புதியவாசகர் சந்திப்பு ஏன்?

புதியவாசகர் சந்திப்பு அறிவிப்பு

அன்புள்ள ஜெ,

நான் புதியவாசகர் சந்திப்புக்கு வர ஆசைப்பட்டேன். ஆனால் அதற்கு எனக்கு என்ன தகுதி உள்ளது என்ற தயக்கம் வந்தது. நான் இன்னும் பெரியதாக எதையும் வாசிக்கவில்லை. எனக்கு மனிதர்களைச் சந்திப்பது பேசுவது எல்லாமே கஷடமாக உள்ளது. என்னால் வாசிக்கமுடியும். ஆனால் அதைப்பற்றி பேசுவது மிகவும் கடினம். ஆகவே தயக்கமாக உள்ளது. எழுதவேண்டுமென ஆசை உண்டு. ஆனால் பொருட்படுத்தும்படியாக எதையும் எழுதவில்லை. எழுத முடியுமா என்றும் தெரியவில்லை. ஆகவே தயக்கமாக உள்ளது. அதனால்தான் பதிவுசெய்யாமல் விட்டுவிட்டேன்.

இராம. குமரவேல்

***

அன்புள்ள குமரவேல்,

புதியவாசகர் சந்திப்பே உங்களைப் போன்றவர்களுக்காகத்தான்.

இலக்கியத்தில் முந்தைய தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறை நோக்கி மொழியும், இலக்கிய வடிவங்களும், கருத்துக்களும் கைமாற்றப்பட்டுச் சென்றுகொண்டே இருக்கின்றன. அதில் நூல்கள் முதன்மைப் பங்கு வகிக்கின்றன.ஆனால் அதற்கிணையாகவே தனிமனிதத் தொடர்புக்கும் இடமுண்டு. சுந்தர ராமசாமி, ஆற்றூர் ரவிவர்மா, ஞானி, எம்.கங்காதரன், பி.கே.பாலகிருஷ்ணன் என எனக்கு தனிப்பட்ட முறையில் நெருக்கமான முந்தைய தலைமுறை ஆசிரியர்களிடமிருந்தே நான் உருவாகி வந்தேன். 

ஏனென்றால் நூல்கள் ஒருவழிப்பாதை. நமக்கு அந்த ஆசிரியர்கள் கிடைக்கிறார்கள். அவர்கள் நம்மை அறிவதில்லை. நேரடி உரையாடலில் அவர்கள் நம்மை அறிகிறார்கள். நம்மை இடித்துரைக்கிறார்கள், திருத்தியமைக்கிறார்கள், வழிகாட்டுகிறார்கள். அது நம் உருவாக்கக் காலமான இளமையில் மிகப்பெரிய வாய்ப்பு. அந்த வாய்ப்பு அமையாதவர்கள், அந்த வாய்ப்பை தவறவிட்டவர்கள் வாழ்க்கையில் பின்னர் ஒருபோதும் ஈடுகட்ட முடியாத இழப்பையே அடைகிறார்கள். 

பெருவிழைவுடன் என்னைச் சந்திக்க இளைஞர்கள் வந்துகொண்டிருக்கின்றனர். ஆனால் ஒரு விழாவில் சந்தித்து ஹாய் சொல்வது போதாது. ஓரிருநாட்கள் உடன் அமர்ந்து பேசவேண்டும். அதன்பொருட்டே இந்தச் சந்திப்புகளை 2016ல் முதல்முறையாக ஒருங்கிணைத்தோம். அந்தச் சந்திப்புகளுக்கு வந்த பலர் இன்று அறியப்பட்ட எழுத்தாளர்களாக ஆகிவிட்டார்கள்.

மேலும் புதிய வாசகர் சந்திப்புகள் இணையான உள்ளம் கொண்ட நண்பர்களை அறிமுகம் செய்கின்றன. இலக்கியவாசகர்கள் பொதுவாக அகம்நோக்கி திரும்பியவர்கள். சாமானிய நட்புக்கூடல்களில் அவர்கள் தனிமையானவர்கள் ஆகிவிடுவார்கள். தங்களைப்போன்ற இன்னொரு வாசகர்களிடம் அவர்கள் எளிதில் நட்பு கொள்வார்கள். அணுக்கமாவார்கள். 2016 முதல் புதியவாசகர் சந்திப்புக்கு வந்தவர்கள் இணைந்து நட்புக்குழுமங்களை உருவாக்கினர். அந்தக் குழுமங்கள் இன்னமும்கூட அதே தீவிரத்துடன் செயல்படுகின்றன.

இங்கே வர விரும்புபவர்களின் தகுதி என்பது ஆர்வமிருக்கவேண்டும் என்பது மட்டுமே. பேச்சு வன்மை, ஆளுமைத்திறன் எல்லாமே இதைப்போன்ற சந்திப்புகள் வழியாகத்தானே உருவாகி வரவேண்டும்? இங்கே எவரும் தாழ்வாக, அன்னியமாக உணர நேராது. அதன்பொருட்டே இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதைப்போல பிற எழுத்தாளர்களுடன் வாசகர்கள் சந்திக்கவும் உரையாடவும் ஏற்பாடு செய்யும் திட்டமும் உள்ளது.

இந்த சந்திப்புக்கு வரும் இளம் படைப்பாளிகள் தங்கள் ஒரு படைப்பை, தாங்கள் சிறந்தது என நினைப்பதை கொண்டுவரலாம். அவை சார்ந்த விவாதங்கள் நிகழும். அது அவர்களுக்கு தங்கள் எழுத்தை மதிப்பிட்டுக்கொள்ள உதவியாக அமையும்.

ஜெ 

முந்தைய கட்டுரைகடவுள் பிசாசு நிலம் – லோகமாதேவி
அடுத்த கட்டுரைகாமம், உணவு, யோகம்- விளக்கம்