கடவுள் பிசாசு நிலம் – லோகமாதேவி

கடவுள் பிசாசு நிலம் வாங்க

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

2022 விஷ்ணுபுரம் விழா அமர்வுகளில் ஒன்றில்தான்  முதன்முதலில் அகர முதல்வனை கண்டேன். அதற்கு  முன்பு அவரைச் சந்தித்ததில்லை.  ஈர நெற்றியில் திருநீற்றுப் பட்டை துலங்க, நெஞ்சு நிமிர்த்தி கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தார். தொடர் கேள்விகளுக்கு அசராத தெளிவான எதிர்வினைகள், இலங்கை என்று சொல்லப்பட்ட போதெல்லாம், ஈழம்  என்ற கறாரான திருத்தல்கள்,   பொருத்தமான இடங்களில்  சைவத்திருமுறைகளின் கம்பீர முழக்கங்கள், போருக்கு எதிரானவன் என்பதை சொல்லுகையில்  குரலில் இருந்த அழுத்தம் என அந்த அமர்வு முடிகையில் அகரமுதல்வனின் மீது பெரும் மரியாதையும் அன்பும் உண்டானது.  அதன்பிறகு என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினேன்.

முன்பு எப்போதோ ஒரு புலம்பெயர் இலக்கியமொன்றிலிருந்த  பல கவிதைகளில் ’’முருங்கைப்பூ உதிரும் முற்றம் இனி நமக்கில்லை கண்ணே’’ எனும் ஒரு வரி என்னை பல காலம் இம்சித்தது. அந்த உணர்வை, அந்த பிரிவின் வலியை, தாய் மண்ணை, அதிலிருக்கும் தாவரங்களை சொந்த பந்தங்களை,  பிரிவதென்பதின் பெருவலியை அந்த வரி எனக்கு சொல்லிக் காட்டிக் கொண்டே இருந்தது.

திருமணத்திற்கு பின்னர் தொடர்ந்து 6 வருடங்கள் கொழும்புவில் வசிக்க நேர்ந்த போது நான் கண்ட இலங்கையில் போர்ச்சூழல் தீவிரமாக இருந்தது எனினும் பாதுகாப்பான பகுதியில் இருந்ததால் அதன் குரூரங்கள் எனக்கு முழுக்க தெரிந்திருக்கவில்லை. செய்தித்தாள்கள், பிற ஊடகங்கள் செவிவழிச் செய்திகள் அளித்தவற்றையே உண்மை என கருதினேன்.அவ்வப்போது வேவு விமானங்கள் பருந்தைப்போல வட்டமிடுவதை பார்க்க முடிந்தது.

பொருட்களின் விலை தாறுமாறாக அதிகரித்திருந்தது. ஒரு சுருள் கருவாப்பட்டை வாங்கியபோது அதன் விலை எனக்கு அதிர்ச்சி அளித்தது, ஏன் அத்தனை அதிக விலை? என்று அந்த சிறு கடைக்கரரிடம் கேட்டபோது ’’எல்லாம் போரால்’’ என்றார்.

கொழும்பு வீட்டிற்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து செல்லும் வழியெங்கும் ராணுவ வீரர்கள் மணல்மூட்டை தடுப்புக்கு பின்னால் துப்பாக்கி ஏந்தியபடி நின்றிருப்பார்கள். விசேஷ நாட்களில் வெண் தாமரைகளுடன் புத்தர் ஆலயங்களுக்கு செல்லும் வழியிலும், வீட்டருகிலும் கடைவீதியிலும் எங்கும் ராணுவம் இருந்தது. ஒருமுறை கடைவீதியில் இருந்து வீடு செல்லும் வழியில்  அப்படி ஒரு மணல்மூட்டை தடுப்பின் பின்னர் இருந்த கம்பிவேலி ஒன்றில் செங்காந்தள் கொடி அடர்ந்து படர்ந்து ஏராளமாக மலர்ந்திருந்தது. வழக்கமாக தாவரங்களை கண்டால் உண்டாகும் குதூகலத்துடன் ’’காந்தள் மலர்’’ என்று உரக்க சொல்லி அதை பறிக்க சென்றபோது கடுமையாக குடும்பத்தாரால் கண்டிக்கப்பட்டு வீட்டுக்கு ஏறக்குறைய இழுத்து வரப்பட்டேன். ஒரு மலரின் பெயரை சொல்லியது குற்றமாவென அன்று அது ஒரு பெரும் மனக்குறையாக இருந்தது.

