வாழ்க்கையின் விசுவரூபம்

ஒருமுறை கல்பற்றா நாராயணனும் நானும் விவாதித்துக்கொண்டே பேருந்தில் சென்றுகொண்டிருந்தோம். தகழி சிவசங்கரப்பிள்ளையின் ‘கயறு’ என்ற பெருநாவல் பற்றிப் பேச்சுவந்தது. ஞானபீட விருது பெற்ற இந்நாவல் தமிழில் சி.ஏ.பாலன் மொழியாக்கத்தில் சாகித்ய அக்காதமி வெளியீடாக வந்திருக்கிறது. நான் சொன்னேன்,  ‘தகழி சிவசங்கரப்பிள்ளையின் நாவல்களில் என்ன பிரச்சினை என்றால் அத்தனை பக்கங்களைத் தூக்கிக் கொண்டுசெல்லக்கூடிய தனக்கான வரலாற்றுத்தரிசனம் இல்லை. அவருக்கு மக்களைக் கூர்ந்து பார்க்கத் தெரிகிறது. அவர்களை மனமார நேசிக்கிறார்.வாழ்க்கையின் ஒட்டுமொத்த அசைவைக்கூட அவரால் பார்த்துவிடமுடிகிறது. அதனால்தான் நாம் அவரை இன்னும் முக்கியமான படைப்பாளியாக நினைக்கிறோம். ஆனால் எப்போதும் ஒன்று குறைகிறது. அது அந்த தரிசனம்தான். தரிசனமற்ற ஒரு ஆக்கம் அத்தனை பிரம்மாண்டமாக இருக்கும்போது நமக்கு அதில் ஒரு ஏமாற்றம் உருவாகிறது’

கல்பற்றா சொன்னார் ‘தகழிக்குக் கவித்துவம் இல்லை என்று எனக்கு தோன்றியிருக்கிறது. நீங்கள் சொல்வதும் கிட்டத்தட்ட அதுதான். இருவகைக் கலைஞர்கள் உண்டு. வாழ்க்கையைப் பார்ப்பவர்கள்,வாழ்க்கையை விளக்குபவர்கள் ஒரு சாரார். வாழ்க்கைக்கு அப்பால் எங்கோ செல்ல வாழ்க்கையைக் கையாள்பவர்கள் இன்னொருசாரார். மனிதகுலம் இங்கே இப்படி வாழ்ந்துகொண்டிருக்கிறது. ஆனால் அது வேறு ஒருவகையில் வேறு ஒரு இலக்கில் வாழவேண்டுமென்ற கனவை முன்வைப்பவர்கள் அவர்கள். மகத்தான எழுத்து என்பது இலட்சியவாதத்தை உருவாக்குவதும் நிலைநிறுத்துவதும்தான்’

 

[Prianishnikov  வரைந்த ஓவியம். நன்றி விக்கிபீடியா]

கல்பற்றா தொடர்ந்தார் ‘தகழியின் பிரச்சினை,அவரது அபாரமான பொதுப்புத்தி. [காமன்சென்ஸ்] வாழ்க்கையை அவர் வாழ்ந்து அறிந்த ஒரு முதுபாட்டாவின் முதிர்ச்சியுடனும் நிதானத்துடனும் அணுகுகிறார். அதுவே அவரது அழகு. குறிப்பாக மனித உறவுகளின் சிக்கல்களையும் விசித்திரங்களையும் அவர் சொல்லும் இடம். அந்த பொதுப்புத்திதான் அவரைக்  கவிதைக்கு வரமுடியாமல் செய்கிறது. கவிதையும் தரிசனமும் எப்போதுமே பொதுப்புத்திக்கு எதிரான எழுச்சிகள்தான்’

