எழுகதிர் நிலம்- 8

பெப்ருவரி பதினான்காம் தேதி காதலின் நாள். அன்று பசுதழுவுதலை மைய அரசு அறிவித்திருந்தது. பசு தழுவ வடகிழக்கில் பெரிய வசதி இல்லை. அங்கே சாலைகளில் பசுக்கள் இல்லை. வரும் வழியில் யாக்குகள் இருந்தன. அவற்றை தழுவ மைய அரசின் அனுமதி உண்டா என்னும் ஐயம் இருந்தது.

காலையில் கௌஹாத்தியில் இருந்து கிளம்பி எங்கள் பயணத்தின் இரண்டாம் கட்டமாக மேகலாயாவுக்கு சென்றோம். புதிய இன்னோவா வண்டி ஒன்று வந்திருந்தது. பழைய டாட்டா சுமோ ஓட்டுநர் அவரே ஷில்லாங் வரை கொண்டு வந்து விடுவதாகச் சொன்னார். மறுத்தோம். ‘அந்த வண்டி பழுதடைந்தால் சொல்லுங்கள் , பறந்து வந்துவிடுகிறேன்….இரண்டு மணிநேரத்தில் கொண்டுபோய் விட்டுவிடுவேன்என்றார்

காரில் சிரிப்பும் கேலியுமாகச் சென்றோம். எல்லாம் அந்த டாட்டா சுமோ பற்றிய கிண்டல்தான். 1990 களில் தான் வைத்திருந்த டாட்டா சுமோவை 160 கிமீ வேகத்தில் ஓட்டியதாக ராஜமாணிக்கம் ஒருமுறை சொல்லியிருந்தார். கீழே உருண்ட வேகத்தையே அவர் சொல்லியிருக்கலாம் என்பது வழக்கறிஞர் கிருஷ்ணனின் தரப்பு

ஷில்லாங் செல்லும் வழியில் உமையம் ஏரி (Umiam Lake) உள்ளது. 1960ல் அஸாம் மின்வாரியம் கட்டிய அணைக்கட்டின் புறநீர்ப்பிடிப்புப் பகுதி இது. சாலையில் நின்றாலே நீலநீர்வெளியை கீழே பார்க்க முடியும். குறிப்பிடத்தக்க செல்ஃபி மையம் இது. அங்கே நின்று வெள்ளரிக்காய், அன்னாசிப்பழக் கீற்றுகளை சாப்பிட்டோம். சம்பிரதாயமாக புகைப்படமும் எடுத்துக் கொண்டோம்.

செல்லும் வழியில் சாலையோரமாக ஸிப் என்னும் கயிற்றில் பறக்கும் பயிற்சிக்கான இடமிருப்பதை கண்டோம். தலைக்கு ஆயிரம் ரூபாய். அரங்கசாமியும் சந்திரசேகரும் அதில் ஏறி கொக்கியில் தொங்கிக்கொண்டு இரும்புக் கம்பி வழியாக ஒரு மலைப்பள்ளத்தாக்கை வானில் கடந்து சென்றார்கள். நான் ஏற்கனவே அமெரிக்காவில் அதில் சென்றிருக்கிறேன். அருண்மொழிகூட பறந்தாள். பார்க்கத்தான் பயங்கரமாக இருக்கும். என்ன ஏது என உணர்வதற்குள் வந்து சேர்ந்திருப்போம்.

ஷில்லாங்கை கடந்து சென்று குகைகளின் தோட்டம் (Bri Ki Synrang) என உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் இடத்திற்குச் சென்றோம். இது ஓர் இயற்கையான மலைப்பகுதி. பாறைகள் வழியாக அரித்துச்சென்ற மழைநீர் பலவகையான குகைகள், பாறைக்குழிகள், பாறைக்குடைவுகளை இங்கே உருவாக்கியிருக்கிறது. அவற்றை இணைத்து ஒரு சுற்றுப்பாதையை அமைத்து சுற்றுலா மையமாக ஆக்கியிருக்கிறார்கள்.

