கங்கைப்பருந்தின் சிறகுகள் – வெங்கி

அன்பின் ஜெ,

வணக்கம். உங்களுக்கும், குடும்பத்தினர் அனைவருக்கும் அன்பு.

போராவின் “கங்கைப் பருந்தின் சிறகுகள்” வாசித்தேன். ஆம், மிகத் தாமதம்தான். வேலூர் லிங்கம் சார் சமீபத்தில் நினைவுறுத்தினார்.

அழகிய அந்த நிலப்பரப்பிற்காகவும், 50/60-களின் அஸ்ஸாமிய கிராமங்களின் அபாரமான, யதார்த்த/இயல்புச் சித்தரிப்புகளுக்காகவும், அரசியலும், பொருள்முதல் வாதமும் எங்கனம் கிராமங்களை ஊடுருவி அதன் இயல்புகளை அழித்து அவற்றின் முகங்களை மாற்றின என்பதன் வரைபடத்திற்காகவும், ஒரு எளிய கதையை எப்படி போரா தன் எழுத்தின் நடையழகால் உயர்த்தியிருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளவும் அவசியம் வாசிக்க வேண்டிய நாவல். துளஸி ஜயராமன் அம்மாவின் தமிழ் மொழிபெயர்ப்பு மிக அருமை.

இருபதாம் நூற்றாண்டின் மத்திம காலகட்டம். அஸ்ஸாமின் இரு பெரும் நதிகள் பிரம்மபுத்திராவும், பரக்கும்; பரக் ஆற்றில் கலக்கும் அதன் துணை நதியான சோனாய் ஆற்றின் கரையிலிருக்கும் கிராமம் சோனாய் பரியா. கிராமங்கள் இன்னும் சாலைகளால் நகரத்துடன் இணைக்கப்படாத காலம்.

இளம்பெண் வாசந்தியின் வீட்டின் பின்புறத்திலிருந்து பார்த்தால் நதி தெரியும். தண்ணீர் எடுக்க வாசந்தி நதிக்குதான் செல்வாள் (நதியின் “டனுவா கரை” அவளின் தாத்தாவின் பெயரால்தான் அழைக்கப்படுகிறது). ஓய்வான சமயங்களில் ஆற்றங்கரையில் இருக்கும் தோப்புகளில் நேரம் செலவிடுவது அவள் வழக்கம். வாசந்தியின் அண்ணன் போக்ராம், 1942 சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரஸ் தொண்டனாக கலந்து கொண்டிருக்கிறான். இப்போது வணிகம் செய்கிறான். சுற்றுப்புற கிராமங்களிலிருந்து நெல், சணல், கடுகு போன்றவற்றை கொள்முதல் செய்து சைக்கிளிலும், வாடகை மாட்டு வண்டியிலும் நகரத்திற்கு கொண்டுசென்று விற்பான்; நகரத்திலிருந்து துணிமணிகள், கம்பளிகள் மொத்தமாக வாங்கி வந்து கிராமச் சந்தைகளில் விற்பான். போக்ராமின் மனைவி தருலதா. போக்ராமிற்கு மூன்று குழந்தைகள் –  தேவகன், சிகூணி, மானஸ்.

வாசந்தியின் தாய் சுஜலாவிற்கு 85 வயது. போக்ராமின் தங்கை ரூபந்தி திருமணமாகி கஹீங்குரி கிராமத்தில் வசிக்கிறாள். போக்ராமின் நண்பன் தனஞ்செயன் பாப்சிலா கிராமத்தைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவன். பாப்சிலாவிலும், சுற்றுவட்ட கிராமங்களிலும் அவனுக்கு மிக நல்ல பெயர். உதவி மனப்பான்மையும், நற்சுபாவமும் கொண்ட அவன்மேல் கிராம மக்கள் பெரும் மதிப்பு வைத்திருக்கிறார்கள். தனஞ்செயன் 1950 வாக்கில் பாப்சிலாவிற்கு வந்தவன். அவன் தங்கை மன்தரா, அன்பில்லாத அவன் பெரியப்பாவால் ஒரு கிழவனுக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்ட சோகக் கதை அவன் பின்னணியில் உண்டு. தனஞ்செயனும், வாசந்தியும் காதலிக்கிறார்கள்.

