ஒரு குழப்பத்திலிருந்து என் கேள்வி உருவாகிறது. கடந்த 4-5 மாதங்களாக நிறைய வாசிக்க தொடங்கியிருக்கிறேன். பெரும்பாலும் நாவல்கள் மற்றும் சிறுகதைகள். தொடர்ந்து வாசிக்க தொடங்கிய பின், சில கதைகளை / நாவல்களை மேலதிகமாக புரிந்து கொள்ள அதுசார்ந்த பின்புலத்தை வாசிக்க வேண்டியிருக்கிறது. உதாரணத்திற்கு, நொய்யல் நாவல் வாசிக்கும்போது குன்னடையான் கதை குறித்து குறிப்பாக வருகிறது. இப்போது குன்னடையான் கதை என்ன என்பது குறித்து படிக்க தோன்றுகிறது. இதுபோல வெவ்வேறு தருணங்களில், கதையை வாசிப்பதை நிறுத்திவிட்டு அந்த கிளைக்கதைக்குள் புகுந்து கொள்கிறேன். இதனால் மனம் அலைபாய்தலிலேயே இருப்பதாக உணர்கிறேன். அதேபோல் வாசிக்க இன்னும் நிறைய நிறைய இருக்கிறது அல்லது எதாவது nuance ஐ தவற விட்டுவிடுவோம் எனும் insecurity உம் கூட சேர்ந்துகொள்கிறது. இதை எப்படி எதிர்கொள்வது அல்லது இதனை எப்படி organized ஆக அணுகுவது?
அன்புடன்,
திலீபன். ப
***
அன்புள்ள திலீபன்,
கூர்ந்து வாசிப்பதென்பது ஒரு வகை பயிற்சி. எளிமையான பயிற்சி அல்ல, கொஞ்சம் முயற்சி எடுக்கவேண்டும்.
முதன்மையாக பிற திசைதிரும்பல்களை அனுமதிக்கலாகாது.நடுவே மின்னஞ்சல் பார்ப்பது, குறுஞ்செய்தி பார்ப்பது , டிவி ஓடிக்கொண்டிருப்பது ஆகியவை கவனத்தை கலைப்பவை. இசை ஓடிக்கொண்டிருப்பதுகூட கவனத்தை கலைப்பதே. இசையில் ஒவ்வொரு மெட்டுக்கும் ஒரு மனநிலை உண்டு. நாம் அந்த மனநிலை நோக்கி நம்மையறியாமலேயே ஈர்க்கப்படுவோம். அது வாசிப்பை குலைப்பது.
வாசிக்கும் நூல் புனைவா, அபுனைவா என்பது முக்கியமானது. அபுனைவு நூல் என்றால் வாசிக்க வாசிக்க குறிப்புகள் எடுத்துக்கொள்வது உதவியானது. ஆனால் வாசித்தபடியே குறிப்பெடுக்கலாகாது. ஓர் அத்தியாயம், அல்லது ஒரு கருத்துவிரிப்பு முடிந்ததும் அதை சொந்தச்சொற்களில் குறித்துக்கொள்ளுங்கள். உடைந்த சொற்களாக அல்ல, முழுமையான சொற்றொடர்களாக.
விரிவான அத்தியாயம் என்றால் அதற்கு வரைபடம் உருவாக்கிக் கொள்ளுங்கள். முதற்கருத்து – துணைக்கருத்துக்கள் – அதை நிறுவும் தர்க்கங்கள் என ஒரு அட்டவணைபோல. அந்த அட்டவணை அல்லது வரைபடம் நினைவில் நிற்கும். வாசித்து முடித்தபின் அந்நூல் பற்றி முழுமையாக ஒரு வரைபடத்தை அமைத்துக்கொண்டால் அந்நூல் உங்கள் சிந்தனையில் என்றுமிருக்கும்.
புனைவு வாசிப்பு அவ்வாறல்ல. அது ஒன்றிச் செய்யவேண்டியது. குறிப்புகள் எடுக்க வெளியே வந்தால் அந்த புனைவு உருவாக்கும் வாழ்விலிருந்து வெளியே வருகிறோம். புனைவு வாசிப்பின் முதன்மை நெறியே முழுமையாக அதில் ஈடுபட்டிருப்பதுதான். அந்த புனைவுலகில் உண்மையான வாழ்வுக்கு நிகரான ஒரு வாழ்க்கையை வாழ்வதுதான்.
