எழுகதிர் நிலம் 5

பிப்ரவரி 15 ஆம் தேதி தவாங் நகரில் ஒரு ‘ஹோம் ஸ்டே’ இடத்தில் தூங்கி எழுந்தோம். அங்கே இருட்டிய பின்னர் வந்து சேர்ந்தமையால் அறையின் தரம் பற்றி பெரியதாக கருத்தில் கொள்ளவில்லை. காலையில் எழுந்ததும் ‘பனிமலை தெரிகிறது, பனிமலை’ என ஒரே கூக்குரல். இளவெயிலில் தொலைவில் பனிமலை தெரிந்தது. அது நாங்கள் செல்லப்போகும் பும்லா பாஸ் என்னும் மலை.

எங்கள் ஸைலோ வண்டி மீண்டும் பழுது. இன்னொரு காரை ஏற்பாடு செய்துகொண்டோம். அதை ஓட்டியவர் லக்கி என பெயர் கொண்ட மோன்பா இளைஞர். டென்சின் என தொடங்கும் அசல் பெயர். இன்றைய தலாய்லாமாவின் இயற்பெயரிலும் இதேபோல டென்சின் உண்டு என நான் அவரிடம் சொல்ல மகிழ்ந்து சிரித்தார்.

வெள்ளிப்பனிமலை மேல் ஏறலானோம். உலாவ தோதில்லை, கால்கள் உறைந்துவிட்டிருந்தன. காரில் உலவினாலும் கணக்கில் சேர்த்திதான். பனியின் நிறம் மாறிக்கொண்டிருந்தது. இப்போது பனி அடர்வெண்மை, ஒளிபுகும் படிகம், கருங்கல்லின் கடுமை. கண்கூசும் வைரப்பரப்பு ஒன்றுக்குள் சென்றுவிட்டதுபோல.

உண்மையில் நல்ல வெயில் அடித்தது. ஆனால் அந்த வெயில் எங்கள் நான்கடுக்கு ஆடைக்குமேல் தொலைவில் எங்கோ விழுந்துகொண்டிருந்தது. வெயில் கண்கலங்கச் செய்தது. ஏற்கனவே பனி கலங்கச் செய்த கண்கள். அனைவர் மூக்கும் காரட், தக்காளி போல் இருந்தன. 

வழியெங்கும் ராணுவ வண்டிகள். சீன எல்லை பும்லா பாஸ் கணவாய்க்கு அப்பால் உள்ளது. அருணாசலப்பிரதேசம் அண்மைக்காலம் வரை முழுக்கமுழுக்க ராணுவத்தால் மட்டுமே ஆளப்பட்ட நிலம். ஆள்வதும் ஆளப்படுவதும் ராணுவம். மக்கள் அனேகமாக இல்லை. அந்த வழி பண்டைக்காலத்தில் சீனாவுடன் (அல்லது சீனப்பகுதியான திபெத்துடன்) அருணாச்சலப்பிரதேச மக்கள் தொடர்பு கொண்டுவந்த வணிகப்பாதை. கோடையில் மட்டும் கழுதைகள் செல்லும். அதாவது இரண்டு மாதம். எஞ்சிய காலம் முழுக்க பனியமைதி.

பலர் அறிந்திராத ஒன்றுண்டு. திபெத் என்பது ஏதோ இமையமலைமேல் இருக்கும் ஒரு சின்னஞ்சிறு நிலம் அல்ல. திபெத் ஒருகாலகட்டத்தின் பேரரசு. அப்போது திபெத் ஆட்சியில் இருந்த நிலத்தின் அளவை நோக்கினால் மொத்த இந்தியாவை விட பெரியது. அதன் எழுபது விழுக்காடு இன்று சீனாவுடன் உள்ளது. பூடான், அருணாசலப்பிரதேசம், சிக்கிம், லடாக், ஸ்பிடி சமவெளி ஆகியவையும் அடங்கியது பழைய திபெத். 

