சி.கன்னையாவும் வி.கே.ராமசாமியும்

சி கன்னையா  தமிழ் விக்கி

அன்புள்ள ஜெ.,

சி. கன்னையாபற்றிய விக்கி பதிவு வழக்கம்போல அன்றைய நாடக உலகம் குறித்த ஒரு விரிவான சித்திரத்தை  அளித்தது. கன்னையா குறித்த இன்னொரு விரிவான பதிவு நடிகர் வி.கே.ராமசாமி எழுதியஎனது கலைப் பயணம்‘ (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்) என்ற தன்வரலாற்று நூலில் கிடைக்கிறது.

மேலைநாடுகளிலேயே அரண்மனை, தோட்டம் என்று எழுதித் தொங்கவிட்டு கதாபாத்திரங்கள் பேசிக்கொண்டிருக்கும் மேடை நாடகங்களிலேயே அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாகசீன்களும், செட்டிங்குகளும்‘ இடம்பிடிக்க ஆரம்பித்திருந்தனஅதைக்கண்ட பாலிவாலா பார்சிக் கம்பெனியினர் அதேபோல் தங்கள் நாடகங்களிலும் முயற்சி செய்தனர். அந்தக் கம்பெனியின் தமிழ் நாடகங்களில் பெண்வேடமிட்டு நடித்துக்கொண்டிருந்த கன்னையாவுக்கு அதேபோல தாமும் ஒரு கம்பெனி ஆரம்பித்தாலென்ன எனத்தோன்ற தனிக்கம்பெனி ஆரம்பித்தார் கன்னையா.

அரிச்சந்திரன் கதையை எடுத்துக்கொண்டால் சத்தியம் என்ற ஒன்றையே வலியுறுத்தும். நளாயினி என்றால் கற்பின் பெருமை, சாவித்ரி என்றால் பதிபக்தி என்று ஒரு குறிப்பிட்ட அம்சத்தைச் சுற்றியே  இருக்க, பல  அம்சங்களை உள்ளடக்கியதசாவதாரத்தை தன்னுடைய துருப்புசீட்டாக எடுத்துக்கொண்டார் கன்னையா. ராமாயணமும், மகாபாரதமுமே கூட அதன் உள்ளடங்கியது. தான் பாடுபட்டுச் சேர்த்த பணத்தைக்கொண்டு தசாவதாரத்திற்கான சீன், செட்டிங்குகளை சேர்க்கத்தொடங்கினார் கன்னையா. அவருடைய பேரதிர்ஷ்டமாக எஸ்.ஜி.கிட்டப்பா கிடைத்தார். ராமாவதாரத்தில் பரதனாகத் தோன்றிதசரத ராஜ குமாரா ..அலங்காரா..சுகுமாராஅதிதீராஎன்றும் கூர்மாவதாரத்தில் மோகினியாகத் தோன்றிதேவர் அசுரர் குலத்தோரே திவ்ய தேவாமிருதம் உமக்கே தருவேனேஎன்றும் இசையை தேவாமிருதமாகப் பொழிந்து தமிழ்நாட்டையே அடிமைப்படுத்தினார் கிட்டப்பா. எங்கும்கன்னையா கம்பெனி..கிட்டப்பாதசாவதாரம்என்றே பேச்சு. நினைத்தும் பார்க்க முடியாத பணமும் புகழும் என புதிய உயரங்களைத் தொட்டார் கன்னையா.

தசாவதாரம் நாடகத்தில் பாற்கடலில் பெருமாள் பள்ளிகொண்டிருக்கும் காட்சியை மேடையில் கண்டு மக்களனைவரும் எழுந்துநின்று வணங்கியிருக்கிறார்கள். தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைவதையும், காளிங்க மர்த்தனத்தின் போது பாம்பு விஷம் கக்குவதையும், குருஷேத்திரப் போரையும் மேடையிலே தத்ரூபமாகக் காண்பித்துஇவருக்கு முன்னும் பின்னும் இதுபோல யாரும் செய்ததில்லை‘  என்ற வகையில் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார் கன்னையா.

