சிப்பியின் வயிற்றில் முத்து வாங்க
அன்பின் ஜெ,
வணக்கங்களும் அன்பும். போதிசத்வ மைத்ரேய-வின் “சிப்பியின் வயிற்றில் முத்து” வாசித்தேன் (வங்க நாவல் தமிழாக்கம் எஸ். கிருஷ்ணமூர்த்தி).
ஒரு வங்க எழுத்தாளர் எத்தனை நுண் அவதானிப்புகளுடன் தமிழர் வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறார் என்று ஆச்சரியமாக இருந்தது!. வாசிக்க வாசிக்க பெரும் வியப்பு!. 1950-களின் முந்தியும், பிந்தியுமான காலகட்டத்தில், தூத்துக்குடி கடற்கரையோர மீனவ சமுதாய மக்களின் வாழ்வியலையும், தஞ்சாவூர் திருவையாறு பகுதியில் இசை, நாட்டியக் கலைகளை வாழ்முறையாகக் கொண்ட தேவதாசி இனத்தவர்களின் வாழ்வியலையும் நுட்பமாக பதிவு செய்திருக்கிறது நாவல்.
நாவலில் ஏராளமான கதாபத்திரங்கள் வருகின்றன. சிறிதும் கட்டுக்கோப்பு குலையாமலும், சுவாரஸ்யமாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது நாவல். எஸ். கிருஷ்ணமூர்த்தியின் தமிழ் மொழிபெயர்ப்பு அபாரம். நாவலின் கச்சிதமும், நடையும், பேசுபொருளும் மிகவும் வசீகரித்தன. அன்றைய அரசியல் சூழலும் நாவலில் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சுதந்திரம் அடைவதற்கு முன்னான சமூகச் சூழலும், அடைந்த பின்னான மாற்றங்களும், சமூக மனநிலையும், முதலாளித்துவமும், பொதுவுடமைச்சிந்தனைகளும், விவாதங்களாய் கதையோட்டத்துடன் விரிகின்றன.
வ.உ.சி-யை தன் அரசியல் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டவரும், இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினரும், 1911-ல், மணியாச்சிரயில்நிலையத்தில், அப்போதைய திருநெல்வேலி கலெக்டராய் இருந்த பிரிட்டிஷ் அதிகாரி ஆஷ் துரையை சுட்டுக் கொன்றுவிட்டு தன்னையும் சுட்டு தற்கொலை செய்துகொண்ட வாஞ்சியின் நண்பரும்/சீடருமான வெங்கி அய்யர் நாவலில் ஒரு கதாபாத்திரமாக வருகிறார். வாஞ்சி ஆஷைச் சுட்டுக் கொல்லும்போது அவரும் வாஞ்சி அய்யரின் அருகில் சம்பவ இடத்தில்தான் இருக்கிறார்.
இளம் இந்திரா காந்தி, ஃபெரோஸ் காந்தி, சுதேசமித்திரன் ஆசிரியரும், பாரதியின் சீடருமான சி. ஆர். சீனிவாசன், ஐம்பதுகளில் மத்திய உணவு மந்திரியாக இருந்த கே.எம். முன்ஷி, அப்போதைய மெட்ராஸ் மாநிலத்தின் முதல் முதலமைச்சராக பதவி வகித்த குமாரசாமி ராஜா,தியாசஃபிகல் சொசைட்டியின் முதல்வராயிருந்த அன்னி பெஷன்ட், அருண்டேல், லண்டனில் இந்தியத் தூதரகத்தின் முதல் ஹை கமிஸனர் பொறுப்பிலிருந்த வி. கே. கிருஷ்ண மேனன், இலங்கையின் முதல் பிரதம மந்திரி டி. எஸ். சேனா நாயகே…அனைவரும் நாவலில் வருகிறார்கள்.
***
1950-ம் ஆண்டில், வங்க அரசின் மீன்வளத் துறையிலிருந்து இந்திய அரசாங்கத்தின் மீன்வளத் துறைக்கு மாறி, தமிழ்நாட்டின் தென்கோடியில்கன்னியாகுமரிக்கருகில் மன்னார் குடாக் கரையிலமைந்த தூத்துக்குடிக்கு வருகிறார் போதிசத்வ மைத்ரேய. #மீனவர்கள் பல்வேறு முறைகளில் மீன் பிடிக்கிறார்கள். அவர்கள் மூக்கைப் பிடித்துக்கொண்டு கடலில் அறுபது எழுபதடி ஆழத்துக்கு மூழ்கி சங்குகளும் முத்துச்சிப்பிகளும் எடுத்து வருவர். அவர்களுடைய வாழ்க்கை சுவையானது.சுற்றுச் சூழலும் அவ்வாறே. நிலத்தில் தமிழ்ப் பண்பாட்டின் செல்வம் இலக்கியம், சிற்பம், இசை, நாட்டியம். பின்னவை இரண்டும் தேவதாசி சமூகத்தின் பாரம்பரியம். இருந்தாலும் கடுமையான சாதி வேற்றுமைகள் நிறைந்தது தமிழ்நாடு# என்று குறிப்பிடுகிறார் போதிசத்வ.
