எனக்கு என் மலபார் நண்பர்களுடானான நட்பைப்பற்றிச் சொன்னால் அரசுப்பணியில் இருந்த பெரும்பாலானவர்கள் திகைப்படைவதைக் கண்டிருக்கிறேன். ஓர் அலுவலகத்தில் பணியாற்றி மாற்றல் பெற்றுச் சென்றால் ஆறுமாதகாலம் நட்புகள் நீடித்தால் அது அரிய செய்தி. நான் காசர்கோடிலிருந்து கிளம்பியது 1989ல். என் நண்பர்களுடன் முப்பத்திநான்கு ஆண்டுகளாக நட்புடன் இருக்கிறேன். சந்தித்துக்கொண்டு பேசிக்கொண்டும் இருக்கிறோம்.
சென்ற ஆண்டு என் அறுபதாம் அகவைநிறைவை நண்பர்கள் செறுவத்தூர் (பையன்னூர்) ஊரில் கொண்டாடினார்கள். அப்போது அவர்கள் நாகர்கோயிலில் என்னுடன் தங்க வருவதாகச் சொன்னார்கள். ஆனால் திட்டங்கள் தவறித்தவறிச் செல்ல இப்போதுதான் வருகையை உறுதிசெய்ய முடிந்தது. ஜனவரி 31 முதல் பிப்ரவரி 3 வரை நான்கு நாட்கள் பாலசந்திரன், கருணாகரன், எம்.ஏ.மோகனன், பவித்ரன், புருஷோத்தமன், சுஜித், ரவீந்திரன் கொடகாடு ஆகிய ஏழு நண்பர்கள் நாகர்கோயில் வந்தனர்
நான் 29 ஆம் தேதிதான் சென்னையில் இருந்து திரும்பி வந்தேன். பெங்களூர் கட்டண உரை முடிந்து நேராக சென்னை சென்று இரண்டுநாட்கள் சினிமா வேலைகள் முடிந்து 28 தான் கிளம்ப முடிந்தது. 20 ஆம் தேதி நேரில் சென்று நண்பர்களுக்கு நாகர்கோயில் விஜய்தா ஓட்டலின் அறைகள் பதிவுசெய்தேன். நாகர்கோயிலிலேயே வசதியான விடுதி அதுதான். பயணத்திட்டங்களை வகுத்தேன். இரண்டு வாடகைக்கார்களுக்கு ஏற்பாடு செய்தேன்.
நண்பர்கள் திருவனந்தபுரத்தில் வந்திறங்கி அங்கிருந்து இன்னொரு ரயில் ஏறி காலை ஏழுமணிக்கே வந்து சேர்ந்தனர். நான் ரயில்நிலையம் சென்று அவர்களை எதிர்கொண்டு அழைத்து விடுதிக்குக் கொண்டுசென்று விட்டேன். காலையுணவை அவர்களுடன் உண்டபின் வீட்டுக்கு திரும்பி வந்தேன். அவர்கள் சற்று ஓய்வெடுக்க விரும்பினர். மதியம் கிளம்பி அவர்களை சந்தித்து சேர்ந்து உணவுண்டோம்.
எங்கள் நட்புக்கூடல் எப்போதுமே பேச்சும் சிரிப்பும் பாட்டும் மட்டுமே கொண்டது. நான் மலபாரில் சென்றமைந்ததுமே கண்ட முதல் தனித்தன்மை அங்கே நண்பர்கள் புறம்பேசுவதில்லை என்பதே. நேரடியாக சிலவற்றைச் சொல்லக்கூடும். ஆனால் எவரையும் எதிர்மறையாகப் பேசுவதில்லை. ஆனால் மலபாரில் வந்து வேலைபார்க்கும் தெற்குக்கேரளத்தவர்கள் பிறரை நக்கலும் நையாண்டியுமாகவே பேசிக்கொண்டிருப்பார்கள். நான் தெற்கனாக இருந்தும் வடக்கர்களிடம் அணுக்கமானது அவர்களின் இயல்பான உற்சாகம், நகைச்சுவை, மற்றும் கள்ளமின்மையைக் கண்டுதான்.
சென்ற நாட்களில் நடந்த வேடிக்கைகளை பேசிக்கொண்டிருந்தோம். ரவீந்திரன் கொடகாடு மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சியின் கூட்டுறவு அமைப்பு ஒன்றின் தலைவர். பாலசந்திரன் மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சியின் வட்டத்தலைவர். ஆளும்கட்சி. ஆனால் கேரளத்தில் அது எந்த வகையிலும் அதிகாரம் அல்ல. பணமும் அல்ல. சேவை மட்டும்தான். இருவருடைய தந்தையரும் புகழ்பெற்ற கம்யூனிஸ்டு தலைவர்களாக இருந்தவர்கள்.
