எழுகதிர்நிலம்- 6

நாங்கள் 2011ல் பூட்டான் சென்றபோது அங்கே முதன்மையாக சென்ற இடம் புலிக்குகை மடாலயம். செங்குத்தான மலையுச்சியில் அமைந்துள்ள அந்த பௌத்த ஆலயம்  பத்மசம்பவர் லடாக்கில் இருந்து ஒரு புலிமேல் வந்திறங்கிய இடம் எனப்படுகிறது. அங்குள்ள ஒரு குகையில் அவர் தவம் செய்தார் என்று நம்புகிறார்கள். பத்மசம்பவர் பூட்டான் செல்வதற்கு முன் அதே புலியில் வந்திறங்கி தவம் செய்து சென்ற இன்னொரு இடம் அருணாசல பிரதேசத்திலுள்ள புலிக்குகை மடாலயம்.

அங்கே செல்வதற்கு முடிவெடுத்து முன்னரே சொல்லிவைத்திருந்தோம். ஆனால் அங்கே செல்ல தனி அனுமதி தேவை என பின்னர் தெரிந்தது. பலவகை ராணுவ அனுமதிகள் பெற்றிருந்தாலும் அதைப் பெறவில்லை. செல்ல முடியாமல்போகும் என்னும் எண்ணம் சோர்வளித்தது. ஆனால் எங்கள் ஓட்டுநர் லக்கியின் சொந்த ஊரே அதுதான். அவர் எங்களை அழைத்துச் சென்றார்.

லக்கி ஓர் அற்புதமான பாடகர். அவரே பாடி இசைக்குறுவட்டுகள் வெளியிட்டிருக்கிறார். இதாநகரிலும் கௌகாத்தியிலும் இசையமைக்கப்பட்டவை. அவற்றை வண்டியில் எங்களுக்குப் போட்டுக் காட்டினார். பொதுவாகவே வடகிழக்கினரின் குரல் ஆழ்ந்தது, கனமானது. அதை இன்னும் ஆழ்ந்து பாடுகிறார்கள். பஞ்சாபில் எல்லா பாட்டும் குத்துப்பாட்டுதான். வடகிழக்கில் எல்லா பாட்டுமே மெலடிதான். டான்ஸ் ஐட்டம் என ஒன்றை போட்டுக்காட்டினார், அவரே பாடியது. அதுவும் கொஞ்சம் மெலடிதான்.

புலி மடாலய வாசலில் லக்கி எங்களுக்காக ஒரு பாட்டை பாடினார். பின்னர் அதை இன்னொரு முறை பாடச்சொல்லி பதிவுசெய்துகொண்டோம். விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்திற்காக உங்கள் லக்கி டென்சின் அளிக்கும் பாடல்.

புலிமடாலயத்தின் அருகே சென்ற இரண்டாண்டுகளாகத்தான் புதிய கட்டிடங்கள் கட்டப்படுகின்றன என தெரிந்தது. பெரும்பாலும் எவருக்கும் பெரிதாகக் கட்டிடக்கலை தெரியவில்லை என்றும் தெரிந்தது. தோராயமாக கட்டிக்கொண்டிருந்தனர். எதிரே உள்ள மலைமேல் புலிக்குகை உள்ளது. பத்மசம்பவர் வந்தமர்ந்த இடம் அது. அங்கே செல்ல கொடிபோல மலைச்சரிவில் வளைந்தேறிச் செல்லும் ஒற்றையடிப்பாதை. கோடையில் மட்டுமே அங்கே செல்லமுடியும் என்றார் லக்கி. குளிர்காலத்தில் உள்ளூர் வேடர்கள் செல்வார்களாக இருக்கும்.

புலி மடாலயம் பழைமையானது. அங்கே எங்களைத் தவிர எவருமே இல்லை. பனி மலைச்சரிவில் இருந்து வழிந்து இறங்கி பரவியிருந்தது. அப்பால் ஊசியிலை மரங்கள் அடர்ந்த காடுகள் பனிமூடி நின்றிருந்தன. வானின் நீலநிறம் கண்ணை பறிப்பது. வான்நீலம் என நாம் ஒரு மங்கல்நிறத்தைச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். இமையப்பனிமலைகளின்மேல் நின்றிருக்கும் வானம் அடர்நீலநிறம் கொண்டது. நீல வைரத்தின் நிறம்.

சுடர்விடும் ஒளி. சூரிய ஒளிக்கு அப்படி ஒரு சுடரழகை நம்மூரில் பார்க்க முடியாது. இங்கே தூசியை ஒளி சுடரச்செய்து, ஒரு படலத்தை அனைத்தின்மேலும் போர்த்திவிடுகிறது. காற்றிலுள்ள நீராவி ஒளியை தடுத்து காட்சிகளை மங்கலாக்குகிறது.பனிநிலங்களில் பனியே தூசியை மண்ணுக்கு கொண்டுவந்துவிடுகிறது. காற்றிலுள்ள நீராவி பனியாக பொழிந்துவிடுகிறது. ஆகவே துல்லியமான ஆகாயம்.  துல்லியமான காற்று. சுடரொளி. சுட்டும் விழிச்சுடரின் ஒளி. கண்ணனின் நிறமென பாரதி கண்ட நிறம். 

ஆனால் நேரடியாக முகத்தை அறைந்தது ஒளி. சில நிமிடங்களிலேயே தோல் சுடத்தொடங்கும். வெயிலும் பனிக்குளிருமாக முகங்களை கருகச் செய்துவிடும். இங்குள்ள மலைமக்கள் பொன்னிறமானவர்கள். ஆனால் முகங்கள் வெந்தவை போலிருக்கும். குழந்தைகளின் கன்னங்கள் ஆப்பிள் போலவே சிவந்திருக்கும். பெண்களின் கன்னங்களை நான் கூர்ந்து பார்ப்பதில்லை, இக்கட்டுரையை அருண்மொழி படிப்பாள் என்பதனால்.

புலி மடாலயம் (Taktshang Monastery) ஒரு மலைவிளிம்பில் உள்ளது. கீழிருந்து நோக்கினால் பறவைக்கூடு போல தெரியும் என்கிறார்கள். மூன்று அடுக்கு கொண்டது. மூன்றடுக்குகளிலும் தனித்தனியாக புத்தரின் சன்னிதிகள். உள்ளூர் வழிபாட்டாளர்கள்தான் அதிகமும் வருகிறார்கள் போல தோன்றியது. புத்தர், போதிசத்வர் கைகளிலெல்லாம் ரூபாய்களை மடித்து செருகி காணிக்கை செலுத்தியிருந்தனர். பொன்னிறப்பூச்சுள்ள மரச்சிலைகள். மைத்ரேயர், அமிதாபர், யோகாரூடர்.

உறைந்து கிடந்த பனிமேல் வெறுங்காலை தூக்கி வைத்து மடாலயத்தின் சுற்றுப்பிராகரத்தில் நடந்தோம். அரையிருள் நிறைந்திருந்த கருவறைக்குள் அமர்ந்திருந்த புத்தரை வணங்கினோம். பொயு எட்டாம் நூற்றாண்டில் பழைய காந்தார நாட்டில் அரசகுடியில் பிறந்து, பௌத்த யோகஞானம் அடைந்து, திபெத்திற்குச் சென்று, அங்கே வஜ்ராயன பௌத்த மரபை நிறுவிய பத்மசம்பவர் பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன். ( ஒரு மாவீரரின் நினைவில்...

மடாலய வளாகத்தில் உள்ளூர் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தன. மஞ்சள்நிறக் குழந்தைகளுக்கு ஒரு வகையான பொம்மைத்தன்மை உள்ளது. குழந்தைத்தன்மையின் அடையாளமே மூக்குப்பாலம் சப்பையாக இருப்பதுதான், இக்குழந்தைகளுக்கு எப்போதுமே மூக்கு மேலெழுவதில்லை. (எனக்கு அறுபது வயதான ஜாக்கிச்சான் சிறுவனாகவே தெரிகிறார்) 

ஒரு பையன் எங்களை திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான். அருகே போனால் ஓடிவிடுவான் என நினைத்தேன். ஆனால் பயமெல்லாம் இல்லை. நான் கன்னத்தை தொட்டு கொஞ்சினேன், எந்த உணர்ச்சியுமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான். உண்மையாகவே பயமில்லை. மலையின் விளிம்பில் அபாயகரமான சாலையில் ஒரு கையால் வண்டியோட்டவிருப்பவன். இசைப்பாடலை பாடி வெளியிடவிருப்பவன்.  

தவாங் நகருக்கு வந்துசேர்ந்தோம். அங்கே சுற்றுலாத்தொழில் சென்ற ஐந்தாறாண்டுகளாகச் சூடுபிடிக்க ஆரம்பித்திருப்பதன் தடையங்கள் எங்கும். ஏராளமான புதிய கடைகள், புதிய தங்கும் விடுதிகள், புதிய பௌத்த வழிபாட்டிடங்கள். தலாய்லாமாவின் கெலுக் பௌத்த மரபைச் சேர்ந்த பிரம்மாண்டமான அமிதாப புத்தரின் சிலை கான்கிரீட்டில் உருவாக்கப்பட்டிருந்தது. சுற்றிலும் இருந்த கட்டுமானங்களின் பணி இன்னமும் முடியவில்லை.

பின்னணியில் மலைமுகடுகளும் வானும் விரிந்திருக்க புத்தரின் முகம் தெரியும் காட்சி கிளர்ச்சியூட்டுவது. பேருருவம். பெரும்பாலான பேருருவங்கள் எனக்கு ஒவ்வாமையை உருவாக்குபவை. புத்தர் விதிவிலக்கு. எல்லா மாபெரும் புத்தர் சிலைகளுமே திகைப்பையும் அமைதியையும் அளிப்பவையாகவே உள்ளன. புத்தர் ஊழ்கத்தில் அமர்ந்திருப்பதுதான் காரணம் என நினைக்கிறேன்.

தவாங் பௌத்த மடாலயத்திற்குச் சென்றோம். மதிய உணவு சாப்பிடவில்லை. மடாலயம் ஐந்து மணிக்கு மூடிவிடுமென சொன்னார்கள். மூன்று மணிக்குத்தான் தவாங் நகருக்குள் நுழைந்தோம். ஆகவே நேராகவே மடாலயம் நோக்கிச் சென்றோம்.

தவாங் மடாலயம் இந்தியாவில் திபெத் பௌத்த மடாலயங்களில் தொன்மையான சிலவற்றில் ஒன்று. இந்தியாவின் பெரிய மடாலயங்களில் இதுவும் ஒன்று. தலாய் லாமா 1959 மார்ச் மாதம் 31 ஆம் தேதி  இங்கே வந்து , பின்னர் இமாச்சலப்பிரதேசத்தின் தர்மசாலாவில் அவருடைய தலைமையிடம் அமைவது வரை தங்கியிருக்கிறார். பெரிய நிறுவனம் இது.பல பகுதிகளிலாக கல்விக்கூடங்களும், துறவியர் தங்குமிடங்களும் உள்ளன. அடுக்கடுக்காக கட்டிடங்கள். மொத்தம் 65 கட்டிடங்கள் உள்ளன. அவ்வழியாகச் செல்லும் பாதை மையமான ஆலயத்தைச் சென்றடைந்தது.

தவாங் மடாலயத்ம் Gaden Namgyal Lhatse ( முழுவெற்றியின் புனித மலர்த்தோட்டம்) என அழைக்கப்படுவது. ஐந்தாம் தலாய் லாமாவின் ஆணைப்படி லாமா லோட்ரே கியாஸ்டோ (Lodre Gyatso) 1680ல் இந்த மடாலயத்தை அமைத்தார்.

அதைப்பற்றி ஒரு கதை சொல்லப்படுகிறது. லாமா லோட்ரே கியாஸ்டோ இங்கே வந்து மடாலயம் அமைக்க இடம் தேடியபோது எதுவும் அமையாமல் சோர்வுற்று ஒரு குகைக்குள் சென்று நோன்பிருந்தார். அவர் வெளியே வந்தபோது அவருடைய குதிரையை காணவில்லை. அவர் அதை தேடிக் கண்டடைந்தபோது அது ஒரு மலைமேல் மேய்ந்துகொண்டிருந்தது. அந்த மலையின் பெயர் Tana Mandekhang. அது பழைய மன்னர் Kala Wangpo அரண்மனையை அமைத்திருந்த இடம். கியாஸ்டோ உள்ளூர் மக்களின் உதவியுடன் அங்கே இந்த மடாலயத்தை கட்டினார்.

தவாங் மடாலயம் மூன்று அடுக்கு கொண்டது. இரண்டு அடுக்குகளின் உயரத்திற்கு மாபெரும் புத்தர் சிலை பொன் சுடர அமர்ந்துள்ளது. கீழிருந்து புத்தரை அண்ணாந்து பார்க்கலாம். பக்கவாட்டு படிகளில் ஏறிச்சென்று மேலே முகத்தருகே நின்றும் பார்க்கலாம். 

தவாங் மடாலயத்திலுள்ள ஒரு திரைச்சீலையில் வரைந்துள்ள Palden Lhamo என்னும் பெண் தெய்வம் ஒரு சிறப்பு எனப்படுகிறது. திபெத்திய பௌத்த மரபின் முதன்மை காவல்தெய்வமான மகாகாலதேவரின் பெண்வடிவம்தான் இது. இந்து தெய்வமான காளியின் சாயல் கொண்டது. உக்கிரமான தோற்றமுடைய இந்த தெய்வம் இலங்கையில் ஒரு கொடிய அரசனால் உபாசனை செய்யப்பட்டு அடிமையாக இருந்தது என்றும் அங்கிருந்து தப்பி அருணாச்சலப்பிரதேசம் வந்தது என்றும் தொன்மம் உள்ளது. அது ஓர் உள்ளூர்க்கதை. திபெத்திய தாந்த்ரீக மரபில் மகாகாலன் காலத்தின் உக்கிரத்தோற்றம். இது அதன் பெண்வடிவம். மேலும் தியானம் சார்ந்த அர்த்தங்கள் இதற்குள்ளன

திபெத்திய மடாலயங்கள் வெறும் வழிபாட்டிடங்கள் மட்டுமல்ல. திபெத்திய பௌத்தத்தில் தலாய் லாமா அரசரும்கூட. ஆகவே இது அவருடைய ஆட்சியின் கீழ் ஒரு துணைந்நிர்வாக மையமாகவே இருந்துள்ளது. அதிகாரக் கைமாற்றத்திற்கான பல மாறுதல்கள் இதை மையமாக்கி நிகழ்ந்துள்ளன. ஆனால் பிற அரசதிகார மாற்றங்கள் போல அவையெல்லாம் வன்முறை சார்ந்தவை அல்ல. தத்துவக்கொள்கைகள் நடுவே நடைபெற்ற போர்களைச் சார்ந்தவை.

1914ல் இந்த மடாலயமும் இதைச்சூழ்ந்துள்ள பகுதியும் திபெத்திய தலாய் லாமாவின் ஆதிக்கத்தில் இருந்து பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் வந்தன. வடகிழக்கு எல்லைப்புற நிர்வாகம் என்னும் பொது ஆட்சியமைப்பின் கீழ் பிரிட்டிஷ் அரசு இப்பகுதியை ஆட்சி செய்தது. அது பின்னர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 2009ல் தலாய் லாமா இங்கே வந்தமைக்கு சீனா கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது. ஆனால் அது இங்கே ஒரு திருவிழாவாகவே கொண்டாடப்பட்டது. 2017லும் தலாய் லாமா இங்கே வந்தார்.

ஏறத்தாழ எழுநூறு பிட்சுக்கள் இங்கே உள்ளனர். இந்த மடாலயம் 17 பௌத்த ஆலயங்களையும் இரண்டு துறவியர் மடங்களையும் இன்று நிர்வாகம் செய்து வருகிறது. மடத்திற்குச் சொந்தமான நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. மடத்தின் இப்போதைய தலைவர் கியால்ஸி ரிம்போச்சே (Gyalsy Rinpochey)யின் அவதாரமாகக் கருதப்படுகிறார்.

இந்த மடாலயத்தின் சுவர்களிலுள்ள மண்டலா என்னும் ஓவியங்கள் புகழ்பெற்றவை. உட்சுவர்கள் முழுக்க செறிந்த ஓவியங்கள் உள்ளன. அவற்றில் போதிசத்வர்களும் திபெத்திய பௌத்த தெய்வங்களும் பல்வேறு லாமாக்களின் ஓவியங்களும் உள்ளன. ஒட்டுமொத்தமாக இந்த மடாலயம் ஒரு பெரிய ஓவியத்தொகை போன்றது. பலநாட்கள் தங்கி ஆய்வுசெய்பவர்களே இதை ஓரளவேனும் பார்த்து முடிக்க முடியும்

மடாலயத்தின் மாபெரும் பிரார்த்தனைக்கூடத்தில் கருஞ்சிவப்பு கம்பிளி விரிக்கப்பட்ட மணைகள், வாத்தியங்கள் அரையிருளில் ஓர் ஓவியத்திலென அமைந்திருந்தன. பொன்னிற புத்தரின் பெருந்தோற்றம் எங்கிருந்தாலும் நம்மை அறிவதாகவும், நாம் நோக்குகையில் நம்மை நோக்காததாகவும் இருந்தது

பௌத்த மடாலயங்களில் நான் எப்போதுமே உணரும் ஆழ்ந்த தனிமையை, நிறைவை இம்முறையும் அடைந்தேன். ஆலயங்கள் எங்குமுள்ளன. இந்த பௌத்த மடாலயங்கள்தேவதாத்மா ஹிமாலயாஎன்னும் மாபெரும் மரத்தில் பழுத்த பழங்கள். 

முந்தைய கட்டுரைஎம்.எஸ்.கல்யாணசுந்தரம்
அடுத்த கட்டுரைமுகாம்கள், கடிதங்கள்