குளிர்ந்த குகைகளுக்குள் நீர் ஊறிச் சொட்டிக்கொண்டிருந்தது. அருவிகளில் கொஞ்சமே நீர் விழுந்தது.  ஆனால் நீர்த்துளிகள் ஒவ்வொன்றும் துப்பாக்கிக் குண்டுகள் போல உடலில் பட்டன, மேலே பனியுருகி வந்த நீர் அது. அருவிகளினூடாக, பாறைகளின் இடுக்குகளினூடாக நடந்தோம். சட்டென்று மண்ணுக்குள் புகுந்து மறுபக்கம் வெளிவந்தோம். ஆனால் இவை சுண்ணாம்புக்கல் குகைகள் அல்ல. ஆகவே அத்தகைய குகைகளில் காணப்படும் ஸ்டால்கமைட் எனப்படும் சுண்ணக்குவைத் தொங்கல்கள் இங்கில்லை.

சிவனை குகேஸ்வரன் என்கிறார்கள். மனக்குகை என்கிறார்கள். குகைகள் மனத்திற்கு சரியான உவமை. ஸ்டால்கமைட் வடிவங்களால் விந்தையான, விளங்கமுடியாத, அருவ உருவங்கள் கொண்ட குகைகளும் மனங்கள்தான். அங்கே கனவு நிறைந்துள்ளது. இக்குகைகள் மௌனம் நிறைந்தவை. துளிச்சொட்டும் ஒலி மந்திரம் போல நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இவை ஊழ்கத்திலமைந்த குகைகள்

ஓர் அருவியில் அரங்கா குளித்தே ஆகவேண்டும் என்றார். சொல்லிப்பார்த்தோம், ஆனால் பொதுவாகதண்ணிக்கோட்டிகளை தடுக்க முடியாது. சட்டையையும் ஜீன்ஸையும் கழற்றிவிட்டு இறங்கிவிட்டார். அப்படியே செங்குத்தாக உறைந்து கீழே போய் மூச்சு வாங்க மேலே வந்து பாறையில் தொற்றி ஏறி அமர்ந்து ஹ்ஹ் ஹ்ஹ் என ஏதோ சொன்னார்.

என்ன சொல்கிறார் என்பதை மீண்டும் அவர் தமிழில் சொன்னபோது புரிந்துகொண்டோம். “தோலே உறைஞ்சு மரத்துப்போச்சு சார்”. தண்ணீருக்கு அதிதண்மை. அவர் சுட்ட சீனிக்கிழங்கு போல ஆனார். ஆனால் நல்லவேளையாக வெயில் இருந்தது. அதில் நின்று நின்று தன் உயிரை மீட்டுக்கொண்டார். சூரிய நமஸ்காரம் ஏதாவது செய்வார் என நான் எதிர்பார்த்தேன். சமயசந்தர்ப்பம் இல்லாமல் அவரிடமிருந்து பீரிடும் திருப்பாவை ஓங்கி எழ இருபது நிமிடங்கள் ஆகியது.

ஓர் அமெரிக்கர் அவருடைய நண்பரான ராணுவ அதிகாரியின் விருந்தினராக வந்திருந்தார். அவருக்குக் காவலாக ஒரு ராணுவக்குழு வந்திருந்தது. அவ்வீரர்கள் தமிழகத்தினர். அவர்களுடன் பேசினோம். அவர்கள் அனைவரிடமும் காணும் பொதுவான உணர்ச்சிஆத்தாடி எதுக்கு இவ்ளவு தூரம் வந்திருக்காங்க?’ என்னும் வியப்புதான். 

குகைத்தோட்டத்தின் அருகே ஓர் உணவகத்தில் நூடில்ஸ் சாப்பிட்டோம். நான் அதிலுள்ள நீரை மட்டுமே குடித்தேன். மேகாலயாவின் நூடில்ஸ்- மாகி- அனைத்திலும் தாராளமாகச் சேர்க்கப்பட்டிருக்கும் சத்து என்பது மிளகாய்ப்பொடிதான். மொத்த மிளகாயும் நம் சாத்தூரில் இருந்து கிளம்பிச்செல்வதாக இருக்கும்.

