எழுகதிர்நிலம்-1

நானும் நண்பர்களும்  2015 ல் நடத்திய வடகிழக்குப் பயணத்தில் பெப்ருவரி 19 ஆம் தேதி அருணாச்சலப் பிரதேசத்திற்கு ஒரு குறும்பயணம் மேற்கொண்டோம். அன்று கூகிள் உலகம் உருவாகவில்லை. ஆகவே தோராயமாக காகித வரைபடத்தை நினைவில்கொண்டு பயணத்திட்டத்தை வகுத்துக்கொண்டு கிளம்பிச் சென்றோம். அருணாசலப் பிரதேசம் எவ்வளவு பெரிய நிலப்பரப்பு என்னும் எண்ணமே இல்லை. சென்று சென்று சென்று ஒரு நாள் முழுக்க பயணம் செய்து லோகித் ஆற்றங்கரையில் பரசுராம்குண்ட் என்னும் இடத்தையும் ஒரே ஒரு பௌத்த மடாலயத்தை பார்த்துவிட்டு திரும்பினோம். அப்போதே அருணாசலப்பிரதேசப் பயணம் ஒன்றை வகுத்துவிட்டிருந்தோம்.

ஆனால் அதன் பின் பல சிக்கல்கள்.  நாங்கள் செல்ல உத்தேசித்திருந்த பகுதியின் அருகிலேயே சீன ஊடுருவல் நிகழ்ந்து, போர்ச்சூழல் எழுந்தது. நாங்கள் செல்லவிருந்த பகுதிகளுக்கு ராணுவ அனுமதி தேவை, அது கிடைக்காமலாகியது. நடுவே வேறு பயணங்கள் நடைபெற்றன. இறுதியாக இப்பயணம். இம்முறை எச்சரிக்கையாக மொத்த அருணாச்சலப் பிரதேசத்தையும் பார்ப்பது என்றெல்லாம் திட்டமிடவில்லை. அருணாச்சலப்பிரதேசத்தின் ஒரு பகுதியான தவாங் சமவெளி மட்டுமே எங்கள் திட்டத்தில் இருந்தது.

அருணாசலப்பிரதேசம் ஏறத்தாழ எண்பத்துநாலாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்டது. மக்கள் தொகை பதிநான்கு லட்சம் மட்டுமே. ஒரு லட்சத்தி முப்பதாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட தமிழகத்தின் மக்கள் தொகை எட்டு கோடிக்கு மேல்.  அதாவது தமிழகத்தின் மக்கள் செறிவு அருணாச்சலப்பிரதேசத்தை விட தோராயமாக பதினாறு மடங்கு. முற்றிலும் காலியாக கிடக்கும் மாபெரும் நிலப்பரப்பு. ஆங்காங்கே சிற்றூர்கள், சிறு நகரங்கள், இடாநகர் என்னும் தலைநகரம் தவிர மொத்த மாநிலமும் மலையும் காடும்தான்.

அருணாசலப்பிரதேசத்திற்கு செல்ல நாங்கள் ஆறுபேரையே திரட்டினோம், ஒரு காரில் அமரும் அளவுக்கு. அதற்குமேல் நண்பர்கள் என்றால் வண்டி, தங்குமிடம் எல்லாமே சிக்கல். நான், ஈரோடு கிருஷ்ணன், அரங்கசாமி, திருப்பூர் ஆனந்த்குமார், ஓசூர் பாலாஜி, ஈரோடு சந்திரசேகர். அரங்கசாமி நேராக கௌஹாத்தி சென்று அங்கே ஒரு விடுதியில் தங்கினார். நாங்கள் ஐவர் பெங்களூரில் இருந்து பிப்ரவரி எட்டாம் தேதி காலை விமானத்தில் கௌஹாத்தி சென்றோம். அரங்காவை கூட்டிக்கொண்டு நேராக அருணாசலப்பிரதேசம்.