சென்னை புத்தக விழாவில் வாங்கி வந்த சில முக்கிய புத்தகங்களில் அகரமுதல்வனின்  கடவுள் பிசாசு நிலமும் ஒன்று. அதை வாசிக்கையில்தான் அன்று அச்சூழலில் காந்தளின் பொருள் என்னவாயிருந்திருக்கும் என்பதை அறிய முடிகிறது. கண்டியின் அழகும், பேராதனை பல்கலைக்கழக தாவரவியல் தோட்டத்தின்  விரிவும், ரம்புட்டான் மரங்கள் அடர்ந்திருந்த அசங்க ராஜபக்‌ஷேவின் அழகிய வீடும், உதய தென்னக்கோனின் நாலுகட்டு வீட்டின் விசாலமும், மஞ்சுள ரணதுங்கவின் வீட்டின் விதைகளில்லா எலுமிச்சைகளும் எனக்கு அளித்திருந்த நிறைவையும் மகிழ்வையும் கடவுள் பிசாசு நிலம் முற்றிலுமாக துடைத்து அழித்ததோடில்லாமல் அக்காலகட்டத்தில் எனக்கிருந்த மகிழ்வை காட்டிலும் பல மடங்கு அதிக குற்ற உணர்வையும் அளிக்கிறது

அப்போதிருந்த இலங்கையின், யுத்தத்தின் உண்மை நிலவரமென்ன என்பதை இத்தனை காலம் கழித்து அகரன் மூலமாகத்தான் அறிந்து கொண்டிருக்கிறேன்

முதல் பக்கத்திலேயே //ஒரு பெருவேக அழிவுச் சூழலில் விழுந்து அதிலிருந்து பண்பு நலனால் அல்லாமல் நல்லூழ் காரணமாக மீண்டு வந்தவன்// என்னும் நாஜிகள் சித்திரவதைகளுக்கு உள்ளான இத்தலிய யூதரான  பிரைமோ லெவியின் வரிகள் சொல்லப்பட்டிருக்கிறது. அவ்வரிகள் அகரனுகும் ஆதீரனுக்கும் முழுமையாக பொருந்துபவை.

போராளிகளுக்கு மரண வீட்டிலும் உணவளிக்கும்  அடைக்கல மாதாவான அன்னையர், வன்முறையை தவிர்க்க வேண்டும் என அன்றாடம் பிரார்த்தனையின் போது சொல்லும்  பள்ளி அதிபர், அம்புலி வளரும் இரவுகளில் சாமியாடி வாக்கு சொல்லும் பூட்டம்மா போன்ற பல வடிவங்களில் இருக்கும் கடவுளரையும்,  மது வெறியில் பைலா பாடல்களை கூச்சலிட்டு பாடிக்கொண்டு, கையறிகுண்டுகளை அப்பாவி சனங்களின் மண்டையோட்டுக்குள் எறியும், பல தந்திரங்கள் செய்து, அமைதி என்னும் போர்வைக்குள் பதுங்கி இருந்த, குருதி வெறி கொண்டிருக்கும் விலங்குகளா,ன அரசின் ஆர்மிக்கார பிசாசுகளையும், குருதியால் சிவந்து,ஓயாது அழுது துயர் புழுதி படிந்திருந்த நிலத்தையும் காணும், படிக்க போகாமல் ’’உந்த ஆர்மிக்காரங்களை கொழும்புக்கு அடிச்சு துரத்த போறேன்’’ என்று சொல்லும் பத்து வயது  ஆதிரனின்  கதையாக விரிகிறது கடவுள் பிசாசு நிலம்

ஒவ்வொரு வரியும் துயரிலும் குருதியிலும் தோய்ந்திருப்பினும் அவற்றையும் தாண்டி கொண்டு கவனிக்கச் செய்கிறது  நூலை உருவாக்கி இருக்கும் அழகு தமிழ் மொழி

போராளியான அண்ணன், வீட்டிற்கு வந்து போய் கொண்டிருக்கும் மற்றொரு போராளி மருதன், அவர் மீது நேசம் கொள்ளும் பின்னர் கால ஓட்டத்தில் போராளியாகும் அக்காள் என ஆதீரனுக்கு குடும்பமே இலங்கையின் போர்ச்சூழலை முழுக்க தெரிவித்துக் கொண்டிருக்கும் அமைப்பாக இருக்கிறது.