ஷில்லாங் சபைக்கு தேர்தல் வருகிறது. கிராமங்களுக்கு சாலை வசதி செய்யப்படுகிறது. பொருள்மைய வாதமும், நகரத்தின் நுகர்வு கலாச்சாரமும், இயந்திரமையமும் கிராமங்களைத் தீண்டுகின்றன. பேருந்துகள் கிராமங்களுக்கு வந்து செல்வதால் பெருவணிகர்கள் தாங்களே அங்கு வந்து சந்தையில் வணிகம் செய்ய ஆரம்பிக்க, போக்ராமின் தொழில் நசிக்கிறது.

ஷில்லாங் சபைக்கு அந்த தேர்தலில் மூன்று பேர் போட்டியிடுகின்றனர் – வழக்கறிஞர் சுபோத் சைக்கியா, சஞ்சீவ் பருவா, லோக்நாத் தாமுலி. போட்டி பருவாவுக்கும், சைக்கியாவிற்கும் இடையில்தான். சஞ்சீவ் பருவா நாணயமானவர். அவருக்கு மக்கள் செல்வாக்குண்டு. தனஞ்செயன் அவரை ஆதரிக்கிறான். சுபோத் சைக்கியா, வாய் ஜாலத்தில், நேர்மையற்ற வழியில் ஜெயிக்க நினைப்பவர். போக்ராமிற்கு பண்மும், வீவிங்க் லோனும் ஏற்பாடு செய்து அவனையும், அவன் கீழ் இன்னும் சில இளைஞர்களையும் சேர்த்துக்கொண்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு உபயோகிக்கிறார் சுபோத். தனஞ்செயனும், போக்ராமும் எதிரியாகிறார்கள். ஓட்டுக்கு பணம் கொடுத்து, எதிர்க் கட்சியின் தேர்தல் ஏஜண்டுகளை விலைக்கு வாங்கி, தேர்தலில் சுபோத் வெற்றி பெறுகிறார். போக்ராமிற்கு அரசு காண்ட்ராக்டுகள் கிடைக்கின்றன. போக்ராம் செல்வந்தனாகிறான். பணத்தின் மீதான பேராசை அதிகரிக்கிறது. கள்ள வியாபாரம், புது பங்களா, புதுப்பணம், புதுப் பழக்கவழக்கங்கள். போக்ராம் குடிக்கப் பழகுகிறான்; டல்புரியா கிராமத்தில் ஒரு பெண்ணுடன் சகவாசம். தருலதாவின் நிம்மதி போகிறது.

தனஞ்செயன் மேலுள்ள கோபத்தினால், போக்ராம் தங்கை வாசந்திக்கு, தராங்கயால் கிராமத்தின் சூப்பிரண்டண்ட் பகீரதனின் மூத்த மகன் மதுராவுடன் (மன்தன் மண்டல்) திருமணம் நிச்சயிக்கிறான். பகீரதனின் மனைவி பனிதா. அவர்களுக்கு நான்கு குழந்தைகள் – மகன்கள் மதுரா, நந்தேச்வர், மகள்கள் பாரு, புத்லி. மனமொடிந்து போகும் வாசந்தி விரலில் அணிவிக்கப்பட்ட நிச்சயதார்த்த மோதிரத்துடன் சோகத்தில் வளைய வருகிறாள்.

கிராமத்தில் வீடு வீடாகச் சென்று பட்டுத் துணிகளும், போர்வையும் விற்கும் கிழவி ரூபாவிடம், வாசந்திக்கு இரகசியாமாக ஒரு கடிதம் கொடுத்து விடுகிறான் தனஞ்செயன்…

நாவலின் மீதிப்பாதியும் போராவின் எழுத்துகளால் மிகப் பிடித்திருந்தது. சிறந்த வாசிப்பனுபவம்.

