கடந்த பிப்ரவரி முதல் வாரம் துவங்கி, சென்னை காஞ்சிபுரம், காரைக்குடி புதுக்கோட்டை, திருவண்ணாமலை ஆரணி என கோயில் பண்பாட்டுப் பயணம் சுற்றத் துவங்கி நேற்று மகா சிவராத்திரி அன்று சிதம்பரதில் நிறைவு செய்தேன்.
திருமெய்யம் பெருமாளின் பிரபஞ்ச அறிதுயில் தோற்றம் துவங்கி சிதம்பரம் ஆடல்வல்லானின் பிரபஞ்ச நடனத் தோற்றம் வரை ஒரு சுற்று. இடையே நூறு நூறு காட்சிகள். குறிப்பாக திரு மெய்யம் சிவன் கோயிலில் கண்ட எட்டு அடி உயர லிங்கோத்பவர் படிமை இப்போது வெண்முரசின் கிராதம் நாவலில் வாசித்த சிவனின் சித்திரங்களுக்குப் பிறகு பார்க்கையில் என் உள்ளே வேறு விதமாக அது வளருகிறது. கிட்டத்தட்ட தமிழ் நிலத்தின் முதல் லிங்கோத்பவர் சிற்பங்களில் ஒன்று அது. அடியும் முடியும் காட்டப் பெறாமல் இருபக்கமும் தழல் அடுக்குகள் எழுந்து பறக்க நிற்கும் விஸ்வரூப தோற்றம். அங்கிருந்து வந்தால் காஞ்சி கைலாசநாதர் கோயில் லிங்கோபவர் படிமத்துக்கும் இதற்கும் இடையே எவ்வளவு வளர்ச்சி. பின்னர் வரும் சிலைகள் மெல்ல மெல்ல மாற்றம் கொண்டு,சிவனின் முடி தெரியும் வண்ணம் மாறி மேலே அன்னமும் கீழே வராகமும் கொண்டு செதுக்கப்பட்டிருக்கிறது.
சிதம்பரம் கோயிலில் வில்வப் பொதி மூடிய லிங்கோத்பவர் தனி சந்நிதியில் வலது புறம் ஒரு சிறிய தேவி படிமையுடன் இருக்கிறார். முதன் முறையாக லிங்கோத்பவர் தேவி துணையுடன் நிற்கக் கண்டேன்.
திருமெய்யம் கோயிலில் கருவறையின் குடைவரை தூண்கள் துவங்கி, வெளியே மண்டபத்தில் வாலி சுக்ரீவன், ரதி மன்மதன், குறவன் குறத்தி, கண்ணப்ப நாயனார் தூண்கள் வரை கோயிற் கலைப் பண்பாட்டில் தூண்களின் கலைப் பரிணாம வளர்ச்சியை ஒரே வீச்சில் பார்க்க முடிந்தது எப்போதும் போலவே இப்போதும் தீரா வியப்பை அளிப்பதாகவே இருந்தது. நாம் அங்கே சென்றிருந்த போது இருந்த அதே பட்டர். இன்னும் சற்று முதிர்ந்து சில பற்களை இழந்திருந்தார். அப்போது போலவே இப்போதும் காமனை ராமன் என்றே அறிமுகம் செய்தார். இருக்கட்டும் கா வுக்கும் ர வுக்கும் என்ன பெரிய பேதம் அத்வைத்த நோக்கின்படி எல்லாம் ஒரே அரிச்சுவடி வரிசைக்குள்ளேதானே இருக்கிறது என்று நானும் விட்டு விட்டேன். அங்கிருந்து வெவ்வேறு ஸ்தலங்கள், காலையிலேயே சூரியனை உறிஞ்சி பொன்னிறம் கொண்டு கொதிக்கும் பாறைகள் அதில் அமைந்த அருகர்கள் உறைவிடங்கள்…
இவ்வாராக ஊர் சுற்றி முடித்து கடலூர் திரும்பவும் சிவராத்திரி வரவும் சரியாக இருக்கவே உடனடியாக சிதம்பரம் கிளம்பினேன். சென்ற வருடம் போலவே இந்த வருடமும் தாமரைக் கண்ணன் வந்து இணைந்து கொண்டார் கூடவே மணி மாறனும். இரவு 9 மணிக்கு கடலூரில் பேருந்து ஏறினோம். சிதம்பரம் கடலூர் இடையே சாலைப் பணிகள். (இதன் பொருட்டு வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்களின் எண்ணிக்கையும் அவற்றின் வயதும் திகைக்க வைப்பன. நம்மைக் கொரானா கொண்டு போனதில் எந்தப் பிழையும் இல்லை. அதற்கு தகுதி கொண்டோர்தான் நாம்) தடவித் தடவி 11மணிக்கு சிதம்பரம் கோயில் கிழக்கு கோபுர வாசல் வந்து இறங்கினோம்.