சிரபுஞ்சி அருகே உள்ள நோஹாலிகை (Nohkalikai Falls ) அருவி மேகாலயாவிலேயே உயரமானது. அவர்கள் அதை இந்தியாவிலேயே உயரமானது என சொல்கிறார்கள். இவை இன்னமும் பொதுவான நம்பிக்கைகளாகவே உள்ளன. சிரபுஞ்சி என்பது ஒரு ஓங்கிய மலைமுடி. வங்கக்கடல் நோக்கி திரும்பி நின்றிருக்கிறது. அதன்மேல் கடலில் இருந்து எழும் நீராவி வந்து மோதி முகில்களாகி மழை பொழிந்து பேரருவிகளாக பள்ளத்தில் விழுந்து மலைப்பள்ளத்தாக்கில் ஓடி மறைகிறது. சிரப்ஞ்சியில் இன்றும் மழை மிகுதி. ஆனால் கோடையில் குடிக்க நீர் இருக்காது.

அருவி மிகமெலிந்து வெண்ணிறக் கோடாக விழுந்துகொண்டிருந்தது. 340 மீட்டர் உயரம் கொண்டது. சிரபுஞ்சியின் அருவிகளை ஆகஸ்டில்தான் பார்க்கவேண்டும். அவை ராட்சதத்தனமாக இரைந்துகொண்டிருக்கும். நான் முன்பு வந்து அவற்றின் பேருருவை கண்டிருக்கிறேன். இப்போது இன்னொரு மலைமுடியில் இருந்து அவை மெல்லிய சரிகை என அசைந்து கீழிறங்குவதைக் காண்பது ஒரு வகையான இனிய உணர்வை உருவாக்குவதாகவே இருந்தது

கா லிக்காய் (Ka Likai) என்னும் காசி பழங்குடி இனப்பெண்ணின் கதையை இந்த அருவியுடன் சேர்த்துச் சொல்கிறார்கள். கணவனை இழந்த லிக்காய் இன்னொரு மணம் செய்துகொண்டாள். குழந்தையை பார்த்துக்கொள்வதற்காக அவள் கடுமையான சுமைதூக்கும் வேலையைச் செய்து வந்தாள். அவள் வேலை முடிந்து ஒருநாள் திரும்பி வந்தபோது மாமிசம் சமைக்கப்பட்டிருந்தது. பசிவெறியில் அவள் அதை முழுமையாக உண்டாள். வெற்றிலை போட முயன்றபோது அங்கே தன் குழந்தையின் வெட்டுண்ட விரல் கிடப்பதை கண்டாள். அவளுடைய இரண்டாவது கணவன் குழந்தையை கொன்று சமைத்துவிட்ட செய்தி தெரியவந்தது. அவள் இந்த அருவியில் மேலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டாள்.

அந்தக் கொடூரமான கதைக்கும் மெலிந்த வெண்விழுதாக தெரிந்த அருவிக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் பழங்குடிகளின் பெரும்பாலான கதைகளில் உருவகங்களை விட யதார்த்தமே மிகுதி. இந்நிகழ்வும் உண்மையில் நடந்ததாக இருக்கலாம்

அருவியை பார்ப்பதற்காக ஓர் உணவகத்தின் பின்னால் வராந்தா ஒன்றை உருவாக்கியிருந்தனர். அது மாபெரும் மாளிகையொன்றின் உப்பரிகை போலிருந்தது. அங்கே அமர்ந்து ஒரு டீ குடித்தபடி அருவியை பார்த்துக்கொண்டிருந்தோம்

கீழே இறங்கிச் செல்ல பாதை இருந்தது. அங்கே சென்று கூடாரம் அமைத்து தங்குவது சுற்றுலா மரபாக இருக்கிறது. எறும்புகள் போல சிற்றுருவங்களாக கீழே அருவி பொழியும் இடத்தில் நின்றிருந்தவர்களை காண முடிந்தது. தேவர்கள் பார்ப்பதுபோல அவர்களை வான்விளிம்பில் நின்று பார்த்தோம்.

