அன்புள்ள ஜெ.,
ஒரு மேற்கோள் மொத்த ஆசிரியனையும் நம்மை நோக்கி இழுத்து வரும் என்பது சத்தியமான வார்த்தைகள்.
“தாயின் அன்பும் சுய நலம் சார்ந்ததே… உண்மையான அன்பு அதனினும் வேறுபட்டது” என்ற வரி ஓஷோவையும்
“ஓயாமல் மனம் எதையாவது சிந்தித்துக்கொண்டே இருப்பது அறிவின் அடையாளம் அல்ல…..” என்ற வரிகள் ஜேகே-வையும் என்னைக் கண்டடைய வைத்தது.
ஆனால், மேற்கோள்கள் ஒரு கண்ணி வெடி என்பதையும் மறுக்க முடியாது. தீவிரவாதிகளைக் கூட உருவாக்கி விடும்.
நன்றி
ரத்தன்
அன்புள்ள ரத்தன்
ஆம் பொருத்தமற்ற, உள்நோக்கம்கொண்ட மேற்கோள்களால் ஒரு சிந்தனையாளனை எளிதில் மறைத்துவிடவும் முடியும். ஆனால் ஒரு சிந்தனையாளன் தொடர்ந்து விவாதக்களத்தில் இருப்பதே அவன் அழியாமல் இருப்பதற்கான ஒரே வழி
ஜெ
அன்புள்ள ஜெ.,
கல்லூரியில் படிக்கும் போது நடக்கும் மிகத்தீவிரமான விவாதங்களில் ஒன்று – நல்ல கலை மோசமான கலை- இதைத் தீர்மானிப்பது எப்படி?
பொதுவாக இது ரஜினி படமா கமல் படமா என்பதில் தொடங்கும்.
பலமுறை, பலவாறாக விவாதித்தும் இதற்கு எனக்கு விடை தெரியவில்லை. ஒருமுறை விவாதங்களை எல்லாம் தவிர்த்துவிட்டு, ஆழ்ந்து சிந்திக்கும்போது எனக்குக் கிடைத்த விடை இதுதான்.
அப்போது நான் ஒரு ஓஷோ பித்தன். எந்த சினிமா அல்லது எந்த புத்தகம், ஓஷோவின் புத்தகத்தை நோக்கி அப்போதைக்கு என்னைத் துரத்துகிறதோ அது எல்லாமே சிறந்தவை என்பது நான் கண்ட முடிவு.
ஓஷோவைப் படித்துப் பல வருடங்களாகின்றன. ஆனால் இப்போதும் இதன் சாரம் மாறாமலே எனக்குள் இருக்கிறது:
“எந்த இலக்கியம் அல்லது கலை, என் ஆன்மீக நாட்டத்தை ஒரு படி அதிகமாக்குகிறதோ அதுவே சிறந்த கலை.”
நன்றி
ரத்தன்
அன்புள்ள ரத்தன்
ஒரு கலையை நல்ல கலை அல்ல என்றதுமே ஆவேசமாகப் பொங்கி எழுந்து அதைத் தீர்மானிப்பது யார் என்று கேட்டும்,அதன் ஆதரவாளர்கள் அதை அதைவிட மோசமான இன்னொன்றுடன் ஒப்பிட்டால் அதே போலப் பொங்கி எழுவதையும் காணலாம்
கலையில் தராதரம் இல்லையேல் கலைரசனையும் இல்லை என்றே அர்த்தம்
ஜெ
அன்புள்ள ஜெமோ
’ரப்பர் நினைவுகள்’கட்டுரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. முடிந்தால் கையெழுத்துப் பிரதியையும் பார்த்துவிட்டு அந்த அனுபவத்தைப் பற்றியும் சொல்லுங்களேன். நன்றி.