நாவலில் தேர்தல் சித்திரம்… #தேர்தல் திருவிழா மார்கழி மாதத்து ஆரம்பத்திலேயே அமளி துமளிப்பட ஆரம்பித்தது. கிராமத்துத் தெருக்களிலெல்லாம் அழகான கார்கள் வரிசை வரிசையாக ஊர்வலம் வந்தன. சோனாய் நதியின் இக்கரை கூட, அதன் உலர்ந்த மணல் கூட நகரத்துச் சுகவாசிகளின் மென்மையான திருவடி ஸ்பரிசத்தைப் பெற்றது. இந்த அழகர்கள் கூட்டங்களில், மேடைகளில் அழகழகாகப் பேச ஆரம்பித்துவிட்டனர். சோனாய் பரியா கிராமத்து மக்கள் இந்த ஐந்தாண்டுகளாக ஏழையாக இருந்தனரே தவிர அவர்களுக்குள் ஒற்றுமைக்குக் குறைவிருக்கவில்லை. ஆனால் தேர்தல் அறிவிப்பு வந்ததும் நிலைமை மாறியது; மதம், மதத்தினுள் பிரிவுகள் இத்தனை இருக்கின்றன என்பதே இப்போதுதான் அவர்கள் அறிந்தார்கள். கல்பியா, பாப்சிலா போன்ற இடத்து மேமன்சிங் மக்கள் தனி மதத்தவர் என்பது கூட இப்போதுதான் அவர்களுக்குத் தெரிய வந்தது. கலிதா ஜாதியினரிடையிலும் பலதரப்பட்டவர் இருக்கின்றனர் என்பதை அநேகர் இப்போதுதான் தெரிந்துகொண்டுள்ளனர்#

அஸ்ஸாமின் “அறுவடைப் பண்டிகை”-யின் சித்திரம் நாவலில் வருகிறது. சோனாய் பரியா கிராமம் புத்துணர்ச்சியுடனும், கலகலப்புடனுடனும் தோன்றிற்று. “அறுவடை உற்சவக் கொண்டாட்டங்கள் (இந்த உற்சவத்தை மக்கள்மாக்பிஹுஅல்லதுபோகாலிபிஹுஎன்றழைப்பர்). உற்சவத்தின்போது நடக்கும் திருவிழாவும், மக்களின் கொம்மாளமும், அம்மாதத்து வானிலையும், இளைஞர்இளம்பெண்களின் உள்ளங்களை இலவம் பஞ்சைப் போலாக்கி விட்டன. மெல்லிடையுடன் நடனமாடும் பெண்ணின் இளமை கவிதைச் சந்தம் போன்று துள்ளிப் பாய்ந்தது. இல்லாமையினின்றும் தற்காலிக ஓய்வு பெற்ற முதியோர், இளையவர் எல்லோரும் பக்தி ரசத்தில் மூழ்கி விட்டனர். தேவ்டா, பாப்சிலா போன்ற இடங்களில் எருமைகளின் சண்டை களியாட்டமாக நடத்தப்பட்டது. திருவிழாக் கூட்டம் பார்க்க ரம்மியமாக இருந்தது.

அஸ்ஸாமிய இலக்கியத்தின் தோற்றமும், வளர்ச்சியும் குறித்து பீரேந்திரகுமார் பட்டாச்சார்ய நல்ல முன்னுரை ஒன்றை அளித்திருக்கிறார். நாவல், 1976-ல், “பதம் பருவா” இயக்கத்தில் அஸ்ஸாமிய மொழியில் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது. நாவல் வாசித்து முடித்தபின் திரைப்படத்தையும் பார்த்தேன் (யு ட்யூபில் இருக்கிறது). நல்ல திரையாக்கம். வாசந்தியாக நடித்த அஸ்ஸாமிய இளம்பெண், நாவலின் வாசந்தியைப் போலவே பேரழகி!

வெங்கி

***

“கங்கைப் பருந்தின் சிறகுகள்” – லக்ஷ்மீநந்தன் போரா

அஸ்ஸாமிய மூலம்: Ganga Chilanir Pakhi

தமிழில்: துளசி ஜயராமன்

நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு28

கங்கைப்பருந்தின் சிறகுகள் இணைய நூலகம்

கங்கைப்பருந்தின் சிறகுகள் வாங்க 

முந்தைய கட்டுரைதிருப்பூரில் ஓர் உரை
அடுத்த கட்டுரைகனலி, கதைகள்