மாலையில் அந்திச்சூரியன் அணைவதை அந்த மலைமுகடின் விளிம்பில் நின்று பார்த்தோம்.எங்கள் பயணங்களில் முற்றிலும் புதிய ஊரில் கதிரணைதலைப் பார்ப்பதென்பது எப்போதுமே ஒரு வழக்கமாக உள்ளது. அது ஒவ்வொரு முறையும் வேறு வேறு சூரியன்தான். அந்த தருணத்தில் நம்முள் கைகூடும் அமைதி, தனிமை, சிந்தனையற்ற நிலை மிக அரிய ஒரு தருணம்

மாலையில் வாகென் (Wahken) என்னும் காசி இனக்குழுவின் ஊருக்குச் சென்றோம். இருபுறமும் மூங்கில்கள் செறிந்த சாலையின் வழியாக இருளில் சென்றுகொண்டே இருந்தோம். வழியில் விந்தையான விலங்குகள் செல்வதுபோல் தெரிந்து ஒருகணம் விழி திகைத்தோம். மலையில் இருந்து மூங்கில்பூக்களை வெட்டி பெரிய தொகுப்புகளாக முதுகில் சுமந்து செல்பவர்கள். அவைதான் அஸாம் புல் என்னும் பெயரில் நம் ஊரில் துடைப்பங்களாக விற்கப்படுகின்றன. அஸாம், மேகலாயா பகுதிகளில் வளரும் ஒருவகையான மூங்கிலின் பூக்கள் அவை. நான் நாணல் என்றுதான் முன்பு எண்ணியிருந்தேன்.

காசி ஊர் சிறியது . ஐம்பது குடும்பங்கள் இருக்கலாம். ஆனால் வறுமையானது அல்ல. வீடுகள் ஓரளவு புதிய கான்கிரீட் கட்டிடங்கள். ஓரிரு மரக்கட்டிடங்களும் இருந்தன. பழைய காசி முறைப்படி மூங்கில்தட்டிகளும் மரச்சட்டங்களும் கொண்டு கட்டப்பட்டவை. நல்ல குளிர் இருந்தது. வீடுகளின் நடுவே இருந்த பொது முற்றத்தில் ஒலிப்பெருக்கிப் பெட்டிகள் வைக்கப்பட்ட இடியிசை ஓடிக்கொண்டிருந்தது

எங்கள் தங்குமிடத்தை கண்டடைய கொஞ்சம் தாமதமாகியது. நாங்கள் வீடுவீடாகச் சென்று கேட்டுக்கொண்டிருந்ததை எங்களுக்கு பதிவுசெய்திருந்த இல்லத்தின் உரிமையாளர் பார்த்துக்கொண்டுதான் இருந்தார். ஆனால் நாங்களே அவரிடம் சென்று கேட்கும்வரை அவர் ஒன்றும் சொல்லவில்லை. அவர்களின் இயல்பு அது. இரண்டு அறைகள் எடுத்திருந்தோம்.

அந்த ஊர்ப்பொதுமுற்றத்தைச் சுற்றி நாலைந்து கடைகள், இரண்டு உணவகங்கள். நண்பர்கள் அங்கே சென்று சாப்பிட்டுவிட்டு வந்தார்கள். அந்த உணவக உரிமையாளரான பெண்மணி சமைத்து வைத்திருந்த மொத்தத்தையும் அரங்கசாமியே உண்டுவிட்டதாக கிருஷ்ணன் சொன்னார். நாங்கள் இருந்த கட்டிடத்தின் முகப்புத் திண்ணையில் ஓர் அம்மாள் மீன் வைத்து விற்றுக்கொண்டிருந்தாள். நன்னீர் மீன். சாளை அளவுக்கு பெரியது. பல்வேறு காய்கறிகள், மூங்கில் குருத்துக்கள் விற்கப்பட்டன.

