பெருங்காதலின்பயணம் – மாமலர்

மாமலர் வாங்க 

மாமலர் மின்னூல் வாங்க

அன்பு ஜெ,

மாமலர் இன்று நிறைவுசெய்தேன். நீண்ட நெடும் பயணத்தின் களைப்பும், பிடித்தமான பயணம் தரும் மகிழ்வும், இந்தக் கண்டடைதலின் பாதையில் ஏதோ ஒன்று கூடியிருப்பதன் நிறைவும் ஒரு சேர உணர்கிறேன் இந்த நொடி. இக்காவியத்தின் நாயகர்கள் அலைக்கழிப்புடன் செய்யும் ஒவ்வொரு பயணத்திலும் என்னையும் உடன்செலுத்தி பயணித்து பார்க்கிறேன். ஒவ்வொரு பயணத்தின் வழி நான் என்னையும் கண்டடைகிறேன். ”நான்” என்று உணர்ந்த தருணங்களிலெல்லாம் மேலும் ஆழமாக பயணம் செய்ய முடிந்தது. அந்தப் பயணம் அதை உதிர்க்கச் சொல்லி நின்றது. கை கொள்ள வேண்டியது எது என்று உணர்த்தியது.

வேறெவரையும் விட பீமனின் இந்தப்பயணம் எனக்கு அணுக்கமானது. வேறு எவரின் பயணத்திலும் இத்தகைய உள எழுச்சியை நான் அடையவில்லை. அல்லது அதைவிட ஒருபடி மேலாக அடைந்தேன் எனலாம். ஒருவேளை நான் பயணம் செய்வேனேயானால் அது பீமனின் பயணத்துடன் மட்டுமே அணுக்கமாக உணரக்கூடியதாக இருக்கமுடியும். பெருஞ்செயல்களின் நிமித்தம் மட்டுமே அர்ஜுனனுடன் தொடர்பு படுத்திக் கொள்ள முடிந்தது.  பெருங்காதலின் நிமித்தமே இத்தகைய தீவிர பயணத்தை என்னால் மேற்கொள்ள முடியும் என்று தோன்றியது. அதுவும் முண்டன் போன்ற ஒரு வழிகாட்டியின் துணையுடன்.

திரெளபதியின் கண்கள் வழி ஐவரை நோக்கும்போது அவள் பெருங்காதல் கொள்ளமுடியுமானால் அது அர்ஜுனன் மேல் என்று தான் நினைத்திருந்தேன். விழைவின் தெய்வமான இந்திரனின் மகன், செயல் செயல் என திகழ்ந்து கொண்டிருப்பவன், அவள் ஆணவத்தை சீண்டும் குணம் இருப்பவன் என திரெளபதியின் நாயகனாக அவனையே கற்பனை செய்திருந்தேன். தர்மன் சொல்லாடுதற்கு இனியன், சகதேவனும் நகுலனும் பிள்ளை என மடியில் கிடத்தி அன்பு செய்ய ஏதுவானவர்கள். ஆனால் பீமன் காட்டாளன், அன்னத்தின் மேல் பற்று கொண்ட பேருடலன், தனக்கென ஒரு விழைவு கொண்டிராதவன். அவனுக்கு இணையானவள் என இடும்பியையே சொல்ல இயலும். திரெளபதியுடன் அவன் இணைந்திருக்கும் அத்தனை இடங்களிலும் மெல்லிய புன்னகையின் காதலோடே வாசித்திருந்தாலும், அது இத்தனை பெருகி மாமலர் என எழுந்து நிற்கும் சித்திரமளவு வருமென எதிர்பார்த்திருக்கவில்லை. கர்ணனின் நிமித்தம் பீமனிடம் எனக்கு சிறு கசப்பு முந்தைய நாவல்களின் வழி நஞ்சாக எஞ்சியிருந்தது. அது முற்றிலும் கரைந்து அவன் இந்த ஊழின் பகடையென் இறுதியில் நிற்கும் கணத்தால் அணுக்கமாகிவிட்டான்.

*

இந்நாவலில் பலவகையான ஆண் பெண் உறவுகள் வருகின்றன. முதலில் வருவது பிரஹ்பதியின் மனைவியான தாரை சந்திரனை விழையும் பிறழ்வுறவு. அகன்று செல்ல முற்பட்டும் நிகழ்ந்த ஒரு உறவால் தங்களைக் கண்டுகொண்ட இருவரில் தெரிவது எது என்று சிந்தித்திருந்தேன். “ஓர் உறவே அவர்களின் உடல்கள் அதன்பொருட்டென்றே அமைந்தவை என அவர்களுக்குக் காட்டியது. அதுவன்றி பிறிதுநினைப்பே இல்லாமலாக்கியது.” என்ற வரிகள் அதற்கான விடையை அளித்தது. அங்ஙனம் சில சமயம் ஓர் உறவு நிகழ்ந்துவிடுகிறது. அதைக் கைவிட இயலாமல் அது அழைத்துச் செல்லும் திசையில் அடித்துச் செல்லப்படுவதைக் காண்கிறோம். ஒழுங்கின் நிமித்தம் சந்திரனைப் பிரிந்து தேவர்களின் குருவான பிரஹஸ்பதியுடன் மீண்டும் கூடி வாழ்ந்து அவள் பெருவது சந்திரனின் புதல்வனான புதனைத்தான். ஒருமுறை கண்டடைந்தபின் அந்தக் காதலிலிருந்து மீட்பில்லை என்றே நினைக்கிறேன்.

அதன்பின் புரூரவஸ்-ஊர்வசி; ஆயுஸ்-இந்துமதி; அசோகசுந்தரி-நகுஷன்; தேவயானி-கசன்; யயாதி-சர்மிஷ்டை என பல ஆண்-பெண் வழி ஊடுருவும் காதலையும் காமத்தையும் பார்த்திருந்தேன். இந்திரன் இறந்துவிட்டதாக நினைத்து மண்ணின் இந்திரனாகும் பொருட்டு இந்திராணியை கைக்கொள்ளத் துணிந்த நகுஷனிடம் “நான் ஏன் இக்காதலுடன் இருக்கிறேன் என எண்ணுக! ஏன் என் உள்ளத்தில் அவர் நினைவு அழியவில்லை? ஏனென்றால் இன்னமும் எங்கோ இந்திரன் என்னை நினைத்துக்கொண்டிருக்கிறார். அவர் முற்றழியவில்லை. அவர் எங்கோ அவ்விழைவுடன் எஞ்சுவதுவரை இங்கு நானும் இப்படியே இருப்பேன்.” என்கிறாள் இந்திராணி. உண்மையாக காதல் கொண்டவர் அழியும் வரை அவர்கள் மனதில் கரந்திருக்கும் விழைவின் நிமித்தம் காதல் பிறிதொருவரிடத்தில் எஞ்சியிருக்கிறது. ஆம்! இருவரின் மனதிலிருந்தும் விழைவுகள் அழியாதிருக்கும் வரையில் காதல் முற்றழிவதில்லை.

இக்காதல்களில் மாமலர் என நாவலில் விரவியிருப்பது தேவயானி கசன் மேல் வைத்திருந்த காதல் தான். பெருங்காதலைப் பற்றி வாசித்துக் கொண்டிருக்கையிலேயே ஆழத்தில் வலியென சுரந்து வருவது பிரிவின் வலி பற்றிய எண்ணம். ”பெருங்காதல் அதன் பெருவிசையாலேயே இயல்பற்ற ஒன்றாக ஆகிவிடுகிறது. இயல்பற்ற ஒன்று எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற ஐயம் அதற்கே எழுகிறது. விரைந்தெழுவது நுரை. மலைப்பாறைகளின் உறுதி அதற்கில்லை என்பதை அதுவே அறியும்” என்ற வரி இக்காதல் பயணத்தை தொடங்கும் இடத்தில் வருகிறது. உண்மையில் அப்படியல்லாத ஒன்றைப்பற்றிய ஏங்கும் போது நுரையென எழுந்து பாறையென்றாகி முடிவிலிவரை நீடிக்கும் ஒரு பெருங்காதல் இம்மண்ணில் நிகழக்கூடாதா என்ன?” என்ற வரியும் உடனெதிர் வந்து நிற்கிறது. இந்த முரண் எக்காலமும் நின்று கொண்டிருக்கிறது.