நான் ’அப்படியானால் டால்ஸ்டாய்?’ என்றேன். ‘எந்த விதியையும் மீறிச்செல்லும் மேதைகள் உண்டு. அவர் அந்தவகை.  பிரம்மாண்டமான பொதுப்புத்தியின் சித்திரம் என ’போரும் அமைதியும்’நாவலைச் சொல்லலாம். ஆனால் அது ஒரு மகத்தான கவிதை. அதில் விளைவது மானுடம் உருவாக்கிய மிகப்பெரிய இலட்சியவாதங்களில் ஒன்று’ என்றார் அவர். கல்பற்றா நாராயணனின் எப்போதைக்கும் பிரியமான எழுத்தாளர் தல்ஸ்தோய். இந்த மீறலை அவரது அகம் காத்திருந்திருக்கலாம். கவிதையில் சிறகடித்தெழும்போதெல்லாம் பொதுப்புத்தியெனும் நிலவிரிவை அவர் பாதங்கள் ஏங்கியிருக்கக்கூடும். அதை தல்ஸ்தோய் நிகழ்த்திக்காட்டுகிறார்

தல்ஸ்தோய் அவரது மகத்தான நாவலை ல் எழுதினார். 1861ல் புரூதோன் என்ற பிரெஞ்ச் அறிஞர் பிரெஞ்சில் எழுதிய போரும் அமைதியும் என்ற நூலின் தலைப்பில் இருந்தே இந்நூலுக்கான தூண்டுதலைப் பெற்றார். ஆரம்பத்தில் 1801 என்ற தலைப்பில்தான் இதை எழுத ஆரம்பித்திருந்தார். அவருடைய திருமணத்தை ஒட்டித் தன் சொந்த கிராமத்திலேயே வசிக்க ஆரம்பித்த உற்சாகமான நாட்களில் எழுத ஆரம்பித்த நாவல் இது. அவரது மனைவி சோஃபியா இந்தப் பெருநாவலை நான்குமுறை கையால் பிரதி எடுத்ததாகச் சொல்லப்படுகிறது

 

இந்நாவலின் பேசுபொருள் நெப்போலியனின் மாஸ்கோ படையெடுப்பு. உண்மையில் அதைப்பற்றிய பேச்சு எப்போதுமே தல்ஸ்தோயின் குடும்பத்தில் இருந்துவந்தது. இந்நாவலில் வரும் பல கதைமாந்தர்கள் தல்ஸ்தோயின் முன்னோர்களே என பலவகைகளில் அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது. கிட்டத்த 160 கதைமாந்தர்கள் உண்மையான மனிதர்களாக அவர்களின் பெயர்களிலேயே வருகிறார்கள்.  குறிப்பிடத்தக்க கதைமாந்தர்கள்  500க்கும் மேல் என்று விமர்சகர்கள் சொல்கிறார்கள்.

1863ல் முடிக்கப்பட்ட இந்நாவல் 1865ல் வெளியாகியது.  ரஸ்கிய் வெஸ்ட்னிக் என்ற ருஷ்யமொழி வார இதழில் இந்நாவல் 1805 என்ற பேரில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. தல்ஸ்தோய் இந்நாவலைப் பலமுறை பலவகைகளில் திருத்தியும் சீர்படுத்தியும் எழுதினார். போரும் அமைதியும் என்ற பேரில் 1869ல் இந்நாவல் நூலாக வெளிவந்தது. மூலத்தில் பலவகையான மொழிநுட்பங்கள் கொண்ட நாவல் என்று இது சொல்லப்படுகிறது. அன்றைய ருஷ்ய உயர்குடிகள் பேசிய போலி பிரெஞ்சு மொழியை நுட்பமாகப் பகடி செய்து தல்ஸ்தோய் பயன்படுத்தியிருந்தாராம்.