கண்ட கணமே அள்ளிக்கொள்ளும் ராஜ கோபுரத்தின் எழில். இந்த கோபுர வடிவம் என்பதே யாக குண்டத்தில் எழுந்தாடும் அக்னியின் கல் வடிவ கலைத் தோற்றமே என்பார் ஆசிரியர் குடவாயில் பாலசுப்ரமணியம். 11ம் நூற்றாண்டுக்கு பிறகு கிருஷ்ணதேவ ராயார் காலம் தொட்டு 15 நூற்றாண்டு வரை கட்டப்பட்டவை இக் கோபுரங்கள். இக் கோபுர ஸ்தபதிகள் விருத்தாசலத்தை சேர்ந்த நால்வர். அவர்கள் பெயருடன் அவர்கள் சிலையும் கோபுரத்தில் உண்டு. கிருஷ்ணதேவராயர் கட்டிய கோபுரத்தில் நவ கிரக மூர்த்திக்கும் சிலை உண்டு. குறிப்பாக சூரியனுக்கு.
11 ஆம் நூற்றாண்டுக்கு முன்பான தில்லைக் கோயில் ராஜ கோபுரத்தை சோழர் கால ஓவியங்களில் இருந்து ஆவணப்படுத்தி இருக்கிறார் குடவாயில். மையத்தில் கீர்த்தி முகம் கொண்ட கேரளா பாணி வாயில் அது. சேர நிலத்துக்கும் இந்த கோயிலுக்குமான தொடர்புகள் நெடியது. களந்தை கூற்றுவ நாயனார் எனும் மன்னன் இப்பகுதி மன்னர்களை வென்று, அதன்படி சோழர்கள் போலவே இந்த தில்லைக் கோயில் வேதியர்களைக் கொண்டு, கோயிலின் ஆயிரம் கால் மண்டபத்தில் வைத்து மாமன்னன் என்று முடிசூட்டிக்கொள்ள விரும்பினான். தில்லை வேதியர்கள் அதை மறுத்து, அந்த மன்னன் ஆளும் நிலத்திலும் வாழ மறுத்து ஊர் நீங்கி சேர தேசம் சென்று, மீண்டும் இங்கே சோழர் ஆட்சி வந்த பிறகே அவர்கள் கோயிலுக்கு திரும்பியாதாக பெரிய புராண கதை உண்டு. 1684 இல் மாராட்டிய மன்னன் சாம்பாஜியின் குல குரு முத்தய்யா தீட்சிதர் சேர தேச சிற்பிகளை கொண்டு பொன்னம்பலத்தை சீர் செய்தார் என்பது திருவாரூர் செப்பேடு சொல்லும் செய்திகளில் ஒன்று.
