இனிய ஜெயம்
12,000 வருடத்துக்கு முன்பான கோபக்ளி டெபெ ஆலயத்தை முன்வைத்து, மார்க்சிய அறிதல் சட்டகத்துக்கு வெளியே நிற்கும் அதன் பின்புலம் குறித்து வைகுண்டம் அவர்களின் வினாவும் அதற்கு உங்கள் பதிலும் வாசித்தேன். இதே ஆலயம் குறித்து முன்னர் நான் இந்த தளத்தில் இதே வினாவுடன் எழுதி இருக்கிறேன். அது ஒரு புதிர் மிகுந்த தேடல் வெளி.
(செவ்வியல்) மார்க்சிய அறிதல் முறை, அகவயம் என்ற ஒன்று அதுவும் புறவயத்தால் உருவாக்கப்பட்டதே என்று வரையறை செய்யும். எனில் ஹெலன் டெமுத் மீதான காமத்துக்கு அதன் சட்டகத்தில் என்ன பொருள்? லெனின் காலத்தில் பனி வெளியில் வீசி எறியப்பட்டு உயிரை உறைய வைத்து கொலை செய்யப்பட்ட லட்சக்கணக்கான விவசாயிகள், அதன் பின்னுள்ள குரோதம் அதற்கு மார்க்சியத்தில் என்ன பொருள்? இதோ இன்று ரஷ்யா நிகழ்த்திக்கொண்டிருக்கும் நாடு பிடிக்கும் போர் அந்த அதிகார மோகத்துக்கு என்ன பொருள்?
தனி மனித ஆழமான இதற்கு எப்படி மார்க்சியத்தில் விடை இல்லையோ ( எரிக் ஹாப்சம் சுட்டிக்காட்டும் அசிங்கமான மார்க்சியர் வசம் இதற்கு திட்டவட்டமான விடை உண்டு) அப்படித்தான் வரலாற்றுக்கு முந்தய பண்பாடு சார்ந்த ஆழம் கொண்ட விஷயங்களிலும் அதனிடம் விடை கிடையாது.
இன்றைய வரலாற்றுப் போக்கிலேயே கூட பண்பாட்டு அசைவில் உள்ள புதிர்களை நோக்கி மார்க்சியத்துக்கு வெளியே நிற்கும் பார்வை வழியே சில பாதைகளை திறந்து காட்டினார் ஜாரட் டைமண்ட். (துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு-எனும் தலைப்பில் அந்த நூல், பாரதி புத்தகாலய வெளியீடாக தமிழிலும் உண்டு சுமாரான மொழியாக்கத்தில் ) ஐரோப்பிய மேட்டிமைவாதி, நிற வெறியர், அறிவியல் அறியா அறிவிலி என்று மார்க்சியர் உட்பட அனைவராலும் வசைபாட பட்டார்.
அப்படி ஒருவராக இத்தகு வரலாற்றுக்கு முந்திய களங்களை ஆய்வு செய்து, சில புதிய பாதைகளை திறக்க முயற்சிக்கும் வகையில், பல்வேறு அறிவியல், தொல்லியல், மார்க்சிய, தரப்பினராலும் மோசடிக்காரர் இவர் என்பது உள்ளிட்டு எல்லா வகையிலும் விமர்சிக்கப்படும் மற்றொருவர் பத்திரிக்கையாளர் கிரஹாம் ஹான்காக்.
இவர், கோபக்ளி டெபெ ஆலயத்தின் காலம் உறுதி ஆனதும், அப்படி ஒரு காலம் வரை தொன்மை கொண்ட, 2014 ல் தொல்லியல் ஆய்வுகள் மேம்போக்கான பதில்களை கூறி ஆய்வை முடித்துக்கொண்டு ஜாவா தீவின் குணாங் படாங் பிரமிட்டை அதன் ஆய்வுகளை பின் தொடர்ந்தார்.
இதன் வழியே வெளியான முக்கிய தகவல், இந்த மலை குன்று உண்மையில் ஒரு பிரமிட். பல நூற்றாண்டுகளாக கட்டப்பட்டது. உள்ளே புதைந்து இருக்கும் மூன்று சேம்பர்களில் மூத்தது 11000 ஆண்டுகள் வயது கொண்டது.