முதலில் பிரெஞ்சுக்கும் பின்னர் உலகமொழிகளிலும் மொழியாக்கம்செய்யப்பட்ட போரும் அமைதியும் உலகமொழிகளனைத்திலும் விரும்பி மொழியாக்கம்செய்யப்பட்டு கடந்த ஒரு நூற்றாண்டாக உலகசிந்தனையையும் உலக இலக்கியப்போக்கையும் தீர்மானித்த பெரும்படைப்பாக திகழ்கிறது. தமிழில் டி எஸ் சொக்கலிங்கம் மொழியாக்கத்தில்  நவம்பர் 20, 1957 ல் சக்தி வை கோவிந்தன் வெளியிட இந்நாவல் வெளிவந்தது. தமிழில் வெளிவந்த நாவல்களில் எல்லா வகையிலும் முதன்மையானது என்று எவ்வித ஐயமும் இல்லாமல் லேவ் தல்ஸ்தோயின் இந்த பேரிலக்கியத்தைக் கூறமுடியும். டி.எஸ். சொக்கலிங்கம் தன் மொழிபெயர்ப்புக்குப் `போரும் வாழ்வும்’ என்று பெயர் சூட்டியிருந்தார்.

புதுமைப்பித்தனின் இதழியல் குருநாதர், போதகர் என்ற முறையில்தான் டி. எஸ்சொக்கலிங்கம் இன்று இலக்கியப் பேச்சுக்களில் அதிகமாகக் குறிப்பிடப்படுகிறார். புகழ்பெற்ற இலக்கிய இதழான மணிக் கொடியின் நிறுவனர்களுள் ஒருவர் என்ற முறையில் அடுத்தபடியாகக் குறிப்பிடப்படுகிறார். தினமணியின் ஆசிரியராகவும், சுதந்திரப் போராட்ட வீரராகவும், சொக்கலிங்கம் ஆற்றிய பணிகள் மிக முக்கியமானவை. எனினும் இந்த மொழி பெயர்ப்பே அவருடைய மிகப்பெரிய சாதனை.

இன்னொரு மொழிச்சூழல் இத்தகைய ஒரு சாதனையைத் தன் மார்பில் பொறித்து வைத்திருக்கும். உதாரணமாக மலையாளத்தில் நாலப்பாட்டு நாராயண மேனன் மொழிபெயர்த்த விக்டர் யூகோவின் துயரப்படுபவர்கள் (லெ.மிசரபில்ஸ்) மிக விரிவான இலக்கியப் பாதிப்பை மலையாளத்தில் ஏற்படுத்தியது. முதன்மையான இலக்கியப் படைப்பாளிகளுக்கு நிகரான கௌரவம் இதன்மூலம் அம்மொழி பெயர்ப்பாளருக்கு இன்று தரப்படுகிறது. ஆனால் அதே பாதிப்பை நிகழ்த்திய சொக்கலிங்கத்தின் மொழிபெயர்ப்பு விரிவான கவனத்திற்கு வரவில்லை. அதற்கு  நெடுங்காலம் மறு பதிப்புக்கூட வரவில்லை. இலக்கியச் சூழலில் அது குறித்து விரிவான விமர்சனங்களும் உருவாகவில்லை.

`போரும் அமைதியும்’ தான் உலகில் எழுதப்பட்ட ஆகச் சிறந்த நாவல் என்று நினைக்கும் வாசகர்கள் உலகமெங்கும் உண்டு. நான் அவர்களுள் ஒருவன். தீவிரம், கூர்மை, கச்சிதம், வாசக ஊடுருவலுக்கான சாத்தியங்கள் ஆகியவற்றில் `போரும் அமைதியு’மைத்தாண்டிச் செல்லும் பல நாவல்களை நான் படித்ததுண்டு. ஒவ்வொரு சிறந்த நாவல் அனுபவமும் என்னை தன்னினைவின்றியே ’போரும் அமைதியு’முடன் அதை ஒப்பிடச் செய்கின்றது. உடனடியாக உருவாகும் உணர்ச்சிவேகங்களுக்குப் பிறகு வெல்லமுடியாத சிகரம் போலப் போரும் அமைதியும் மேலெழுவதே எனக்குத் தரிசனமாகிறது.