எழுத்தாள நண்பர் அஜித் கிருஷ்ண பாசு, “தமிழ் சமூகம், தமிழர்களின் வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் இவற்றைப் புரிந்துகொண்டு தமிழர்களை வைத்து நாவல், கதைகளை எழுதி தமிழ்நாட்டை வங்காளிகளுக்கு அரிமுகப்படுத்தச் சொல்லியிருக்கிறார். 1960-ம் ஆண்டிலிருந்தே தமிழர்களைப் பாத்திரங்களாக வைத்து பத்திரிகைகளில் சிறுகதைகள், நெடுங்கதைகள் எழுதத் தொடங்கியிருக்கிறார் போதிசத்வ. பிறகு 60/61-ல், மன்னார் குடாக் கரையில் வாழும் கத்தோலிக்க மீனவர் சமூகத்தைச் சித்தரித்து, “கல்பபாரதி” பத்திரிகையில் “சுக்தி சைகத்” என்ற தலைப்பில் ஒரு நாவல் எழுதத் தொடங்கியிருக்கிறார். இரண்டு வருடங்களாய் வெளிவந்த அந்த நாவல் முற்றுப்பெறவில்லை. கிடப்பில் போட்டிருந்த அந்த நாவலை நண்பர்களின் வேண்டுகொளுக்கிணங்க, பத்து முறை திருத்தி திரும்ப எழுதுகிறார். நாவல் இப்போதிருக்கும் வடிவில், கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பின் 80-ல் வெளியாகிறது.
நாணயமற்ற முதலாளிகளுக்கெதிராக, மீனவ சமுதாயத்தினரிடையே வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்து விழிப்புணர்வை உண்டாக்கும் செயலில் ஈடுபட்டிருக்கும் உடல் வலு மிக்க மீனவர் மோசஸ் ஃபெர்னாண்டோ, கொடூரமான முறையில் நெஞ்சில் மூங்கிலால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்படுகிறார். அவர் பையன் பீட்டரையும் கொலை செய்வதற்காக கொலையாளிகள் தேட, பீட்டர் ஊரை விட்டுச் செல்கிறான். இரண்டு வருடம் கழித்து திரும்புகிறான். அப்போதும் அவன் உயிருக்கு ஆபத்துதான். ஊரில் மீனவர்களின் நிலைமைஇன்னும் மோசமாக இருக்கிறது.
நகரின் உட்புரத்தில் கன்னிமார் மடத்தின் மருந்தகத்தில் வேலை செய்யும் சிஸ்டர் சோஃபியாவைக் காதலிக்கிறான் பீட்டர். அவள் கன்னியாஸ்திரி ஆகுமுன்பே, ஒருமுறை அவளின் பதின்ம வயதில், கடலில் சுறாவிடமிருந்து அவளைக் காப்பாற்றியிருக்கிறான் பீட்டர். மைக்கேல், தோமஸ், மேத்யூ, சிங்கராயன், நாதன் ஐவரும் மீன்பிடி படகில் பீட்டரின் சிஷ்யர்கள்.
உப்பளங்கள், கப்பல் ஏஜன்ஸி, வங்கித் தொழில், டீ காபித் தோட்டம், லாரி, கான்ட்ராக்ட் தொழில், இன்னும் பலதரப்பட்ட தொழில்கள் செய்யும் (இலங்கை, ஹாங்காங், மலேயாவிலும் தொழில்கள் பரவியிருந்தன) தூத்துக்குடியின் பிரசித்திபெற்ற, பணம் படைத்த தொழிலதிபரும் இலங்கையின் முதல் பிரதமரின் தோழருமான “காட்வின் ஃபெர்னாண்டோ”, பீட்டரின் அப்பா மோசஸின் நண்பர். காட்வினின் மகன் அந்தோனி. தன்னை, அப்பா, ஜோசப் மாமாவின் பெரிய பெண் மார்ஸியை திருமணம் செய்ய வற்புறுத்துவது பிடிக்காமல் அந்தோனி, 1937 கிறிஸ்துமஸுக்கு முதல் நாள் இரவு ஊரை விட்டு லண்டனுக்கு ஓடிப்போகிறான். பேராசிரியர் லாஸ்கியிடம் பொருளாதாரத்தில் ஆய்வுப் பட்டம் பெற்று, லண்டன் இந்தியத் தூதரகத்தில் பணியாற்றுகிறான்.