ஒரு கட்டத்தில் கிட்டப்பா விலகி, தனிக்கம்பெனி ஆரம்பிக்க கன்னையாவிற்கு சற்றுப் பின்னடைவு. ஆனாலும் தளராமல் மகாராஜபுரம் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ( பாடகர் மகாராஜபுரம் சந்தானத்தின் சித்தப்பா) கிருஷ்ணனாக நடிக்க பகவத்கீதையை அரங்கேற்றினார். அர்ஜுனனாக சி.வி.வி.பந்துலு. இருவருமே பின்னாளில் திரையுலகில் பிரபலமடைந்தனர். பகவத்கீதை நாடகத்திலேயே, கலியுகம் பிறந்ததற்கு அறிகுறியாகமோரிஸ் மைனர்காரை மேடையிலேயே காட்டிக்ளாப்ஸ்அள்ளியிருக்கிறார் கன்னையா.  சில வருடங்கள் நாடகமேடைகளை ஆண்டதுபகவத்கீதை‘.

கன்னையா தன்னுடைய இறுதிக்காலத்தில் தான் சேகரித்த விலையுயர்ந்த நகைகளையும், கிரீடங்களையும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலுக்கு அளித்துவிட்டார். சீன்களையும், செட்டிங்குகளையும் தன்னுடைய சகோதரர் கிருஷ்ணய்யாவிடம் அளித்துவிட்டார். தன்னுடைய நாடகங்களுக்கானசெட்டிங்குகளை வாடகைக்கு எடுக்கவரும் வி.கே.ராமசாமியிடம் தன்னுடைய சகோதரரைப் பற்றிய செய்திகளைப் பகிர்ந்துகொள்கிறார் கிருஷ்ணய்யா

எனது கலைப் பயணம்நூலில்தன்னுடன் நடித்த  முக்கியமான நடிகர்களின்நல்லபக்கங்களை அவர்களைப்  பற்றிய அத்தியாயங்களில்  சொல்லியிருக்கிறார் வி.கே.ஆர். மிகை நவிற்சிதான். நூலுக்கு முன்னுரை மட்டுமே இருபது திரைப்பிரபலங்கள் எழுதியிருக்கிறார்கள்அதே மிகைநவிற்சி,விதந்தோதல்கள். கமல்ஹாஸன் மட்டும்நானும்,ரஜினியும் எங்களைப்பற்றிய அத்தியாயங்களுக்கு முற்றிலும் தகுதியற்றவர்கள்என்று அடக்கமாகச் சொல்லிக்கொள்கிறார்ஆனாலும், ஒரு சாதாரண நகைச்சுவை நடிகரிடமிருந்து வந்துள்ள இந்நூல் இருபதாம் நூற்றாண்டு தமிழ் நாடக உலகின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை அளிப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

கடவுளின் அருளால் நடைபெறும் அதிசயங்கள் மற்றும் பாவமன்னிப்பு இந்து மதத்திலும் உண்டு என்று வலியுறுத்தும் நொண்டி நாடகங்கள்(அதாவது நொண்டி தனக்கு கடவுள் அருளால் தனக்கு கால் எப்படி சரியானது என்று கூறும்) , தாழ்த்தப்பட்டோரிடையே ஊடுருவிய மதமாற்றங்களைத் தவிர்க்க முயற்சித்த பள்ளு நாடகங்கள்விரசத்தின் எல்லையைக் காட்டியகள்ளபார்ட்நாடகங்கள்,  விடுதலைப் போராட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய விஸ்வநாததாஸின் நாடகங்கள் போன்ற பல புதிய முயற்சிகள்

தமிழ்நாட்டில் பிரபலமாக இருந்த நல்லதங்காள் கதையை மலையாளத்தில் படமாக எடுத்தபோது ஹீரோ நல்லண்ணனாக நடித்த பின்னணிப்பாடகர் கே.ஜே.யேசுதாஸின் தந்தை அகஸ்டின் ஜோசப்ஆங்கிலஅரசின் கட்டுப்பாட்டில் இருந்த புதுக்கோட்டை சமஸ்தானத்திற்குள் நடந்தே வந்து நடித்துக்கொடுத்த காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, ‘டம்பாச்சாரிநாடகத்தில் பதினோரு வேஷங்களை மின்னல் வேகத்தில் மாற்றி பிரமிக்கவைத்தஇந்தியன் சார்லிசி.எஸ்.சாமண்ணா, நடிகைகளின் அங்கலாவண்யங்களை மனம்போன போக்கில் வருணித்துடார்ச்சர்பண்ணிய எம்.எஸ்.முத்துகிருஷ்ணன், ‘சுருளி மலை மேவும் சீலா’ , ‘ ஐயா பழனி மலை வேலாஎன்று நாடகத்திற்கு நடுவே பாடிஅப்ளாஸ்அள்ளியஹார்மோனியசக்ரவர்த்தி காதர்பாட்சா, ‘ராமன் ஷத்ரியன், அவன் மீசையோடிருந்திருக்கவே வாய்ப்பு அதிகம்என்று வாதிட்டு கடைசிவரை மீசையை எடுக்காமலேயே ராமனாக நடித்த கமலாலய பாகவதர் என்று விதம்விதமான நாடகக்கலைஞர்கள்