இதே போல கிரஹாம் கோபக்ளி டெபெ, மற்றும் மால்டா தீவின் தொல் பழங்கால பெருங்கல் கட்டுமானத்தையும்
https://whc.unesco.org/en/list/132/
மெக்சிகோ ப்ரமிடுகள் கட்டுமானத்தையும், படாங் கட்டுமானத்தையும் அங்கே உள்ள பழங்கதைகளின் வழியே பொருள் கொள்ள முயல்கிறார்.
ஆச்சர்யமாக எல்லாமே பெருஊழி வெள்ளத்தில் மீட்பனாக வந்த தேவன் ஒருவன் கட்டிய கோயில் என்பதில் ஒற்றுமை கொண்டிருக்கிறது. இந்த பிரளய கால வெள்ள கதைகள் மானுட ஆழுள்ளத்தில் உள்ளது. இங்கே சிதம்பரம் அருகே சீர்காழியில் உள்ள பெரிய கோயில் நாயகன் பெயர் தோணியப்பர். பெருவெள்ளம் வந்து உலகே மூழ்க, எஞ்சிய இந்த சீர்காழியில் சிவன் தோணி வழியே வந்து சேர்ந்து, பிரணவம் சொல்லி மீண்டும் உலக உயிர்களை படைத்தார் என்பது இக்கோயில் ஐதீகம்.
மனு என்ற மன்னன் பிரளய வெள்ள சூழலில் ஒரு மீனின் வழி காட்டலில் படகு வழியே எஞ்சிய நிலத்தை அடைந்து மனு குலத்தை மீண்டும் உயிர்பித்தான் என்பது இந்திய தொன்மங்களில் ஒன்று. இப்படி பைபிளின் நோவா படகு மிகுந்த பிரபலமான கதை.
எல்லா கதையிலும் உள்ள ஒற்றுமை, அது மானுட பொது ஆழுள்ளம் வழியே உருவானது என்பது. இதில் நான் கண்ட மற்றொரு ஒற்றுமை, அப்படி நாயகன் வந்து சேர்ந்த படகு எதுவும் மனித ஆற்றல் கொண்டு இயக்கப்பட வில்லை என்பது. நோவா கப்பல் வெள்ளம் போன வழியில் மிதக்கிறது. மெக்சிகோ தொல் கதையின் நாயகன் வரும் கப்பலை பாம்பு இரண்டு இழுத்து வருகிறது. இந்திய மனு கதையில் மனு படகை வழிகாட்டும் மீன் கொம்பில் கட்டி வைக்கிறான்.மீன்தான் இழுத்து செல்கிறது. ஆக தனது ஆற்றலுக்கு வெளியே உள்ள ஆற்றலை தனக்காக பயன்படுத்தி கொள்ள தெரிந்த மனிதனே அந்த தலைவன். மானுடம் முழுமையும் தனது ஆழத்தில் அறிந்து வைத்திருக்கும் அவன் யார்? அவன் எவ்விதம் இந்த கோயில் பணிகளுக்கு முன் நின்றான்? தெரியாது.
இத்தகு கோயில்கள் ஏலியன்கள் பனி யுகத்தில் இங்கே இருந்தமைக்கான சான்று என்றொரு வினோத ஆய்வும், அதன் மீதான பல ஆவணப்படங்களும் இங்கே உண்டு. இப்படி ஒரு ஹைப்போ தீஸிஸை உருவாக்கி யோசிக்க காரணம் என்ன? முதல் காரணம் இத்தகு கோயில்கள் பனி யுகம் முடிந்த மிக சில ஆண்டுகளிலேயே உருவாகி விட்டது. ( பனியுகம் எவ்விதம் இங்கே சந்தேகம் கிளம்பி, யூகிக்கப்பட்டு, ஆய்வுகள் வழியே ஊர்ஜிதம் ஆனது என்பதன் சுருக்கமான வரலாறு பில் பிரைசன் எழுதிய அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு நூலில் உண்டு. இந்த நூலும் அதே பாரதி புத்தகாலயத்தில் அதே சுமார் மொழியாக்கத்தில் கிடைக்கிறது). 12 000 ஆண்டுகள் முன்னால், ஒரு பேராலயம் உருவாக அதற்கு பின்புலமாக தேவையான சமூகமோ விவசாயமோ, உபரியோ இரும்போ, கருவிகளோ, தொழில்நுட்ப அறிவோ உருவாகி வளர நெடுங்காலம் தேவை. அப்படி ஒரு காலம் இத்தகு ஆலயங்களின் பின்னே இல்லை. இந்த ஆலயங்கள் பின்னே உள்ள ஒரே காலம் எல்லாமே உறைந்து நின்று போன பனி யுகம் மட்டுமே. எனில் பனி யுகம் முடிந்த மறு கணமே இத்தகு பிரம்மாண்ட ஆலயங்கள் உருவான வகைமைக்கு மனிதனுக்கு வெளியே உள்ள ஏலியன் போன்ற ஆற்றல்களுக்கு மட்டுமே சாத்தியம்.
