ஜார்ஜ் சாண்ட், தஸ்தயேவ்ஸ்கி, விவாதம்- சக்திவேல்

பேரிலக்கியவாதிகள் மறைந்துபோகும் குகைவழி

அன்புள்ள ஜெ

சில நாட்களாக உங்களுக்கு சில விஷயங்களை எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். நான்கைந்து தனித்தனியான தொடர்பில் இல்லாத விஷயங்கள். அண்மையில் வாசிக்க எடுத்த தியாகு அவர்கள் எழுதிய சுவருக்குள் சித்திரங்கள் நூலை முடித்த பின் எழுதலாம் முடிவு செய்தேன்.

வழக்கம் போல எனக்கு பிடிக்கும் சளி வந்துவிட்டது. இந்த முறை விஷ்ணுபுரம் விழா முடிந்து வந்தவுடனேயே ஆரம்பித்துவிட்டது. கடந்த ஒருமாதத்திற்கு கடலில் பேரலைகள் வருவது போல சளி தொல்லை ஏறியும் இறங்கியும் சிக்கல் கொடுக்கிறது. இன்று தூக்கலாகிவிட்டது. ஆனால் நிறைவு கொள்ளும் விஷயம் ஒன்றுண்டு, இன்று நான்கு மணிநேரம் எடுத்து மீதம் இருந்த இருநூறு பக்கத்தை வாசித்து முடித்தேன். எனக்கே நான் கொள்ளும் நம்பிக்கைகளில் ஒன்று இந்த செயல்பாடு, நோய் நம்மை ஏதும் செய்துவிடாது மீண்டு விடுவோம் என்று.

உங்களிடமிருந்து கிருத்திகாவின் வாஸவேச்வரம் நாவல் குறித்து எழுதிய கடிதத்தை வாங்கி கொண்டது நினைவிருக்கும். ஆனால் சுரேஷ் பிரதீப் எழுதிய கட்டுரையே இதழில் வந்திருப்பதை கவனித்திருப்பீர்கள். அதுவும் இந்த சளி தொல்லையில் நிகழ்ந்த தாமதமே. இறுதி நேரத்தில் முப்பதாம் தேதி கட்டுரை எழுதி அனுப்பினேன். என்னளவில் அந்த நாள் மிக நிறைவானது. அக்காவிற்கு அனுப்பினேன், நேரம் தவறியதால் அடுத்த இதழில் போடலாம் என்று சொல்லிவிட்டாள். அதுவும் ஒருவகையில் நல்லது என்று நினைத்து கொண்டேன். தற்செயலாக தான் கிருத்திகாவை வாசித்தேன். அவர் என் மனம் கவர்ந்த ஆசிரியராக இல்லை. நீலி போன்ற முக்கியத்துவமுள்ள இதழில் என்னை ஆட்கொண்ட ஒருவர் குறித்த கட்டுரையுடன் உள் நுழைய மேலும் ஒரு வாய்ப்பு உள்ளது. ஆனால் வேறு குறை உள்ளதே, இன்னும் அக்கா அதை வாசிக்கவில்லை. அவள் வாசித்து சொல்வது எனக்கு முக்கியமானது.

இந்த நீலி இதழில் வந்த ஜார்ஜ் சாண்ட் கட்டுரையை முன்வைத்து நீங்கள் எழுதிய பேரிலக்கியவாதிகள் மறைந்து போகும் குகைவழி எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை தந்த பதிவு. சைதன்யா அக்காவின் இந்த கட்டுரையும் சரி சென்ற இதழில் வெளிவந்த மேரி வோல்ஸ்டோன்கிராப்ட் குறித்த கட்டுரையும் மிக முக்கியமானவை. இவை ஒரு எழுத்தாளரை அவரது குடும்ப பின்னணி, தனி வாழ்க்கையின் தத்தளிப்பும் தெளிவும், அவை படைப்புகளில் பிரதிபலித்த விதம், அக்கால படைப்பு சூழல் அவர்களை எதிர்கொண்ட விதம், இன்றைய முக்கியத்துவம் விரிவான பண்பாட்டு பின்புலத்தில் நிறுத்தி அறிமுகம் செய்கின்றன. ஒரு புதிய வாசகனுக்கு இவை மிக சிறந்த தொடக்கங்கள். இவை சொல்லப்படும் விதம் ஏறத்தாழ புனைவை வாசிக்கும் உணர்வை அளிக்கின்றன. ஜார்ஜ் சாண்ட் குறித்த இந்த கட்டுரையோ சில இடங்களில் புனைவின் உட்குறிப்பு தன்மை பெற்று விளங்குகிறது.