10 ஆம் நூற்றாண்டுக்கு முன் நடராஜர் சந்நிதியான இந்த பொன்னம்பலம் எவ்விதம் இருந்திருக்கும்? இப்போது பொன் வேய்ந்த விமானத்துடன் இருப்பது இவ்விதமே இருந்திருக்கும் என சொல்லிவிட முடியும். மகாபலிபுரம் பீம ரதம் கண்டவர் அறிவர் அந்தக் கல் வடிவின், அதே வடிவே இன்றுள்ள சிதம்பரம் பொன்னம்பலம். இந்த விமான வடிவுக்கு சபாஹர விமானம் என்று பெயர். பெரிதும் சாக்த கோயில்களின் விமானமாக இது அமையக் காணலாம். உதாரணமாக ஒரிசாவில் விட்லா டியுல் என்று அழைக்கப்படும் சாமுண்டி கோயில். சுசீந்திரம் கோயிலில் ராஜ கோபுரத்துக்கு வலது புறம் அதை ஒட்டி அமைந்த சக்தி சந்நிதிக்கு மேலே இந்த சபாஹர விமானத்தின் சிறிய வடிவம் உண்டு. பவுத்த புடைப்பு சிற்பங்கள் பலவற்றில் புத்தர் இருக்கும் கோஷ்டம் இந்த விமானம் கொண்டதாகவே இருக்கும்.
நாங்கள் கருவறை நோக்கி நகர்ந்த போது உள்ளே இருந்த கட்டுக்கடங்கா கூட்டத்தை சமாளிக்க குறைந்தது 30 பவுன்சர்கள் இருந்தார்கள். ஒரு வகையில் இந்த பவுன்சர்கள் ‘பக்தர்கள்’ வசமிருந்து தில்லை வேதியர்களை காக்கவும்தான். கடந்த 15 வருடங்களாக தில்லை வேதியர்கள் மீது ‘பக்தர்கள்’ நிகழ்த்தும் வன்முறை சகிக்க இயலாதது. ( சில்லறைத் தனத்தில் ஈடுபடும் வேதியர்களும் அங்கே உண்டு, ஆனால் இது அதையும் கடந்த ஒன்றை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது ) கொஞ்சம் கொஞ்சமாக அங்கு அந்த வேதியர்கள் நிலை ‘பக்தர்கள்’ எனும் பெயரில் ‘யாரோ’வால் இறக்கப்பட்டுக்கொண்டே வருகிறது. உச்சம் பொன்னம்பலத்தில் ஜனநாயகம் தலைவிரித்து ஆடட்டும் என நீதிமன்றம் அளித்த அனுமதி வழியே நிகழ்ந்தது. எவரும் உள்ளே செல்ல அது என்ன சினிமா தியேட்டரா?
சங்கரர் வந்து நின்ற பீடம் என்பது ஐதீகம். தாத்ரீக குறியீடுகள் கொண்ட அர்ச்சனை முறை அங்கே உண்டு. எந்த தாத்ரீக மரபின் இருப்புக்கும் வலிமையான செய் செய்யாதேக்கள் உண்டு. பதஞ்சலி பத்தத்தி முறையில் அமைந்த வழிபாட்டு முறையும் அங்கே உண்டு. அதற்கான செய் செய்யாதேக்கள் பல உண்டு. இவை போக சிவனை நடராஜன் எனும் உருவமாக, ஸ்படிக லிங்கம் எனும் அரு உருவாக, ஆகாய ரூபம் எனும் அருவமாக என உருவம் முதல் அருவம் வரை மூன்று நிலையிலும் வைத்திருக்கும் சந்நிதி அது. இந்த நிலை கொண்டே அதற்கான தனிப்பட்ட வழிபாட்டு கட்டமைப்புகள் அங்கே உண்டு. அதற்கான விதி முறைகள் உண்டு. அந்த விதி முறைக்கு வாழ்வை ஒப்பு கொடுத்த அந்த வேதியர் நிற்கும் இடத்தில் ஜனநாயகம் எனும் பெயரால் சட்ட உரிமை எனும் பெயரால் பொது ஜனம் சென்று நிற்பது என்பது நம் கலாச்சார மேன்மை ஒன்றில் நமது கீழ்மையை நமது இழிவைக் கொண்டு கொட்டுவதன்றி வேறில்லை.