நாங்கள் முதலில் வந்த அருணாசலப்பிரதேசத்தில் இருந்து இன்றைய அருணாசலப் பிரதேசம் மிகப்பெரியதாக மாறிவிட்டிருந்தது. முதன்மையாக பெரும் சாலைகள் போடப்பட்டு போக்குவரத்து பலமடங்கு பெருகியிருந்தது. இன்றைய மைய அரசின் சாதனை என ஒன்றைச் சொல்லவேண்டும் என்றால் வடகிழக்கே அவர்கள் அமைத்துள்ள மாபெரும் சாலைத்திட்டங்களைச் சொல்லவேண்டும். இன்னும் ஏராளமான சாலைகள் கட்டுமானநிலையில் உள்ளன. சில சாலைகள் வங்கதேசம் டாக்காவுக்குச் செல்பவை. பர்மா வழியாக சிங்கப்பூர் வரை செல்லும் ஒரு பெரும்சாலைத்திட்டமும் தொடங்கப்படவுள்ளது. இவை முழுமையடையும்போது இன்றைய வடகிழக்கின் முகம் முழுமையாகவே மாறியிருக்கும். நவீனமயமாதல் நிகழும், இயற்கை கொஞ்சம் அழியும், ஆனால் வறுமையும் மறைந்துவிட்டிருக்கும்.

வடகிழக்கு முன்பு மிகமிக மோசமான சாலையால் பெயரளவில் இந்தியாவுடன் இணைக்கப்பட்டிருந்தது. இந்திய மையநிலத்தின் வணிகத்தொடர்பும் பிற தொடர்புகளும் மிகமிக குறைவாக இருந்தன. அங்கே தீவிரவாதம் வளர்வதற்கான முதன்மைக்காரணம் இந்த பண்பாட்டு அன்னியத்தன்மையும், வணிகம் வளராமையால் உருவான வேலையில்லா திண்டாட்டமும்தான்.

பல்லாண்டுகளாக டெல்லியின் நிர்வாகம் அரசு உயரதிகாரிகளுக்கே விடப்பட்டிருந்தது. அவர்களின் திமிரும் பொறுப்பின்மையும் இங்கே தீவிரவாதம் வளர்வதற்கு இன்னும் முக்கியமான காரணம். நான் எப்போதும் சொல்வதொன்றுண்டு, மிகச்சிறந்த அதிகாரியைவிட மிக மோசமான அரசியல்வாதி ஜனநாயகத்தில் சிறந்த பங்களிப்பாற்றுபவன். அஸாம் பிரச்சினைக்கு இந்திரா காந்தியின் காலகட்டத்தில் இருந்த அதிகாரி ஆதிக்கமும் சமையலறை நிர்வாகமும் வகித்த பங்கு நாம் என்றும் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று. வடகிழக்கே அம்மக்களின் பங்களிப்புள்ள ஓர் அரசு அமையாமல் பார்த்துக்கொண்டார்கள். அமைந்த அரசுகளை ஈவிரக்கமில்லாமல் கலைத்துக் கொண்டிருந்தார்கள். ராணுவ ஆதிக்கமே போதும் என நம்பினார்கள்.

விளைவாக வடகிழக்கு நீண்டகால தீவிரவாதத்தால் உறைந்து நின்றுவிட்டிருந்தது. 1986ல் நான் வந்த அஸாம் ஒரு பாழடைந்த நிலம். கௌஹாத்தியின் சந்தையிலேயே மக்கள் திரள் மிகக்குறைவாக இருக்கும். பெரும்பாலும் உள்ளூர் உணவுப்பொருட்கள் மட்டுமே விற்கப்படும். 1986ல் நான் எழுதிய ஒரு கடிதத்தில் அஸாமில் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பொருட்களே விற்கப்படுவதில்லை என திகைப்புடன் எழுதியதை அண்மையில் காசர்கோட்டில் இருந்து வந்த என் நண்பர்கள் பகிர்ந்துகொண்டார்கள். வெறிச்சிட்ட கடைகள், சிதிலமான கட்டிடங்கள். தெருக்களில் இளைஞர்களை பார்ப்பதே குறைவாக இருந்தது. இன்று அஸாம் பொருளியல் பாய்ச்சலில் உள்ளது. கௌஹாத்தி ஒரு மாநகரமாக வளர்ந்துள்ளது.