பெருங்காதல் எதைக் கொண்டு அளவிடப்படுகிறது என்று யோசித்திருக்கிறேன் ஜெ. அது பிரிவின் வலியின் உக்கிரத்தைக் கொண்டே அளவிட முடியும் என்பதை “காமத்தின் பெருந்துன்பம் பிரிவு. பிரிவு பேருருக்கொள்ள வேண்டுமென்றால் அரிதென ஓர் உறவு நிகழவேண்டும். பெருங்காதல் உனக்கு அமையும். அதை இழந்து பிரிவின் துயரை அறிவாய்! அறிந்தபின்னரே அதை கடப்பாய்” இவ்வரிகளின் வழியே உணர்ந்தேன். இந்நாவலின் மையமாக அமைந்திருப்பது, அனலாக எழுவது தேவயானியின் “பிரிவின் வலி” தான். ஜெயந்தியின் அனல் அனைத்தையும் தாங்கிப் பிறந்து கொதித்துக் கொண்டிருந்த தேவயானி அவ்வனலை பிரிவின் வலியால் உறையச்செய்து அதை ஆணவமென மாற்றிக் கொண்டு செயல் செயல் என திகழ்ந்து பேரரசியாகிறாள்.

இந்நாவல் வரிசையில் முதல் முறை தேவயானி அறிமுகப்படுத்தப்படுவதே அவளின் மணிமுடியைக் கொண்டு தான். “தேவயானியின் மணிமுடி” என்ற வியப்பின் படிமமே அவளை ஒவ்வொரு அஸ்தினாபுரி அரசிகளுக்கும் உச்சமான இலக்கென ஆக்கியது. தேவயானியின் மணிமுடி கிடைத்த திரெளபதி அதைச் சூடிக் கொள்ளாமல் அதற்கு இணையான ஒன்றையே செய்தாள் என்பது தேவையானியின் கதை நோக்கிய ஆர்வத்தை வெண்முகில் நகரத்திலேயே எழச் செய்தது. அசுரகுலகுருவான சுக்ரரின் மகளாக வளரும் பேரழகியான தேவயானி, பேரழகனும், தேவர்களின் குலகுருவான பிரஹஸ்பதியின் வளர்ப்பு மகனாகிய கசன் மேல் பெருங்காதல் கொள்கிறாள்.

சூழ்ச்சியின் நிமித்தம் சஞ்சீவினி மந்திரத்தை சுக்ரரிடமிருந்து பெற மனித உருவெடுத்துவரும் கசன் தன் பிறப்பின் நினைவுகளின்றி உண்மையில் தேவயானி மேல் காதல் கொள்கிறான் தான். ஆனால் மூன்று முறை இறந்து மறு பிறப்பெடுத்து சஞ்சீவினி மந்திரத்தை கற்றபின் முற்பிறப்பை உணர்ந்து தான் வந்த வேலை முடிவு பெற்றபின் அவளைத் துறந்து செல்லும் தருணம் ஒன்று உள்ளது.

”உங்கள் காலடிகளில் அடிமையென இருக்கவும் சித்தமாகிறேன். பெண்ணென்றும் முனிவர் மகளென்றும் நான் கொண்ட ஆணவம் அனைத்தையும் அழித்து இங்கு நின்று இறைஞ்சுகிறேன். என்னைக் கைவிட்டுவிடாதீர்கள்” என்றாள். அச்சொற்களை சொன்னமைக்காக அவளுக்குள் ஆழ் தன்னிலை ஒன்று கூசியது. எத்தனைமுறை எத்தனை ஆண்களிடம் பெண்கள் சொல்லியிருக்கக்கூடியவை அவை!” இந்தவரிகள் ஒட்டுமொத்தமாக இவ்வுலகில் பெண்கள் காதலுக்காக ஆண்களிடம் இறைஞ்சும் தருணத்தை சொல்லக் கூடியது.