ஆர்மிக்காரங்களை எதிர்த்துப் பேசும், எப்போதும் வீடு தங்காமல் சுற்றித் திரிந்து கண்ணில் பட்டவை, காதில் கேட்டவைகளின் மூலம் நாட்டு நடப்பை மேலும் அறிந்து கொள்ளும் ஆதீரனுக்கு இயல்பாகவே போர்க்குணம் உருவாகிறது. போராளியாக வேண்டும் என்று துடிக்கும் ஆதீரனுக்கு அண்ணனின் கைத்துப்பாக்கியின் எதேச்சையான தீண்டல் வேட்கையின் குளிரை உண்டாக்குகின்றது.

பன்னிச்சையடி கிராமத்தின் அத்தனை பேருக்கும் ஆதரவாக, ஆறுதலாக, பற்றிக்கொள்ள பிடிப்பாக, தெய்வமாக இருக்கும் பன்னிச்சை மரமும் ஒருநாள் ஷெல்லடித்து சாம்பலாகிறது. அச்சாம்பலையும் நெற்றியிலிட்டு கொள்ளும் மக்களை, அவர்களின் மரபுகளை, வேர்களை,  வாழ்வின் இயங்கியலை, இடம் பெயருதலை, மரணங்களை, காதலை, நம்பிக்கைகளை, கனவுகளை காட்டுகிறது கடவுள் பிசாசு நிலம்

வாசகசாலைக்கு சென்று வாசிக்கும், போராளிகளோடு நட்பிலிருக்கும், மெல்ல வளர்ந்து வரும், போராளியாக வேண்டும் என ஒவ்வொரு கணமும் விரும்பும் ஆதீரன் பதின்மவயதில் காதல் கொள்கிறான்.

போரை, போராளிகளின் வாழ்வை, குருதியை, குப்பி கடித்தும், வெட்டியும் தூக்கிட்டும்,  கையறிகுண்டிலும் நிகழும் மரணங்களை போரின் துயர்களை, மேலும் பலகொடுமைகளை, இழப்பின் வலியை சொல்லும் அகரனும் அம்பிகையுடனான ஆதீரனின் காதலைச் சொல்லும் அகரனும் ஒரே ஆளுமை என்பதை சிரமப்பட்டுத்தான் நம்ப வேண்டியிருக்கிறது.

பிளவாளுமையாக இருந்தே அவற்றை அகரன்  எழுதியிருக்க முடியும். யுத்தத்தின்  தீவிரத்தை சொல்லும் வேகமும் உணர்வுபூர்வமும் காதலை சொல்லுகையில் பல மடங்கு அதிகரித்து விடுகிறது. அம்பிகாவிற்கும் ஆதீரனுக்குமான காதலை சொல்லுகையில் மற்றொரு அழகிய வடிவெடுத்து விடுகின்றது அகரனின் மொழி

தாகம் பெருகிய வழிப்போக்கனின் கையில் கிடைத்த செவ்விளநீர் போல காதல் ஆதீரனை கைகளில் ஏந்திக் கொள்கிறது பெண்ணின் கண் மொழியில் ஆயிரமிருக்கிறது ஆயுத எழுத்துக்கள் என்கிறான் ஆதீரன். கூழாங்கல் போல அடியாழத்தில் கிடந்து, பின்னர் மெல்ல மெல்ல ஒடும் நீரில் மேலேறி வரும் அம்பிகாவை காண்கையில் ஆதிரனுக்கு காதலைச்சொல்லவும் பொருத்தமாக சைவப்பாடல்களே தோன்றுகிறது. அப்பாடல்களை எல்லாம் அகரனின் கணீர் குரலிலேயே கேட்டேன்.

அம்பிகா எனும் கூழாங்கல்லை சுமந்து ஓடும் நதியாகிறான் ஆதீரன். அம்பிகா கூந்தலை சுழற்றுகையில் ஆதீரனின் ஞானத்தின் பசுந்தரையில் விதை வெடித்து செடி எழுகிறது.ஆதீரனால் முத்தமிடப்படும் அம்பிகா மேலும் வடிவு கொள்கிறாள்.