அதிகாலை 3.30 க்கு ஆடால்வல்லான் திருக்காட்சி கண்டோம். வெளியே மீண்டு, குளக்கரையில் அமர்ந்து, கொண்டு சென்றிருந்த பெருந்தேவி மொழியாக்கம் செய்திருந்த அக்கமகாதேவி கவிதைகளின் தொகுப்பான மூச்சே நறுமணமானால் தொகுப்பிலிருந்து ஐம்பது கவிதைகள் வரை வாய் விட்டு வாசித்தோம். (யாரரிவார் மாணிக்கவாசகர் எங்கிருந்தேனும் கேட்டுக்கொண்டிருக்கக் கூடும்). சென்ற முறை ஆனந்த் குமாரசாமி எழுதிய சிவானந்த நடனம் வாசித்தோம். முடித்து ஊர் கிளம்பும் முன்பாக ஒரு முறை கோயிலை சுற்றி வந்தோம். முன்பில்லாத அளவு யுவன் யுவதிகள் கூட்டம். இளம் தலைமுறை இத்தகு பண்பாட்டு விஷயங்களில் பெருகி நிற்பது பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.
நேரெதிராக, நாங்கள் சிதம்பரம் வந்து இறங்கியதுமே தெற்கு ரத வீதிக்கு ஓட்டமாக ஓடிச்சென்று கலந்து கொண்ட நாட்டியாஞ்சலியில் தாத்தா பாட்டிகள் மட்டுமே கண்ணில் பட்டனர். கண் முன்னால் ஒரு அழகிய பண்பாட்டு விழா கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து கொண்டே வருவதைக் காண்கிறேன்.
1980 யில் நாட்டியாஞ்சலி ட்ரஸ்ட் வழியே கோயில் வளாகத்தில் மிக சிறிய அளவில் ஆரம்பித்த விழா இது. எத்தனையோ வருடம். தேடிச் சென்று காணவும் சாத்தியம் அற்ற பல கலைஞர்களை ‘சும்மா’ பார்த்திருக்கிறேன் என்பதை இப்போது நினைக்க ஆச்சரியம் மேலிடுகிறது. இன்று உள்ள குறைந்த பட்ச கலை போதம் கூட அன்று என்னிடம் கிடையாது. அப்படிப்பட்டவனுக்கு கிடைத்த ஆசி அது. மெல்ல மெல்ல விழா மூன்று நாட்கள் விரிவு கொண்டது. இந்திய நிலத்தின் பல்வேறு நடனக் கலை ஆளுமைகளும் இங்கே அந்த விழா நோக்கி வர வர நேரம் போதாமல் ஆகி, சிவன் முன் நடனம் அது போதும் எனும் நிலையில் எல்லோரும் 15 நிமிடம் மட்டும் எடுத்துக்கொண்டு தங்கள் சிறந்த வெளிப்பாட்டை அங்கே காட்டிவிட்டு செல்ல துவங்கினர்.
2015 இல் தில்லை தீட்சிதர்கள் தனியே ஒரு ட்ரஸ்ட் துவங்கி அனைத்தையும் ஒருங்கிணைக்க துவங்க, குழப்பங்கள் துவங்கின. உரசல்கள் பெருகி கோயிலுக்குள் தனி நாட்டியாஞ்சலியும் அங்கே வர அதற்கான அதிகார விளையாட்டுகளும் துவங்க, பூர்வ ட்ரஸ்ட் கோயிலுக்கு வெளியே நாட்டியாஞ்சலியை ஒருங்கு செய்தது. கொண்டாட்டம் ஒருமை சிதைந்து போட்டி துவங்கியது. கலை பின்னுக்கு போய் ‘மக்களை’ கவரும் நோக்கில் நிகழ்வுகள் உரு மாறின. ( மேடை இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு வர, நாட்டியத் தாரகை வாண் டேம் போல காலை தூக்கி நின்றிருப்பார். கை தட்டு மழையில் நிகழ்ச்சியின் துவக்கமே டாப் கியரில் துவங்கும்) கொரானாவுக்கு பிறகு உத்ர ட்ரஸ்ட் நிகழ்ச்சி நடத்துவதை கை விட்டு விட, கோயிலுக்கு வெளியே உள்ள பூர்வ ட்ரஸ்ட் மட்டும் நிகழ்ச்சியை ஒருங்கு செய்கிறது ( ஒன்றுதான் இப்போது நிகழ்கிறது. ஆனாலும் கோயிலுக்குள் அனுமதி கிடையாது)
நாங்கள் உள்ளே சென்ற போது பிரமாதமான மேடை அலங்காரத்தின் பின்னணியில், அதிரடியாக ஒலிக்கும் பின்னணி இசையில் சில பெண்கள் ‘வித்தை’ காட்டிக்கொண்டு இருந்தார்கள். எப்போதும்போல மையத்தில் அரை டன் எடையில் ஒரு யுவதி திமிசு கட்டையால் தளத்தை சமன் செய்வது போல, அடவு எனும் பெயரில் மேடையை தடார் படார் என மிதித்து துவம்சம் செய்துகொண்டு இருந்தார். பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா என்றவன் வம்சாவளிதான் நான் என்றாலும் இத்தகு விஷயங்களை சகிக்கும் மன திடம் இன்னும் எனக்கு வாய்க்க வில்லை.