தேவையானி இந்தப்புள்ளியில் வந்து நின்ற கணத்தைக் கடக்க முடியவில்லை ஜெ. இதனை ஒத்த தருணம் அம்பைக்கு மட்டுமே வாய்த்திருந்தது. ஆனால் இந்த இடம் அதைவிட கலங்கச் செய்வது. ஏனெனில் அம்பை பெருங்கனலாகி வஞ்சமென அமைந்துவிட்டாள். ஆனால் தேவையானி இங்கு உறைந்துவிட்டாள். மானுடப் பெண்களாலும் தொடர்பு படுத்திக் கொள்ளக்கூடிய நிலை “உறைதல்” மட்டுமே. எத்தனை இறைஞ்சியும் “அதுவல்ல” என விலகிச் செல்லும் ஒருவனை தடுப்பதற்கான எந்த ஆயுதமும் இல்லாமல் வெறுமே உறைய மட்டுமே முடியுமான நிலை அது.

தேவையானி கசன் சென்ற பின் உறைந்து நிற்கும் இறுதிச் சித்திரம் திகைக்க வைத்தது. இங்கு வீட்டின் மேல் மாடியிலிருந்து பார்த்தால் மேற்கு வானில் மாலை மயங்கும் வேளையில் மேற்குத்தொடர்ச்சி மலைக்கு அருகில் ஒற்றை நட்சத்திரம் உதிக்கும் ஜெ. எத்தனைவிதமான வானங்களில் அவற்றை ரசித்திருக்கிறேன். ஆனால் எப்போதும் கரும் இரவுகளிலேயே அது பிரம்மாண்டத்தை அளிக்கும். அது ஓர் மூக்குத்தி எனவே எப்போதும் நினைப்பேன். இன்றைய இரவு வானின் நட்சத்திரங்கள் யாவும் நோக்கு கொண்டிருந்தது. அது காத்திருப்பின் நோக்கு என்று நினைத்தபோது மேலும் மனம் கனமாகியது. அதை குமரி முனையில் நின்றிருக்கும் கன்னியுடன் தொடர்புபடுத்தியது மேலும் பிரம்மாண்டத்தைக் கூட்டியது. புவியியலின் படி மேற்குத்தொடர்ச்சிமலை என்பது அதன் கண்டத்தட்டு சற்று தெற்கு நோக்கி சாய்ந்திருப்பதால்(escarpment) உருவான மலை மட்டுமே. இன்று இந்த சித்திரத்தின் வழி நோக்குகிறேன். தென்கிழக்கில் நின்றிருக்கும் அன்னையின் பிரிவின் கணத்தினால் மட்டுமே அத்தகைய எடையை நல்க முடியும் என்று நினைக்கும் போது சற்றே சிலிர்ப்பானது.

தாங்கவியலாத iப்பிரிவிற்கு முன் தேவயானி இனித்து இனித்து சாவது பற்றிய இடம் வருகிறது. அன்று இரவு முழுக்க அவள் இனித்துக்கொண்டே இருந்தாள். உடலே தேனில் நாவென திளைத்தது… முற்றிலும் இனித்து இப்படி ஒருத்தி இருக்கமுடியுமா? இத்தனை இன்பத்தை மானுடருக்கு அளிக்குமா தெய்வங்கள்?”. இனித்தினித்து சாவது தரும் ஒன்றே இறப்பிற்கு இணையான பிரிவையும் நல்க முடியும். இவையெல்லாம் எங்கிருந்து மானுடருக்கு அளிக்கப்படும் உணர்வுகள் ஜெ? இத்தனை மதுரத்தையும், பிரிவின் வலியையும் தெய்வமல்லாத ஏதொன்று தர இயலும்? இந்த தூய இனிக்கும் காதலும், இறப்பின் பிரிவும், மாளாத் துயரும் வெறும் மானுடரால் தாங்கவும் இயலாது என்றே நினைக்கிறேன். அதைத்தாண்டி வந்தவன் உணர்வது வேறொன்றை/வேறு உலகத்தைச் சார்ந்த ஒன்றை என்றே நினைக்கிறேன்.