ஜார்ஜ் சாண்ட்டின் கட்டுரையை முன்வைத்து நீங்கள் எழுதிய பேரிலக்கியவாதிகள் மறைந்து போகும் குகைவழி இளம் வாசகனாக எனக்கு மலைப்பையே அளித்தது. இலக்கிய சூழலில் நுழையும் ஒரு வாசகன் எப்படியோ பேரிலக்கியவாதிகள் மறைந்து போக மாட்டார்கள். மறைந்து போகாமல் விமர்சன ஏற்பை அடைபவர்கள் பேரிலக்கியவாதிகள் என்ற கருத்தை சென்றடைகிறான். ஆனால் அவர்களும் தங்கள் பண்பாட்டின் விவாத பரப்பில் ஒளி மங்கி மறைய கூடும் என்பது ஒரு அதிர்ச்சியே.

மறுபுறம் உங்கள் கட்டுரை எந்தளவுக்கு வாசகன் தன் மன சான்றிற்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்பதையும் காட்டுகிறது. குறிப்பாக மேரி கொரெல்லியை வாசித்து சுராவிடம் பேசிய அந்த நிகழ்வு. என்ன இருந்தாலும் சுரா சொன்னது அநியாயமல்லவா! இந்த விமர்சகர்களுக்கு என்ன இரண்டு கொம்புகளாக முளைத்து விட்டிருக்கின்றன. இந்த விமர்சன புறந்தள்ளல்களை பற்றி கவலை படாமல் மேரியை முன்வைத்து வந்ததன் விளைவு, அவரது மாஸ்டர் கிறிஸ்டியன் நாவல் தமிழில் மொழியாக்கம் செய்யப்படுகிறது. இன்னொன்று ஒரு வேடிக்கையாக மேரி கொரெல்லி என்று இணையத்தில் தேடி பார்த்தேன். பெரும்பாலும் அவர் மறக்கப்பட்ட பிரிட்டிஷ் எழுத்தாளர் என்றே கட்டுரைகளில் முன்னிலைப்படுத்தபடுகிறார்.  அநேகமாக அவரை பேரிலக்கியவாதி என்று சொல்பவர் நீங்கள் மட்டுந்தான் போலும்.

மீண்டும் ஜார்ஜ் சாண்ட்டிற்கு திரும்புவோம். உங்கள் கட்டுரையில் சைதன்யா தஸ்தாவெஸ்கியையும் ஃப்ளாப்பர்ட்டையும் நிலவறை மனிதர்கள் என்றா சொல்கிறாள் என்று கேள்வியுடன் முடித்திருக்கிறீர்கள். எனக்கு கேள்வியெல்லாம் இல்லை அப்படித்தான் சொல்கிறார் என்று தோன்றுகிறது. அதற்காக அவர் இறுதியில் குறிப்பிடும் ஒரு அவதானிப்பை அத்தனை எளிதில் மறுக்க முடியும் என்று தோன்றவில்லை. அறுதியிட்டு கூற முடியாது. ஏனெனில் நான் தஸ்தாவெஸ்க்கியின் குற்றமும் தண்டனையும் கரம்சோவ் சகோதரர்கள் இரு நாவல்களை மட்டுமே படித்திருக்கிறேன். இன்னும் ஃப்ளாபர்ட்டை வாசிக்கவில்லை. ஆனால் படித்தவற்றிலிருந்து அந்த அவதானிப்பு வலுவானதாகவே உள்ளது என்று தோன்றுகிறது.

அன்னைமையின் விரிவின் முன் அதன் களங்கமற்ற அன்பின் முன் தருக்கியெழுந்து ஆடும் சிறுவர்கள் என்கிறார். இறுதியில் அவர்கள் வந்து சேரும் இடமும் அந்த அன்னைமையாக இருக்கிறது என்கிறார். இதற்கு ரஸ்கோல்நிகாப் – சோனியா உறவு மிக சிறந்த உதாரணம். அவன் உச்சகட்ட உளவியல் வன்முறைக்கு உள்ளாக்கிய பின்னர் தான் மண்டியிடுகிறான்.

இது தவிர இந்த நீலி இதழில் என்னை மிகவும் கவர்ந்த மேலும் இரண்டு கட்டுரைகள் சுசித்ரா அவர்கள் எழுதிய விண்ணிலும் மண்ணிலும் தொடரும் கவிஞர் இசை ஔவையாரை முன்வைத்து எழுதும் களிநெல்லிக்கனி தொடரும் மிக முக்கியமானவை என்று கருதுகிறேன். உலக பெண் எழுத்தாளர்களை முன்வைத்து சுசித்ரா எழுதும் இத்தொடரில் இம்முறை அவர் குறிப்பிட்டிருக்கும் லிரிக் கவிதைகளை அகநாடக தன்மையுடன் ஒப்பிடுதல், பெண்களில் ஏன் காவிய ஆசிரியர்கள் எழவில்லை என்ற கேள்விக்கு தேடி செல்லும் முடிவுகள் ஆகியவை விரிவாக விவாதிக்கபட வேண்டியவை. அக்கட்டுரை இன்னொரு முறை ஆழ ஊன்றி வாசிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். கவிஞர் இசை தமிழாசிரியர்களின் பிடியில் இருந்து ஔவையை விடுவித்து நவீன வாசகனுக்கு தருவதும் மிக முக்கியமானது.