அம்பிகாவுடனான காதலை சொல்லும் ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு எழுத்தும் இனிப்பில் தோய்ந்திருக்கிறது. இந்த நூலில் அம்பிகா ஆதீரன் பகுதிகளை மட்டும் தனியே வாசிக்க வேண்டுமென்றிருக்கிறேன், நான் வாசித்த  ஆகச்சிறந்த காதல் கதைகளில் ஆதீரன் அம்பிகை கதையுமொன்று

உப்புக்காட்டில் நெடுவல் ராசனுடன் ஆதீரன் செல்லும் உடும்புவேட்டைகள் இதுவரை நான் வாசித்திராத தீவிரத்தன்மை கொண்டிருந்தன. அப்படியொரு வேட்டை குறித்து நான் முன்பெப்போதும் கேட்டிருந்ததுமில்லை

வெயிலில் காய்ந்து நாறும் உடும்பின் தோல்கள், அவற்றால் உருவாக்கப்படும் மேளம், காளி எழுந்து நின்றாடும் நெடுவல் ராசனின் தோள்கள், குப்பைத்தண்ணி வார்த்தல்,சமைந்த பெண்ணுக்கு அருந்த தரப்படும் கத்தரிக்காய் சாறு,  உடன் புக்கை,புட்டும் சொதியும் அப்பங்களும், முசுறு எறும்புகள், மரவள்ளிக்கிழங்கு, மரமடுவங்கள், இதரை வாழைகளும் இலுப்பையடி சுடலைலைக்காடும்,  சம்பா அரிசிச் சோறும் உடும்புகுழம்பும், பச்சை மிளகாய் சம்பலும், பூவரசங்குச்சிகளும்,  பருப்பும், பாகற்காய் குழம்பும், மோர்மிளகாய் பொரியலுமாக நானறிந்திருக்காத இலங்கை  ஆதீரனின் கண்கள் வழியே ஒவ்வொரு பக்கத்திலும் விரிந்து மலர்கிறது. பல் விழும் கனவு  கண்டால் துயர்மிகுந்த ஏதோ நிகழும் என்னும் நம்பிக்கையை போல நமக்கும் பொதுவான சிலவற்றையும் ஆதீரன் மூலமறிய முடிகின்றது.

கணபதிபிள்ளையும், தணிகை மாறனும்,தவா அண்ணனும், பழமும்,  அரிய ரத்தினம் கோபிதனும், பவி மாமனும், தாமோதரம்பிள்ளையும், காந்தியண்ணாவும், அல்லியக்காவும்,  ஓவியனும், கபிலனும்,  ’பட்டாம்பூச்சி’ வாசிக்கும் மருதனும், சலூன் இனியனும்  இலங்கைப்போரின் பல குருர பக்கங்களை காட்டுகிறார்கள். கபிர் அடிக்கும் இடங்களிலிருந்து மனிதர்கள் தொடர்ந்து இடம் பெயருகிறார்கள், எறும்புகள் கூட போரைப்பற்றியே யோசித்துக்கொண்டு மரங்களிலிருந்து கீழிறங்குகின்றன.

நிகழப்போவதை முன்பே யூகிக்கிறாள் பூட்டம்மா, குன்றிமணிகளையும் செங்கற்களையும் அரைத்து மண்ணுக்காய் நஞ்சுண்டு மடிந்த பொன்னாச்சியும் நஞ்சின் மீதியை நிலமுண்ண போகிறது என்கிறாள். வீரச்சாவும், வித்துடல்களும் விழுப்புண்களும் எரிதழல் வெளியில் ஒரு சொல்லைப்போல் அலர்கின்றன.

ஆதீரன் வீட்டிலும் அல்லியக்கா வீட்டிலும் இன்னும் பல வீடுகளிலும் மரணம் அழையா விருந்தாளியாக கதவை திறந்து வந்து கொண்டே இருக்கிறது

அமைதிப் பேச்சுவார்த்தை, சமாதான உடன்படிக்கை எனும் போர்வை களையெல்லாம் கிழித்தெறிந்துவிட்டு யுத்தம் துவங்கி விடுகிறது.  யேசுதாஸ் குரலில் வளர்ந்து கொண்டிருந்த ஒரு காதல் கருகிச்சாகிறது. யார் முதலில் வீரச்சாவடைவது என்று பேசிக்கொள்ளும்  இளவெயினியும் பூம்பாவையும் தூரிகையும் பெண்போராளிகளின் உலகை காட்டுகிறார்கள்.