உணர்வற்றவர்களும், கணங்களில் வாழ்ந்து யாவற்றையும் கரைத்து ஓடிக் கொண்டிருப்பவர்கள் ஒரு போதும் அக்கணத்தை அறியாமல் இருப்பது அவர்களுக்கு நல்லது என்றே நினைக்கிறேன். சிற்றின்பங்களில் மூழ்குபவர்களால் பேரின்பத்தையும், பெருங்கசப்பையும் தாங்கிக் கொள்ள இயலாது. அவர்கள் உண்மையில் பாவம்.

பிரிவுக்கணங்கள் முறிவுத்தருணங்கள் என புனைவுகளில் வாசித்தவற்றை காட்சியாக கனவில் நீட்டிக் கொண்டவற்றை இந்த இரவு மீட்டிக் கொண்டிருக்கிறேன். ராஜமார்த்தாண்டனை நினைத்துக் கொண்டேன். புத்துயிர்ப்பின் கத்யூஷாவின் முகம் நினைவிலெழுந்தது. வயல்வெளிகளெல்லாம் ஓடி விழுந்தெழுந்து  மூச்சிரைக்க அந்த ரயிலை அடைந்து நெஹ்லுதாவால் காணமுடியாத சாளரத்தின் வழியே அவனை, அவனின் சிரிப்பை, அவளை மறந்த உள்ளத்தை அவள் கண்டபோதிருந்த மன நிலையை மீட்டினேன். புத்துயிர்ப்பில் அவள் முழுவதுமாக உறைந்த கணம் ஒன்று இருக்குமானால் அது அந்தக் கணம் தான். தான் மிகவும் நேசிக்கும் ஒருவரது சிந்தனையில் கூட சிறு அளவு காதலின் சுவடுகள் தெரியாத போதும், இத்தனை உணர்வெழுச்சிக்கு ஆளாக்கிய ஒருவர் அதன் தீவிரத்தை அல்லது அதையே கூட அறியாமல் இருக்கும்போது அது மேலும் வலியின் தீவிரத்தை அதிகரித்ததும் நினைவிலெழுந்தது.

கசன் காதலையோ காமத்தையோ அளிக்காமல் இல்லை. ஆனால் அவன் பிறந்திறந்து கொண்டே இருந்தான். அவன் ஒவ்வொரு முறை இறந்து பிறக்கும் போது ஒவ்வொரு உலகத்திற்குள் சென்று வந்தான். மீண்டும் திரும்பிச் செல்லும் இடத்தில் தேவையானியோ, காதலோ இல்லை என்பது அவனுக்கு இயல்பான ஒன்று. பிறந்திறக்காத அதே வாழ்வைக் கொண்டிருக்கும் தேவையானிக்கு அது தாங்கிக் கொள்ளவியலாத உணர்வென்பதைப் புரிய முடிந்தது.

“அறியாத ஊழ் கொண்டவள். யுகங்களுக்கொருமுறை தெய்வங்கள் தேர்ந்தெடுத்து மண்ணுக்கு அனுப்புபவர்களில் ஒருத்தி.” என்ற அவளின் அறிமுகத்திலிருந்து, துள்ளும் இளமையை இழந்து “துய்த்து தூக்கி எறிந்து செல்லும் இழிமகளென்று என்னை எண்ணினீர்களா? பிறிதொரு எண்ணமிலாது உங்கள் காலடியில் பணிந்தமையால் எளியவளென்று நினைக்கிறீர்களா?” என்று கெஞ்சிய தேவயானியை அடைந்து, உறைந்து, பின் பேராணவமும், பெருவஞ்சமும் கொண்டு யயாதியை மணந்து பேரரசியாக மாறும் அவளின் ஆழத்தில் படிந்திருக்கும் பரிவின் வலியை என்னால் உணர முடிந்தது. கசனை தீச்சொல்லிடவும் தயங்கியவளால், யயாதிக்கு இயல்பாக தீச்சொல்லிட முடிகிறது. என்றும் தேவயானியின் காதலென கசனைத் தவிர வேறெவரையும் அருகில் வைக்க முடியாது.