தல்ஸ்தோயின் பெரும் நாவலின் முதல் சிறப்பம்சம் அதன் ஒட்டுமொத்தத் தன்மைதான். வாழ்வின் முழுமையை சித்திரிக்க உதவக்கூடிய கலைவடிவமே நாவல் என்ற புரிதலை மேலும் மேலும் வலுப்படுத்தக் கூடியது அது. அதில் உள்ளது வாழ்வின் ஒரு பெரும் அலை. வரலாற்றின் ஒரு சுழிப்பு. நெப்போலியன் ருஷ்யாவைத் தாக்கி வென்று, பிறகு தோற்கடிக்கப்பட்டு மீள்கிறான். அந்த ஒரு சுழிப்பில் எத்தனை எத்தனை மனித வாழ்வுகள் சுழற்றியடிக்கப்படுகின்றன, உறவுகளும் பிரிவுகளும் நிகழ்கின்றன, அழிவும் ஆக்கமும் ஒன்றை ஒன்று பூரணப்படுத்திக் கொள்கின்றன என்று காட்டுகிறார் தல்ஸ்தோய்.

இந்நோக்கம் காரணமாகவே இதற்கு ஒரு கதையை அவர் தேர்வுசெய்யவில்லை. ஒரு கதை இருந்திருந்தால் கதையின் ஒருமைக்காக வாழ்க்கையையும் வரலாற்றையும் ஓர் ஒழுங்குக்குள் கொண்டுவரவேண்டியிருந்திருக்கும். வெட்டிச்செதுக்கி அமைக்கவேண்டியிருக்கும். இந்த வடிவில் நாவல் அதன்போக்கில் வளர்ந்து விரிந்து ஒரு உயிர்த்துடிப்பான காடுபோல் இருக்கிறது. ஆகவே ஒவ்வொரு வாசிப்பிலும் ஒருவர் நமக்குக் கதாநாயகனாக ஆகிறார். ஒருகதை மையச்சரடாகிறது. புதிய ஒரு நாவல் நம் முன் விரிகிறது.

 

வரலாற்றை ஒரு விசுவரூப தரிசனமாகக் காட்டும் இப்பெரும் படைப்புக்கு இதற்கு முன்பும் பின்பும் இணையுதாரணங்கள் இல்லை. இந்தப் பிரமாண்டமான வரலாற்றுச் சித்திரத்தை உயிர்த்துடிப்புள்ள தனிக்கதாபாத்திரங்களின் வாழ்வுச் சம்பவங்கள் மூலம் தல்ஸ்தோய் உருவாக்கிக் காட்டுகிறார் என்பது இரண்டாவது சிறப்பு. ஒட்டுமொத்தச் சித்திரங்களை அளிக்கும் பெரும் படைப்புகள் பல ஒட்டுமொத்த தரிசனங்களில் கொள்ளும் கவனத்தைத் துளிகளில் கொள்வதில்லை. மிகச்சிறந்த உதாரணம் ஷோலக்கோவின் பெரும் நாவல்கள். அவற்றின் வரலாற்றுச்சித்திரிப்பு நமக்கு பிரமிப்பும் ஆர்வமும் ஊட்டுகிறது. அதேசமயம் அவற்றில் உள்ள கதாபாத்திரங்களும், நிகழ்வுகளும் தனித்தனியாகப் பார்த்தால் செறிவற்றவையாக உள்ளன.

மாறாகப் போரும் அமைதியும் எந்த பக்கத்தைத் திருப்பிப் படித்துப் பார்த்தாலும் உயிர்த்துடிப்புள்ள தீவிரமும், சூட்சுமங்களும் நிரம்பிய சிறுகதை ஒன்றை வாசிக்கும் அனுபவம் நமக்கு ஏற்படும். போரும் அமைதியும் நாவலை வாசிக்கும் அனுபவத்தை இவ்வாறு உருவகிக்கலாம். ஒரு பெரிய திரைப்படக் காட்சியை கண்டு பிரமிக்கிறோம். திரையை நெருங்கி  நெருங்கிச் செல்கிறோம். திரைப் பிம்பத்தின் ஒவ்வொரு துளியும் ஒரு தனிமனிதன் என்று காண்கிறோம். தன் விருப்பு வெறுப்புகளுடன், தன் தன்னிச்சையான செயல்பாடுகளுடன் அவர்கள் தங்கள் வாழ்வை வாழ்கிறார்கள். மீண்டும் பின்னகர்கிறோம். துளிகள் இணைந்து படமாகி அந்த மாபெரும் திரைப்படம் ஓடுவதைக் காண்கிறோம்.