இரண்டாவது முக்கிய காரணம் இத்தகு கோயில்களுக்கும் விண் கோள்களின், விண் மீன்களின் அசைவுக்கும் உள்ள ஒத்திசைவு. கிரஹாம் இந்த கோபக்ளி டெபெ, மால்டாவின் பேராலயம் இரண்டின் வாயில்களும் எப்படி விண்மீன்களின் இருப்புக்கு ஒத்திசைந்து அமைந்திருக்கிறது என்று, இத்தகு இடங்களை விண்மீன்களின் இருப்பு வழியே ஆராயும் ஆய்வாளர்கள் வழியே விளக்குகிறார். இது ஒன்றும் புதிய முறை அல்ல. இந்திய வேதங்களின் காலம், அதில் உள்ள விண் மீன் இருப்பு சித்தரிப்பு வழியே மேலும் உறுதி ஆனது. அப்படி இந்த ஆலயங்களின் குறிப்பிட்ட விதிகள் எவ்விதமேனும் விண்மீன்கள் அமைப்புடன் ஓதிசைக்கிறதா என்று ஆய்ந்த வகையில், கச்சிதமாக ஒத்திசைகிறது. அப்படி ஒரு விண்மீன் மண்டலம் வானத்தில் இருந்த காலம் என்பது, விண்மீன் அசைவுகளின் கணக்குப்படி இன்றிலிருந்து 11000 வருடங்கள் முன்னே.
இப்போதும் ஜெய்ப்பூர் சென்றால் பெரும் மைதானத்தில் விண் மீன் நகர்வுகளை கணிக்கும் ஆய்வகத்தின் காட்சி அரங்கம் உண்டு. இப்போதும் ஆண்டில் குறிப்பிட்ட பருவத்தில், கோயில் மூலவர் மீது மிக சரியாக சூரிய உதய முதல் கிரணம் விழும் கோயில்கள் உண்டு. அஸ்தமனம் அக் கோயில் கோபுரத்தின் நிலை வரிசை சாளரம் ஒவ்வொன்றின் வழியே இறங்குவதை காணலாம். நானே காத்திருந்து கடலூர் பாடலீஸ்வரர் கோயிலில் அதை படம் பிடித்திருக்கிறேன். ஆக இந்த தொல் வரலாற்று பேராலயங்கள் வானம் நோக்கிய ஏதோ ஒன்றின் ஆய்வாக, அல்லது வானம் நோக்கிய மானுடத்தின் வணக்கமாக, அல்லது ஏலியன் போன்ற ஏதோ ஒன்றின் சிக்னல் ட்ராங்ஸ் மீட்டராக, இப்படி பல பத்து சாத்தியங்களில் ஏதோ ஒன்று.
அதை அறிய அறிவியலால் கைவிடப்பட்ட, வேறு ஏதோ அறிதல் முறை தேவை. அது மதத்தில் மட்டுமே உண்டு. அத்தகு விஷயங்கள் சிலவை இன்னமும் அழியாமல் எஞ்சி நிற்கும் ஒரே மதம் இந்து மதம் மட்டுமே. விடை அல்லது விடை நோக்கி செல்லும் பாதை ஏதும் இருந்தால் அது இங்கிருந்து வந்தால் மட்டுமே உண்டு. எத்தனையோ அறிய சாத்தியங்களை விதை என கொண்டிருக்கும் வெளி இது. அது முளைக்கும் வரை இதைக் காப்பது நமது கடமை.
கடலூர் சீனு
பின்குறிப்பு:
மேற்கண்ட விஷயங்கள் குறித்து கிரஹாம் ஹான்காக் கின் தேடுதல் பயணம் இப்போது ஏன்ஷியண்ட் அப்போகலிப்ஸ் எனும் தலைப்பில் ஆவணத் தொடராகவும் வெளியாகி உள்ளது.