சீனா மொத்த திபெத்தும் தன்னுடையதென நினைக்கிறது. இந்த உச்சிப்பனிமலையை அது குறிவைப்பது இங்குள்ள அளவில்லாத கனிமவளத்தின்பொருட்டு. இந்தியா இங்கே இன்னமும் கனியகழ்வை தொடங்கவில்லை. இன்று இந்நிலத்தை இந்தியப்பெருநிலத்துடன் வணிகம் பண்பாடு ஆகியவற்றால் இணைப்பதையே நாம் செய்துவருகிறோம். அவ்விணைப்பு அண்மையில் பெரும்பாலும் முடிந்துவிட்டது என்பதை அருணாச்சலப்பிரதேசம் செல்லும் எவரும் காணமுடியும்

1962 செப்டெம்பர் 8 ல் சீனா போரைத்  தொடங்கும் வரை இப்பகுதியைப் பற்றிய எந்த புரிதலும் இந்திய அரசிடம் இருக்கவில்லை. இங்கே முறையான ராணுவநிலையங்கள் இருக்கவில்லை. பிரிட்டிஷார் உருவாக்கிய ராணுவநிலைகள் மட்டும் பெயரளவுக்கு அப்படியே நீடித்தன. அங்கே பழைய முதல் உலகப்போர்க்கால ரைஃபிள்களுடன் பழைய பிரிட்டிஷ் ராணுவப்பயிற்சி பெற்ற வீரர்கள் காவலிருந்தனர்.

அருணாசலப்பிரதேசத்தில் கண்ணுக்குப்படும் எல்லா ராணுவ வீரர்களும் இன்று இளைஞர்களாகவே இருந்தார்கள். ஓரிருவர் தமிழர்கள். பார்த்ததுமே தெரிந்தது. ஒருவர் வேலூர், இன்னொருவர் சங்கரன்கோயில். கொதிக்கும் சங்கரன்கோயிலை இந்தப் பனிவெளியில் இருந்து நினைத்துக் கொள்வாரா? இன்று தங்குமிடங்கள் வசதியானவை.பனியாடைகளும் உகந்தவை. அவருடைய முன்னோர் இங்கே யாக்குகளைப்போல பனியில் வாழ்ந்திருக்கிறார்கள். தல்வி எழுதும் குறிப்பில் கால்களில் புல்லை சுருட்டி பெரிய பந்து போல கட்டிக்கொண்டு பணியாற்றிய ராணுவ வீரர்களைப் பற்றி எழுதியிருக்கிறார்.

ஆனால் இன்றும்கூட பிற பகுதிகளுடன் ஒப்பிட அருணாச்சலப்பிரதேசத்தின் ராணுவ மையங்கள் எளிமையான கட்டிடங்களே. பெரிய வளைப்புகள் இல்லை. உயர்ந்த காவல்மாடங்களுமில்லை. அங்கே கட்டிடங்களை எழுப்புவது இன்னமும்கூட செலவேறிய, கடுமையான ஒரு செயலாகவே இருக்கிறது.

இன்று அருணாச்சலப்பிரதேசத்தின் மலையடுக்குகள் முழுக்க அக்காலகட்டத்தின் ‘பங்கர்’ என்னும் கல்கட்டுமானங்கள் கைவிடப்பட்டு கிடக்கின்றன. மலையில் இருந்து கற்களைப் பொறுக்கி, சிமிண்ட் இல்லாமல் அடுக்கி, கட்டப்பட்ட நான்கடி உயரமான எட்டடிக்கு எட்டடி கட்டுமானங்கள் அவை. தரையோடு தரையாக அமைந்து, பனிமூடி கிடக்கின்றன. அவற்றில் எப்படி மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்பதே திகைப்பூட்டும் கற்பனை.

அன்று உணவு கழுதைப்பாதை வழியாக வரவேண்டும். எரிபொருளாக பெரும்பாலும் விறகுகளையே பயன்படுத்தியிருக்கின்றனர். ராணுவ வாகனங்கள் முதன்மையாக கழுதைகள். நடைமுறையில் உணவு அங்கேயே வேட்டையாடி பெறப்பட்டது அங்கே நியமிக்கப்படும் படைவீரர்கள் பலசமயம் ஆண்டுக்கணக்கில் மறக்கப்பட்டு அங்கேயே வாழநேரிட்டது. சாலைகள் துண்டிக்கப்பட்டால் ஓராண்டுகூட தொடர்பில்லாமல் ஆகிவிடும் நிலை இருந்தது. இந்தியாவின் சீனப்போர் பற்றிய நூல்களில் இவற்றை வாசிக்கலாம்.