அன்றைய அஸாம் எப்படிப்பட்டது என உணர பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கிய நதி நாவலை வாசிக்கலாம். அஸாம் பிரச்சினையை அமைதியடையச் செய்ய நிகழ்ந்த முயற்சிகள் ஒரு பக்கமும், அங்கிருந்த நிலைமையை பயன்படுத்திக்கொண்டு நிகழ்ந்த ஊழலின் சித்திரம் இன்னொரு பக்கமுமாக விரியும் நாவல் அது.

அஸாமின் மீட்புக்கு உண்மையான முயற்சி எடுத்துக்கொண்டவர் ராஜீவ் காந்தி. 1985ல் அஸாம் உடன்படிக்கை வழியாக அஸாமில் மாணவர் கிளர்ச்சியாளர்களே ஆட்சியமைக்க வாய்ப்பளித்தார். இந்தியாவின் வரலாற்றிலேயே இன்றுவரை படுகேவலமாக நிகழ்ந்த ஓர் ஆட்சியை 1985ல் தேர்தலில் வென்று வந்த மாணவர்தலைவர் பிரபுல்லகுமார் மகந்தா தலைமை தாங்கி நடத்தினார். அதன்பின் மீண்டும் பலவகை அஜகுஜால் வேலைகள் வழியாக 1991ல் பதவிக்கு வந்தார். அவர்கள் உருவாக்கிய சீரழிவுகளை அதன்பின் வந்த அரசுகள் மெல்லமெல்ல மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறார்கள். அஸாம் மாணவர் கிளர்ச்சியாளர்களை மக்கள் இன்றுவரை பெரும் கசப்புடன் மட்டுமே நினைவுகூர்கிறார்கள்.

வடகிழக்கின் பிரிவினைவாதத்தை அமைதியடையச் செய்ததில் பெரும்பங்களிப்பு நரசிம்மராவுக்கு உண்டு. இன்றுள்ள கட்சி சார்ந்த அரசியலெழுத்துக்களில் அவரைப் போன்றவர்களின் பங்களிப்புகள் மறைந்துவிடும். நாம் நினைவுகூர்ந்தபடியே இருக்கவேண்டும். வடகிழக்கின் பிரிவினைப்போர்களுக்கு பர்மா, சீனா அளித்துவந்த ஆதரவுகளை ராஜதந்திர நடவடிக்கை வழியாக அவர் இல்லாமலாக்கினார். நேரடியாக பேச்சுவார்த்தை வழியாக அவர்களை சரணடையவும் வைத்தார்.

அந்த அமைதியின் மீதுதான் இன்றைய அரசு வளர்ச்சிப் பணிகளை நிகழ்த்துகிறது. மெய்யாகவே வடகிழக்கு முழுக்க வளர்ச்சியை உருவாக்கிக் காட்டி அதன் அரசியல் லாபங்களையும் அடைகிறது. வடகிழக்கின் இன்றைய பாய்ச்சலுக்கு இன்று பாராட்டப்படவேண்டியவர் சாலைநிபுணர் என அழைக்கப்படும் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி. அவருடைய நேரடிக் கண்காணிப்பில் நடைபெறும் சாலைப்பணிகள் இன்றைய இந்தியாவில் நிகழும் மிகப்பெரிய வளர்ச்சித்திட்டங்களில் ஒன்று.

அஸாமின் பாரதிய ஜனதாக் கட்சி முதல்வர் ஹேமந்த பிஸ்வாஸ் சர்மா வளர்ச்சிப்பணிகள், களஅரசியல், சூழ்ச்சி அரசியல் மூன்றிலுமே நிபுணர் என்கிறார்கள். ஒரு நாள் பாரதியஜனதாவின் பிரதமர் வேட்பாளர் ஆகக்கூடும் என்று பரவலாக பேச்சு உள்ளது.  அவருக்கும் ஆதித்யநாதுக்கும் நடுவேதான் போட்டியே என்கிறார்கள். மேகாலயா, மணிப்பூர், மிஸோரம் ஆகியவையும் வளர்ச்சிப்பாதையில் உள்ளன. ஒப்புநோக்க் பின்தங்கியிருப்பது மணிப்பூர். தீவிரவாத சிந்தனை கொஞ்சம் எஞ்சியிருப்பது நாகாலாந்து.

ஹேமந்த் பிஸ்வாஸ் சர்மா

அருணாசலப் பிரதேசம் பௌத்த பெரும்பான்மை கொண்டது, ஆகவே அங்கே பிரிவினைவாதம் இருந்ததில்லை. ஆனால் சாலைவசதியின்மையால், மிக ஒதுங்கி இருந்தமையால் அது வளர்ச்சியற்ற நிலையில் இருந்தது. இன்று சாலை, விமானம், ரயில் ஆகியவற்றால் இணைக்கப்பட்ட பின் அது மிகவேகமான வளர்ச்சிப்பாதையில் உள்ளது. இன்று லடாக்கும் அருணாசலப்பிரதேசமும்தான் இந்தியாவின் எதிர்காலச் சுற்றுலா பகுதிகள்.

இமையமலையின் எல்லா பருவங்களும் வெவ்வேறு வகை சுற்றுலாவுக்கு உகந்தவை. பனிக்காலம் பனிச்சறுக்கு விளையாட்டுகளுக்கு ஐரோப்பியரை வரவழைக்கிறது கோடைகாலம் இந்தியர்களை. அண்மையில் நிகழ்ந்த சுற்றுலாப்பெருக்கு அருணாசலப்பிரதேசத்தை உயிர்த்துடிப்பு கொள்ள செய்துள்ளது. எங்கு பார்த்தாலும் ‘ஹோம் ஸ்டே’ பலகைகளுடன் வீட்டுத்தங்கல் வசதிகள். நட்சத்திர விடுதிகள்.  அருணாசலப்பிரதேசம், மேகாலயா போன்ற ஊர்களுக்கு அந்த மாநிலங்களின் மக்கள் தொகைக்கு மும்மடங்கு பயணிகள் சென்ற ஆண்டு வந்து சென்றிருக்கிறார்கள்.

சுற்றுலாவை தீவிரவாதம், அயல்நாட்டு ஊடுருவல் இரண்டுக்கும் எதிரான ஆயுதமாக வெற்றிகரமாக பயன்படுத்துகிறார்கள். பல நூற்றாண்டுக்கால பழங்குடி வாழ்வும் ஐம்பதாண்டுக்கால தேக்கநிலையும் அளித்த வறுமை நீங்கி மக்கள் பணத்தை பார்க்க ஆரம்பித்துவிட்டதன் மலர்வை எங்கும் பார்க்க முடிகிறது. வடகிழக்கு இன்று இந்தியாவுடன், குறிப்பாக தென்னிந்தியாவுடன், மிக அணுக்கமான தொடர்பு கொண்டுள்ளது. பெங்களூர், சென்னை ஆகியவை அவர்களின் கல்வி மற்றும் மருத்துவ மையங்கள். பணிக்காக பல ஆயிரம் இளைஞர்கள் தென்னகத்தில் உள்ளனர்.

நிதீன் கட்கரி

ஆகவே இன்று இந்தியாவின் எந்தப்பகுதியும் அவர்களுக்கு அன்னியமல்ல. இந்தியாவின் பகுதியெனவே அவர்கள் உணர்கிறார்கள். இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சொன்னாலும் அறிந்துள்ளனர். சுற்றுலாப்பயணிகள் வழியாகவும் தங்கள் பயணங்கள் வழியாகவும். தமிழ்நாடு என்றதும் வேலூரை பலர் குறிப்பிட்டனர்.  இங்குள்ள சிஎம்சி மருத்துவமனை அவர்களுக்கு மிகவும் தெரிந்த ஒன்று. அதன்பின் இங்குள்ள கல்லூரிகள். ஒரு பெண்மணி சென்னை கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்றவராக இருந்தார். தமிழ் மலையாளம் கன்னடம் ஆகியவற்றை குழப்பிக்கொள்ளும் வேடிக்கையும் உண்டு.

