அன்பும் மதிப்பும் மிக்க ஜெயமோகன் அவர்களுக்கு,
தங்கள் திருப்பூர் கட்டண உரை பாகம் ஒன்றை கேட்டேன். கல்தூணையும் வாழும் மரத்தையும் தொட்டு தங்கள் உரை எங்கு செல்கிறது என்று புரியாமல் தவித்தேன். எப்படி இணைத்து அர்த்தப்படுத்தப் போகிறார் என்ற தவிப்பு உருவானது.
பண்பாட்டின் இயல்புக்கு மாறான தேக்கநிலையை உருவாக்கி சமூகம் உறைந்து போவதையும் வாழ்வின் உயிர்ப்பைத் தக்கவைக்க நெகிழ்வு இன்றியமையாதது என்பதையும் அழகாக சொல்லி உரையை நிறைவு செய்தீர்கள். அறிவார்ந்த செறிவான உரைக்கு அநேக நன்றிகள்.
தங்கள் வாசகனாக பெருமை கொள்கிறேன்.
ச. பாபுஜி
அன்புள்ள பாபுஜி
உருவகங்கள் வழியாகவே நான் சிந்திக்கிறேன். அது எழுத்தாளனின் சிந்தனை வழி. தத்துவவாதியின் வழி அல்ல. ஆகவே அதையே உரையாக முன்வைக்கிறேன். அந்த உருவகங்கள் வாசகனுக்குள் நிலைகொண்டால் நான் சொல்வனவற்றை அவனால் வளர்த்துக்கொள்ள முடியும்
ஜெ
அன்புள்ள ஜெ,
வணக்கம்.
கனிமரமும் கல்தூணும் கேட்டு முடிக்கவில்லை, அதற்குள் ஸ்ருதி டிவி ‘விடுதலை என்பது என்ன?’ என்கிற இரண்டு மணிநேர உரையைப் பதிவேற்றியிருக்கிறார்கள். இன்னும் படத்தின் டிரெயிலர்கூட வரவில்லை; பாடல் கேட்டேன், பிடித்திருக்கிறது. பிந்தைய உரையைக் கேட்கலாமா? மொத்தத்தையையும் கேட்டுவிட்டுப் படத்திற்குப் போவதில் பாதிப்பு எதுவும் இருக்காதே?
விஜயகுமார்.
அன்புள்ள விஜயகுமார்
உரைகளை முழுக்கக் கேட்பது நல்லது. ஒரு தொடர்ச்சி உண்டு. ஆனால் தனித்தனியாகவும் கேட்கலாம். தனி உரைகள்தான்.
ஜெ