நேரு உலகம் நல்லெண்ணத்தால் இயங்குவது என நம்பிய இலட்சியவாதி. சீன கம்யூனிஸ்டு அரசு பற்றி அவருக்கிருந்தது கற்பனாவாதப் புரிதல். பொதுவாகவே அவருக்கு கம்யூனிசம் பற்றிய மெல்லிய பரவசம் இருந்தது. அதை சோஷலிசம் என சொல்லிக்கொண்டார். சீனாவுக்கு ஆதரவாக அவர் ஐநா சபையில் குரலெழுப்பினார். ஆகவே சீனா இந்தியாவின் நண்பன் என நம்பினார். 1954ல் பஞ்சசீலக் கொள்கையில் சீனா கையெழுத்திட்டது. இந்தி-சீனி பாய்பாய் முழக்கம் அன்று ஓங்கியிருந்தது. இந்திய இடதுசாரிகளுடன் ஒரு தேனிலவில் இருந்தார்.

ஆனால் சீனா அப்போதே இந்தியாவை தாக்கும் கனவில் இருந்தது. அதற்கு எதிர்காலத் திட்டங்கள் இருந்தன. உண்மையில் 1950 முதலே சீனா திபெத்திற்குள் ஊடுருவத் தொடங்கிவிட்டிருந்தது. திபெத்தின் எல்லையில் பிரிட்டிஷார் உருவாக்கியிருந்த ராணுவக் காவல்நிலைகளை நேரு சீனா கேட்டுக்கொண்டதன்பேரில் நீக்கினார். அதைப் பயன்படுத்தி சீனா மக்மோகன் எல்லைக்கோட்டை மீறி திபெத்துக்குள் நுழைந்தது. அதை நேரு எதிர்க்கவில்லை. அது நட்புநாடுகளுக்குள் பேசிமுடிக்கவேண்டிய சிறு பிரச்சினை என நினைத்தார்.

1959ல் திபெத்தை சீனா கைப்பற்றியது. தலாய் லாமா இந்தியாவுக்கு தப்பி வந்தார். அப்போதுகூட இந்தியா கடும் எதிர்ப்பை அளிக்கவில்லை. சீனா இந்தியாமேல் படைகொண்டுவருமென நினைக்கவுமில்லை. எதிர்ப்பே இல்லாமல் சுதந்திரதேசமான திபெத் சீனாவின் ஆதிக்கத்தின்கீழ் சென்றது. இன்றுவரை சுதந்திரப்போராட்டம் அங்கே நிகழ்ந்துகொண்டிருக்கிறது

திபெத்தை இந்தியா கைவிட நேர்ந்தது. அது ஒரு மாபெரும் வரலாற்றுப்பிழை என்றே நான் நினைக்கிறேன் – நேருவை வழிபடுபவன் என்றபோதிலும். ராணுவத்தால் நாடுகள் அமைந்திருக்கும் வரை ராணுவமே எல்லைப்பிரச்சினைக்கு தீர்வு. பேருரைகள் அல்ல. இலட்சியவாதமும் அல்ல.

நான் இளமையில் படித்த பிரிகேடியர் ஜான் தல்வி எழுதிய  Himalayan Blunder என்னும் நூல் உட்பட பல சீனப்போர் நூல்களில் எல்லையில் சீனா அத்துமீறி பல மாதங்களாகியும் செய்தி டெல்லியை வந்தடையவில்லை என்றே சொல்லப்பட்டுள்ளது. எம்.ஓ.மத்தாய் எழுதிய பெரும்பாலும் நேரு துதிகளே கொண்ட நேரு யுக நினைவுகள் ( Reminiscences of the Nehru Age) நூலில்கூட படையெடுப்புச் செய்தி பல மாதங்கள் கழித்தே படேலுக்கு தெரியவந்ததாகவும், அதை அவர் சொல்லியே தலைமைத் தளபதி பிரான்நாத் தாப்பர், ராணுவ அமைச்சர் வி.கே.கிருஷ்ண மேனன் ஆகியோரும் பின்னர் நேருவும் அறிந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.