முதல்நாள் மதியம் கிளம்பி தேவசகாயம் பிள்ளை குன்றுக்குச் சென்றோம். ஆரல்வாய்மொழி அருகே அமைந்துள்ள இந்தக் குன்றில்தான் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை கொல்லப்பட்டார் என்று தொன்மம். அங்கே ஒரு பெரிய நினைவகம் உள்ளது. தேவசகாயம் பிள்ளை இன்று புனிதர் பட்டம் பெற்றுவிட்டமையால் அந்த இடம் சுற்றுலா மையமாக அமைந்துவிட்டிருக்கிறது.
அங்கிருந்து திருக்குறுங்குடி (திருக்கணங்குடி) ஆலயம் சென்றோம். எங்கள் பிரியத்திற்குரிய பேராலயம் அது. ஆளரவமில்லாத விரிந்த பிராகாரங்கள், கல்மண்டபங்கள், மகத்தான சிற்பங்கள். அந்தி மயங்கும் வேளையில் அங்கிருப்பது எப்போதுமே ஒரு கனவுக்கு நிகரான அனுபவம்
அடுத்தநாள் கன்யாகுமரியில் விஸ்வா கிராண்ட் என்னும் விடுதியில் அறை போட்டிருந்தேன். இணையம் வழியாக சைதன்யா கண்டுபிடித்த விடுதி. புதிய விடுதிதான், நட்சத்திர தகுதி கொண்டது என்று சொல்லிக்கொண்டது. ஆனால் அங்கே சென்றால் மேலும் கட்டணம் கேட்டனர். (நாங்க அவங்களுக்கு கமிஷன் கொடுக்கணும், எங்களுக்கு கட்டுப்படியாகாது சார்). அறைகள் புதியவை. ஆனால் மிக மோசமான உணவு, அக்கறையே இல்லாத ஊழியர்கள். இந்திய சுற்றுலாத்தலங்களின் விடுதிகள் போல எரிச்சலூட்டும் மோசடிகள் வேறில்லை.
கன்யாகுமரியில் ஒரு முழுநாளும் அவர்கள் தங்கினர். மறுநாள் திருவட்டாறு ஆலயம், திர்பரப்பு அருவி, சிதறால் மலை ஆகியவற்றை பார்த்தோம். திர்பரப்பு அருவியில் அந்தக்காலத்தில் நானும் நண்பர்களும் நடந்தே வந்து குளித்துச் செல்வோம். அன்றைய திர்ப்பரப்பு ஆளரவமில்லாத தனித்த பொழிவு. அன்றைய குதூகலம் மிக எளிதில் மீட்டு எடுக்கத்தக்கதே என தெரிந்தது. நீர் என்றும் இப்படி கருணையின் பொழிவாகவே இருந்துகொண்டிருக்கும்
அன்றுமாலை எங்கள் வீட்டில் விருந்து. அருண்மொழி இரண்டுவகை சிக்கன் கறி, சப்பாத்தி, பிரியாணி என தடபுடலாகச் சமைத்திருந்தாள். பொதுவாக மலபார் நண்பர்கள் அசைவப்பிரியர்கள். அங்கே சைவ உணவே அனேகமாக இல்லை. ஓணத்துக்கே அசைவம்தான். இரவு 11 மணிக்கு அவர்களை மீண்டும் விஜய்தா விடுதிக்குக் கொண்டுசென்று விட்டேன்.
மறுநாள் காலை பத்மநாபபுரம் அரண்மனை, குமாரகோயில், எங்கள் குலக்கோயிலான மேலாங்கோடு ஆலயம் ஆகிய இடங்களுக்குச் சென்றோம். மதிய உணவுக்கு பின் நான் இல்லம் திரும்பி ஓய்வெடுத்தபின் மீண்டும் விடுதிக்குச் சென்றேன்.
மாலை நாகராஜா ஆலயம் சென்றோம். அங்கே நாகராஜா திடலில் ஓர் இசை நிகழ்வு. அதை இரண்டுமணிநேரம் பார்த்தோம். நள்ளிரவில் அவர்களுக்கு ரயில். அதில் ஏற்றிவிட்டுவிட்டு திரும்பி வந்தேன்.
நான்காம் தேதி காலை நான் மாத்ருபூமி இலக்கிய விழாவுக்குச் செல்லவேண்டியிருந்தது. நான்கும் ஐந்தும் மாத்ருபூமி விழா. ஐந்தாம் தேதி மதிய விமானத்தில் சென்னை. அங்கே லட்சுமி சரவணகுமாரின் விழா. நாட்கள் பறந்துகொண்டிருக்கின்றன.
என்னுடன் இன்றிருக்கும் நண்பர்கள் எல்லாருமே இலக்கிய வாசகர்கள். எப்போதும் இலக்கியம், தத்துவம். அது ஒரு கொண்டாட்டம். நான்குநாட்கள் இலக்கியமே பேசவில்லை. அரசியலும் பேசிக்கொள்ளவில்லை. புதிய கண்களுடன் மலபாருக்கு சென்றிறங்கிய 25 வயதான இளைஞனாக இருந்தேன்.