வரலாறு கோடிக் கணக்கான மக்களின் இச்சைகளையும் இயல்புகளையும் இணைத்துக் கொண்டு உருவாகும் பெரும் பிரவாகம் என்று காட்டுகிறது நாவல். அந்தப்பிரவாகத்தின் ஒரு சுழிப்பை சித்திரிக்கும் தல்ஸ்தோய் ஒவ்வொரு சிறு கதாபாத்திரத்தையும் பிரமிப்பூட்டும் துல்லியத்துடன் படைத்துள்ளார். நாவல் முழுக்கத் தொடரும் பெரும் கதாபாத்திரங்களே ஐநூற்றுக்கும் மேலாக உள்ளன. தனித்தன்மை மிக்க ஆளுமையுடன் அவ்வப்போது வரும் கதாபாத்திரங்கள் சிலநூறு. மின்னல் போல தெரிந்து மறையும் முகங்கள் பலநூறு. ஆனால் போகிறபோக்கில் சொல்லப்பட்ட, அடையாளமும் தனித்தன்மையும் இல்லாத கதைமாந்தர் என ஒருவர்கூட இல்லை.

ஒருபக்கம் பெரிய கதாபாத்திரங்கள். ஆன்ட்ரூ இளவரசரின் தந்தையான இளவரசர் பால்தோன்ஸ்கியின் குணச்சித்திரமே உதாரணம். அபாரமான கனிவும் நேர்மையும் உடையவர் கிழவர். ஆனால் மரபையும் சடங்குகளையும் நேசிப்பவர். பழைமைவாதி. நேர்மையும் வெளிப்படைத்தன்மையும் போற்றப்பட்ட ஒரு காலகட்டத்தைச்செர்ந்தவர்.மெல்ல மெல்ல அன்னியமாகித் தன்னை விலக்கிக்கொண்டவர். ஆகவே எந்நேரமும் சிடுசிடுப்பாக இருக்கிறார். சிடுசிடுத்தே அவரது குணமாக அது ஆகிவிடுகிறது. ஆண்ட்ரூவின் மனைவி லிசா பிரசவத்தில் இறந்து சவப்பெட்டியில் ஓர் அழகிய பொம்மைபோல படுத்திருப்பதைக் காண்கிறார். அவருக்குக் குற்றவுணர்ச்சி எழுகிறது, அவளை ஒருபோதும் பிரியமாக நடத்தியதில்லை என. ஆனால் கடும் கோபத்துடன் திரும்பிக்கொள்கிறார்.

பால்தோன்ஸ்கியின் முதிய வேலையாள் இன்னொரு உதாரணம். மாஸ்கோ கைப்பற்றப்பட்டுவிட்ட இக்கட்டான நாட்களில் தன் எஜமானனின் வண்டியில் ஏறி ஓர் அவசர வேலையாக அவர் போக நேர்கிறது “இந்தப் பெண்கள்! பெண்கள்! ஓ!’’ என்று தன் எஜமானனைப் போலவே பேசி அலுத்துக் கொண்டபடி சாட்டைக்குச்சியால் ஷ§க்களை தட்டியபடி ஏறியமர்கிறார் கிழவர். பலகாலம் எஜமானனுடன் பழகி வாழ்ந்து அவருடைய நகலாகவே மாறிவிட்டவர் கிழவர். வாழ்வின் ஒரு கணத்தில் எஜமானனாகவே ஆகும்போது அவருக்கு `முக்தி’ கிடைக்கிறது! மிக அற்புதமான சிறுகதை போல உள்ள இந்தச் சந்தர்ப்பம் கதையின் போக்கில் தெறிக்கும் பல்லாயிரம் துளிகளில் ஒன்று.