ஆவலோடு கிளம்பி வந்திருந்த மணிமாறன் அழாக்குறையாக ‘என்னங்க இது’ என்றார். “பதற்றம் ஆகாதீங்க இதுக்கு இடையில்தான் பல அற்புதங்களை நான் பார்த்திருக்கிறேன். இன்றும் அப்படி அற்புதம் நிகழும் என நம்புவோம்” என்று சொல்லி அவரை சமாதானம் செய்தேன். அடுத்து வந்த தீக்க்ஷா, ரேவதி ராகத்தில் அமைந்த போ சம்போ (இதுவும் பின்னணி இசையாகவே அதிர அதிர ஒலித்தது) பாடலுக்கு நடனம் ஆடினார். மோசமில்லை ரகம். தகவல் மற்றும் ரசனை உதவிக்கு துணை நின்ற தாமரைக் கண்ணன் நாட்டியக் கலையின் அடிப்படைகளை கற்றவர். அடுத்த நிலைக்கு போகும் முன் வேலை வந்து, மனைவி வந்து, இப்போது மேலும் என்னென்னவோ வந்து விட்டது. (முதன் முறையாக அப்போதுதான் தாமரை கண்ணனை பார்க்கிறார் தேவ தேவன். தேவ தேவன் தாமரை வசம் கேட்ட முதல் கேள்வி ” நீங்க டான்சரா” என்பதே. தாமரை இப்போதும் அது எப்புடி என்ற அந்த அதிர்ச்சியில் இருந்து மீள வில்லை).
நம்பிக்கை வீண்போக வில்லை. அடுத்து மேடைக்கு வந்த மேக்னா ராஜு மற்றும் சஹானா ஸ்ரீதர் இருவரும் நடனக் கலையின் அழகு எதுவோ அதை மேடையில் எழுப்பிக் காட்டினார்கள். (பக்கத்தில் அமர்ந்திருந்த தாமரையை காணவில்லை. எப்படியோ கூட்டத்தில் ஊடுருவி முன்வரிசைக்கு போய்விட்டார்) இரண்டு பகுதிகள் கொண்ட நடனத்தில் இருவரில் ஒருவர் சிவம் என்றும் மற்றவர் சக்தி என்றும் அமைந்து அலாரிப்பு வரிசை வழியே பார்வையாளர்களை மெல்ல தங்கள் கலையின் உள்ளே இழுத்துக் கொண்டார்கள். இரண்டாம் பகுதி ஆதி சங்கரர் இயற்றிய பஞ்சாட்சர ஸ்துதி. உமையும் சிவமுமாகவே மாறிப்போனார்கள் இருவரும். குறிப்பாக சிவம் ஆலகாலம் அருந்துகயில் உமை அதை அவரது கழுத்தில் வைத்து தடுக்கும் காட்சி அத்தனை அழகாக இருந்தது.