‘ஸ்பெஷல் நாடக’ வைரங்கள் பி.எஸ்.வேலுநாயர் மற்றும் பெண் வேடத்தில் சாதனை புரிந்த கே.எஸ்.அனந்தநாராயணய்யர்,  பி.ராஜாம்பாள், டி.பி.ராஜலக்ஷ்மி,’ஸ்ரீவை நார்ட்டன்’ எஸ்.டி.சுப்புலக்ஷ்மி, மேடைநாடகத்திலேயே ‘நிர்வாணக்காட்சி’யில் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய கும்பகோணம் பாலாமணி போன்ற பெரும் கலைஞர்கள். விசா, பாஸ்போர்ட் எதுவும் இல்லாமல் நினைத்தபடி கப்பலில் கடல் கடந்து சென்று நாடகம் நடத்திய காலம் அது. கப்பல் கட்டணம் பர்மாவிற்கு பதினாறு ரூபாய் எட்டணா. சிங்கப்பூருக்கு இருபத்திரண்டு ரூபாய் எட்டணா.  இது போன்ற புதுப்புது செய்திகள்.  

கேரளா முழுதும் ஐயப்பன் வரலாறை நாடகமாக நடத்தியும், இயேசுபிரான் வரலாற்றை வெள்ளைக்காரர்களே வியக்கும் வண்ணம் நாடகமாக நடத்தியும், காந்தியடிகளே கண்டு வியக்கும் வண்ணம்நந்தனார்நாடகம் நடத்தியும் பெரும் ஜாம்பவானாகத் திகழ்ந்த நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை. ஆங்கிலமெட்டில் அமைந்தசுவிசேஷகீதங்களுக்கு தமிழில் பாடல்கள் செய்த சங்கரதாஸ் சுவாமிகள். பம்மல் சம்மந்த முதலியாரின் நாடகப் பங்களிப்பு. இவைகளைக் குறித்து பல அத்தியாயங்கள் இருபதாம் நூற்றாண்டின் நாடக உலகின் சிறப்பை தெளிவாகக் காட்டுகின்றன

எம்.எஸ்.சுப்புலஷ்மியின்மீராபடப்பாடல்களை தினமும் தியேட்டருக்கு வெளியே காரில் அமர்ந்தபடி கேட்டுவிட்டுச் செல்லும் பி.யு.சின்னப்பா, உடல்நிலை சரியில்லாத நிலையிலும் நண்பனின் தோளை அழுத்திக்கொண்டு மேடையின் திரைமறைவிலிருந்து உச்சஸ்தாயி பாடல்களைப் பாடிய எஸ்.ஜி.கிட்டப்பா, நவாப் ராஜமாணிக்கத்தின் நாடகக்கொட்டகையில் மணக்கும் சாம்பிராணியின் மணம் என்று பல நுண்ணிய தருணங்களையும் பதிவு செய்துள்ளார் வி.கே.ராமசாமி

நாடகத்துறையில் பல புதுமைகளைப் புகுத்தி, மறுமலர்ச்சி உண்டாக்கி, பல நாடகக்கம்பெனிகளுக்கு வழிகாட்டியாகவும் இருந்துநாடகக்கலை வேரூன்ற பெரும்பங்களிப்பு செய்த கன்னையா போன்ற ஒரு கலைஞருக்கு சென்னையில் ஒரு நினைவுச்சின்னம் கூட இல்லை என்ற வருத்தத்தையும் பதிவுசெய்கிறார்  வி.கே.ராமசாமி.  

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

முந்தைய கட்டுரைவாழ்வு விண்மீன்களில்- கடலூர் சீனு
அடுத்த கட்டுரைபாலாமணி