தாப்பர், வடகிழக்குக்குப் பொறுப்பாக இருந்த லெப்டினெண்ட் ஜெனரல் பிரிஜ்மோகன் கௌல் ஆகியோர் நேரு குடும்பத்திற்கு அணுக்கமானவர். கிருஷ்ணமேனன் நேருவின் நண்பர். போரின் தோல்விக்குப்பின் அவர்கள் பதவி விலகினர். நேருவின் புகழ் அதன்பின் இறங்குமுகமாகியது. இரண்டே ஆண்டுகளில் நேரு மறைந்தது அவருடைய கௌரவத்தை  காப்பாற்றியது என்றே சொல்லவேண்டும்.

சீனா போரில் அக்காய்சின் பகுதி உட்பட11,000 சதுர கிலோமீட்டர் பகுதியைக் கைப்பற்றியது. இன்று அப்பகுதியில் பெரும் சாலைகள் அமைத்துள்ளது. பிரம்மபுத்ரா நதியின் நீரை தடுத்து அணைகளை கட்டியுள்ளது. இந்தியா அந்தப் போரில் அடைந்த தோல்வியின் விளைவுகளை இன்றுவரை சந்தித்துக்கொண்டுள்ளது. தொடர்ச்சியாக பிரம்மபுத்ராநீர் குறைந்து வருவதனால் எதிர்காலத்தில் அஸாம் நீர்ப்ப்பற்றாக்குறையைக்கூட சந்திக்க நேரலாம்.

சீனா அப்போரில் அருணாச்சலப்பிரதேசத்தை கைப்பற்றாமல் ஆனது இந்தியப்படைகளின் கடுமையான எதிர்ப்பினாலும், ருஷ்யா இந்தியாவுக்கு ஆதரவாக வந்தமையாலும்தான். இரண்டாவது காரணத்தை முதன்மைப்படுத்தி முதலாவது காரணத்தை ஏளனம் செய்து இந்தியாவின் மேட்டிமைவாத இதழாளர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆனால் அன்றைய இந்திய ராணுவம் பிரிட்டிஷாரிடம் பயிற்சி எடுத்துக்கொண்டது, உலகப்போர்களைக் கண்டது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். அன்றைய சீன ராணுவம் ஒப்புநோக்க அந்த அளவுக்கு பயிற்சியோ அனுபவமோ கொண்டது அல்ல.

இன்று சீனா அருணாசலப்பிரதேசத்தையும் லடாக்கையும் கோருகிறது. 1914 ல் போடப்பட்ட மக்மோகன் எல்லைக்கோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் அன்றைய சீன அரசுடன் போடப்பட்டது, அது தங்களை கட்டுப்படுத்தாது என்கிறது. இன்று இருநாடுகளும் அணுவாயுதம் கொண்டவை, பெரும் ராணுவம் கொண்டவை. இனி ஒருபோதும் எல்லைக்கோட்டை மாற்றியமைக்க முடியாது. இருந்தும் இந்த பூசல் நீடிப்பதற்கு ஒன்றே காரணம். இப்பூசலை பயன்படுத்தி சீனா இந்தியாமேல் பலவகையான வணிக நிர்ப்பந்தங்களை அளிக்கிறது.

எல்லைப்புற மாநிலங்களில் பயணம் செய்பவர்கள் தெளிவுறக் காணும் ஒன்றுண்டு. சென்ற இருபதாண்டுகளுக்கு முன்புவரை, அதாவது 2000 த்தில் நான் செல்லும்போது வரை எல்லைப்புற மாநிலங்கள் கைவிடப்பட்டு, சாலை வசதிகளில்லாமல், ராணுவப்பாதைகள் மட்டுமே கொண்டதாகவே இருந்தன. இன்று அப்படி அல்ல. எல்லைப்புறத்தில் பெரும் சாலைகள் அமைந்துவிட்டன. மேலும் மேலும் பெரும் சாலைகள் அமைகின்றன. மிக வலுவான ராணுவநிலைகள் இன்றுள்ளன.