இந்நாவலின் மூன்றாவது முக்கியச் சிறப்பு இதன் ஒருமை. பலநூறு கதாபாத்திரங்களின் வாழ்வில் நிகழும் பல்லாயிரம் நிகழ்வுகள் ஒன்றோடொன்று கலந்து பின்னி ஒருமையை உருவாக்கிக் காட்டுவது ஒரு மகத்தான வாழ்க்கைத் தரிசனம் என்றே கூறவேண்டும். வாழ்வுக்கு உண்மையில் அத்தகைய பரஸ்பரத் தொடர்பு, காரணகாரியப் பொருத்தம் ஏதும் இல்லை. வாழ்வு நம்மால் புரிந்து கொள்ள முடியாத பேரியக்கம். புரிந்து கொள்ளும் பொருட்டே படைப்புகள் ஆக்கப்படுகின்றன. பெரும் படைப்புகள் வாழ்வின் அர்த்தமற்ற பேரியக்கத்தை சித்திரித்துக் காட்டி அதன்மீதான தங்கள் தரிசனம் மூலம் ஒருமையையும், அர்த்தத்தையும், காரணகாரியப் பொருத்தத்தையும் நிறுவிக் காட்டுகின்றன.

போரும் அமைதியும் போல இதற்கு மிகச்சிறந்த உதாரணம் இல்லை. துயரம், மகிழ்ச்சி, ஆசை, அதிகாரம், துரோகம், பாசம், மரணம் என்று நாலாபக்கமும் பொங்கி வழிந்து பரவும் மனித வாழ்வின் இயக்கம் வழியாக நாம் நகர்ந்து இறுதியில் முடிவை நெருங்கும் போது வாழ்வுகுறித்த ஒரு தரிசனத்தை அடைகிறோம். அதன் அடிப்படையில் மொத்த நாவலும் அழகாக ஒருங்கிணைவதைக் காண்கிறோம். இந்நாவல் மானுடவாழ்க்கையைப்பற்றிய எல்லா நம்பிக்கைகளையும் அழித்து அதன்மேல் பிரம்மாண்டமான ஓர் இலட்சியவாதத்தை நிறுவுகிறது.

முற்றத்தில் நிற்கும் செடி எப்போது வளர்கிறது, பூக்கிறது, காய்க்கிறது என நாம் அறிவதில்லை. நாம் அறியாமல் நம் கண்முன்னால்  அதன் வளர்ச்சி நிகழ்கிறது. போரும் அமைதியும் நாவலில் ஒவ்வொரு கதாபாத்திரமும் அப்படி மிக இயல்பாக நம் பார்வைக்கே படாமல் முதிர்ந்து கனிவதை, வெம்பி உதிர்வதைக் காண்கிறோம். ஒரு புனைவிலக்கியம் அளிக்கும் உச்சகட்ட காலதரிசனம் இதுவேயாக இருக்கமுடியும்.

 

உதாரணமாக நடாஷவைச் சொல்லலாம். சுட்டிக் குழந்தையாகத் துருதுருவென்று அறிமுகமாகி நமது மானசீக முத்தங்களை அள்ளிக் கொள்கிறாள். போரீஸுடன் இளமைக் காதல் கொள்கிறாள். பிரின்ஸ் ஆன்ட்ரூவைக் காதலிக்கிறாள். அனடோலைப் பார்த்ததும் சபலம் கொள்கிறாள். ஆன்ட்ரூவில் பிறகு தன் காதலின் முழுமையை காண்கிறாள். பியரியை மணந்து அன்னையாகிறாள். நாவலின் இறுதியில் நாம் காணும் நடாஷா கனிந்த அன்னை. அவளில் நிகழும் இந்த பரிணாமமாற்றம், மிகச்சகஜமாக நடைபெறும் அழகுக்கு இணைகூற உலக இலக்கியத்திலேயே உதாரணங்கள் குறைவு. அவளுடைய வாழ்வின் நகர்வை இங்கிருந்து பார்க்கையில் பிறர் மீது பொங்கி வழியும் அன்பின் தத்தளிப்பு நமக்குத் தெரியும். குழந்தைகள் பிறந்த உடன் தன் அன்புக்குப் பூரண இலக்கு கிடைத்து அவள் நிறைவும் முழுமையும் கொள்வது தெரியும்.

