தவாங்கில் இருந்து பெப்ருவரி 13 ஆம் தேதி அஸாம் நோக்கி கிளம்பினோம். இந்த பயணத்தில் இரண்டுநாட்கள் அனேகமாக எதுவுமே பார்க்கவில்லை. ஆனால் பயணமே ஒரு பெரிய சுற்றுலா அனுபவமாக அமைந்தது. முதலில், முந்தையநாள் அரங்கசாமி இரவுணவை தடபுடலாகக் கொண்டாட விரும்பினார். அவர் பகலில் முழுமையாகவே எதுவும் உண்பதில்லை. இரவில் மாமிச உணவு ஒருவேளை. கீட்டோ டயட். இருபது கிலோ எடை குறைத்து தன்னை இளைஞனாக எண்ணிக்கொண்டிருக்கிறார்.
இணையத்தில் தேடிக்கண்டடைந்த உணவகத்திற்குச் சென்றோம். ஆளுக்கொன்றாக உணவு ஆணையிட்டனர். நான் ஒரு சிக்கன் சூப் மட்டும் அருந்த முடிவெடுத்தேன். அத்தனை உணவும் இருபது நிமிடங்களில் மேஜைக்கு வந்தபோதே யோசித்திருக்கவேண்டும். உணவகத்தில் நாங்கள் மட்டுமே உண்டவர்கள். மறுநாள் ஆனந்தகுமாருக்கு வாந்தி. எனக்கு வயிற்றுப்போக்கு. ஆனால் சீக்கிரமே சரியாகிவிட்டேன். சிக்கன் சூப்பை நானும் ஆனந்த்குமாரும் மட்டுமே குடித்தோம். அதில் ஏதோ இருந்திருக்கிறது
நாங்கள் தவாங்கில் இருந்து ஹெலிகாப்டரில் கௌஹாத்தி திரும்புவதாக இருந்தது. தவாங் வந்ததில் இருந்தே கௌஹாத்தியில் இருந்து ஹெலிகாப்டர் வருகிறதா என்னும் விசாரணை இருந்துகொண்டிருந்தது. அங்கிருந்து வரும் ஹெலிகாப்டர்தான் திரும்பச் செல்லவேண்டும். முந்தைய நாட்களில் அது மோசமான வானிலை காரணமாக ரத்துசெய்யப்பட்டிருந்தது.
தவாங்கில் இருந்தபோது பும்லா பாஸுக்கான வழி திறந்திருக்கிறதா என்னும் கேள்வி அலைக்கழித்தது. நாங்கள் வருவதற்கு முன்பு இரண்டுநாட்கள் அது கடும் பனிப்பொழிவால் மூடப்பட்டிருந்தது. அன்றுதான் திறந்தது. ஆகவே ஹெலிகாப்டரும் வருமென நினைத்தோம். அதற்கேற்ப அன்று வானிலை நன்றாக இருந்தது.
ஆனால் மறுநாள் வானிலை மிக மோசமாக ஆகிவிட்டது. இமையமலை பகுதிகளில் ஹெலிகாப்டர் பயணமென்பது மரணத்தை எதிர்நின்று பார்ப்பதுதான். ஹெலிகாப்டர்கள் பழையவை. அரசு பராமரிப்பவை. அத்துடன் இந்திய ஹெலிகாப்டர்கள் பனிப்பொழிவை எதிர்கொள்ளத்தக்கவை அல்ல. பலமுறை அமைச்சர்களே விபத்துக்குள்ளாகி மறைந்துள்ளனர். 2011ல் அருணாச்சல் முதல்வர் டோர்ஜி காண்டுவும் நால்வரும் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தனர்.
ஹெலிகாப்டர் வரவில்லை என்பது உறுதியாகியது. ஆகவே காரிலேயே கௌஹாத்திக்கு புறப்பட்டோம். ஆனால் எங்கள் ஸைலோ கார் வழியில் முக்கி முக்கி நின்றுவிட்டது. ஒரு கிலோமீட்டர் ஓடும், நின்றுவிடும். வழியில் ஓரிடத்தில் பழுதுபார்க்கச் சென்றோம். அங்கே ஒருமணிநேரம் தாமதம். அங்கே பார்க்கத்தக்க பழுது அல்ல என்று தெரிந்தது இறுதியாக முன்னா காம்ப் என்னும் இடத்தில் நின்றுவிட்டது.
இன்னொரு வண்டிக்கு போனிலேயே பேசி ஏற்பாடு செய்தோம். ஒரு சிறிய கடையில் ஒரு மணிநேரம் காத்திருந்தோம்.இப்பகுதியில் சிறிய வீடுகள், கடைகள் கூட ஏராளமான பூந்தொட்டிகளுடன் அழகாக பேணப்படுகின்றன. டீ குடித்தோம். ஒருவழியாக ஒரு வண்டி வந்தது. ஏற்கனவே அதைப்போன்ற ஒரு வண்டியை பார்த்து கேலிசெய்திருந்தோம். அதைவிட மோசமான வண்டி. டாட்டா சுமோ. அதன் சக்கரங்கள் பரிபூரணமான வழுக்கை.
ஆனால் வேறுவழியில்லை. ஓட்டுநர் இரவு பத்துமணிக்கே கௌஹாத்தி கொண்டுசென்று விட்டுவிடுவதாகச் சொன்னான். ஏழு மணி நேரம் பயணம் என்றது கூகிள். அப்போது முன்மதியம் பதினொரு மணிதான். அப்படியென்றால் போய்விடலாமே என முடிவெடுத்தோம். வெறும் 295 கிமீதான் இருந்தது. ‘ஒய் நாட்?’ என்றார் காப்டன் கிருஷ்ணன். ‘சலோ கௌஹாத்தி!”
எத்தனை அப்பாவிகள் என எங்கோ எவரோ சிரித்திருக்கவேண்டும். டாட்டா சுமோ எங்களை அதிரடித்தது. பாதை மொத்தமாகவே ஒரு மாபெரும் ஸ்க்ரூ போலிருந்தது. சுழன்று சுழன்று சுழன்று….மாலையானதும் நான் சொல்லிவிட்டேன். இனி பயணம் செய்ய என்னால் முடியாது என்று. ஒருவழியாக கிருஷ்ணனும் அந்த வண்டி அப்படி போய் சேர்ந்துவிடாது என்பதை ஒப்புக்கொண்டார். தங்க இடம் தேடினோம்.ஷெர்கோவான் என்னும் இடத்தில் ஒரு விடுதி கிடைத்தது.
நல்ல விடுதிதான். புதியதாகக் கட்டப்பட்டது. கித்தாரெல்லாம்கூட வைத்திருந்தனர். பாலாஜி ,சந்திரசேகர் ஆகியோர் அதை கையில் வைத்துக்கொண்டு படம் எடுத்துக்கொண்டனர். அது வீணை என்று சந்திரசேகர் கண்டுபிடித்தார். கவுண்டராக இருந்தும்கூட அது ஓர் இசைக்கருவி என அவரால் கண்டடைய முடிந்தது எனக்கு மகிழ்ச்சி அளித்தது.சமையலறை இருந்தது. அங்கேயே சப்பாத்தி சுட்டு சாப்பிடத்தந்தனர். நான் எதுவும் சாப்பிடாமல் படுத்துக்கொண்டேன். அங்கே ஒரு சிறு நூலகத்தில் ஹெலென் கெல்லரின் வாழ்க்கை வரலாறு இருந்தது. க.நா.சு மொழியாக்கத்தில் முன்னர் வாசித்திருந்தேன். இன்னொருமுறை வாசித்தேன்.