*

அதன் பின் மிகவும் ரசித்த இடம் யயாதி சர்மிஷ்டையுடன் கொள்ளும் உறவை. ஓர் ஆணின் கண்கள் வழியான காதலை, காமத்தை முழுதெடுத்துரைக்கக் கூடியது அது. தனக்கு இணையான அழகும், அறிவும், ஆணவமும் கொண்ட பெண்களைத் தாண்டி எளிய, பயம் கொண்ட, அழகற்ற பெண்களின் மேல் ஆண் கொள்ளும் விருப்பை புரிந்து கொள்ள முடிந்தது. அதற்கான முதற்காரணமாக முதுமை அடைந்து கொண்டிருப்பதன் மேல் ஆண் கொள்ளும் அச்சம் என்பதை யயாதி வழி புரிய முடிந்தது.

“அஞ்சும் ஒரு மெல்லியலாளை தோள் சேர்த்தணைக்கும்போது மட்டுமே ஆணுக்கெழும் நிறைவை அப்போது அடைந்தான்.” என்ற வரியை வாசிக்கும்போதே, “அவள் எளியவள் அல்ல என்பது அவனை எழுச்சிகொள்ளச் செய்தது. ஊடியும் முயங்கியும் வென்றும் அடங்கியும் சொல்லாடியும் சொல்மறந்தும் அவர்கள் காதல் கொண்டாடினர்.” என்ற வரி நினைவுக்கு வந்தது. சந்திர குலத்தில் இத்தகைய பெருங்காம விழைவு கொண்டவர்களில் யயாதியும் ஒருவரே. அவரின் வழி வெறும் காமத்தை, முழுமையான காமத்தை என தரிசிக்க முடிந்தது. இறுதியாக புருவிடமிருந்து இளமையைப் பெற்றுக் கொண்டு அஸ்ருபிந்துமதியுடன் தன் காமத்தை முழுமையாக நிறைவு செய்து கொண்டவரை கொணர்ந்து பீஷ்மரில் பொருத்திப் பார்த்தேன். அகத்தாலத்தில் அவர் தன் முன்ஜென்மம் புருவாக இருக்கும் என்று நினைத்து பார்த்த போது “யயாதி” தெரிந்தது ஏன் என்று புரிந்தது. அத்தனை இறைஞ்சல்களுக்குப் பின்னும் அம்பையை அவர் விலக்கியதன் காரணமும் விளங்கியது.

“இறுதியில் இவ்வளவுதான் என காமம் தன்னைக் காட்டுகிறது. அனைத்தையும் இறுதியில் உடலென ஆக்கியாக வேண்டியிருக்கிறது. வெறும் உடலென. பிறிதொன்றும் இல்லை என. எஞ்சுவது இதுவொன்றே எனில் எதன்பொருட்டு எல்லாம் என.” எனத் தோன்றுவதற்கு காமத்தின் முழு நிறைவை அடைந்திருக்க வேண்டும். அதை எய்தியவர்களால் மட்டுமே முழு ஒறுத்தல்களைச் செய்ய முடியும் என்று தோன்றியது.

*

இங்கிருந்து மீண்டும் பீமனில் திரெளபதியைத் தேடுகிறேன்.“என்னை ஆழ்ந்து திளைக்கச்செய்வது அவள்மேல் கொண்ட அணுக்கம். அதை காமம்என்றால், காதல்என்றால் அச்சொல் என்னை கூசவைக்கிறது. அவள் அண்மையைவிட கூர்ந்தது அவளை எண்ணிக்கொள்ளல். எண்ணி மகிழ்வதைவிட நுண்ணியது கனவில் அவள் எழல். அனைத்தையும்விட ஆழ்ந்தது அறியாக்கணமொன்றில் அவளென நான் என்னை உணர்வது” என்று சொல்லும் பீமன் பெற்றுக் கொள்ளவேண்டியதே அம்மலர். இக்காடேகிய பயணத்தில் தங்கள் பெருங்காதலை மேலும் மேலும் என பெருக்கிக் கொண்ட திரெளபதியையும் பீமனையும் புன்னகையோடே நானும் ரசிக்கிறேன்.

*

நேற்றுவரை நீங்கள் கொண்டிருந்த அனைத்தையும் உதறியாகவேண்டும். ஒவ்வொரு அடியிலும் அவற்றிலிருந்து நீங்கள் விலகிக்கொண்டிருக்கவேண்டும். முற்றிலும் விலகியபின் அடைவதே அம்மலர்.” என்ற வரி இவ்வுணர்வுகள் யாவும் கடந்து துறக்கப்பட வேண்டியது என்பதையே உணர்த்துகிறது. “நேதி நேதி” என விலக்கிச் செல்லும் பயணத்தில் இன்னொரு முக்கியமான இடத்தைக் கண்டுகொண்டேன். நன்றி ஜெ. ஊழின் கைகளில் எந்தப்பகடைக் காய் என்று கண்டபின் தொடர்ந்த தீவிரமான பயணம் என்பதைத் தவிர ஏதும் முக்கியமில்லை என்று உணர்கிறேன்.

ஒவ்வொரு பயணத்தின் இறுதியிலும் அவரவர் கண்டடைவது ’தான் எந்தப் பகடை’ என்பது மட்டுமே. தன்னை உருட்டி விளையாடும் தெய்வத்தின் அகத்தை தரிசிக்க, தன்னை அகழ்ந்து சென்று, அமையும் பயணத்தைத் தான் என்று பயணத்தின் இறுதியில் புரிந்து கொண்டேன். ”என்ன அடைந்தாய்” என்ற தர்மனின் கேள்விக்கு “அறியேன், சிலவற்றைத் துறந்தேன்” என்கிறான் பீமன். ஆம்! அடைவதற்கான பயணமல்ல. துறந்து, எஞ்சியவையைக் கடக்க வேண்டிய பயணமே முன் உள்ளது என்பதை உணர்கிறேன் ஜெ. எத்தனை அறிதல் அமைந்தபின்னும் உள்ளிருக்கும் “அது” அதற்கு விதிக்கப்பட்ட பயணத்தையே தேர்ந்தெடுப்பதையும் பீமன் வழி பார்க்கிறேன்.

பயணத்தின் இறுதிச்சொல் முண்டனிடமிருந்து வந்தது. “வீடுபேறென்று யோகியர் அடைந்ததும் மெய்மையென்று ஞானியர் அறிந்ததும் உண்மை என்று நூலோர் சொல்வதும் உனக்கு ஒருபோதும் கைப்படப்போவதில்லை. உன்னிடம் இந்த மாமலர் மட்டும் எப்போதும் இருந்துகொண்டிருக்கும். நறுமணமும் கெடுமணமும் கொண்டிருக்கும். அனலென எரியும், நிலவெனக் குளிரும்.” ஆம்! அது போதும் என்ற எண்ணமெழுந்தது.

இந்த நாவல் கல்யாணசெளந்திகம் என்ற படிமத்தாலும், நினைப்பவர்கள் கொள்ளும் மணத்தாலும் முழுவதும் நிறைந்தது. பெருங்காதலை அம்மாலராலன்றி வேறெந்த படிமத்தால் நிறைத்துக் கொள்ள முடியும். இப்பயணம் என்னில் நிகழச் செய்ததற்கு நன்றி ஜெ.

பிரேமையுடன்

ரம்யா

முந்தைய கட்டுரைஎழுகதிர்நிலம்-1
அடுத்த கட்டுரைஆலயக்கலைப் பயிற்சி, கடிதம்