அடுத்து ஹைதராபாத் பள்ளி ஒன்றின் மாணவர்கள் குழு நிகழ்த்திய குச்சுபுடி நடனம். வெவ்வேறு இடங்களில் இருந்து துண்டு துண்டாக பாடல்களை இணைத்து அந்த பின்னணியில் பார்வையாளர்களை ஈர்க்கும் வண்ணம் அமைந்த நடனம். நல்ல பரத நாட்டியமும், நல்ல குச்சுபுடி யும் அடுத்தடுத்து பார்த்தது ஒரு பயிற்சி போல அமைந்தது. குறிப்பாக ஒரே விஷயத்துக்கு இரண்டு நடனங்களும் காட்டும் கை முத்திரை வேறுபாடுகள். மெய்ப்பாடுகளில் குச்சுபுடி பரத நாட்டியத்தைக் காட்டிலும் மேலதிகமாக எடுத்துக்கொள்ளும் சுதந்திரம். பரத நாட்டியம் சில அலகுகளில் நிறைகயில் பல்ப் அணைந்தது போல சட் என நிற்க, குச்சு புடியோ ஸ்விட்ச் அனைத்த பிறகு மெல்ல மெல்ல சுழற்சி ஓய்ந்து நிற்கும் மின்விசிறி போல தனது ஆட்டத்தை நிறைவு செய்கிறது. இப்படி பற்பல விஷயங்கள்.
அடுத்து வந்தது ஒடிசி. அந்த நாளின் அந்த இறுதி முக்கால் மணி நேரம் ஒரு அற்புதம் என்றே சொல்வேன். அற்புதத்தை நிகழ்த்தி காட்டிய இளம் கலைஞரின் பெயர் அனிஷ் ராகவன். இரண்டு பகுதிகளாக அமைந்த அவரது நிகழ்வின் முதல் பகுதி நடராஜ கெளஸ்த்துபம். நதியின் பாதையில் ஒழுகிச் செல்லும் பூமாலை போல அதிலேயே நான் அவருடன் ஒழுகி செல்ல துவங்கி விட்டேன். என்னென்னவோ என்னில் இருந்து எடுத்துக் காட்டினார். தன்னில் இருந்து என்னை இழுத்து கைப்பிடித்து எங்கெங்கோ கூட்டி சென்று காட்டினார். அவர் ஆடை அணி சூடி கிளம்பி விட்டதாக செய்து காட்டிய பாவம், சிவனின் திருவிளையாடலில், பாற்கடலை கடைகயில் எழும் ஆல கால நஞ்சை உண்பது, இந்த நஞ்சு அமுத சண்டையில் எதிரி துரத்த பயந்து ஓடும் சந்திரனை சிவன் சடையில் தரித்து அபயம் அளிப்பது என முக்கால் மணி நேரத்தில் ஆயுள் முழுக்க நீளும் படிமங்களை என்னில் நிறைத்து விட்டார். அவர் உருவாக்கிய எல்லா படிமங்களையும் ஆட்ட நிலைகளையும் ஏதேதோ சிற்பங்களில் 7 ஆம் நூற்றாண்டு துவங்கி 13 ஆம் நூற்றாண்டு கோனார்க் கோயில் சிற்பங்கள் வரை ஒரிசாவில் கண்டிருக்கிறேன். ஆம் அவர் நிகழ்த்திக் காட்டிய சிவ நடனம், ஒரிசாவில் சாமுண்டி கோயிலில் விமான கீர்த்தி முகத்தில் கண்ட அதே நடராஜர் தான். ஒரே கணத்தில் ஒரிசா சிற்பங்கள் சுட்டுவதும் ஒடிசி நடனம் சுட்டுவதும் ஒன்றேயான ஒரு கலை வெளியில் நின்றிருந்தேன். எண்ண எண்ணப் பெருகும் சித்திரங்கள். ஒரிசா நடராஜர் கொண்ட திரிபங்க நிலை மனித உடலில் உண்மையில் சாத்தியம் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. இன்று கண்டேன் நடனத்தில் குறிப்பாக இந்த ஒடிசியில் ஒரு ஆண் உடலில் எழும் நளினத்தை எந்த வடிவழகு கூடிய பெண்ணாலும் விஞ்சிவிட இயலாது. எல்லாவற்றையும் விட இந்த நடனத்தில் நான் உணர்ந்த தனித்தன்மை, இதில் வெளிப்படும் பாவம் அல்லது மெய்ப்பாடு என்பது முழுக்க முழுக்க அகத்துறை உணர்வு போல, அல்லது அதற்கு இணையான ஒன்றை கொண்டிருக்கிறது. இப்போதுதான் புரிகிறது ஒடிசி யில் ஏன் ராதா மாதவ பாவம் அஷ்டபதி இந்த ஆழம் வரை சென்று செல்வாக்கு செலுத்துகிறது என்பது. பாரத செவ்வியல் நடனங்கள் அனைத்தையும் ஒரு தட்டில் வைத்து துலாவின் மறு தட்டில் ஒடிசி ஐ வைத்தால் துலா முள் சமன் கண்டு நிற்கும் என இக்கணம் தோன்றுகிறது.