கண்,காது, வாய் மூன்றையும் இழந்த ஹெலென் உலகை அறிமுகம் செய்துகொள்வது இப்போதும் எனக்கு ஒரு மாபெரும் ஆன்மிக நிகழ்வாகவே தெரிந்தது. குளிர், தென்றல், சூடு ஒவ்வொன்றுக்கும் சொற்கள் உண்டு என அவர் அறிந்துகொள்கிறார். அதேபோல அன்பு, பாசம், வெறுப்பு அனைத்துக்கும் சொற்கள் உண்டு என. சொற்கள் வழியாகவே அவ்வுணர்வுகளை தனித்தனியானவையாக அவர் பிரித்துக்கொள்கிறார். மொழி வழியாக அறிகிறாரா, மொழி வழியாக அவற்றை புனைந்துகொள்கிறரா என்பது முடித்துச் சொல்லிவிட முடியாத ஒரு வினா.
ஆத்மா புறவுலகை கண்டடைவதில்லை, தன்னைத்தானே புறவுலகின் வழியாக கண்டடைகிறது என்னும் பௌத்த மெய்யியல் கொள்கை நினைவுக்கு வந்தது. ஆகவேதான் அது ஒவ்வொரு முறை உலகப்பொருள் ஒன்றை முதன்முறையாக அறியும்போதும் துணுக்குறுகிறது. அந்த அறிதலை அகப்பொறிநிகழ்வு – அந்தகரண விருத்தி என்றே நூல்கள் சொல்கின்றன. அறியபப்டுவது அகமே.
இத்தகைய பயணங்களிலும் எதையாவது படிக்கவேண்டுமா என்ற கேள்வி எனக்கெ உண்டு. ஆனால் இப்படி சம்பந்தமில்லாத இடங்களில் படித்த நூல்கள் நன்றாகவே நினைவில் நீடிக்கின்றன. படித்த இடம்கூட அப்படியே நினைவில் அமைந்துவிடுகிறது. ஹெலென் கெல்லர் என்றாலே இனி இந்த விடுதியைத்தான் நினைத்துக் கொள்வேன் என நினைக்கிறேன்.
இரவில் நெடுநேரம் சுழன்று சுழன்று தூங்கத்திற்குள் அலைந்து கொண்டிருந்தேன். என் உடலுக்குள் இருந்த திரவங்கள் சுழற்சிக்குப் பழகிவிட்டன. உடல்நின்றாலும் அவை இன்னும் நிலைகொள்ளவில்லை. அத்திரவங்களில் நுண்மையான அலையென என் பிரக்ஞை. நீருக்கு தன்னினைவு உண்டு என்றும், அதை உலோகங்களை கலந்து மாற்றியமைப்பதே ஹோமியோபதியின் செயல்முறை என்றும் சொல்கிறார்கள். என் திரவநினைவில் இந்த மலை புகுந்துவிட்டிருக்கிறது
விடுதியில் இருந்து காலையில் எழுந்து கிளம்பினோம். முந்தைய முழுநாளும் காற்றில் இறகுபோலச் சுழன்றிறங்கிக்கொண்டிருந்தோம்.பனிபடர்ந்த மலைகள் மறைந்தன. மரங்கள் செறிந்த காடுகள் வந்தன. வெம்மை தொடங்கியது. அதாவது முந்தைய பனியோடு ஒப்பிட வெம்மை. மற்றபடி நம்மூர் குளிர்காலக் குளிர் உண்டு. கிளம்பும்போது மதியம்தாண்டி கௌகாத்தி என்னும் கணக்கு இருந்தது. தெய்வம் தோற்கடிக்கிறது என்பதனால் மனிதன் கணக்குபோடாமல் இருந்துவிடுகிறானா என்ன? கிருஷ்ணன் மனிதருள் ஒரு மனிதர்.
சாலை மேலும் குறுகிய வளைவுகளாக ஆகியது. நான் என்னை ஒரு பேனாவாக உணர்ந்தேன். என்னைக்கொண்டு சுழித்துச் சுழித்து எவரோ எழுதிக்கொண்டிருந்தார்கள். விரிந்த மலைச்சரிவுகளில். மலையாளத்தில் எழுதுகிறார்கள் என உணர்ந்தேன். எல்லா எழுத்துக்களுமே வளையங்கள்தான். தமிழில் ஒரு ட அல்லது ப போடமாட்டார்களா என ஏங்கினேன்.