அடுத்து கடைசியாக கேட்ட உங்களது இரு மேடையுரைகளை பற்றி என் சிந்தனைகளை கூற வேண்டும். முதலாவது பொதுவெளியில் விடப்பட்ட கல்தூணும் கனிமரமும் கட்டண உரை. மிக சிறப்பான உரை. வாழ்நாள் முழுக்க துணை வர போகும் படிமத்தையும் சிந்தனைகளையும் தந்த ஆசிரியருக்கு நன்றி கூறுகிறேன். இவை ஏன் கட்டண உரைகளாக இருக்க வேண்டும் என்பது குறித்து முன்பே தளத்தில் எழுதியதை படித்திருந்தாலும் உரையை கேட்கையில் உள்ளார்ந்து உணர முடிந்தது. இவை நீங்கள் அருகமர்ந்து சொல்லும் சொற்கள். அவை ஒரு ஆசிரிய மாணவ உறவை மானசீகமாக மேற்கொண்டவர்களால் மட்டுமே கேட்கப்பட தக்கவை. கேட்டு முடித்ததில் அடுத்த முறை சென்னையில் கட்டண உரை நடக்கும் போது கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன்..

இரண்டாவது உரை லக்ஷ்மி சரவணக்குமார் அவர்களின் படிக விழாவில் நிகழ்த்திய உரை. இளம் எழுத்தாளனுக்கு அவ்வுரை எந்தளவுக்கு முக்கியமோ அதேயளவுக்கு வாசகனுக்கும் இன்றியமையாதது. வாசிப்பில் சலிப்புற்ற வாசகனாய் மாறுவதன் அபாயம் முதற்கொண்டு இலக்கிய வடிவங்கள் எப்படி படைப்பாளியின் பிரக்ஞையை தேடலை தங்கள் கட்டுக்குள் வைக்கின்றன. அவற்றை மீறுவதன் முக்கியத்துவம், ஒரு வாசகன் இறுதி வரை தன் குழந்தைமை தக்க வைத்து கொள்ளுதல் மிக விரிவாக அமைந்திருந்தது. எழுதும் கனவுள்ளவனாகவும் வாசகனாகவும் அவ்வுரை ஓரே சமயம் வழிக்காட்டியாகவும் எச்சரிக்கை பலகையாகவும் நின்று துணை தருகிறது.

இறுதியாக தத்துவம் கற்பது சார்ந்த என் கேள்விக்கு தாங்கள் அளித்த பதிலை ஒரு ஆசியாகவே கருதுகிறேன். என்னுடைய புத்தாண்டு வாழ்த்து கடிதத்தில் தங்கள் ஆசியை வேண்டினேன். அதற்கு பதிலாக இவ்விடை கிடைத்தமை பெரும் ஆசியென்று கருதி வணங்குகிறேன். என்னால் உறுதியாக சொல்ல முடியும் நீடித்த கூர்ந்த கவனத்தை அளிக்க முடியுமென்று. அதனை மேலும் பயிற்றி மேம்படுத்த வேண்டும். இன்றுள்ள எதிர்மறை மனநிலைகள் என்று எதுவும் இல்லை. கழிவிரக்க சிந்தனைகள் எப்போதாவது மென்மையாக தலைக்காட்டுகையில் அகற்றி விடுகிறேன். அது எழாமல் செய்யுமளவுக்கு செய்திட வேண்டும். அதற்கு தீவிர அர்பணிப்பு மிக்க செயலே வழியென்று அறிந்திருக்கிறேன். ஏனெனில் செயலின் மூலமே அத்தன்னம்பிகையை ஈட்டி கொள்ள இயலும் என அறிந்திருக்கிறேன். தொடர்ச்சியாக செயலாற்றி என்னை நிலைநிறுத்தி கொள்ள இயலும் என நம்புகிறேன். இந்த கடிதத்தை இந்நோய் காலத்தில் உறுதியுடன் எழுதுவது கூட அந்நம்பிக்கையை எனக்கே அளித்து கொள்ளத்தான். அதை ஈட்டியுயும் இருக்கிறேன். தொடர்ச்சியாக செயலில் ஈடுபடல் வேண்டும்.

அன்புடன்

சக்திவேல்

முந்தைய கட்டுரைமண்ணின் மைந்தர்கள்- கடிதம்
அடுத்த கட்டுரைஅனுராதா ரமணன்