இறுதி நிகழ்ச்சி. குரு கைகாட்ட அவருடன் அனிஷ் கிளம்பும் முன்பாக ஓடிச்சென்று அவரை சந்தித்து என்ன சொல்வது என்றே தெரியாமல், ரொம்ப நல்லா இருந்தது எனும் சொல்லையே மந்திரம் போல திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு இருந்தேன். ஆவலுடன் நீங்க டான்சரா என்று கேட்டார். இல்லை என்றேன். ஆச்சரியம் ஆனார். அப்பறம் எப்டி என்றார். நீங்கள் கேளுச்சரன் மகோபாத்ரா பற்றி சொன்னது வழியே கொஞ்சம் ஒடிசி பற்றி பார்த்தும் வாசித்தும் தெரிந்திருக்கிறேன் என்றேன். ஜெயமோகன் எங்கள் ஆசிரியர் என்று சொல்லி நாங்கள் என்ன செய்கிறோம் என்று சொல்லி தாமரை இணைந்து கொண்டார். அவர் கேள்வி வழியாகவே அனிஷ் பாண்டிச்சேரி காரர் என்பதும், ஜெர்மனியில் மேற்படிப்பு படிக்கிறார் என்பதும் தெரிய வந்தது. இன்றைய நாள் போல மேலும் சில நிகழ்வுகள் முடித்து பின்னர் ஜெர்மன் போய்விடுவேன் என்றார். எங்கோ வானத்திலிருந்து ஒரு தேவன் இக்கணம் இந்த கணத்துக்காக மட்டும் மண்ணில் இறங்கிவர் போல என்னருகே நின்றிருந்தார். அவரது உடல் மொழியும் குரலும், மையிட்ட விழியோடு இணையும் அவரது புன்னகையும் என… சரி நான் கிளம்பறேன் என சட்டென விடை பெற்றார். குரு முன்னால் செல்ல பின்னால் சென்று பார்வையில் இருந்து மறைந்தார். வெகு தூரத்தில் எங்கோ தில்லைக் கோயிலுக்குள் இருந்து எதிரொலித்து அடங்கியது எக்காளம் ஒன்று.
கடலூர் சீனு
பின்குறிப்பு.
உங்களுக்கு இக்கடிதத்தை எழுதி முடித்து உறங்கச் செல்கையில் அதிகாலை ஆகிவிட்டது. அதிகாலைக் கனவில் மந்தாகினியும் அளகனந்தா வும் கூடும் பிராயாகையில் நின்றிருந்தேன்.
மேக்னா சஹானா இணையரின் நடனம் என்னை எங்கே சென்று தீண்டி இருக்கிறது என்பதை விழித்த பின்னரே உணர்ந்தேன். பஞ்சாட்சர ஸ்துதியில் இரண்டாவது அட்சரமான ம, மந்தாகினி என்று துவங்கும்போது அக் கணம் ஒருவர் இமய முடி என்றும் மற்றவர் மந்தாகினிப் பிரவாகம் என்றும் மாறிப் போயினர்.
ஒரு நிலப்பரப்பை அதன் தொன்மை உருவகங்கள் உள்ளே பொங்கப் பொங்க நேரில் சென்று பார்ப்பதன் பின்னுள்ள உவகையை இன்று மீண்டும் அடைந்தேன்.
கட்டறற்ற இயற்கையின் ஒரு பகுதியான இமயத்தையும் மந்தாகினிப் பிரவாக்கத்தையும் கட்டுக்குள் நின்று பெருகும் கலையாக நேற்று அவர்களிடம் கண்டிருக்கிறேன் என்று இப்போது அறிகிறேன்.