வழியில் ஓர் இடத்தில் டீ குடிக்க நிறுத்தினோம். கீழே பார்த்தால் ஒரு செம்பாலான புத்தர் சிலை நீல தார்ப்பாயால் பாதி மூடப்பட்டிருந்தது. புத்தர்சிலை செய்யும் கலைக்கூடம். உடனே கீழிறங்கிச் சென்றோம். எங்களை தமிழ்நாட்டில் இருந்து வருவதாகச் சொல்லி அறிமுகம் செய்துகொண்டோம். அவர்கள் உபசரித்து சிலைகளை காட்டினர்
பத்தடி உயரமான ஒரு புத்தர் சிலை தயாராகிக்கொண்டிருந்தது. இரும்பாலான அடிப்படைக் கட்டுமானம் மீது செம்புத்தகடுகளாலான சிலைப்பகுதிகளை பொருத்தி, உருக்கி ஒட்டி, சிலையை செய்துகொண்டிருந்தனர். செம்புத்தகடாலான சிலைப்பகுதிகள் உலையில் காய்ச்சி வார்க்கப்பட்டு சுத்தியலால் அடிக்கப்பட்டு நுண்மைகள் செதுக்கப்பட்டு தயாராகிக்கொண்டிருந்தன
தரையில் விரல்கள் தனித்தனியாகக் கிடந்தன. மிகப்பெரிய விரல்கள். அந்த புத்தர் கால்வாசி செய்யப்பட்டு பின்பக்கம் இருந்தார். இருபதடி உயரமானவர். அவருடைய ஒரு பகுதி மட்டும் உருவாகி வந்திருந்தது. ஆனால் இரு சிலைகளிலும் ஊழ்கத்திலாழ்ந்த முகம் இருந்தது.
சிறிய சிலைக்கு ஐம்பது லட்சம் ஆகும் என்றும், பெரிய சிலைக்கு ஒருகோடிக்கு சற்றுமேல் ஆகும் என்றும் சொன்னார்கள். சிறு சுத்தியலால் சிலையின் ஆடையாக அமையப்போகும் பகுதியில் மிகச்சிறு பூவேலைப்பாடுகளை இரு இளைஞர்கள் செதுக்கிக் கொண்டிருந்தார்கள்.
நாம் தென்னகத்தில் இத்தனை பெரிய உலோகச்சிலைகளைச் செய்வதில்லை. இங்குள்ள நமது பெரிய சிலைகளெல்லாமே கருங்கல்லால் ஆனவை. திபெத்திய பௌத்தத்தில் கல்லால் சிலை வைப்பது மிகக்குறைவு– அனேகமாக இல்லை என்றே சொல்லவேண்டும். அங்கே நல்ல கல் உண்டுதான். ஆனால் கற்சிற்பக்கலை உருவாகவில்லை. அதற்கான காரணங்கள் என்ன என தெரியவில்லை. சமணச்சிலைகள் பெரும்பாலும் கல்லால் ஆனவை என்பதை ஒப்பிட்டு யோசிக்கவேண்டும். இந்தியப்பெருநிலத்தில் மாபெரும் கல்புத்தர்கள் ஏராளமாக உள்ளனர்
திபெத்திய புத்தர்கள் மரத்தால் செய்யப்பட்டு பொன்பூசப்பட்டவர்கள். அல்லது இதைப்போல செம்பு தகடுகளாலானவர்கள். அண்மையில் சிமிண்டால் ஆன சிலைகளைச் செய்கிறார்கள். அவை சிலைகள் அல்ல, பெரிய கட்டிடங்கள். பெருஞ்சிலைகள் பெரும்பாலும் அமுதவர்கள். மிக அரிதாகவே மைத்ரேயர்கள். லடாக்கில் சில இடங்களில் மலைப்பாறையில் மெல்லிய கோடாகவோ புடைப்பாகவோ புத்த மைத்ரேயர் சிலைகளை செதுக்கியிருக்கிறார்கள்.