துறைமுகத்தில் “கார்தோஸா பிரதர்ஸ்” நிறுவனத்தின் முதலாளிகள் இருவர் – சுஸானும், மானுவலும். அவர்களின் உதவியாள் கிரிகோரி. கிரிகோரி கொலை பாதகத்துக்கும் அஞ்சாத முரடன். ஊரில் அரசியல் செல்வாக்குள்ள மற்றொரு பெரிய மனிதன் பேனி மிராண்டா.
தூத்துக்குடியிலிருந்து எட்டையபுரம் வழியாக ராமநாதபுரம் செல்லும் வழியில் மாதவபுரம் கிராமம். சுப்ரமணிய பாரதியின் நண்பர் வெங்கி அய்யர், நண்பனின் பெயரில் ஆரம்பித்த “பாரதி வித்யாலய”-த்தில் வேலை செய்கிறார் ஆசிரியர்/வீணை வித்வான் கோதண்டராமர் (ராமரும் பாரதியின் நண்பர்தான்). திருவையாறு சதாமங்கலம் மிராசுதாரும், வயலின் வித்வானுமாகிய அனந்தகிருஷ்ணரின் மகன்தான் கோதண்டராமன். ராமனின் சகோதரி தமயந்தி. ராமனின் நண்பன் ராமானுஜம். அனந்தகிருஷ்ணருக்கு தாசி நாட்டியக்காரி கனகம்மாவுடன் நெருங்கிய தொடர்பு. ராமனுக்கும் கனகம்மாவின் மேல் மிகுந்த அன்பு. ராமன் தன் பனிரெண்டாவது வ்யதில், அப்பாவின் நண்பர் தஞ்சாவூர் நரசிம்மனிடம் வீணை கற்றுக்கொள்கிறான். அவரிடம் ஆசி பெற்று வீணை ருக்மணி அம்மாளிடமும் பயிற்சி பெறுகிறான். ருக்மணி அம்மாளின் மகள் ரத்னாவை முதன்முதலில் திருச்சியில் காவிரிக் கரையில் சந்தித்தது முதல் காதலிக்கிறான். சட்டக்கல்லூரி மாணவனான ராமன் பின்னர் நாட்டியத்தில் விருப்பம் பெற்று, மெலட்டூர் நடேசய்யரிடமும், சிதம்பரம் நாராயண சாஸ்திரியிடமும் நாட்டியம் கற்கிறான். நாராயண சாஸ்திரி, ரத்னாவின் தாத்தா; ருக்மணி அம்மாளின் தந்தை.
காட்வின் முதுமையில் புற்று நோயால் அவதிப்பட்டு, தன் சொத்துக்களனைத்தையும் பீட்டரின் பேரில் எழுதி வைத்துவிட்டு இறக்கிறார். அந்தோனி லண்டனிலிருந்து 14 வருடங்களுக்குப் பின் தூத்துக்குடி திரும்புகிறான். பீட்டரைக் கொலை செய்ய முயலும் எதிரிகள், தவறுதலாக அவன் நண்பன் மைக்கேலைக் கொன்று விடுகிறார்கள்.
நாவலின் இறுதியில் தன் தந்தையின் மரணத்திற்குகாரணமாயிருந்தவர்களை பழிதீர்க்கிறான் பீட்டர்.
1500/1600-களில் தூத்துக்குடியின் வரலாற்றுச் சித்திரத்தின் கீற்றும் நாவலில் இருக்கிறது. கர்நாடக சங்கீதத்தின் ராக ரசனைகளும், சிதம்பரம் நடராஜர் கோயிலின் நாட்டியச் சிற்பங்களின் சாஸ்திரங்களும், மீனவ சமுதாய வாழ்க்கையின் பண்பாடுகளும் நுட்பமான அவதானிப்புகளாய் நாவலில் விஸ்தாரமாய் வருகின்றன.
போதிசத்வ மைத்ரேய-விற்கும், தமிழ் மொழியாக்கம் செய்த எஸ்.கிருஷ்ணமூர்த்திக்கும் மனதுக்குள் வணக்கங்களையும், அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டேன்.
வெங்கி
“சிப்பியின் வயிற்றில் முத்து” – போதிசத்வ மைத்ரேய
வங்க மூலம்: “Jhinuker Pete Mukto”
தமிழில்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு