சுபிட்சமுருகன் – வெங்கி

சுபிட்சமுருகன் வாங்க 

அன்பின் ஜெ,

அன்பும், வணக்கங்களும்.

நேற்று சரவணன் சந்திரனின் “சுபிட்ச முருகன்” வாசித்தேன்.

மேம்போக்கான, வணிக நாவல் வாசகர்கள் துணுக்குறல்களையும், அதிர்ச்சிகளையும் சந்திக்கக் கூடும். ஆழமான, பாதிக்கும் மேல் வேறொரு தள்த்தில் நிகழ்வதுமான நாவல்; சித்தர் அனுபவங்களும், தேடலின் பித்தும், குடும்பத்தில் முன் தலைமுறைகளின் கர்மத் தொடர்வால் உண்டான திரிபுகளின் அலைதல்களும், வலியும், கண்டடைதலின் பரவசமும், ஆழமன படிமங்களின் மொழியும் அபாரமான வாசிப்பனுபவத்தைத் தந்தன. “திரிபுகளின் பாதை” என்ற தலைப்பிலான உங்களின் முன்னுரை பல திறப்புகளை அளித்தது.

என் இருபத்தி நான்காவது வயதில், 1997 ஜனவரியில் அம்மா இறக்கும்போது, மனம், பெரும் அதிர்ச்சியையும், தாங்க முடியாத வெற்றிடத்தின் அழுத்தத்தையும் நேர்கொண்டது. நான் ஆறாம் வகுப்பு படிக்கையில் அப்பா இறந்த போது கூட இத்தனை மன அழுத்தத்தை நான் சந்தித்திருக்கவில்லை; அப்பா இல்லாத அந்த வெற்றிடத்தை அம்மா அன்பினால் சேர்த்து நிரப்பிக் கொண்டிருந்தார். ஆனால், அம்மாவின் இழப்பு பேரிடியாய் இருந்தது; மனம் அந்த உண்மையை/நிதர்சனத்தை ஏற்க மறுத்தது. அதன்பின்னான நாட்களில் இயந்திரம் போல் அன்றாடத்தின் காரியங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. அம்மாவின் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு, தம்பிகளை அவரவர் கல்லூரிகளில் விடுதியில் விட்டுவிட்டு ஓசூர் திரும்பினேன். மனம் “இனி என்ன?” என்ற கேள்விக்கும், சூனியத்தின் இருளுக்கும் மாறி மாறிப் பயணித்துக் கொண்டிருந்தது. ஓர் முன்னிரவு, பெட்டியைத் துழாவிக் கொண்டிருந்த போது, அம்மா முன்னர் எழுதிய போஸ்ட் கார்டுகளும், நீல நிற இன்லேன்ட் கடிதங்களும் கிடைத்தன. அம்மாவின் கையெழுத்து…கன்னத்தில் வழியும் நீருடன்தான் எல்லாக் கடிதங்களையும் மீண்டும் மீண்டும் படித்தேன். நெஞ்சிலும், தொண்டையிலும் அதிகரித்துக் கொண்டிருந்த கனம் ஒரு கட்டத்தில் தாங்க முடியாமலாகியது; மூச்சுத் திணற ஆரம்பிக்கவே, கைகளில் கடிதங்களை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்தேன். நட்சத்திரங்களில்லாத இருண்ட வானம் பார்த்து கதறி அழுதேன்.

அடுத்த இரண்டு வருடங்கள் மனதில் பெருகிய கேள்விகளோடு இலக்கில்லாமலும், வாழ்வு, மரணம் குறித்த தேடல்களோடு எதன்மேலும் பிடிப்பில்லாமலும் அன்றாடங்களில் உழன்று கொண்டிருந்தேன். ஓஷோவும், ஜேகேயும் அண்மையானார்கள். மனம் பக்தியிலிருந்து கேள்விகளுக்கு/தேடலுக்கு நகர்ந்திருந்தது. யோகாவும், தியானங்களும் கொஞ்சமாக கற்றுக்கொண்டேன். பல ஆசிரமங்களுக்குச் சென்று சில நாட்கள் தங்கி திரும்பி வந்தேன். தத்துவ நூல்களில் மனம் லயித்தது. நண்பன் செல்வா, அப்போது ஓசூரில் பிரபலமாயிருந்த ஜோசியர் ஒருவரிடம் என்னை அழைத்துச் சென்றான். என் கைரேகையை மையிட்டு அச்செடுத்து பார்த்த

அவர், எனக்கு எப்போது திருமணமாகும், எத்தனை குழந்தைகள் பிறக்கும், எப்போது வெளிநாடு போவேன் என்று வழக்காமான கணிப்புகளைச் சொல்ல ஆரம்பித்தார். அப்போதிருந்த மனநிலையில் திருமணத்தின் எண்ணச் சுவடே இல்லை என்னிடம். “துறவுப் பாதைக்குச் செல்ல என்ன செய்ய வேண்டும்?” என்று நான் கேட்க அவர் நிமிர்ந்து பார்த்தார். “அது நம்ம கையிலயா இருக்கு?” என்றவர், என் கை ரேகைகளில் அதற்கான அறிகுறிகள் தென்படவில்லையென்றும், வேண்டுமென்றால் என் மனச் சாந்திக்காக ஸ்படிக லிங்க சிவ ஆலயங்களுக்கு சென்று தரிசனம் செய்யுமாறும் கூறினார்.

மெய்த் தேடலை அந்தக் காலகட்டத்தில், எத்தனை குழந்தைத்தனமாக, எத்தனை இலகுவதானதாக எண்ணிக் கொண்டிருந்திருக்கிறேன் என்பது இத்தனை வருட அனுபவங்களுக்குப் பின்/தேடலுக்குப் பின் இப்போது புரிகிறது. நான் தயாராகும் வரை, அது எனக்கு வெளிப்படாதிருப்பது, அது என்மேல் கொண்ட கருணை என்று இப்போது உணர்கிறேன். அதன் ஒளியை, விராடத்தை, உடலும், மனமும் தாங்குமா என்ன?; மனப்பிறழ்வு கொண்டு அலையமாட்டோமா?. யோசித்தே பார்க்கமுடியாத, அன்றாடங்களுக்கு முற்றிலும் அந்நியமான விஸ்வரூபப் பேரன்பின் விகசிப்பை நெஞ்சறிந்தால் அல்லது பரிசளிக்கப்பட்டால் நாம் இயல்பில் இருப்போமா?. “அதை நோக்கி நாம் போகவேண்டுமா அல்லது அது நம்மை நோக்கி வருமா?” என்ற கேள்விக்கு பெரியவர்களிடத்தில் பதில் தேடினேன். “தேடலின் பாதைகள் ஆயிரம்/லட்சம்/கோடி. நீ செய்வதெல்லாம் வெறும் தயாரிப்புகள் மட்டுமே; தயாரிப்பு பூரணமடைந்ததும், முன்பு துளித்துளியாய் பரிச்சயப்பட்ட அவ்வினிப்பின் சுவை, அக்கணத்திலேயே மழையாய்/அமிர்த சாகரமாய் பொழியும்; உனை நனைக்கும்” என்று அறிவுறுத்தப்பட்டேன். பொறுமையின், காத்திருப்பின் தவம் புரிந்தது. அதுவரை, தேடல் எதுவாக? எதுவாகவோ, அதுவாக?…அதுவான பின்னும் கருணையினால் இதுவாக…

இது ஒரு வழியென்றால், மறுபக்கம், லௌகீகத்தில் எவ்விசையாலோ திரிபடைந்து, எதனாலோ உந்தப்பட்டு, எம்மாயத்தினாலோ நகர்த்தப்பட்டு, கர்ம பலனாய், பந்து, “அதை” நோக்கி உதைக்கப்படும் செயல் நடக்கும். அப்பக்கததின் நாவலிது. நாவலை வாசித்து முடித்ததும் இந்நாவலுக்கு எப்படி வாசிப்பனுபவம் எழுதப் போகிறோம் என்று மலைப்பாயிருந்தது. எழுதாமல் விட்டுவிடலாமா என்றும் தோன்றியது. என் மனப் பதிவிற்காகவாவது சின்னதாய் ஒரு குறிப்பெழுதி வைக்கலாம் என்று நினைத்தேன்…

நாவலில்…

அவரோடு நடக்கையில்எது விஷம்னு எப்படிக் கண்டுபிடிக்கறது?” என்றேன். “இப்ப அதைத் தெரிஞ்சுக்கிட்டு என்ன பண்ணப் போற. விஷத்துக்கிட்ட குறுகுறுப்போட விரும்பிப் போகக்கூடாது. நம்மையறியாமல் நாக்கில பட்டுரும். ஒருவகைல, நாம கூட பல நேரங்கள்ல பாம்பு மாதிரிதான். நாக்கால மட்டும் யாரையும் தீண்டிடக் கூடாது. நம்பிப் பக்கத்துல போனா எதுவுமே விஷமில்ல. புல், பூண்டு, பூச்சினு யாரோட எல்லையிலும் கால் வைக்காதஎன்றார்

வெப்பமும் குளிர்ச்சியும் சரிவிகிதத்தில் அமைவதே சமன்பாடு. வெப்பம் அந்த மலையில் இருக்கிறது. வெப்பத்தைத் தணிக்கிற குளிர்ச்சி, அடி நிலமொன்றில் ஆழத்தில் புதைந்து கிடக்கிறது. பெண் தன்மையுடையது அது என எனக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அதை மேலே கொண்டு வருவதற்கான கரங்களுக்காகத்தான் காலம் காத்துக் கிடந்ததுஎன்றது அந்தக் குரல்.

சிலையா அது?” என்றேன்.

உடமைப்பட்டவனைப் பொறுத்து வெளிச்சத்தில்தான் அது உருக்கொள்ளும்என்றது அந்தக் குரல்.

அதை எதற்கு எடுக்க வேண்டும்?” என்றேன்.

பூ பூக்கஎன்றது அந்தக் குரல்.

யாரிடம் அதைக் கொடுக்க வேண்டும்? என்றேன்.  

எடுப்பது உன் வேலை; செல்வது அதன் வேலைஎன்றது.

இடத்தைச் சொல்லிவிட்டால் போய் எடுத்து வந்துவிடுவேன். எதற்காக அந்த மலைக்குப் போகவேண்டும்?” என்றேன்.

ஒரு காதை ஒரு சொல்தான் போய் அடையும். தேர்ந்தெடுக்கப்பட்ட காது நீஎன்றது.

பின்னர் அதுவே தொடர்ந்ததுசொற்களை ரசவாதம் செய்தவனின் சொல் அது. நெய்யிட்டு உருக்குகிறவனின் வலிமையான மந்திரச் சொல். ஆனால் அதைக் கேட்பதற்கு நீ அனுமதி வாங்க வேண்டும். அனுமதி கொடுக்கிற அதிகாரம் என்னிடம் இல்லைஎன்றது.

யாரிடம் அனுமதி கேட்க வேண்டும்?” என்றேன்.

ஏற்கனவே சொன்னேனேபெயர்களெல்லாம் நீங்கள் வைத்துக் கொண்டதுஎன்றது.

அவர் யார்?” என்றேன்.

அவர்தான் மூலம்என்றது.

மூலம் என்றால் என்ன?” என்றேன்.

அவரே உருக்குகிறவர்என்றது.

எதை உருக்குகிறவர்?” என்றேன்.

நீ தேடுவதைஎன்றது அந்தக் குரல்.

“சுபிட்ச முருகன்”-ன் சித்தர் பகுதிகளும், படிம மொழியும், ஆழ்மனப் பதிவுகளின் வடிவத் துலக்கலும்… இனிப்பின் இயங்கியல்; பஞ்சாமிர்தத்தின், லட்டுப் பூரணத்தின் பூந்தித் துளியின் சுவை; உயிர் நனைக்கும் மழை; மஞ்சள் நாகத்தின் ஒளித் தீண்டல்; பச்சைப் பட்டுக் கருணையின் முதுகுத் தண்டு ஸ்பரிசம்; நீலத்தின் மற்றுமொரு மின்னல் வெளிச்சக் கீற்று…

வெங்கி

“சுபிட்ச முருகன்” – சரவணன் சந்திரன்

டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு

முந்தைய கட்டுரைமுகாம்கள், கடிதங்கள்
அடுத்த கட்டுரைதத்துவ அறிமுகம், கடிதம்