பும்லா பாஸ் செல்லும் வழியில் பச்சைநிறமான ராணுவ லாரிகள், டிரக்குகள், ஜீப்கள் சென்றுகொண்டே இருந்தன. வண்டிகளின் சக்கரங்களில் சங்கிலி கட்டிக்கொள்ளவேண்டும். இல்லையேல் சக்கரங்கள் பனியில் சுழல ஆரம்பிக்கும். எங்கள் ஓட்டுநர் சங்கிலி ஏதும் கட்டிக்கொள்ளவில்லை.

அதன் விளைவு தெரிந்தது. பனியில் எங்கள் வண்டி சிக்கிக்கொண்டது. இறங்கி அதை தள்ளினோம். அப்படி எத்தனை ஊர்களில் எத்தனை கார்களை தள்ளியிருக்கிறோம் என எண்ணிக்கொண்டோம். கார்களை தள்ளுவதில் ஒரு வீரவரலாறே உள்ளது. அதில் உச்சம் அக்காமலை என்னும் இடத்திற்கான பாதையில் ஒரு மட்டடோர் வேனை முழுநாளும், ஆம் காலைமுதல் மாலைவரை, தள்ளி நகர்த்தமுடியாமல் கைவிட்டு, நடந்தே அக்காமலை வழியாக பொள்ளாச்சிக்கு வந்து சேர்ந்து, நள்ளிரவில் பாதையோரம் படுத்து உறங்கிய சாகசம். 

 நாங்கள்லாம் கப்பலையே இறங்கி தள்ளினவங்கஎன்று கிருஷ்ணன் பெருமிதம் கொண்டார். அது பத்துசத உண்மை. முன்பு ,2009ல் நாங்கள் கோதாவரியில் பயணம் செய்தகாலத்தில் படகை அங்கே போ அங்கே போ என தூண்டி, ஓட்டுநரின் விருப்பத்தை புல்லென மதித்து அங்கே செல்லவைத்து, படகை மணலில் சிக்கவைத்தோம். நாங்களே இறங்கி தள்ளி அதை மீட்டோம். கப்பல் அல்லதான். ஆனால் மூன்றடுக்கு படகு ஒரு சிறு கட்டிடம் அளவுக்கு பெரியது

பனியில் காரை தள்ளுவதன் தொழில்நுட்பச் சிக்கல்களை கற்றுக்கொண்டேன். கார்ச்சக்கரம் பனியை அள்ளி என்மேல் பொழிந்தது. என் சப்பாத்துகளுக்குள் பனி புகுந்துஎன்னுள்ளில் ஏதோ சில்லென்றதுஅது உருக உருக கால்களில் ஒரு வகை மரப்பு. ஆனால் ஆச்சரியம், அந்தப் பனியை நான் என் உடல் வெம்மையால் சூடாக்கி ஆவியாக்கி உலரவைத்துவிட்டேன். (ஆன்மவெம்மையால் என்றும் சொல்லலாம்) 

பும்லா பாஸ் இன்னொரு மலைக்கணவாய் உச்சி. அங்கே வழக்கம்போல ஒரு துணைராணுவப்படையின் தேநீர் விடுதி. அங்கே வந்த பிரிகேடியர்களுடனான கறுப்பு வெள்ளை புகைப்படங்கள். சூப், டீ ஆகியவை கொதிக்கக் கொதிக்கக் கிடைத்தன. கழிப்பறைகள் இருந்தன. 

கூடத்தில் கரிபோட்டு எரியவிட்ட அடுப்புக்கணப்பின் அருகே அமர்ந்து டீ சாப்பிட்டோம். ஏதோ சைபீரியப் பனிநிலத்தில் அமர்ந்திருப்பதாக எண்ணிக்கொண்டோம். 1981ல் ல் நான் இந்தியா சீனா போர் பற்றி தல்வி எழுதிய ஹிமாலயன் பிளண்டர் நூலின் சுருக்கத்தை அன்றைய இதழ் ஒன்றில் மனக்கொந்தளிப்புடன்  வாசித்தபோது அதில் சொல்லப்பட்டிருக்கும் இடங்களுக்கு இப்படி வந்தமர்ந்து டீ குடிப்பேன் என நினைத்திருப்பேனா?  