சென்ற முப்பதாண்டுகளாக இந்தியாவெங்கும் பிரிவினைவாதம் பேசிய அரசியல் குற்றமைப்புகள் இந்திய ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் வீரநாயகர்களாக கட்டமைத்த வடகிழக்கின் பிரிவினைவாதிகள் உண்மையில் வறுமையை மட்டுமே உருவாக்கிய, தங்களை பலவகையிலும் செழுமைப்படுத்திக்கொண்ட ஆயுதம் தாங்கிய ஊழல்வாதிகள் மட்டுமே என்பதை இன்று வரலாறு காட்டிவிட்டது. ஐரோம் ஷர்மிளா முதல் எத்தனை போலி முகங்கள் இங்கே. நினைக்கவே கசப்பு எஞ்சுகிறது. எளிய மக்களின் குருதியை குடிப்பவர்கள் முதன்மையாக தங்கள் போலிக்கொள்கைகளுக்கு வரலாற்றுச்சித்திரத்தை உருவாக்கும் இரக்கமற்ற அறிவுஜீவிகளே என சொல்லத் தோன்றுகிறது.

கௌகாத்தியில் நாங்கள் அமர்த்திக்கொண்ட வண்டி, ஸைலோ மகேந்திரா. வண்டி கொஞ்சம் பழையது. வழியில் ஓர் இடத்தில் நிறுத்தி பிரம்மபுத்திராவின் கிளைநதியான  காமெங் ஆற்றை பார்த்தோம். அஸாமின் புதிய ஜனநாயகம் எங்கும் கண்ணுக்கு பட்டது. சுற்றுலா விளம்பரங்களுக்கு அடுத்ததாக தெரியவந்தவை எல்லாம் அரசியல் விளம்பரங்கள்.

வழியில் ஒரு டீக்கடையில் நிறுத்தினோம். அருகே ஒரு சிறு கோயில். புதியதாகக் கட்டப்பட்டது. ஆனால் அதைச்சுற்றி ஏராளமான பெருங்கற்கால கல்தூண்கள் நின்றிருந்தன. வடகிழக்கில் பெருங்கல்பண்பாடு இன்றுமுண்டு, ஆனால் இவை பண்படாத கற்களாக இருந்தன. பெருங்கற்காலத்தையவை என்பதில் ஐயமில்லை. அவை நெடுங்காலமாக வழிபாட்டில் இருந்து அண்மையில் கோயில் கட்டப்பட்டிருக்கலாம்.

மாலை காசிரங்கா காட்டுக்கு அருகில் ஒரு விடுதியில் தங்கினோம். காசிரங்காவுக்கு 2015ல் வந்து மிக விரிவான பயணம் செய்திருந்தோம். அன்று நான் வெண்முரசு எழுதிக்கொண்டிருந்தேன். இருபதுநாட்களுக்கான வெண்முரசை எழுதி முடித்திருந்தேன். கடுமையான உளக்கொந்தளிப்பாலும், உணவுநோன்பாலும் மிகமெலிந்தும் இருந்தேன்.

இம்முறை நீண்ட பயணம் என்பதனால் வழியில் ஏதோ ஒன்றை பார்த்ததாக இருக்கட்டும் என்று காசிரங்கா காட்டில் காலையில் ஒரு சிறு உலா திட்டமிட்டிருந்தோம். ஆனால் சென்று சேர்ந்தது இரவு. அதிகாலையில் கிளம்பாமல் வழியே இல்லை. ஆகவே அன்றிரவு குளிரில் தூங்கி காலையில் குளிரிலேயே அருணாச்சலப்பிரதேசத்தை நோக்கி சென்றோம்

(மேலும்)

முந்தைய கட்டுரைகோமகள்
அடுத்த கட்டுரைபெருங்காதலின்பயணம் – மாமலர்