போரும் அமைதியும் நாவலுக்கு உரிய இறுதிச் சிறப்பு வாழ்வின் `பிரம்மாண்டமான சாதாரணத் தன்மையை’ அது நமக்கு அனுபவமாக்கித் தருகிறது என்பதே. பெரும் போர்கள் நிகழ்கின்றன. காதல்கள், பிரிவுகள் நிகழ்கின்றன. பெரும் தத்துவ தரிசனங்களும் அபத்தமான வாழ்க்கைத் தருணங்களும் இதில் நிகழ்கின்றன. ஷேக்ஸ்பியரின் மொத்தப் படைப்புகளில் உள்ளதைவிட அதிகமான நாடகீயக் காட்சிகள் உள்ளன. ஆனால் எதுவுமே நிகழாமல் வெறுமையாக விரிந்து கிடக்கும் பாலைவனம் போல உள்ளது நாவல். எதனாலும் மாற்றமுடியாத வாழ்வின் `மந்தத்’ தன்மையை அல்லது யதார்த்தத்தின் `வெறிச்சிட்ட’ தன்மையை ஒருபோதும் மறக்க முடியாத அனுபவமாக நம்மில் நிகழ்த்தும் படைப்பு இது.

பரபரப்பாக வாழ்க்கையைச் சொல்லும் ஆக்கங்கள் உண்டு. ஆனால் வாழ்க்கையின் அசைவின்மையை மாற்றமின்மையை பிரம்மாண்டமான சலிப்பைச் சித்தரித்துக்காட்டிய அற்புதம் இந்நாவல்.ஆனால் கொந்தளிக்கும் நிகழ்ச்சிகளால் ஆனது இது. போர்கள் , அழிவுகள், சிதைவுகள், பிரிவுகள்…ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது ஒன்றும் நிகழாததுபோலவும் இருக்கிறது. பிரம்மாண்டமான மலைமேல் நின்றுகொண்டு கீழே ஒரு நகரைப் பார்த்தால் மொத்த நகரமும் அப்படியே அசைவில்லாமல் தூங்கிக்கிடப்பதாகத் தோன்றுவதைப்போல. போரும் அமைதிக்கும் பின் இந்த பிரம்மாண்டமான இயக்கத்தைச் சித்தரிக்கும் பெரும் சவாலைப் பலநாவல்கள் ஏற்றுக்கொண்டன. வெற்றிபெற்றவை சிலவே.

 

கவித்துவத்தின் உச்சநிலையிலும், பொதுப்புத்தியின் முதிர்ந்த சமநிலையிலும் ஒரே சமயம் இப்படைப்பு உலவுவது எப்படி என்று வாசகன் எளிதில் கூறிவிட முடியாது. லிசா பிரசவ விடுதியில் இருக்கையில் போரில் இறந்து போனதாக நம்பப்பட்ட அவள் கணவன் ஆன்ட்ரூ மீண்டு வருகிறான். அவளுக்கு வலி. அவனைப் பார்த்ததும் வலி வலி என்றுதான் அழுகிறாள். அவனது வருகை அப்போது அவளுக்கு முக்கியமாகப் படவேயில்லை. எந்த சாதாரணமான படைப்பாளியும் “ஆ! வந்துவிட்டீர்களா!?’’ என்று ஒரு வரியை எழுதி விடுவான் அங்கு.

ஒவ்வொரு கட்டத்திலும் தல்ஸ்தோயின் பொதுப் புத்தியின் சமநிலை அல்லது முதுமையின் விவேகம் கதையில் உள்ளது. அதேசமயம் போரில் அடிபட்டுக் களத்தில் விழுந்து வானில் நகரும் வெண்மேகங்களின் பேரமைதியைக் கண்டு போர் எனும் அபத்தம் பற்றிய தரிசனத்தை ஆன்ட்ரூ அடைவது போன்ற அற்புதமான கவித்துவம் ததும்பும் பகுதிகளும் இதில் உண்டு. கணக்கு வழக்கும் கவிதையும் பிசிறின்றிக் கலந்த தல்ஸ்தோயின் உலகு ஓர் இலக்கிய சாதனை.

