகிய படிமம். அதை எடுத்து பெண்களிடம்தான் நீட்டுகிறான் கேசவன். பூவின் அருமை அறிந்தவர்கள் பெண்கள்தானே ? அப்படித்தான், கதைசொல்லி தன் காதலிக்குக் கொடுக்க வாங்கின வளையலை தானே கொடுக்க துணிவின்றி, ஆசான் வாங்கிக்கொடுத்ததாக சொல்ல முடிவெடுத்திருக்க, அப்படி அந்த காதல் தரையில் வீசின மல்லிகையென ஆகிவிடக்கூடாதென, சட்டென்று அவன் மடியிலிருந்து அந்த வளையலை எடுத்து தானே தனது கையால் – பாலம் கட்ட பெருங்கற்களை பூப்போல தூக்கி வைத்து உதவிய – தரையில் விழ்ந்த மல்லிகை மலர்களை கசங்காமல் எடுக்கும் – தனது பெருங்கையால் – சந்திரியிடம் நீட்டும் கேசவன் … ஒன்றும் சொல்லத்திகையவில்லை.

‘கடல்போல மனம்’ (நன்றி – யானை டாக்டர்) கொண்டவன் கேசவன். அம்மனதின் பருவுருவாக அவனது பெருங்கை.

கதை முழுக்க காட்சிகள், காட்சிகள் … அப்படியே படமென மனதில் விரிகின்றன. குறிப்பாக, சங்கக்கவிதைகளை நினைவுறுத்தும் இந்த வரிகள் (தீபம் கதையிலும் இறுதியில் இதை நிகர்த்த வரிகள் உண்டு) :

’யானையுடன் திரும்பி வரும்போது அவன் மலர்ந்திருந்தான். ஒருநாளும் அவ்வளவு நல்ல நினைவுகளாக மனம் இருந்ததில்லை. வரும் வழியெல்லாம் அழகாக இருப்பது போல் தோன்றியது. திக்கணங்கோட்டு சந்துக்குள் ஒரு வேலி முழுக்க முருக்கு பூத்திருந்தது. ’

காதலால் பூரித்த மனதுக்கு வழியெல்லாம் பூத்து அழகாக தெரிவதில் வியப்பென்ன ?

ஓவியமென மெல்ல மெல்ல தீட்டி சந்திரியின் புன்னகையில் மலரவைத்திருக்கிறீர்கள்.

அன்புடன்
பொன்.முத்துக்குமார்.

முந்தைய கட்டுரைவிடுதலை – கடிதம்
அடுத்த கட்டுரைஉமா மகேஸ்வரி