குழந்தைகள் கீச்சுக்குரலெழுப்பி விளையாடின. எல்லா குழந்தைகளும் போர்வையை மண்டையைச் சுற்றி கட்டி மோவாயில் இறுக முடிச்சிட்டு தோள்வழியாக போட்டிருந்தார்கள். சின்னக்குழந்தைகள் எங்களை வேடிக்கை பார்த்தன. வழக்கம்போல தம்பிகளை இடையில் தூக்கிக் கொண்ட அக்காக்கள் நிறைய தென்பட்டனர். பெரும்பாலான காசி இனப்பெண்கள் வாய் புண்ணாகுமளவுக்கு வெற்றிலை போடும் பழக்கம் கொண்டிருந்தார்கள்

இரவு எட்டு மணிக்கு சட்டென்று அங்கே ஓர் தேர்தல் பொதுக்கூட்டம் தொடங்கியது. மேடை எல்லாம் இல்லை. ஒரு மேஜை, நாலைந்து நாற்காலிகள், ஒரு மைக், அவ்வளவுதான். பேசியவர் மேகாலயாவின் சீமான். உக்கிரமான ஓங்கிய குரல், சட்டென்று எகிறும் ஓசை, உடனே தழைந்து நகைச்சுவை. எதையோ ஆவேசமாக வலியுறுத்தினார். எதையெதையோ நையாண்டி செய்தார். 

கூடியிருந்தவர்கள் சிரித்தனர். கைதட்டினர். நூறு நூற்றைம்பதுபேர் இருப்பார்கள். ஆர்வமாக அவர் பேச்சை கேட்டுக்கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் பெண்கள்தான் இருந்தனர். ஆண்கள் அக்கிராமத்திலேயே அதிகம் தட்டுப்படவில்லை. குழந்தைகள் ஊடே புகுந்து விளையாடிக்கொண்டிருந்தன. 

அத்தனை தீவிரமான சொற்பொழிவு ஜெர்மனியில் இருந்து மேகாலயா வரை வந்திருக்கிறது வியப்புக்குரியதுதான். ஜனநாயகம் என்பது காற்று, மேடைப்பேச்சு அதனால் அடித்து வரப்படும் தூசு. அல்லது நேர் மாராகவா?

அவர் காங்கிரஸுக்கு ஆதரவான பேச்சாளர் என்று கேள்விப்பட்டேன். காங்கிரஸ் இம்முறை மேகலாயாவில் நேரடிப்போட்டியில் இல்லை. திருணமூல்காங்கிரஸாக மாறி வாக்கு கோருகிறது. இது காங்கிரஸை ஆதரிக்கும் ஒரு பழங்குடிச் சபையின் பேச்சாளர். மேகாலயாவில் ஆளும் கட்சி பாரதிய ஜனதா. முன்னாள் காங்கிரஸ் அரசியல்வாதி பி..சங்மாவின் மகன் முதல்வர். மேகலாயாவில் பிரிவினைவாத அரசியல் இன்றில்லை. அவர்கள் அங்கே ஒரு தரப்பே இல்லை. முழுமையாகவே அவர்கள் அரசாலும் மக்களாலும் தோற்கடிக்கப்பட்டுவிட்டனர். அங்கே இன்றுள்ளது பிரிவினையை மையமாக்கிய அரசியல் அல்ல. மேகாலயா வளர்ச்சியின் சுவையை கண்டுவிட்டது.

ஒரு சொல் புரியாத பேச்சு. சீன மொழியின் ஒலி காதில் விழுந்தது. ஹ்வா வ்வா என்னும் வகையான நீட்சிகள். ஆனால் பேசப்படுவது புரிந்தது. ‘உங்களுக்கு எவரும் எதுவும் செய்யவில்லை. எல்லாவற்றையும் நாங்களே செய்வோம்’ அவ்வளவுதான். வேறென்ன ஒரு தேர்தல் பரப்புரையில் சொல்லிவிட முடியும்? நம்மூரில் என்றால் நிபுணர்கள் வந்து கொஞ்சம் புள்ளிவிவரங்களை சேர்த்து அதைச் சொல்வார்கள்

நல்ல குளிர். பத்து பத்தரைக்கெல்லாம் பேச்சு நிறைவுற்றது. அவ்வளவு நேரமும் ஒரே ஆள்தான் பொரிந்து கொண்டிருந்தார். கனமான போர்வைக்குள் இன்னொரு இரவின் தூக்கம்

(மேலும்)

முந்தைய கட்டுரைஆ.குப்புசாமி
அடுத்த கட்டுரைபுதைந்தவை