கிபிர் தாக்குதலும்,  ஷெல்லடிப்பும், இயக்கத்தின் பின்னடைவும்,  விழுந்துகொண்டே இருக்கும் வித்துடல்களும்,அதிகரித்துக்கொண்டே இருக்கும் காயம்பட்டவர்களும், ஊரையே மூடும் கந்தகமணமுமாக ஆதீரன் காட்டும் போர்  உச்சம் மனதை கலங்கடிக்கிறது. அந்த மண்ணில் அப்போது வாழ்ந்த ஆதீரன் மீது கனிவும் தனித்த பிரியமும்  பொங்கிப்பெருகிறது.

யுத்தம் அமைதியை விட மேலானது என்று ஆதீரன் எழுதி வைக்கிறான். எளிய மனிதர்களின் பல வாழ்க்கை கணக்குகளை யுத்தம் தன் கோரக்கரங்களால் கிழித்தெறிகிறது.

அம்பிகையின் இறுதிச்சடங்கின் போது ஆதீரனின் தெளிவையும்,  பூட்டம்மா அடிவயிற்றில் மண் வைத்து நீரூற்ற சொல்வதையும், பன்னிச்சை மரத்துடனும் உப்புக்காட்டுடனும் நடுகற்களுடனும் ஆதீரனுக்கிருக்கும் உணர்வுபூர்வமான பந்தத்தையும் மனமும் கண்களும் கலங்க வாசித்தேன்.

அவ்வளவு நடந்தும் பெண்கள் கூந்தலில் காந்தளைச் சூடும் நாள் வரும், நிலம் விடியும் என்று  கதை முடிகின்றது. தூரிகையின் பதுங்கு குழிக்குள் அசைந்தாடுகிறது ஒரு தளிர்.

நேரடியாக யுத்தத்தை சொல்லாமல், யுத்தப் பின்னணியில் அந்நிலத்தை, அம்மனிதர்களின் வாழ்வை, புலம்பெயர்தலின் அவலத்தை சொல்லும் கதை இது. இதில் எத்தனை உண்மை, எத்தனை புனைவு எத்தனை சொல்லாமல் விடப்பட்டவை  என்பது ஆதிரனுக்கும் அகரனுக்கும்தான் தெரியும் எனினும் இந்நூல் ஒவ்வொரு பக்கம் வாசிக்கையிலும் அளித்த துயரம் நூறு சதவீதம் உண்மை.

இத்தனை உணர்வுபூர்வமாக  புலம்பெயர்ந்தவர்களின், யுத்தத்தின் போராளிகளின்,  இயக்கத்தின், காதலின் கதையை வாசித்ததில்லை.அகரனின் மொழி வன்மை திகைக்க வைக்கிறது.

விஷ்ணுபுரம் விழாவில் அகரனிடம் பேசிக்கொண்டிருக்கையில் அவர்கள் குடும்பத்துக்கு பரம்பரையாக சொந்தமாயிருந்த  வாள் ஒன்றை அவரது பூட்டம்மா போர்ச்சூழலில் எங்கோ மறைத்து வைத்தாரென்றும் அதை பின்னர் ஒருபோதும் கண்டுபிடிக்க  முடியவில்லை என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்.

அது வேறெங்குமில்லை, யுத்தகாலத்திலான தன் வாழ்வை   இத்தனை கனம் கொண்ட  மொழியில் சொல்லும்  அகரமுதல்வனாகத்தான்  அவ்வாள் கூர் கொண்டிருக்கிறது

அம்மாவின் கண்களை கொண்டிருக்கும் பொன்னாச்சி சொல்லியபடியே அகரனின் கால்கள் இனி சோர்வில்லாது நடக்கட்டும். அகரனுக்கு அன்பும் நன்றியும்.

அன்புடன்

லோகமாதேவி

முந்தைய கட்டுரைகோவை சொல்முகம் – வெண்முரசு கூடுகை
அடுத்த கட்டுரைபுதியவாசகர் சந்திப்பு ஏன்?