பும்லா பாஸ் கணாவாய்க்கு அப்பால் சீன எல்லை தெரியும். அதைப்பார்ப்பது ஒரு சுற்றுலாக்கவற்சியாக உள்ளது. பயணிகளை சிறு குழுக்களாகப் பிரித்து எண்கள் அளித்து அழைத்துச் செல்கிறார்கள். உரிய பனியாடைகளும், சப்பாத்துக்களும் அணிந்திருக்கவேண்டும். ஆரோக்கியமும் வேண்டும். ஆக்ஸிஜன் குறைவென்பதனால் நெஞ்சை காற்று அழுத்திப்பிசையும். முழங்கால்களில் கடும் பிடிப்பு உண்டு. மிகத்தொலைவில் கண்கூசும் வெண்பனி விளிம்பில் எதையோ காட்டி அதோ சீனக்கொடி என்பார்கள். வைணவர்கள் கருடன் பார்ப்பதுபோலத்தான். நம்பியாகவேண்டும்

சாங்ஸ்டர் ஏரி ( Sangestar Tso) நம்மூர் மொக்கைகளால் இன்று மாதுரி ஏரி என அழைக்கப்படுகிறது. அங்கே மாதுரி தீட்சித் ஒரு சினிமாப்பாட்டுக்கு ஆடினாராம். கடல்மட்டத்தில் இருந்து12,165 அடி உயரத்திலுள்ள இந்த ஏரி பெரும்பாலும் உறைந்தே இருக்கிறது. ஆனால் தொடர்ச்சியாக நீர் வரத்தும் போக்கும் இருப்பதனால் முழுக்க உறைவதுமில்லை. வெண்பனிக்குள் கரியநீரின் தீற்றல்கள். அங்கே விதவிதமான பனிநாரைகளின் கூச்சல்

பனியில் நின்றும் அமர்ந்தும் படமெடுத்துக் கொண்டோம். ஏரிக்கரையோரமாக நடந்துசெல்வதற்கான கைப்பிடி வேலி. அது எதற்காக என்று நடந்தபோது தெரிந்தது. மூச்சுவாங்கும்போது பிடித்துக்கொண்டு நின்று ஆசுவாசப்படுத்திக்கொள்ளலாம். பனியின் வெளி ஒருவகையாக கண்ணுக்குப் பழகி அங்கே எவராவது வண்ண ஆடையுடன் தெரிந்தால் கொஞ்சம் தூக்கிவாரிப்போட்டது.

பனியில் உறைந்த ஏரிகளை கண்கூச கண்கூச பார்த்தபடி திரும்பி வந்தோம். எங்கள் பயணத்தின் உச்ச எல்லை வரைச் சென்றுவிட்டோம். இனி திரும்பும் வழிக்காட்சிகள்தான். சில ஆண்டுகளுக்கு முன்பு சிக்கிம் அருகே ஸீரோ பாயிண்ட் என்னும் இடத்தில் இந்திய சீன எல்லையை கண்டோம். அதன்பின் லடாக்கில்  பாங்காங் ஏரியில் மீண்டும் சீன எல்லையை கண்டோம். இது மூன்றாவது.

சாங்ஸ்டர் கொண்டான் என நானே என்னை பாராட்டிக்கொண்டேன். இந்த ஏரிக்கு வந்து நின்று செய்வதற்கொன்றே உள்ளது. விழிவிரிய பார்த்து நிற்பது. அதை விதவிதமாக நம் உள்ளம் கற்பனைசெய்துகொள்வதை அனுமதிப்பது. விழுந்துடைந்த மாபெரும் நிலைக்கண்ணாடி. சரிந்து விழுந்து மடிந்து பரந்த நீலப்பட்டாடை….பார்க்கப் பார்க்க பார்க்க மட்டுமே செய்கிறோம் என்னும் தவிப்பு. இத்தகைய காட்சிகளின்போது அதில் பாய்ந்து திளைத்து துழாவி எழுந்தால் அதை வென்று அடைந்த நிறைவு உருவாகுமென தோன்றும், ஆனால் அதுவும் ஒரு மாயைதான்.

(மேலும்) 

 

முந்தைய கட்டுரைஆத்மாநாம்
அடுத்த கட்டுரைநற்றுணை கலந்துரையாடல் கூட்டம், சிறை வாழ்க்கைகள்