நம்மூர் உலோகச் சிலைகள் பொள்ளல், வார்ப்பு என இரு முறைப்படி செய்யப்படுகின்றன. இந்த சிலையை பொள்ளல் முறைப்படி செய்யப்பட்டது என வகுக்கலாம். இது எங்கே அமையப்போகிறது என்று கேட்டு அங்கே சென்று பின்னர் பார்க்கவேண்டும் என நினைத்தேன். அதன்பின் அப்படி பெரிய பெரிய கடன்களை இந்த வயதுக்குமேல் சேர்த்துக்கொள்ள வேண்டியதில்லை என விட்டுவிட்டேன்.
மீண்டும் படியேறி வந்து காரில் கிளம்பினோம். மாலைக்குள் சென்றடைந்துவிடலாமென நம்பினோம். எத்தனை தோற்கடிக்கப்பட்டாலும் மனிதன் திட்டமிடாமல் இருப்பதில்லை. கிருஷ்ணன் திட்டமே இயல்பாக ஆனவர். மாலைக்குள் செல்லும் வழியில் பார்க்கவேண்டிய ஓர் அருவியை திட்டமிட ஆரம்பித்தார். ஆனால் அவர் ஆணையிட வழி, நேரம் எல்லாவற்றையும் புதிய ‘அப்ரசண்டி’யான பாலாஜிதான் செய்யவேண்டும். நடுவே பாலாஜி சந்திரசேகரை போட்டோக்கள் எடுக்கவேண்டும்.
சந்திரசேகர் தன் மகனின் கறுப்புக் கண்ணாடியை கொண்டு வந்த சந்திரசேகர் வெளிச்சமுள்ள இடத்தை பார்த்ததுமே ‘பாலாஜீ’ என்பார். ‘பாஸ்’ என காமிராவுடன் பாலாஜி எழுவார். கணிசமான புகைப்படங்களில் கண்ணில்லா சந்திரசேகரின் பெரிய முகமும் பின்னணியில் ஏதோ சில மங்கலான காட்சிகளும் பதிவாகியிருக்கின்றன. சந்திரசேகருக்கு எதிர்காலத்தில் மொட்டையடித்துக்கொண்டு அகன்ற புன்னகையுடன் தன் கணிப்பொறி நிறுவன விளம்பரங்களில் நடிக்கும் எண்ணம் உண்டு. இளம்நடிகைகளுடன் நடனமும் ஆட விருப்பம்.
சந்திரசேகரின் கறுப்புக்கண்ணாடி அணிந்த தோற்றத்தைப் பார்த்து பார்த்து பழகிப்போய் புத்தருக்கு கறுப்புக் கண்ணாடி இல்லாமல் முகம் மழுக் என இருப்பதுபோல தோன்றலாயிற்று. ‘உலகம் நம்மை பார்க்கவேண்டும், நாம் நம்மையே பார்க்கவேண்டும்’ என்னும் கொள்கையின் வடிவம் கறுப்புக் கண்ணாடி. அதுவும் ஒரு தத்துவம்தானே?
வழியில் கார் சக்கரம் காற்றிழந்து நின்றுவிட்டது.மொட்டைச்சக்கரத்துடன் அந்த வண்டி எப்படி அதுவரை வந்தது என்பதே விந்தைதான். கார்ச் சக்கரம் உபரியாக இருந்தது. அதாவது இன்னும் மொட்டையான ஒன்று. ஆனால் தூக்கி இல்லை. ஓட்டுநருக்கு கவலை இல்லை. எங்களுக்கும்தான். சாலையில் பேசிச்சிரித்து நின்ற எங்களைக் கண்டால் அப்படி சிரிப்பதற்காக நாங்களே வண்டியை நிறுத்தியிருப்பதாகவே தோன்றும்.