எழுதப்பட்டு நூற்றைம்பது வருடம் தாண்டிய பிறகும் இன்னும் போரும் அமைதியும் முன்வைக்கும் பிரச்சினை,  போரில்லாத உலகு குறித்த பெரும் கனவு , மானுடகுலத்தின் எட்டாக் கனவாகவே உள்ளது. இந்தப் பெரும் படைப்புக்கு சொக்கலிங்கம் தந்த போரும் வாழ்வும் என்ற பெயர் இன்னும் பொருள் மிக்கது. போருக்கு எதிர்ப்பதம்தான் வாழ்வு. எனினும் மனிதனுக்கு என்ன காரணத்தால் போர் தேவைப்படுகிறது? அன்புக்கு துவேஷமும் ஆக்கத்திற்கு அழிவும் மீட்பனுக்கு சாத்தானும் தேவைப்படுகிறது ஏன்? ஒளிக்கு இருள் தேவைப்படுகிறது போலவா?

சொக்கலிங்கத்தின் மொழிபெயர்ப்பு மிகசரளமானதும் கச்சிதமானதுமாகும். அவர் காலத்திய படைப்பிலக்கியவாதிகளின் மொழி நடைகள் பழகித் தூசி படிந்து விட்டபிறகும் இந்த மொழிபெயர்ப்பு நடை புதுமை மாறாமல் இருப்பது வியப்புத் தருவது. ஆசிரியரின் மொழித் தேர்ச்சியைத் தொட்டுத் தொடர்ந்து செல்லும் மொழிபெயர்ப்பாளரின் மொழிப் பயிற்சி மட்டும் காரணமல்ல. மொழி பெயர்ப்பாளருக்கு படைப்பு மீதிருந்த காதலும் முக்கியமான காரணம். இல்லையேல் இந்த இரண்டாயிரம் பக்கங்களை ஒருவர் மொழி பெயர்த்துவிட முடியாது.

தமிழின் பெயரில் அர்த்தமற்ற கூச்சல்கள் காற்றை நிரப்பியிருந்த காலகட்டத்தில் பெரும் முதலீட்டில்  உதாசீனம் மிக்க வாசகச் சூழல் குறித்த கவலையே இல்லாமல்  இந்தப் பெரும் நூலை வெளியிட்ட சக்தி வை.கோவிந்தன் தமிழ்க் கலாச்சாரத்திற்குச் செய்த சேவை முக்கியமானது.

[போரும் வாழ்வும் _ லியோ டால்ஸ்டாய்; தமிழாக்கம்: டி.எஸ். சொக்கலிங்கம்; சக்தி காரியாலயம் வெளியீடு, சென்னை, மறுபதிப்பு சீதை  பதிப்பகம் ]

Product

 

பிற இணைப்புகள்

போரும் அமைதியும் : http://bookimpact.blogspot.com/2007/01/blog-post.html

 

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9992:2010-07-16-02-11-21&catid=1149:10&Itemid=417 சக்தி கோவிந்தன் பற்றிய பதிவு

http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=471&Itemid=612 டி எஸ் சொக்கலிங்கம் பற்றிய பதிவு

 

 

பிற பதிவுகள்

 

அசடனும் ஞானியும்

 

தல்ஸ்தோயின் கலைநோக்கு

 

புரட்சி இலக்கியம்

 

தல்ஸ்தோய் காட்சி

 

ஆண்பெண் சமூகம்

 

இரும்புத்தெய்வத்துக்கு ஒரு பலி

 

 

 

 

 

மறுபிரசுரம் முதற்பிரசுரம் ஜூலை 2011

முந்தைய கட்டுரைஆரோக்யநிகேதனம்- சௌந்தர்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 33