அதற்கு தேவையான சில நிபந்தனைகளுண்டு. என் பழக்கத்தால் அறிந்தவை. நீங்கள் செய்துபார்க்கலாம்.
அ. ஒரு முறைக்கு குறைந்தது 50 பக்கங்களாவது வாசிக்கவேண்டும். ஒரு மணிநேரமாவது வாசிக்கவேண்டும். அதற்கும் குறைவாக வாசித்தால் நாம் புனைவுக்குள் செல்லமுடியாது. ஒரு புனைவை நாம் வாசிக்கையில் மொழியை அர்த்தமாக்கிக்கொள்ளும் செயல் தொடங்குகிறது. அது நம்மை இரண்டாக பிளந்துவிடுகிறது. நாம் வாசிக்கிறோம், வாசிக்கிறோம் என்னும் தன்னுணர்வும் இருக்கும். அப்போது வாசிப்பு மிக மெல்லவே நகரும். வாசிப்பு ‘சூடுபிடிப்பது’ அந்த உலகுக்குள் நாம் நுழையும்போது. நம் இரட்டைநிலை மறையவேண்டும். அதற்கு ஓரளவு பக்கங்கள் முன்னகரவேண்டும். அதன்பின் நமக்கே நாம் வாசிக்கிறோம் என தெரியாது. மொழி அர்த்தமாகி , அர்த்தம் காட்சிகளும் ஒலிகளும் வாழ்வுமாகி ஒரே சமயம் நடந்துகொண்டிருக்கும். அதற்குமேல் வாசிப்பதே வாசிப்பில் சேரும். அதற்கு கொஞ்சம் நேரமும் பக்கங்களும் தேவை. ஆகவே ஒரு படைப்பு எந்த வகையானது என்றாலும், நம்மை கொஞ்சம்கூட கவரவில்லை என்றாலும் ஐம்பதுபக்கம் வாசித்தேயாகவேண்டும்.
ஆ.ஒருபோதும் நடுநடுவே வெளிவந்து தகவல்களை தேடலாகாது. ஆங்கிலத்தில் தொடக்ககாலத்தில் அகராதியை தேடலாம் – அது வாசிப்பல்ல, மொழிகற்றல் மட்டுமே. வெளியே வந்து உள்ளே சென்றுகொண்டிருந்தால் வாசிக்கும் அனுபவமே நிகழாது. ஒரு குறிப்பிட்ட அளவு வாசித்தபின்னர், அதன் துணைக்கதைகளை பற்றிய குறிப்புகளை வேண்டுமென்றால் தனி தாளில் எழுதிக்கொள்ளலாம். முக்கியமான பெயர்கள், சொற்களை எழுதிக்கொள்ளலாம். பின்னர் அந்த குறிப்பேட்டை வைத்து மேலதிகமாக தகவல்களை திரட்டலாம். அந்த கூடுதல் வாசிப்பு புனைவுகளை இன்னும் கூர்மையாகப் புரிந்துகொள்ள உதவும்
இ. புனைவுகள் நம் அனுபவங்களால் வாசிக்கவேண்டியவை. முதன்மையான நம் தரவுத்தொகை நம் அனுபவங்களே. ஆகவே தகவல்களை தெரிந்துகொண்டேயாக வேண்டுமென்பதில்லை. நல்ல படைப்பு தரவுகளை தரும்போதே வாசிப்பின் போக்கில் அவற்றை நாம் புரிந்துகொள்ளவும் வைத்துவிடும்.
ஈ . நம் வாழ்க்கையை முன்வைத்தே வாசிக்கிறோம், ஆனால் உடனடியாக, நேரடியாக புனைவுடன் நம் வாழ்க்கையை இணைத்துக்கொள்ளலாகாது. அந்த இணைப்பு ஒரு வாசிப்புப் பிழை. தன்னிச்சையாக அந்த இணைப்பு நிகழும். அதை ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் அதை நாமே வளர்த்துக்கொள்ளலாகாது.
வாசியுங்கள், வாசிப்பே வாசிப்பதற்கான பயிற்சி.
ஜெ