சாலையில் அனேகமாக போக்குவரத்து இல்லை. அவ்வப்போது கௌஹாத்தி லாரிகள். ஏனென்றால் அது மையப்பாதை அல்ல. இன்னொரு பாதை உள்ளது. அதன் வழியாகச் செல்லலாமே என ஏற்கனவே ஓட்டுநரிடம் கேட்டோம். ‘அது நல்ல சாலைதானே?” என்றோம். அவரும் ஒப்புக்கொண்டார். “ஆனால், அந்த வழியாக போகவேண்டுமென்றால் லைசன்ஸ் கேட்பான்” என்றார்.
ஒருமணி நேரத்தில் ஒரு டிரக் நின்றது, அவர்களிடம் தூக்கி இருந்தது. சக்கரம் மாற்றிக்கொண்டிருந்தபோது அந்த ஓட்டுநர் கேட்டார். “என்னிடம் தூக்கி இல்லை என்றால் என்ன செய்வாய்?” எங்கள் ஓட்டுநர் “எவரிடமாவது இருக்கும்” என்றார். “இதுவே இரவென்றால் நான் நிறுத்தியிருக்க மாட்டேன்” என்றார் அந்த ஓட்டுநர். “எவராவது நிறுத்துவார்கள்” என்றார் எங்கள் ஓட்டுநர். மானுடம் மீதுள்ள்ள நம்பிக்கையே அவருக்கு லைசன்ஸை விட வண்டியோட்ட அவசியமாக இருந்திருக்கிறது
முறையான லைசன்ஸ் இல்லாமையால் பூட்டான் எல்லைக்குள் நுழைந்து பலவகையான கிராமங்களின் வழியாகச் சென்றோம். கேரளம்போலிருந்தது நிலக்காட்சி. குழந்தைகள் கூட்டம் கூட்டமாக பள்ளியில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தன. சிறுமிகளும் சிறுவர்களும் சைக்கிளில் சாலைகளில் சென்றனர். இனிமையான ஒருவகை மணிவெளிச்சம். அறுவடை முடிந்த வயல்கள்.
ஒருவகை இனிய சலிப்பு நிறைந்த மதியம். அரைத்தூக்க நிலையில் அந்த நிலத்தை பார்த்துக்கொண்டு காரில் அமர்ந்திருந்தோம். எங்கெங்கோ சென்றுகொண்டிருந்தது வண்டி. புழுதிமண்டிய கிராமத்துச் சாலைகள். சிறு சிறு ஓடைகள் குறுக்கே செல்லும் வயல்பக்கச் சாலைகள். பூட்டானுக்குள் நுழைந்து மீண்டும் அஸாமுக்குள் திரும்பி மீண்டும் பூட்டானுக்குள் சென்று… ஆனால் எங்கும் வறுமை கண்ணுக்குப்படவில்லை. ஆங்கிலக்கல்வி நன்றாக உள்ளது என சீருடைகளும், வழிதோறும் தெரிந்த பள்ளிகளும் காட்டின.
கௌஹாத்தியை வந்தடைந்தபோது இரவு பத்து மணி கடந்துவிட்டிருந்தது. ஓர் அரைநட்சத்திர விடுதியில் அறைபோட்டோம். வசதியாகவே இருந்தது. நல வெந்நீர். அது வரை எல்லா இடங்களிலும் ஒரு பக்கெட் வெந்நீர்தான் கிடைத்தது. வியர்வை இல்லை என்பதனால் சூடான நீரை அள்ளி உடலில் விட்டுக்கொண்டாலே போதும் என்னும் நிலை இருந்தது. இங்கே வரும் வழி முழுக்க புழுதி. அருணாசலப்பிரதேசமே புழுதியாக மாறி அஸாம் நோக்கி இறங்கிக் கொண்டிருப்பதுபோல. நன்றாகக் குளித்தபோதுதான் மீளமுடிந்தது
(மேலும்)